``பல படங்களில் நடிச்சிருந்தாலும், மக்களுக்கு என்னை இன்னும் ஈஸியா தெரியப்படுத்திக்க ஆசை. அதனாலதான், விஜய் டிவியின் `வில்லா டு வில்லேஜ்' நிகழ்ச்சியில கலந்துக்கிட்டேன்..." என்று பேச ஆரம்பிக்கிறார், நடிகை சனம் ஷெட்டி. இவர் `ப்ரீத்திக்கு நான் கேரண்டி' விளம்பரத்தில் மூன்று வருடங்களுக்கு நடித்திருக்கிறார். மாடலிங்கில் அதகள என்ட்ரி கொடுத்தவர், தற்போது சினிமாவில் தயாரிப்பாளராகவும் அறிமுகமாகவிருக்கிறார்.
``விளம்பரம் பேசப்பட்ட அளவுக்கு, நீங்க நடித்த படங்கள் பேசப்படலையே... ஏன்?"
"சினிமா துறையில கால் பதித்து, பெரிய இடத்தைப் பிடிக்கிறது அவ்வளவு சுலபமில்லை. மாடலிங்குக்குப் பிறகு நிறைய இயக்குநர்கள்கிட்ட வாய்ப்பு கேட்டேன். ஒரு கட்டத்துல `சினிமா நமக்கு சரிவராது'னு லண்டன்ல இன்ஜினீயரிங் படிக்கப் போயிட்டேன். ஐடி கம்பெனியில வேலை கிடைச்சது. ஆனாலும், நடிப்பு ஆர்வம் விடல. மறுபடியும் விளம்பரங்கள்ல நடிச்சேன். தொடர்ந்து பட வாய்ப்புகளும் வந்தது. சினிமாவுல சான்ஸ் தரேன்னு சொல்லி பொண்ணுங்களை ஏமாத்துற சில உப்புமா கம்பெனிகளைக் முன்னாடியே கண்டுபிடிக்கிறது ரொம்ப கஷ்டம். அதையெல்லாம் தாண்டி ரியல் சினிமா பயணத்தைத் தொடங்க, எனக்கு சில வருடங்கள் ஆயிடுச்சு.
2012-ல `அம்பு' படத்துல கமிட் ஆகியிருக்கும்போது, ஒரு நடிகையா வளர்ந்து வருவேன்னு எந்த நம்பிக்கையும் எனக்கு இல்லை. அதனால லண்டன்லேயேதான் இருந்தேன். ஷூட்டிங் இருக்கும்போது மட்டும் சென்னைக்கு வருவேன். தொடர்ந்து வாய்ப்புகள் வர ஆரம்பிச்ச பிறகுதான், சென்னையிலேயே செட்டில் ஆயிட்டேன்."
``ஒரு நடிகையா இருந்து தயாரிப்பாளரா மாறியிருக்கிற அனுபவம் எப்படி இருக்கு, என்னென்ன சவால்களைச் சந்திக்கிறீங்க?"
``மாடர்ன் - ஹோம்லி கதாபாத்திரங்கள் எதுவாக இருந்தாலும், நடிக்கிறதுதான் ஒரு நடிகையோட வேலை. பெண்களுக்கு சினிமாவுல நிறைய பிரச்னைகள், பாலியல் தொல்லைகள் இருக்குனு பேசிக்கிறாங்க. எல்லா துறையிலேயும் அது இருக்கத்தான் செய்யும். நாமதான் அதையெல்லாம் சமாளிக்கிற பக்குவத்தை வளர்த்துக்கணும். இல்லைனா, எல்லோரையும் ஆளும் சக்தி நம்மகிட்ட இருக்கணும். கஷ்டப்பட்டு நம்மளோட திறமைகளை இந்த உலகத்துக்குப் புரியவெச்சுட்டா போதும். நம்மகிட்ட யாரும் தவறா நடந்துக்க முடியாது. அப்படி நினைச்சுதான் நான் தயாரிப்பாளர் ஆகணும்னு முடிவெடுத்தேன். தயாரிப்பாளர் சங்கத்திலும் உறுப்பினர் ஆகிட்டேன். ஒரு நடிகை தயாரிப்பாளரா மாறும்போது எந்த அளவுக்கு கஷ்டங்கள் இருக்குமோ, அதே அளவுக்கு நல்லதும் இருக்கு. எனக்கு சப்போர்ட் பண்ணி, இது உன்னால பண்ணமுடியும்னு ஊக்கப்படுத்தியது என்னைச் சுத்தியிருக்கிற ஆண்கள்தாம்.
ஒரு சில ஆண்களால பெண்கள் முன்னுக்கு வர்றதை அவ்வளவு சீக்கிரம் ஏத்துக்க முடியாது. நடிகையால எப்படித் தயாரிப்பாளர் வேலையைப் பார்க்க முடியும்னு சிலர் கேட்டாங்க. அவங்க எல்லோருக்கும் பதிலடி சொல்ற மாதிரிதான் என் முதல் படமான 'மேகி' அமையும்."
``நடிப்புல நீங்க வளர்த்துக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன?"
``மலையாளத்துல நான் மூன்று படங்கள்ல நடிச்சிருக்கேன். மலையாள சினிமா ரொம்ப வளர்ச்சியடைந்தது. அங்கே வணிக நோக்கம் பிரதானம் கிடையாது. தமிழ்ல ஒரு படம் பண்ற பட்ஜெட்டை வெச்சு அங்கே மூணு படம் பண்ணிடுவாங்க. நடிகர்கள் வாங்குற சம்பளமும் குறைவு. பாகுபாடு என்பதும் கிடையாது. படத்தை இந்தத் தேதிக்கு முடிக்கணும்னு முடிவு பண்ணா, அந்தத் தேதியில முடிச்சிடுவாங்க. சுருக்கமா சொன்னா, சினிமாவின் உண்மையான அர்த்தத்தை மலையாள நடிகர்கள் புரிஞ்சுக்கிட்டவங்களா இருக்காங்க.
நாம் எந்த மொழியில நடிக்கிறோமோ, அந்த மொழியைக் கத்துக்கிறது ரொம்ப முக்கியம். அதனால எனக்கு டயலாக் டெலிவரில பிரச்னை இருந்ததில்லை. எமோஷனலான காட்சிகள்ல ஈஸியா நடிச்சிருவேன். காமெடியா நடிக்கிறதுதான் எனக்கு வராது. ஹியூமர் சென்ஸை எப்படியாவது வளர்த்துக்கணும்."
``சினிமாவுல ரொம்ப வருடமா இருக்கீங்க. என்ன மாதிரியான விஷயங்களையெல்லாம் ஃபாலோ பண்றீங்க?"
``சுதந்திரம் மத்தவங்க நமக்குக் கொடுக்கிறதில்லை. நமக்கு நாமே உருவாக்கிக்கிறது. அந்த வகையில, என்னோட குடும்பத்தைச் சார்ந்து ஒருபோதும் நான் இருந்ததில்லை. அப்படி இருந்தாதான் வாழ்க்கையோட சுவாரஸ்யத்தை சரியா உணர முடியும். இப்படிப் பண்றது மூலமா நிறைய தவறுகள் நடக்கலாம். ஆனா, கத்துக்கிற விஷயங்கள் அதிகமா இருக்கும். எல்லாப் பிரச்னைகளையும் சமாளிக்கிற பக்குவமும் நமக்கு வந்திடும். இந்தச் சமூகம் அப்படித்தான் இருக்குது. நாம தெளிவா இருந்தா மட்டும்தான் இந்தச் சமூகம் நம்மளை ஏத்துக்கும். இல்லைனா, அடிமட்டத்துக்குத் தள்ளிவிட்ரும். சினிமாவும் அப்படித்தான். நிறைய விஷயங்களை இன்னும் நான் கத்துக்கிட்டு இருக்கேன். நடிப்பு, தயாரிப்பு ரெண்டுலேயும் பெரிய ஆளா வரணும்!"
``நினைச்சதை சாதிக்க முடியலையேனு நீங்க வருத்தப்பட்டதுண்டா, அப்படியான தருணங்களை எப்படிக் கடந்து வர்றீங்க?"
``எனக்கு எல்லாமே சினிமாதான். ஷூட்டிங் இல்லாத நாள்கள் பெரும்பாலும் என் வாழ்க்கையில இல்லை. நடன நிகழ்ச்சிகள், நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குறதுனு சின்ன விஷயமா இருந்தாலும், தொடர்ந்து இயங்கிக்கிட்டேதான் இருப்பேன். தவிர, ஃப்ரீயா இருக்கிற சமயங்கள்ல எங்கேயாவது டிராவல் போகணும்னு நினைப்பேன். பெண்களுக்கு மன அழுத்தம் கொஞ்சம் அதிகமா இருக்கும். வீடு மற்றும் ஆபீஸ் பிரச்னைகள் ரெண்டும் ஒண்ணு சேர்ந்து கஷ்டப்படுத்தும்போது, கட்டாயம் எங்கேயாவது வெளிய போய் ரிலாக்ஸ் பண்ணணும். தனியா போறது பெண்களுக்கு மன தைரியத்தையும் வளர்க்கும்."
``பெண் சுதந்திரம், பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளுக்கு எதிரா குரல் கொடுக்க ஆர்வமா இருக்கீங்களே. #MeToo கேம்பைன் பற்றி உங்க கருத்து என்ன?"
``பாலியல் வன்கொடுமை தினமும் நடக்கிற விஷயம் ஆயிடுச்சு. எல்லாப் பெண்களும் வாழ்க்கையில ஒருதடவையாவது இந்தப் பிரச்னையைச் சந்திச்சிருப்பாங்க. நான் ஒருதடவை பெங்களூருல நியூ இயர் பார்ட்டில இருக்கும்போது, ரோட்டுல போன ஒருத்தன் என்கிட்ட தப்பா நடந்துக்கிட்டான். அவனை அந்த ரோட்டுல வெச்சே அசிங்கமா திட்டி அனுப்பினேன். எந்தவொரு இடமும் பெண்களுக்குப் பாதுகாப்பானது கிடையாது. நமக்கு என்ன நடந்தாலும் அதை வெளிய சொல்லணும். தைரியமா எதிர்த்துக் குரல் கொடுக்கணும்."
`` `டிக்கெட்' படத்தோட ஸ்பெஷல் என்ன?"
``லண்டன் ஃபிலிம் பெஸ்டிவல்ல `டிக்கெட்' படத்தை ஸ்க்ரீனிங் பண்ணியிருக்காங்க. இது தமிழ், ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளிலும் ரிலீஸாகுது. வாழ்வுக்கும் சாவுக்கும் ஒருத்தன் எந்த அளவுக்கு பயப்படுறான்.. என்பதுதான் கதை. எனக்குத் தெரிந்து இந்த மாதிரியான கதைகளை நாம ஹாலிவுட்லதான் அதிகமா பார்த்திருப்போம். சீக்கிரமே இந்தப் படம் தியேட்டர்ல ரிலீஸாகும்!"