
அதிஷா - ஓவியம்: பிரேம் டாவின்ஸி
மாரத்தான் ஓட்டங்களைவிட பத்து மடங்குக் கடினமானது ட்ரையத்லான் ஓட்டங்கள். சில கிலோமீட்டர்கள் நீச்சல் அடித்து, பல கிலோமீட்டர்கள் சைக்கிளிங் முடித்து, அதற்குமேல் ஒரு மாரத்தானும் ஓட வேண்டும். இதில் முதல் பரிசு வாங்குவதை விடுங்கள்... இதையெல்லாம் முழுமையாகச் செய்து முடிப்பதற்கே நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்குப் பயிற்சி அவசியம். கூடவே மனோவலிமையும், வலிகளைத் தாங்கிக்கொள்கிற திடமும் முக்கியம்.
இந்த ட்ரையத்லான்களை வேடிக்கை பார்ப்பதேகூட மிகப்பெரிய ஊக்கம் தரக்கூடியதாக இருக்கும். அப்படி வேடிக்கை பார்க்கச் சென்ற இடத்தில்தான் மோனிகாவைப் பார்த்தேன். கால்களில் ரத்தம் சொட்ட ஓடிவந்தார். மோனிகா பந்தய தூரத்தைக் கடந்துவந்த அந்தச் சிலிர்ப்பூட்டும் தருணமும் அது தந்த உணர்வையும் விவரிக்கவே முடியாது.
எல்லைக்கோட்டுக்கு அருகே நின்று கொண்டிருந்தேன். இலக்கை நோக்கி சளைக்காமல் ஓடிவந்தார் மோனிகா. ஷூவுக்குள் ஏதோ கோளாறு. அது காலின் கட்டைவிரல் நகத்தை உடைத்துவிட்டிருந்தது. உள்ளே ரத்தம் வடிந்து வெளியே சுவடுகளாகத் தெரிய ஆரம்பித்திருந்தது. இருந்தாலும் மோனிகா விடப்பிடியாக நொண்டிக்கொண்டே இலக்கை நோக்கி ஓட்டமும் நடையுமாக வந்தார். போட்டி நடத்துபவர்கள் பதறிப்போய் ``நில்லுங்க நில்லுங்க’’ என எச்சரிக்கிறார்கள். மோனிகா புன்னகையோடு ``இட்ஸ் ஓகே...’’ என்பதுபோல கைகாட்டிக் கொண்டே வருகிறார். அவரால் நடக்கவும்கூட முடியவில்லைதான். இருந்தாலும் ஒரு வைராக்கியம்... எப்படியாவது அந்த ட்ரையத்லானை குறிப்பிட்ட நேரத்திற்குள் முடித்துவிட வேண்டும் என்கிற பேரார்வம். போட்டியை முடித்ததும் அவருக்கு ஃபினிஷர் மெடல் வழங்கப்பட, அதைக் கழுத்தில் மாட்டிக்கொண்டு பார்வையாளர் இடம் நோக்கி வர...மோனிகாவை நோக்கி ஓடிவருகிறார் அவருடைய மகள்.

நடக்க முடியாமல் தடுமாறி நடந்துவரும் அம்மாவை மகள் வாரி அணைத்துக்கொள்கிறாள். மகளின் கண்களில் அவ்வளவு கண்ணீர். தாங்க முடியாத அழுகை. மோனிகா முகத்தில் அவ்வளவு மகிழ்ச்சி. அவர் வாழ்நாளுக்கும் சேர்த்துவைத்து அங்கே புன்னகைத்துக்கொண்டிருந்தார். தன் கழுத்தில் இருக்கிற மெடலை மகளுக்கு அணிவிக்கிறார். மகள் அதைக் கண்களில் வைத்துக்கொண்டு தேம்பித்தேம்பி அழ... ‘`ஒண்ணுமில்லம்மா.. ஒண்ணுமில்லம்மா’’ என்று சமாதானப்படுத்துகிறார் மோனிகா.
அவசரமாக அம்மாவைக் கீழே புல்தரையில் அமரவைத்துவிட்டு மோனிகாவின் ஷூவைக் கழற்றி சாக்ஸையும் கழற்றுகிறார் மகள். வெண்ணிற சாக்ஸ் பாதி சிவப்பாகி இருந்தது. கட்டைவிரல் வெளுத்து அதில் ரத்தம் கசிந்திருந்தது. மகள் அந்தக் கால்களை அப்படியே முகத்தில்வைத்து முத்தமிட.... அவ்வளவு நேரமும் புன்னகைத்துக்கொண்டிருந்த மோனிகாவுக்கு பிலுக்கென்று ஓர் அழுகை எங்கிருந்தோ வானத்திலிருந்து இறங்கியது.
மோனிகாவின் உலகமே அவருடைய மகளைச் சுற்றித்தான். `சிங்கிள் பேரன்டாக’ மகளை வளர்த்துக்கொண்டிருந்தார். மோனிகாவுக்கு வயது எப்படியும் நாற்பது ப்ளஸ் இருக்கும். அவர் கடந்த ஓராண்டாகத்தான் இந்த ட்ரையத் லானுக்காகத் தீவிரமாகப் பயிற்சி எடுத்து வந்திருக்கிறார். அதுவும் குறிப்பிட்ட நேரத்தில் பந்தய தூரத்தை முடித்துப் பதக்கம் வாங்குவது அவருடைய லட்சியமாக இருந்திருக்கிறது. ``எதுக்காக இந்த வயசுல இப்படி ஒரு கஷ்டமான டார்கெட்?’’ என்று கேட்டேன். புன்னகையோடு கால்களை நீட்டி அமர்ந்திருந்தார்.
``எல்லாம் இவளோட பர்த்டேவுக்காகத்தான்’’ என்று மகளின் தலையைத் தொட்டு ஆட்டினார். நிறைய நிறைய தண்ணீர் குடித்துக்கொண்டே பேசிக்கொண்டிருந்தார். மிகவும் சோர்ந்து போயிருந்தார். ‘‘இதோ இந்த மெடல்தான் அவளுக்கான பர்த்டே கிஃப்ட்’’ என்றார். கால்களில் இப்போது லேசாக ரத்தம் எட்டிப்பார்த்துக்கொண்டிருந்தது. மகள் பஞ்சை வைத்துத் துடைத்துக்கொண்டிருந்தார்.

``என் மகளுக்கு நான் நிறைய செலவழிச்சாலும் அவளுக்கு நான் நிறைய நல்ல தருணங்களைப் பரிசளிக்கணும்னு நினைப்பேன். நாம நம்ம குழந்தைகளுக்கு ஏராளமா சம்பாதிச்சு சொத்து சேர்த்து, அவங்களுக்குப் பொருள்களா வாங்கி வாங்கிச் செலவழிக்கிறதைத்தான் பெரிய சாதனையா நினைக்கிறோம். ஆனா, குழந்தைகளுக்கு அதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை. அவங்க வளர்ந்து பெரியவங்க ஆனதும் அவங்க மனசுல நீங்க செஞ்ச செலவுகளும் வாங்கின கடனும் நிலைச்சிருக்குமா தெரியாது. நாம அவங்களோட இருந்த நல்ல நிமிடங்கள்தான் எப்பவும் நிலைச்சிருக்கும். அதுக்கு நாம அவங்களோட வாழணும். அவங்க மறக்கவே முடியாத தருணங்களைப் பரிசாத் தரணும்’’ என்று சொல்லிவிட்டுக் குனிந்து நிமிர்ந்து உடலை வளைத்துத் தசைகளை இலகுவாக்கும் ஸ்ட்ரெட்சிங் பயிற்சிகள் செய்யத்தொடங்கினார்.
``ஒரு குழந்தையை எப்பவோ ஒருநாள் விடியகாலைல கடற்கரைக்குக் கூட்டிட்டுப் போய் ஒரு சூரியோதயத்தைக் காட்டினா, அதை வாழ்க்கை முழுக்க மறக்கவே மாட்டாங்க... எங்கப்பா எனக்கு அப்படி ஒரு சூரியோதயத்தை என்னோட ஆறுவயசில் ஒரு கடற்கரையில் காட்டினார். அந்த வயசுல நடந்த எதுவுமே எனக்கு நினைவில்லை; அந்த சூரியோதயத்தைத் தவிர... காலைல அஞ்சு மணிக்கு எழுப்பி வா பாப்பானு அழைச்சிட்டுப்போய் கடற்கரையில காத்திருக்க வெச்சிருந்தப்போ, எதுக்குனே புரியாம உட்கார்ந்திருந்தேன். திடீர்னு கடலுக்குள்ளருந்து குபுக்னு சூரியன் வெளியே வந்தப்ப மேஜிக் மாதிரி இருந்தது.
இப்படிப்பட்ட தருணங்களை நம்மால இப்பல்லாம் குழந்தைகளுக்குத் தர முடியறதே இல்லை... ஏன்னா, நாமளும் பிஸியாகிட்டோம், குழந்தைகளும் பிஸியாகிட்டாங்க... அப்படி இருக்கும்போது அந்தக் குழந்தைகளுக்கு இப்படித்தான் எதையாவது உணர்வுப்பூர்வமா தர வேண்டியிருக்கு! இதோ இந்த மெடல் அவளோட பர்த்டேவுக்காக ஒரு வருஷம் கஷ்டப்பட்டுப் பயிற்சி எடுத்து ஓடிமுடிச்சு வாங்கின ஸ்பெஷல் கிஃப்ட். கோடி ரூபாய்க்கு ஒரு கிஃப்ட் வாங்கிக்கொடுத்திருந்தாகூட அவ இவ்வளவு சந்தோஷப்பட்டிருப்பாளா தெரியாது... ஆனா, இந்த மெடல் அவளுக்கு ப்ரீஷ்யஸா இருக்கும்ல!’’ என்றார். ஆமாம் என்பதைப்போல தலையை ஆட்டினேன்!
``போன வருஷம் அவ பர்த்டேக்கு நான் ஸ்கூபா டைவிங் பண்ணினேன். கடலுக்கு அடியில போய் ஒரு சின்ன சங்கு கொண்டுவந்து கொடுத்தேன். அந்தச் சங்கை தினமும் எடுத்துப் பார்த்துச் சந்தோஷப்படுவா... ஸ்கூலுக்குப் போறா, படிக்கிறாங்கறது ரெகுலர் விஷயம். அதுக்குமேல நாங்க இரண்டுபேரும் ட்ரெக்கிங் போயிருக்கோம். பாலைவனத்துல சுத்தியிருக்கோம். என்ஃபீல்ட் எடுத்துட்டு ஊரைச் சுத்தியிருக்கோம். நம்ம குழந்தைகளுக்கு நாமதானே முதல் ஹீரோ. நாமளே டொக்கா இருந்தா எப்படி?’’ என்றார். மோனிகாவின் உழைப்பு மலைப்பாக இருந்தது.
குழந்தைகளுக்கு லட்ச லட்சமாகக் கடனையும் அந்தக் கடனுக்கு வாங்கிய கல்வியை மட்டுமே வருடந்தவறாமல் கொடுக்கிற நமக்கு இதெல்லாம் வினோதமாகத் தோன்றலாம். யோசித்துப் பார்த்தால், நமக்கு முந்தைய தலைமுறை அப்படித்தான் நம்மை வளர்த்திருக்கிறார்கள். ‘`எங்கப்பா என்னைப் பத்து கிலோமீட்டர் தோள்ல வெச்சுக்கிட்டு நடந்தே திருவிழாவுக்குக் கூட்டிப்போய் பரோட்டா வாங்கிக் கொடுப்பார். அதை மறக்கவே முடியாது பாஸ்’’ என்று எப்போதும் பெருமையாகச் சொல்கிற எத்தனை பேரைப் பார்த்திருப்போம். நம் வாழ்க்கையில் நமக்கு நெருக்கமானவர்களுக்கான மெனக்கெடல் என்பது பொருள் சார்ந்ததாக எங்கோ எப்போதோ மாறிவிட்டது. ஆனால், இத்தகைய தருணங்கள் அர்ப்பணிப்புத் தொடர்பானது என்பதை நாம் மறந்துவிட்டோம்.
நம் குழந்தைகளுக்கு எதைத் தருவது என்பதில் நமக்குக் குழப்பங்கள் வந்துவிட்டன. கடைசியில் பொருள்களை வாரித்தருவதில் திருப்தி யடைகிறோம். அவர்களை என்ஜினியர்களாக, மருத்துவர்களாக, முதலாளி களாக மாற்றுகிற விஷயங்களைத்தருவதையே பெருமையாகக் கருதுகிறோம். கிரிக்கெட் பேட் கூட, ‘சச்சின் ஆகிவிடுவான்’ என்கிற பேராசையின் முதல் அடியாகத்தான் இருந்துவிடுகிறது! ஆனால் குழந்தைகளை நல்ல மனிதர்களாக மாற்றுவதற்கான விஷயங்களைத் தருகிறோமா?
‘`குழந்தைகளை இந்த வயசில இருந்தே உடல் ஆரோக்கியம் பற்றிய புரிதலோட வளர்க்கணும். உடல் ஆரோக்கியம்கிறது நம்மோட பழக்க வழக்கத்துலேயும் தொடர்ச்சியான நீண்ட கால உடற்பயிற்சிகளிலும் ஒழுக்கமான வாழ்க்கை முறையிலேயும் இருக்குனு நமக்கு நல்லா தெரியும். ஆனா, குழந்தைகளை அதுக்காகத் தயார் செய்ய மாட்டோம். ஏன் தெரியுமா?’’ எதுவாக இருந்தாலும் மிரட்டித்தான் கேட்பார் தாமோதரன் சார். தடகளப் பயிற்சியாளர்.
``ஏன்னா, இங்க ஒரு பயலும் அதையெல்லாம் செய்றவங்களா இருக்கிறதில்ல... ஹார்ட் அட்டாக் அறிகுறி தெரியறவரைக்கும் நாம உடல் ஆரோக்கியத்தைப்பற்றிக் கவலைப்பட மாட்டோம். நுரையீரல் கிழியாம, பிராணயாமம் பண்ண மாட்டோம்... நாமளே அப்படி இருந்தா நாம பெத்ததுக எப்படி இருக்கும்’’ எப்போதும் சலித்துக்கொள்வார். தொடர்ச்சியாக இத்தகைய மனிதர்களை சந்தித்து சந்தித்து சலித்துப்போன உள்ளம் அது.
``ஸ்கூல்ல விளையாட்டுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க மாட்டேங்கிறாங்கன்னு கோபப்படுவோம். முதல்ல நாம முக்கியத்துவம் கொடுக்கிறோமா?’’ என்று ஆவேசப்படுவார். அதிலும் ஒலிம்பிக் நேரங்களில் அவரிடம் புலம்பினால் இரண்டு அடியைப் போட்டுத்தான் அனுப்புவார்.
வேளாவேளைக்குத் தண்ணீர் குடிக்க ஆப் வைத்திருக்கிறோம். வாரத்திற்கு ஒருமுறையாவது ஆரோக்கியமான உணவு உண்ண வேண்டும் என்பதை எல்லாம் சபதம் போட்டு நிறைவேற்றுகிறோம். இப்படித்தான் இருக்கிறது நம்முடைய உடல் ஆரோக்கிய முயற்சிகளே! என்றால் நம் குழந்தைகளின் நிலைமை என்ன? காலையில் குழந்தைகளையும் வாக்கிங்கோ, ஜிம்முக்கோ, ரன்னிங்கோ அழைத்துச் செல்கிற பழக்கம் ஏன் நமக்கு இருப்பதில்லை?
குழந்தைகளின் உடல்நலம் குறித்து அத்தனை அச்சம் இருக்கிறது நமக்கு. ஹச் எனத் தும்மினால் பத்தாயிரம் ரூபாய் செலவழித்து பத்து டெஸ்ட் எடுத்து முப்பது நிறங்களில் முன்னூறு மாத்திரைகளை விழுங்கத் தருகிற நாம் ஏன் அவர்களுடைய ஆரோக்கியத் திற்காக தினமும் அரைமணி நேரம் செலவழிக்கத் தூண்டு வதில்லை. அதைப் பழக்கப்படுத்துவதில்லை? அதிகாலையில் எழுப்பி அவர்களை நடைப் பயிற்சிக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்றால், நாமும் அதையெல்லாம் செய்ய வேண்டும் என்கிற எண்ணம்தான் இல்லையா? ஏன் ஆரோக்கியத்திற்கு பதிலாக நோய்களுக்கான மருந்துகளைத் தருபவர்களாக இருக்கிறோம்?
கன்னிமாரா நூலகத்தில் முதன்முதலாக உதயகுமாரையும் அவருடைய குடும்பத்தினரையும் பார்த்தபோது அதிர்ச்சியாகத்தான் இருந்தது. கன்னிமாரா நூலகத்திற்கு வெளியேதான் எப்போதும் ஏராளமான குடும்பங்களைப் பார்த்திருக்கிறேன். கும்பலாக மியூசியத்தைச் சுற்றிப்பார்த்துவிட்டு புளியஞ்சோறு சாப்பிட்டுவிட்டுக் கிளம்புவார்கள். யாரும் தவறியும்கூட அதே வளாகத்தில் இருக்கிற நூலகத்தின் உள்ளே எட்டிப்பார்க்க மாட்டார்கள். ஆனால், இந்த வினோதமான குடும்பத்தினர் நூலகத்திற்கு உள்ளே வந்து வாசிப்பதைப் பார்க்கிற யாருக்குமே பேரதிர்ச்சியாகத்தான் இருக்கும்.
நம்முடைய விடுமுறை தினங்கள் தொலைக் காட்சிகளுக்கும், இணையத்திற்கும், ஷாப்பிங்கிற்கும் தாரை வார்க்கப்பட்டுப் பல ஆண்டுகள் ஆகிவிட்டன. அதையேதான் நம் குழந்தைகளும் பின்பற்றுகிறார்கள். இதில் வாசிப்பு, நூலகம் மாதிரியானவை எல்லாம் வழக்கொழிந்து கீழடி காலத்து விஷயங்களாக மாறிவிட்டன. கடைசியாக நம்முடைய புத்தக வாசிப்பு என்பதே ரயில் அல்லது பேருந்துப் பயணங்களின்போது பொழுதுபோகவில்லை என்றால் என்கிற அளவில் சுருங்கித்தான் இருந்தது. இன்றைய 4ஜி காலத்தில் பயணங்களிலும்கூட போனை நோண்ட ஆரம்பித்திருக்கிறோம். தவறியும் நூல்களைத் தொடுவதில்லை.
எந்த விடுமுறை நாளாக இருந்தாலும் உதயகுமார் தன் குடும்பத்தினரோடு கன்னிமாரா நூலகத்திற்கு வந்துவிடுவார். நான்கு நத்தைகள் மழைநாளில் வீட்டுக்குள் நுழைவதைப்போல அந்தக் குடும்பம் நூலகத்தின் தமிழ்ப் பிரிவுக்குள் நுழையும்.
ஒருநாள் அந்தக் குடும்பத்தின் கடைக்குட்டிப் பையனைப் பிடித்து விசாரித்தேன். ‘`கடுப்பா இல்லையாடா, லீவ் நாள்ல இப்படி லைப்ரரிக்கு வர்றது... அப்பா செம டார்ச்சர்ல’’ என்றேன். பையன் முகம் மாறிவிட்டது. ``உங்களுக்குக் கடுப்பாருக்கா இங்கே வர?’’ என்றான். பையன் கோபமாகிறான் என்று சுதாரித்துக்கொண்டேன். ‘`எனக்கு இங்கே வரப் பிடிச்சிருக்கு. அதான் வரேன். பிடிக்கலைனா அப்பாகிட்ட சொல்லிடுவேன்.’’ என்றான். அவன் நான்கு வயதிலிருந்தே நூலகத்திற்கு வருவதாகச் சொன்னான். அவனுக்குப் பிடித்த இடங்களில் ஒன்று இந்த நூலகம் என்றான். இந்த நூலகம் போர் அடித்தால், அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கு அப்பா அழைத்துச்செல்வாராம்.
எல்லோருக்குமே தன்னுடைய குழந்தைகள் அறிவாளியாக இருக்கவேண்டும் என்கிற ஆசை இருக்கிறது. ஆனால் யாருமே பாட புத்தகங்களைத் தாண்டி குழந்தைகள் எதையுமே படிப்பதை விரும்புவதில்லை. அப்படிப் படிக்கிற குழந்தைகள் முட்டாள்களாக ஆகிவிடுவார்கள் என நினைக்கிறோம். வாழ்க்கையில் தோற்றுப் போவார்கள் என கற்பனை செய்கிறோம்! நம் வீடுகளில் குழந்தைகளுக்கு மூன்றுவேளையும் கார்ட்டூன் சேனல்கள் பார்க்கலாம், மொபைல் ஃபோன்களை நோண்டலாம்... ஆனால் எக்காரணம் கொண்டும் புத்தகங்களுக்கு அனுமதி கிடையாது. வீடுகளில் மட்டுமில்லை இன்று பள்ளிகளிலும் கூட இதே நிலைமைதான். ஆனால் புத்தகங்கள்தான் ஒரு குழந்தையை கற்பனைவளமுள்ளவனாக மாற்றக்கூடிய ஆற்றல் கொண்டவை. புத்தகங்கள்தான் அவர்களை மனவலிமை கொண்டவர்களாக, உலகத்தை புரிந்துகொண்டவர்களாக உருவாக்கவல்லவை. எளிய மனிதர்களின் வாழ்க்கையை அவர்களுக்காக போராட வேண்டியதன் அவசியத்தை புத்தகங்கள்தான் புரியவைக்கும்.
ஆனால்... இங்கே பள்ளிகளிலேயே நூலகங்கள் கிடையாது. அப்படியே இருந்தாலும் பிள்ளைகள் அதை பயன்படுத்துவதில்லை! குழந்தைகள் மத்தியில் வாசிப்புப்பழக்கம் குறைந்து போனதற்கு காரணம் நாம்தான் இல்லையா? ஏன் என்றால் நம்மிடமும் அப்பழக்கம் வழக்கொழிந்துவிட்டதே!
அமெரிக்காவில் லைப்ரரி இனிஷியேட்டிவ் என்கிற விஷயத்தை ஒரு தன்னார்வ நிறுவனம் சில ஆண்டுகளுக்கு முன்பு முன்னெடுத்தது. அதன் நோக்கம் குழந்தைகள் மத்தியில் வாசிப்புப் பழக்கத்தை அதிகரிக்க வைப்பது. அதற்காகப் பள்ளிகளில் பொது இடங்களில் இருக்கிற 60 நூலகங்களைத் தேர்ந்தெடுத்து, அவற்றை எல்லாம் குழந்தைகள் விரும்புகிறபடி மாற்றி அமைத்தனர். சுவர்களின் நிறங்களை மாற்றினர். நாற்காலிகளின் வடிவங்களை மாற்றினர். புத்தகங்களைப் பற்றி ஜாலியாக உரையாடக்கூடிய, அவற்றை எல்லாம் பொறுமையாகக் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துகிற நூலகர்களை உருவாக்கினர். இது உங்கள் தாத்தா காலத்து நூலகம் அல்ல என்பதைக் குழந்தைகளுக்குச் சொல்லும்படி அந்த மாற்றங்கள் இருந்தன.
நூலகம் என்றாலே அது அமைதிக்கான இடம் என்கிற பழைய விதிகளை உடைத்தனர். இதற்கு முன்பு நூலகங்கள் எப்படி எல்லாம் இருந்தனவோ, அதற்கு நேர்மாறாகக் குழந்தைகளுக்கு ஏற்றபடி மாற்றி அமைத்தனர். குறிப்பாக லைப்ரரி என்கிற பேரையே மாற்றினர். நூலகங்களுக்கு `ரெட்ஜோன்’ எனப் பெயரிட்டுப் பார்த்தனர். புத்தகங்களையும் அது இருக்கும் இடங்களையும் கண்டால் குழந்தைகள் சுவர் ஏறிக் குதித்துத் தப்பியோடாமல் இருப்பதற்கான முயற்சிகள் இவை. அதற்கு மிக நல்ல பலன் கிடைத்தது. அதுவரை புத்தகங்களையே தொட்டும்கூட பார்த்திடாத, நூலகத்தில் பாதம் பட்டிடாத குழந்தைகள் தானாகவே அங்கே கூடி நூல்கள் வாசித்து அதைப்பற்றிப் பேசவும் தொடங்கினர்.
இங்கே குழந்தைகளைப் பார்க்கவே முடியாத இடங்களில் ஒன்றாக நம் நூலகங்கள் மாறிவிட்டன. குழந்தைகள் மட்டும் அல்ல, இளைஞர்களும்கூட அங்கே ஒதுங்குவதில்லை. வாழ்ந்துகெட்ட வீட்டைப்போலத்தான் நம் ஊர் நூலகங்கள் இருக்கின்றன.
தன் இரண்டு மகள்களோடுதான் எல்லா போராட்டங்களுக்கும், உண்ணாவிரதங்களுக்கும், அரசியல் கூட்டங்களுக்கும் வருவார் உதயசூரியன். ஆர்வமாகப் பங்கேற்பார். அந்தக் குழந்தைகள் கோஷமிடுவார்கள். அங்கு வருகிறவர்களிடம் பேசுவார்கள். உதயசூரியன் எந்தக் கட்சியையும் சாராதவர். தன் மனதிற்கு எது நல்ல அரசியல் என்று படுகிறதோ, அதற்காகப் போராடுகிற குணம் அவருக்கு இருந்தது. அவரைவிடவும் அந்தக் குழந்தைகள் நிறையவே அரசியல் பேசினர்.
``குழந்தைகளுக்கு நாம அரசியல் கத்துக் கொடுக்கணும்னா, அதுக்கு ஏத்த இடம் போராட்டங்கள்தான். ஒவ்வொரு குழந்தைக்கும் அரசியல் கத்துக் கொடுக்காட்டி பெரியவங்களா ஆகி எதையும் எதிர்த்துக் கேள்வி கேட்காம மண்ணாந்தைகளா ஆகிடுவாங்க. இல்லாட்டிப்போனா, எவனாவது ஃபிராடுப்பய போராட்டம் பண்ணினா அரசியல் தெரியாம போய் அவனோட நிப்பாங்க. யாருக்காகப் போராடறோம்; எதுக்காகப் போராடுறோம்கிற தெளிவு நமக்குத்தான் இருக்கிறதில்லை. நம்ம குழந்தைகளுக்காச்சும் இருக்கணும்ல’’ என்பார். உதயசூரியன் தன் குழந்தைகளுக்கு அரசியலை ஊட்டி ஊட்டி வளர்த்துக்கொண்டிருந்தார்.
இங்கே அரசியல் தெரியாவிட்டால், உயிர் பிழைக்கவே முடியாது. நம்மீது ஒவ்வொரு நாளும், ஆளும் அதிகாரங்கள் திணிக்கிற அழுத்தங்கள் ஏராளம். அதையெல்லாம் எதிர்த்துப் போராடுவதற்கான பயிற்சியை சிறுவயதில் இருந்தே தர வேண்டும். தரத் தவறினால் தன் உரிமைகளைக்கூட கேட்டுப்பெறாத, அல்லது அதற்காகக் கவலையே படாதவர்களாக அவர்கள் மாறிப்போவார்கள். அதையும் மீறி அவர்கள் அநீதிகளை எதிர்கொண்டால் அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் மடிந்து போவார்கள். இளம் வயதிலேயே அதிகாரத்தின் கொடுங்கரங்களின் அழுத்தம் தாங்காமல் தங்களுடைய உயிரை மாய்த்துக்கொண்ட எத்தனை குழந்தைகளை பார்த்திருக்கிறோம். தன் மீதான அடக்கு முறையையும் அநீதியையும் எதிர்த்து நிற்கிற மன வலிமையை வாசிப்பும் உடற்பயிற்சியும் போராட்டக்களங்களும்தான் தரும். நம் குழந்தை களுக்கு அதையெல்லாம் அறிமுகப்படுத்துகிறோமா?
நூலகம், உடற்பயிற்சிக்கூடம், போராட்டக்களம்... இந்த மூன்றிலிருந்தும் நாம் விலகியே இருக்கிறோம். எமர்ஜென்ஸி என்றால் மட்டும்தான் இந்த இடங்களைப்பற்றி நாம் சிந்திக்கிறோம். அப்போதும்கூட பணத்தைவைத்து எப்படிக் குறுக்குவழியில் இவற்றை அடையலாம் என்பதுதான் நம் சிந்தனையாக இருக்கிறது. அறிவை வளர்க்க ட்யூஷன் வைத்துக்கொள்ளலாம். உடல்நிலை சரியில்லை என்றால் ஐ.சி.யூ-வில் வைத்துக்கொள்ளலாம். உரிமைகள் மறுக்கப்பட்டால், குனிந்துகொள்ளலாம் என நமக்கு சாய்ஸஸ் அதிகமாகிவிட்டன. ஆனால், அடுத்த தலைமுறைக்கு இந்த மூன்றும் அவசியமாக இருக்கப்போகிறது. ஒருபக்கம் மாறிவரும் சுற்றுச்சூழல், உணவுப்பழக்கம் மாதிரியான விஷயங்கள் நம்மை மேலும் மேலும் நோயாளிகளாக்கிப் பணம் கறக்கத் தொடங்கி விட்டன. இன்னொரு பக்கம் நம்மீது வலிமையான அடக்குமுறைகளை நவீன வடிவங்களில் திணிக்க ஆரம்பித்திருக்கிறது நம்மை ஆளும் அதிகார மையங்கள். இத்தகைய விஷயங்கள் நம்மீது செலுத்தப்படுகிறது என்பதை அறிந்து கொள்ளவாவது நூல்கள் வாசிக்க வேண்டியதும் அரசியலையும் சமூகத்தையும் தெரிந்துகொள்ள வேண்டிய கட்டாயம் இருக்கிறது.
சிறந்த விஷயங்களை நம் குழந்தைகளுக்கு தரவேண்டும் என்கிற நம் எண்ணம் மிகச்சரியானது. ஆனால் நாம் எதைத்தருகிறோம்?
- கேள்வி கேட்கலாம்...