Published:Updated:

உயிர்மெய் - 23

உயிர் மெய்
பிரீமியம் ஸ்டோரி
News
உயிர் மெய்

மருத்துவர் கு.சிவராமன்

றவின் உச்சத்துக்குப் பின்னரான கணங்கள் உசத்தியானவை. கோயிலின் படிக்கட்டில் அமர்ந்ததுபோல ஓர் அமைதியைத் தருபவை. அந்த வேளையில் அருகாமையில் மனைவி தன் விரல்களைப் பாந்தமாக நம் கை விரல்களோடு கோத்து, நம் முகம் பார்ப்பதுபோல நிறைவைத் தருவன. அதீதக் காதலின், அவசரத்தில் நிகழ்ந்து முடியும்போதுகூட அந்த உச்சத்தின் தருணமும் எப்போதும் குறைவானவை அல்ல. அது, கடற்கரையின் விளிம்பில் நிற்கும்போது, காலைக் கவ்விச்செல்லும் குளிர் நீர், வேகமாக மீண்டும் கடலுக்குள் திரும்பிச் செல்கையில், நம்மைப் புரட்டிப்போட எத்தனிக்கும் ஒரு மகிழ்ச்சியைத் தருவது. இப்படி இரண்டு மாதிரியுமே அல்லாமல், உச்சத்தின் மகிழ்வை ஒரு துளிகூட உணர்ந்து மகிழ முடியாமல், `வெடுக்’ என ஒரே கணத்தில் வீழ்ந்துபோகும் உணர்வைத் தரும் சிக்கலுக்கு, `விந்து முந்துதல்’ (Premature ejaculation - PME) என்று பெயர்.

எல்லாமே சரியாக இருந்து, சில நேரங்களில், எந்த ஒரு நோயுமாகவும் இல்லாமல், மனப் பரபரப்பின் ஒரு வெளிப்பாடாக மட்டுமே அமையும் இந்தச் சின்னப் பிரச்னை, பல குடும்பங்களின் பூதாகரப் பிரச்னையாவதும், வெகு சிலருக்கு அதனாலேயே குழந்தைப்பேறு தள்ளிப் போவதும் உயிர் மெய் விஷயத்தில் உதாசீனப்படுத்த முடியாத ஒன்று. விந்து முந்துதல் என்றால் என்ன? என்ன நிகழ்கிறது அங்கே? அப்படி என்ன மன அழுத்தத்தை இந்தப் பிரச்னை பல ஆண்களுக்கு விதைக்கிறது?

`கள்ளினும் காமம் பெரிது’ என வள்ளுவன் ஆழமாகச் சொன்னது, காமம் போதையின் வகையைச் சார்ந்தது அல்ல என்பதை உரக்கச் சொல்லத்தான். குறைந்த போதை, தெளியும்.  நிறைந்த காமம், தெளிவைத் தரும். இந்தப் புரிதல் இல்லாமல், காமத்தை அணுகும் ஆணுக்குத்தான்  அநேகமாக இந்த `விந்து விரையும் சிக்கல்’ அதிகம் வருகிறது. கூடவே, இயல்பாகச் சிலர் பரபரப்பான மனதைப் பாலகனாக இருக்கும்போதே பெறுவார்கள். அப்படி வளர்த்து எடுக்கும் மதிப்பெண் எந்திரங்கள் பின்னாளில், `எல்லாமே எனக்கு எண்கள்தாம்’ என எப்போதும் ரூபாய் நோட்டுகளை எண்ணிக்கொண்டே இருக்கும், எங்குமே இளைப்பாறத் தெரியாத இளசுகளுக்கும் இந்த முந்தல் வரக்கூடும்.

உயிர்மெய் - 23

`ஐயய்யோ!’ எனும் சொல்லைத் தாங்கமுடியாத இழப்புக்குப் பயன்படுத்தலாம். `முருங்கைக்காய் வேகலை’ என்றால், `கருங்குளம் பஸ் கிளம்பிவிட்டது’ என்றால், `யூ.கே.ஜி. மிஸ் கையில் ஸ்டார் போட்டுவிடலை’ என்றால், இந்த `ஐயய்யோ’வைப் பயன்படுத்துவதுதான்  பரபரப்புக் கிருமியை வாழ்க்கைப் பரிசலில் ஏற்றுவதற்குக் காரணம். கூடவே பள்ளியில் வளர்த்தெடுக்கும் சாதனை வெறி. குறிக்கோளை நோக்கிப் பயணிப்பதற்கும், அதற்காக வெறிபிடித்து ஓடுவதற்கும் வித்தியாசம் உண்டு. இரண்டிலும் இலக்கு ஒன்றுதான் என்றாலும், அழகாக, கவித்துவமாகப் பயணிப்பவருக்கும் வெறிபிடித்து ஓடுவோருக்கும் வித்தியாசம் உண்டு. முதலாமவர் இலக்கை அடையும்போது, நிறைவும், மகிழ்ச்சியும், உறவும், அன்பு உள்ளங்களும் ஏராளமாக உடனிருக்கும். வெறிபிடித்து ஓடுகையில் இலக்குக் கையில் கிடைக்கும்போது, இவை எதுவுமில்லாமல், இர்ரிடபிள் பவல் சிண்ட்ரோம் (Irritable bowel syndrome) எனும் நோயும், கொஞ்சம் இந்த விந்து முந்துதல் நோயும் கால்சட்டையின் இரு பைகளுக்குள்ளும் ஏறி இருக்கும். உள்ளங்கை அநாவசியமாக வியர்த்தல், உள்ளங்கால் செருப்பு நனையும்படி வியர்த்தல், சாப்பிட்டவுடன் மலம் கழித்தல் போன்ற சங்கடங்களோடு வரும் இந்த `ஐ.பி.எஸ்.’ (இர்ரிடபிள் பவல் சிண்ட்ரோம்) மனப் பரபரப்பு நோயில், சிலருக்கு இந்த விந்து முந்துதலும் குடியேறிவிடும்.

எப்போதுமே இயல்பாக இருந்தும், மிகச்சரியான புரிதலும், பொங்கும் காதலும் இருந்தும், இந்த `விந்து முந்துதல்’ சில ஆண்களுக்கு ஏற்படுவதற்கு எப்போதுமில்லாமல், அந்தக் கணத்தில் மட்டுமே ஏற்படும் பரபரப்பும் ஒரு முக்கியக் காரணம். மூளையில் ஹார்மோன்கள் அடிக்கும் உச்சபட்சக் கும்மியில் கொஞ்சம் தடுமாறி, இரு உள்ளங்களும்  பரவச நிலைக்குத் தயாராகும் முன்னர், தடுமாறி உயிரணுக்கள் வெளிப்பட்டுவிடும். அதனால் உயிரணுக்களின் பயணம் கர்ப்பப்பை நோக்கிச் செல்வது தடைப்படுவதால், கருத்தரிப்பு தாமதமாகிக்கொண்டே இருக்கும். இந்த நிலைக்கு மனம் காரணம் அல்ல என்கிறபோது, சில சிகிச்சைகள் தேவைப்படலாம். பெரும்பாலும் தவறாகப் புரிந்துகொள்ளப்படும் சுயஇன்பம்கூட இந்தச் சிக்கலுக்கான சிகிச்சையாக, உடலுறவின் நடுவே செய்யும்படிப் பரிந்துரைக்கப்படுகிறது. ஆணுறுப்பை சற்றே மரத்துப் போகவைப்பதை நவீன மருத்துவம் பரிந்துரைக்கிறது. `நீடித்த இன்பம் பெற’ என்ற விளம்பரங்களுடன் வரும் ஆணுறைகள், இப்படியான மிக லேசான மரத்துப் போதலை, ஆணுறுப்பின் முன் பகுதியின் மேல்புறப் பகுதியில் தரும்போது, `குப்பென்று ஏறிய உற்சாகம்’ உச்சத்தை நோக்கி ஒரேயடியாகப் பயணிக்காது. மரத்துப்போக இட்ட மருந்து, சின்னத் தடையை ஏற்படுத்தும். அதனால்,  விந்து முந்துதல் நிகழாது. `பாஸு! நாங்க குழந்தைக்கு முயற்சி செய்யும்போது ஆணுறை எப்படி?’ என்போருக்கு எளிய சில பயிற்சிகள் பயனளிக்கும். (விளக்கம் பெட்டிச் செய்தியில்.)

 ஆணாதிக்க உலகில், முற்றிலுமாக இது குறித்துப் பேசுவதையே பெருத்த அவமானமாகக் கருதும் கூட்டம் இங்கு  உண்டு. நடு இரவுத் தொலைக்காட்சிப் பொய்ப் பிரசாரமும், மெடிக்கல் ஷாப்பில் போய், பிட்டுப் பட போஸ்டர் மாதிரி அட்டையில் போட்டிருக்கும் மாத்திரைகளை, அநியாய விலை கொடுத்து வாங்குவதும்தான் இவர்கள் வாடிக்கை. இந்த மாதிரி போலிகள் விற்கும் மருந்துகளிலும் அல்லது நேரடியாக விற்கப்படும் போலி மருந்துகளிலும் அன்று அபின், கஞ்சா சேர்க்கப்பட்டன. இன்று அறிவியல் வளர்ச்சியில், வயாகரா ரசாயனங்களை முறைகேடாகக் கலந்து விற்கிறார்கள். `சீக்கிரம் வந்துடுதே...’ என அங்கு ரகசியமாக மருந்து வாங்கி, பின்னாளில் அந்த மருந்துகளின் பக்கவிளைவால் நிரந்தரமாக, `ஐயோ வரவே மாட்டேங்குதே...’  எனும் நிலைக்கு இந்தப் போலிகள் தள்ளக்கூடும்.

உயிர்மெய் - 23

`விளக்கொளியும் வேசையர் நட்பும்... நெய்யற்ற கண்ணும் அறுமே’ என்பதை நாலடியாரில் படிக்காத சிலருக்கு, விலைமாதரிடம் போய்வந்த தவறான அனுபவமும் அல்லது அதனால் பெற்ற அவமானமும் சேர்ந்து, ஒவ்வொருமுறை உடலுறவின்போதும் மூளையில் அது  குடியேறிக் குழப்பம் ஏற்படுத்துவதும் இந்தப் பிரச்னைக்குக் காரணம். சிறு வயதில் ஆண் பாலினச் சேர்க்கை முதலான Sexual abuse, மன அழுத்த நோய்கள் (Depression), தாழ்வு மனப்பான்மை, உடல் கட்டமைப்பு மெலிந்தோ அல்லது விருப்பம் தரும்படி இல்லாமலிருப்பதோ (Poor body image) கூட இந்தச் சிக்கலுக்குக் காரணமாக அமையலாம். முன்னர் ஒருமுறை இப்படி விரைந்து வெளியேறியதை நினைவில் வைத்துக்கொண்டு, `ஒவ்வொரு முறையும் இப்படி ஆகிவிடுமோ?’ எனப் பதறுவதுதான் மிக முக்கியமான காரணம்.

எல்லாவற்றையும்விட, ஏதோ ஒரு காரணத்தால் ஓரிரு முறை இப்படி விந்து முந்துதல் ஏற்பட்டு, மகிழ்வு தடைபட்ட பின்னர், அடுத்த முறை இந்த விஷயத்துக்குத் தயாராகும்போது மனைவி, `பார்த்து... இந்த முறை சரியா இருக்குமா?’ எனக் கேள்வி எழுப்புவது ஒட்டுமொத்தமாக அவனைப் பொசுங்கிப்போக வைத்துவிடுவது உண்டு. இந்த விஷயத்தில் வார்த்தைகளால் விமர்சிக்காமல், தன் அரவணைப்பால்  நம்பிக்கையைத் தர வேண்டியது மனைவிதான். அப்படியான அன்பைத் தர, நெஞ்சை முட்டும் காதல் குடியிருக்க வேண்டியதும், எதையும் எதிர்நோக்கா (Unconditional love) ரொம்பவே அவசியம். கார் ஓட்டும்போது, சைக்கிள்கூட சரியாக ஓட்டத் தெரியாத மனைவிகள் சிலர், பக்கத்து சீட்டில் உட்கார்ந்துகொண்டு, `பார்த்து, லெஃப்ட்ல பாருங்க... ரைட்ல ஒடிங்க’ எனச் சொல்வது உண்டு. எரிச்சலின் உச்சத்தில், வண்டியைவிட்டு இறங்கும்போது பெரும்பாலும் அது  டைவர்ஸ் வரைக்கும் போகும். அதே மாதிரி, உடலுறவின்போதும், தான் எந்த சீட்டில் இருந்தாலும் `சரி, தப்பு’ என யாரும் வழிகாட்டிக்கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. சில நேரங்களில், தப்பான பாதையில் போய்க்கூட இலக்கை அங்கே அடைய முடியும். ஏனென்றால், இந்தப் பயணத்தில், இருவருமே ஓட்டுநர்கள்; இருவருமே நடத்துநர்கள்.

இருவருக்குமிடையே உள்ள பல மனத்தடைகள், PME பிரச்னைக்கான இன்னொரு காரணம். ``ஆனாலும் உங்க அம்மா அப்படிப் பேசி இருக்கக் கூடாது. அவங்களுக்கு எங்க வீட்டைப் பார்த்தாலே பாகிஸ்தானைப் பார்கிற மாதிரிதான்’’ எனச் சாயங்கால வேளையில் ஆபீஸுக்கு போன் போட்டுச் சொன்னது, அநியாயத்துக்கு அந்த க்ளைமாக்ஸ் நேரத்தில் ஞாபகம் வந்து உடலுறவு உச்சம் பொசுக்கெனப் போவதும் உண்டு. இவர்களுக்கு மனைவியின் புன்னகையுடன்கூடிய முகமொழி மாத்திரை ஒன்றே போதும்... எல்லாம் சரியாகிக் குழந்தைப்பேறு நிகழ.

உயிர்மெய் - 23

ஒவ்வொரு முறையும்( Lifelong PME) இப்படி விந்து முந்துதல் நடக்கிறதா அல்லது சில நேரங்களில் சரியாகவும் சில வேளைகளில் (Acquired Secondary PME) மட்டும் இந்தச் சிரமம் இருக்கிறதா என்பதைப் பொறுத்துத்தான் சிகிச்சையின் அவசியமே இருக்கும். சிலருக்கு, மூளையில் சுரக்கும் ஹார்மோன்கள் அல்லது நரம்பு ரசாயனக் கடத்திகளின் (Neurotransmitters) மாறுபாடும் இந்தச் சிக்கலுக்குக் காரணமாக இருக்கலாம். ஆண்களுக்கு மட்டுமே உள்ள புராஸ்டேட் கோளத்தில், (இதுதான் உச்சத்தில் விந்தைப் பீய்ச்சி அடிக்கும் கோளம்) வரும் தொற்று அல்லது அழற்சி, சிறுநீர்ப் பாதையில் ஏற்படும் தொற்று எனச் சிலவும் காரணமாக இருக்கலாம்.

‘விந்து முந்துது’ எனத் துண்டைத் தலையில் சுற்றிக்கொண்டு, கூனிக் குறுகிப் போலிகளிடம் போய்ச் சிக்காமல், மனம் திறந்து, குடும்ப மருத்துவரிடம் பேசுங்கள். உளவியல்ரீதியான இந்தச் சிக்கல் ஏற்படுகையில், மருத்துவரிடம் பேசி இதைத் தெளிவாகப் புரிந்துகொள்வதும், மருத்துவர் வார்த்தையில் கிடைக்கும்  Reassurance-மே நோயைச் சரியாக்கிவிடும் என அறிவியல் பூர்வமாக ஆராய்ந்து சொல்லியிருக்கிறார்கள். அங்கே தேவை அன்பான, அனுசரணையான உரையாடல் மட்டுமே; மருந்துகள் அல்ல. விந்து முந்துவதற்கு சித்த மருத்துவம் சொல்லும் மிக முக்கியக் காரணம் உடற்சூடு சார்ந்தது. `உடற்சூடு’ எனும் வார்த்தையை நவீனம் ஏற்றுக்கொள்வதில்லை. சித்தம் முதலான அத்தனை பாரம்பர்யத்துக்கும் இந்த `சூடு, குளிர்ச்சி’ எனும் சொற்களுக்குப் பின்னால் மாபெரும் மருத்துவ விளக்கம் இருக்கிறது. அதிக அளவிலான பித்தத்தில் விளையும் உடற்சூட்டில் புராஸ்டேட் கோளம் வேகமாக விந்தை வெளியேற்றுகிறது. `வெள்ளைக் குங்கிலியம்’ எனும் பிசினிலிருந்து (வேப்பம் பிசின் மாதிரிக் குங்கிலிய மரத்தில் விளையும் பிசின்) தயாரிக்கப்படும் குங்கிலியப் பஸ்பம் விந்து முந்துதல் நோய்க்கும் உடல் சூட்டைத் தணிக்கவும் சிறந்த மருந்து. அரசு சித்த மருத்துவரிடம் ஆலோசனை பெற்று இதைப் பயன்படுத்தலாம்.வெள்ளைப் பூசணி (தடியங்காய்), நிலப்பூசணி எனும் பூமி சர்க்கரைக் கிழங்கு இவையெல்லாம் அதிகரிக்கும் உடற்சூட்டைத் தணித்து இயல்பாக விந்து முந்துதலைத் தணிக்கும் எளிய உணவும் மருந்துகளும்.

எண்ணெய்க் குளியல் உடற்சூட்டைத் தணித்து இந்தப் பிரச்னையில் இருந்து நிரந்தரமாக விடுபட எளிய வழி. அதற்காக, தமிழ் சினிமா கிராமத்து ஹீரோ மாதிரி, `வெந்நீர் வெச்சிட்டியா... இங்கே வந்து எண்ணெய் தேய்ச்சுவிடு’ என அதிகாரம் எல்லாம் பண்ணக் கூடாது. குழந்தைப்பேறு அல்ல, சோற்றுப்பேறுகூட கிடைக்காமல் போய்விடும். தேடலே இல்லாமல், அமேசானிலும் ஆண்ட்ராய்டிலுமே எல்லாவற்றையும் பெற்றுப் பழகும் கூட்டமாக நாம் வேகமாக மாறுகிறோம். அதேபோல், அகத்தின் தேடலே இல்லாமல், காதலையும் காமத்தையும் ஆன்லைனில் பெறுவோரும் பெருகிவருகின்றனர். காதலின் எந்தப் புரிதலும், காமத்தின் எந்த நுணுக்கமும்  தெரியாமல், அப்படி இணைந்தோர், பயன்படுத்துவோர் கையேடு (User manual) தேடுவதுதான் இங்கே வலி நிறைந்த வரலாறு. மலரினும் மெல்லியது காமம். அதனைச் செப்பச் செய்யும் சிலராக இருப்பது மட்டும்தான் குழந்தைப்பேறுக்கு மட்டுமல்ல... வாழ்க்கைப்பேறுக்கும் வழி.

- பிறப்போம்...

Pause squeeze technique. இது கணவன்-மனைவி இருவரும் இணைந்து செய்ய வேண்டிய பயிற்சி. ரொம்ப விளக்கமாக இதை எழுத இயலாது என்பதால், மருத்துவரிடம் கேட்டு இந்த எளிய பயிற்சியைக் கற்றுக்கொள்ளவும். இந்தப் பயிற்சியில் வலி இருந்தால், Stop-start பயிற்சியும் பலனளிக்கும். இரண்டு வருடப் பயிற்சி. பிறகு, ஆறு மாதம் அப்ரெண்டிஸ் எனப் பயப்பட வேண்டியதில்லை. இரண்டு, மூன்று வகுப்பில் உச்சம் உறுதி.

உயிர்மெய் - 23

`கூபக தசைகள்’ எனும் உடலுறவின் செய்கைகளுக்கு வலுப்படுத்தும் Pelvic muscles- ஐ வலுப்படுத்தும் பயிற்சி இந்தப் பிரச்னைக்குத் தீர்வளிக்கும் என நிறுவி இருக்கிறார்கள். முஷ்டியை வலுவாக்கும் பயிற்சி மாதிரி கர்லா கட்டையைத் தூக்கி இதனை வலுப்படுத்த முடியாது. கொஞ்சம் கவனமாகப் படித்துச் செய்யவும். சிறுநீர் போகும்போது பாதியில் நிறுத்த நம்மால் முடியும். ஆபீஸில் இருக்கும்போது பிரிய நினைக்கும் வாயுவை வெளியே விடாமல் அடக்க முடியும். அதற்கு நாம் பயன்படுத்தும் தசையை மனதில் நினைத்துக்கொண்டு, சுருக்கி விரித்துச் செய்யும் பயிற்சிதான் ` Kegel excercises’ எனும் கூபக தசைப் பயிற்சி. தினமும் மூன்று முறை இதைச் செய்ய வேண்டும். விளக்கமாக இணையத்திலும் படித்துக்கொள்ளலாம். இந்தப் பயிற்சியில் விந்து முந்துதல் சிக்கல் தீரும்.