Published:Updated:

சொல் அல்ல செயல் - 23

சொல் அல்ல செயல் - 23
பிரீமியம் ஸ்டோரி
News
சொல் அல்ல செயல் - 23

அதிஷா

 பெண்ணின் நிர்வாணம் எல்லா நேரங்களிலும் ஆணுக்கு மகிழ்ச்சியை மட்டுமே தந்துவிடுவதில்லை. அவை எல்லா சந்தர்ப்பங்களிலும் காமத்தின் கதவுகளை மட்டுமே திறந்துவிடுவதில்லை. உயிரையே பிய்த்தெறிகிற வேதனையையும் ஆற்ற முடியாத வலியையும் கொண்டுவரக் கூடியதாகவும்கூட அது இருக்கலாம். சுமதியின் நிர்வாணம் எனக்குத் தந்தது அந்த வலியைத்தான்.

தோழி சுமதியின் நிர்வாணப்படங்கள் மின்னஞ்சலில் வந்திருந்தன. அவை அனாமதேய முகவரி ஒன்றிலிருந்து அனுப்பப்பட்டிருந்தன. ``உன்னுடைய தோழியின் லட்சணம் இதுதான். இவளோடுதான் நீ நட்பாக இருக்கிறாய். இவள் ஒரு வேசி. இவளை அம்பலப்படுத்து!’’ என்று ஆங்கிலத்தில் குறிப்பு ஒன்றும் அதிலிருந்தது. எப்போதும் மின்னஞ்சலை அழிப்பதற்கு இவ்வளவு தடுமாறியதில்லை. நிதானிக்க முடியாமல்... அவசரமாக அந்தப்படங்களை அழித்தேன். இதுவே எனக்குத் தெரியாத ஒரு பெண்ணின் நிர்வாணப்படம் இதே பதற்றத்தைக் கொடுத்திருக்காது. இவ்வளவு அவசரமாக அந்தப்படங்களை நான் அழித்திருக்க மாட்டேன். காரணம் சுமதி என்னுடைய தோழி.

அந்தப்படங்கள் நிச்சயமாகச் சுமதியினுடையவை தான். அந்தப்படங்களை யாரோ எடுத்திருக்கவில்லை. அவை போட்டோஷாப்பில் கிராபிக்ஸ் செய்யப்பட்டவையும் இல்லை. அதை எடுத்ததும் சுமதியேதான் என்பது தெளிவாகத் தெரிந்தது. காரணம் எல்லாமே செல்ஃபிகள். சுமதியோடு இருப்பவன் ராகுல். அவளுடைய காதலன். இருவருமாகச் சேர்ந்து எடுத்துக்கொண்ட அந்தரங்கமான படங்கள் அவை. இவை யாரால் எப்படி என்னுடைய மின்னஞ்சலுக்கு வந்திருக்கும். அவசரமாக இதைப்பற்றிச் சுமதியிடம் பேசியாக வேண்டும் என்கிற துடிப்பு மட்டும் இருந்தது. சுமதியிடம் இதைப்பற்றி எப்படிப் பேசுவது?

சொல் அல்ல செயல் - 23

செல்போன் விற்கிற கடையில் வேலை பார்க்கிற பெண் சுமதி. இப்படி ஒரு விஷயம் எந்த அளவுக்கு அவளைப் பாதிக்கும் என்பதை என்னால் கணக்கிட வெல்லாம் முடியவில்லை. அவள் தற்கொலை செய்துகொள்ளக்கூடும் என அஞ்சினேன். அவளுடைய குடும்பமே தற்கொலை செய்துகொண்டு இறந்து போய்விடுமோ? சுமதியின் தந்தையைத் தொடர்பு கொள்ளலாமா? அது,  விஷயத்தை இன்னும் மோசமாக்கலாம்.  நேரடியாக சைபர் கிரைமிற்குச் செல்லலாமா? முப்பது நொடிக்குள் முந்நூறு குழப்பங்கள்.

குழப்பங்கள் எச்சரிக்கை உணர்வுகளாக மாறத்தொடங்கின. எச்சரிக்கை உணர்வுகள் எதிலிருந்தும் தப்பியோடத் தூண்டுபவையாகத்தானே இருக்கின்றன! இறுதியில் சும்மா இருந்துவிடத்தான் நினைத்தேன். எல்லோருமே அப்படித்தானே இருந்துவிடுகிறோம். ஆனால் இந்தப் படங்கள் தொடர்ச்சியாக இணையத்தில் பரவிச் சுமதி தானாகவே தெரிந்து கொள்வதைவிட முதல் ஆளாக இப்போதே சொல்லிச் சுமதியை எச்சரிக்கை செய்துவிடுவது நல்லது என்றே தோன்றியது. எதிர்பாராத அவமானங்கள்தான் ஆபத்தானவை. அவை நம்மை நிலைகுலையச்செய்து வீழ்த்திவிடக் கூடியவை.

சுமதியை எப்போதும் சந்திக்கும் புத்தகக்கடைக்கு வரவழைத்தேன். தொடர்பற்ற விஷயங்களைப் பற்றிச் சுமதியோடு பேசிக்கொண்டிருந்தேன். எப்படித் தொடங்குவது எங்கிருந்து ஆரம்பிப்பது... டிவி நிகழ்ச்சி ஒன்றைப்பற்றியும் ஜெயகாந்தனின் நாவல் பற்றியும்... என்னென்னவோ... உளறிக் கொண்டிருந்தேன். சுமதியை தயார்செய்வதற்குமுன் என்னைத் தயார் செய்துகொண்டிருக்கவேண்டும். ஒரு மரணச்செய்தியைச் சுமந்துகொண்டு காத்திருப்பவனைப்போல தயக்கத்தோடு நின்றேன்.

சொல் அல்ல செயல் - 23


அவளாகவே கேட்டாள். “என்ன ப்ராப்ளம் ஏன் இன்னைக்கு இவ்ளோ பதறுது குளறுது.’’  என்றுவிட்டுச் சிரித்தாள். சுமதி அப்படித்தான் எந்நேரமும் சிரித்துக்கொண்டே இருப்பாள். எதற்கும் அவள் கலங்கிப்பார்த்ததேயில்லை. மூச்சை இழுத்துப்பிடித்துக்கொண்டு ‘’இன்னைக்கு ஒரு மெயில் வந்துச்சு...’’ என்றேன்.  சிறிய கல்லெறிதலில் ஒட்டுமொத்தமாகச் சலசலக்கும் குளம்போல சுமதியின் முகத்தில் மாற்றம் ஒன்று வந்து பழைய நிலையை எட்டியது. நான் மௌனமாக இருந்தேன். சுமதி எதுவும் பேசவில்லை. எங்களைச் சுற்றியிருந்த நூல்களும்கூட எங்களுடைய மௌனத்தைப் பங்கிட்டுக்கொண்டும் பார்த்துக்கொண்டும் இருந்தன. அந்த நொடிகள் மிக மோசமானவை. சுமதியின் வாய்திறந்து சொல்லப்போகும் சொற்கள் தொலைதூரத்திலிருந்து வருகிற பயணியைப்போல இருந்தன. சுமதிக்கு அந்த மின்னஞ்சல் குறித்துத் தெரிந்திருந்தது என்பதை முகக்குறிகள் வெளிப்படுத்தின.

‘`அதுல என்னோட  போட்டோஸ் வந்துச்சா...’’ என்றாள். அதைச்சொல்லும்போது அவளுடைய முகம் சலனமற்று எந்தவித உணர்வுமின்றி இருந்தது. அருகில் இருந்த நூல்களில் ஒன்றை இயல்பாகப் புரட்ட ஆரம்பித்தாள். அவள் அப்படிச் செய்தது எனக்கு உதவியாக இருந்தது. சுமதியின் கண்களை எதிர்கொள்வது மிகக்கடினமானதாக இருந்தது. ஆமாம் என்பதைப்போல தலையாட்டினேன். சுமதி கேட்டாள். ‘`அதுக்கென்ன?’’

அந்த ``அதுக்கென்ன”விற்கு என்ன பதில் சொல்வது? சுமதியே பேசட்டும் எனக் காத்திருந்தேன். ‘`உனக்கு மட்டுமில்ல... என்னோட நண்பர்கள் எல்லாருக்கும் அந்தப் படங்கள் போயிருக்கு. அப்புறம் ஃபேஸ்புக்ல என் பேர்ல ஒரு பேஜ் ஆரம்பிச்சு அதுலயும் போஸ்ட் பண்ணிருக்கு... இதுவரைக்கும் உன்னோட சேர்த்து அஞ்சுபேர் அதைப்பத்தி நேர்ல வந்து பேசிட்டாங்க. எல்லோருக்கும் நன்றி சொன்னேன். உனக்கும் அதையே சொல்றேன். தாங்க்ஸ்.’’ என்றாள்.

‘`இதை அனுப்பினது யார் தெரியுமா? உன் ஃபிரண்ட் ராகுல்தான்!’’ என்று சகஜமாகச் சொன்னபோதுதான் விஷயத்தின் தீவிரம் புரிந்தது. அவன் அப்படியெல்லாம் செய்கிறவனில்லை. அவனை நன்றாகத்தெரியும். ‘`அவன் அப்படிப் பண்ணிருக்கமாட்டான்’’ என்றேன். சுமதி அதற்கும் சிரித்தாள்.

வாழ்வின் மிக அதிகபட்ச வலிகள் எல்லாமே மனம் சார்ந்தவைதான். உடல்வலிகளைப்போல அல்ல அவற்றை எதிர்கொள்வது! மனவேதனையின் எல்லைகளில்தான் மனிதர்கள் தங்களை மாய்த்துக்கொள்கிறார்கள். அத்தகைய ஒரு துயரத்தை எப்படியாவது போராடிக் கடந்துவிட்டால் எப்படிப்பட்ட துயரத்தையும் ஒரு புன்னகையில் கடக்கிற வலிமையை பெற்றுவிடுகிறோம்! சுமதி அந்த நிலையை எட்டிவிட்டிருந்தாள் என்றே தோன்றியது.

சொல் அல்ல செயல் - 23

இரண்டு மாதங்களாகவே சுமதிக்கும் ராகுலுக்கும் இடையே பல்வேறு பிரச்சனைகள் இருந்திருக்கின்றன. அவசரமாகத் திருமணம் செய்துகொள்ளச்சொல்லி மிரட்டி இருக்கிறான். தன்னுடைய வருங்காலம், படிப்பு, லட்சியம் கனவுகளைச் சொல்லிச் சுமதி மறுத்திருக்கிறாள். ஒருகட்டத்தில் சுமதி ராகுலிடமிருந்த பிரிந்துவிட தீர்மானித்திருக்கிறாள். ஆனால் ராகுல் அதற்குச் சம்மதிக்கவில்லை. அவன் விடாப்பிடியாக விரட்டி இருக்கிறான். ஆனால் சுமதி மசியவேயில்லை. ராகுலை வெறுப்பதாகச் சொல்லியிருக்கிறாள். கடைசியில் முட்டாள்த் தனமாக அவளைப் பழிவாங்குவதற்காக இப்படி ஒரு விஷயத்தைச் செய்திருக்கிறான் ராகுல்.

‘`நீ விரக்தியா இருக்கன்னா சொல்லு... நாம கவுன்சிலிங் போகலாம். தனிமையா இருக்காத... இது கஷ்டமாத்தான் இருக்கும்... சைபர் கிரைம்ல கம்ப்ளைன்ட் பண்ணலாம். வீட்டுக்குத் தெரிய வேண்டாம். அதையெல்லாம் டெலிட் பண்ணவைக்கலாம்’’ என்றேன். சுமதி என்னுடைய தோள்களைத் தட்டி ‘`ஏன் தேவையில்லாம என்னென்னவோ கற்பனை பண்ணிக்கற... நடந்துடுச்சு. விடு, அதை இனி மாத்தமுடியாது. என்னோட உடையில்லாத  உடம்பை இன்னொருத்தன் பார்த்துட்டான், அதனால என்னோட மானம் போயிடுச்சுனு நினைச்சு புழுங்குற அளவுக்குலாம் நான் வீக்கா இல்லை. எல்லோரும் என்னை இனி பழையபடி பார்க்கமாட்டாங்கன்றது எனக்கு கஷ்டமாதான் இருக்கு. ஆனா அதுக்காகச் சாகறதுன்னா... இன்னைக்கு நம்மளைச் சுத்தி எங்கெங்க கேமரா இருக்குன்னும் தெரியாது. எத்தனை வக்கிரமானவங்க கூடவே இருக்காங்கன்னும் தெரியாது. இப்படி இதுக்காகலாம் செத்துப்போக ஆரம்பிச்சா ஒருநாளைக்கு நாலுவாட்டி இங்கே ஒவ்வொரு பொண்ணும் தூக்குமாட்டிக்கணும். உண்மைல செத்துப்போகவேண்டியவன் அவன்தான். அவன் செஞ்ச விஷயம்தான் அருவருப்பானது!’’ என்று முகத்தில் புன்னகை மாறாமல் சொல்லிக்கொண்டிருந்தாள் சுமதி.

``என்னால ஒரு துப்பாக்கிய எடுத்துட்டுப்போய் அவனைச் சுட்டுக்கொல்ல முடியாது. என்னோட லைஃப் இதோட முடிஞ்சிடாதுப்பா. இன்னும் இருக்கு. இப்பதான் ஸ்போக்கன் இங்கிலிஷ் கோர்ஸ் சேர்ந்திருக்கேன். டிஸ்டன்ஸ்ல டிகிரி கம்ப்ளீட் பண்ணப்போறேன். முடிச்சிட்டு மேல படிக்கணும். வேற நல்ல வேலைக்குப் போகணும். நிறைய கனவுகள் இருக்கு பாஸ்... எவனோ பைத்தியக்காரன் பண்ணின விஷயத்துக்காக என்னைச் சாகடிக்கப் பாக்குறீங்களே...’’ என்று சுமதி சொல்லச் சொல்ல மனப்பதட்டம் தணியத்தொடங்கி ஒரு சின்ன ஆசுவாசத்தில் மனது நிறைந்தது. அராத்து சுமதி அதையும் கேலி செய்து சிரித்தாள்.

ஏற்கனவே சைபர் கிரைமில் புகார் கொடுத்திருப்பதாகச் சொன்னாள். ராகுல் இப்போது தலைமறைவாக இருப்பதாகச் சொன்னாள். “அவனை மன்னிச்சு பாவம்னு விடற அளவுக்கு எனக்குப் பக்குவமெல்லாம் இல்லை. அதோட இப்படிப்பண்ற பசங்கள அப்படியே விடறதும் ஆபத்து. எனக்குப் பண்ணினத இன்னொரு பொண்ணுக்கும் பண்ணுவான்! ‘’ என்றுவிட்டுச் சிரிப்பாள் என முகம் பார்த்துக்கொண்டிருந்தேன். அவள் சிரிக்கவில்லை. 

‘`வீட்டுக்கு விஷயம் தெரிஞ்சிடுச்சு. கோவமாதான் இருக்காங்க. பேசறதில்ல யாரும். அதுக்கென்ன பண்ணமுடியும்!’’ என்றாள். ‘`அப்பாதான் உடைஞ்சுபோயிட்டாரு. அவர் வந்து விடு பாத்துக்கலாம்னு சொல்லுவார்னு நினைச்சேன். அவர் என்மேல ரொம்பக் கோவமா இருந்தாரு. அப்போதான் செத்துப் போகணும்னு தோணுச்சு. அவர் திட்டிருக்கலாம், இல்லைனா சண்டைகூட போட்டிருக்கலாம். ஒருவார்த்தைகூட பேசல’’ என்றாள். சொல்லும்போது கண்கள் சிவந்திருந்தன. இருந்தும் அவள் தன் சோகத்தை வெளிப்படுத்திவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருப்பதாகத் தோன்றியது. உறுதியானவர்கள்தான் எளிதில் உடையக் கூடியவர்களாகவும் இருக்கிறார்கள். அவர்கள் எல்லா இடங்களிலும் ஆறுதலை எதிர்பார்ப்பதில்லை. எதிர்பார்க்கிற இடங்களில் எதிர்கொள்ளும் நிராகரிப்புகள்தான் வீழ்த்திவிடுகின்றன.

அத்தனை தெளிவாகப்பேசிய சுமதிக்கும் ஒரு குழப்பம் இருந்தது. ``நான் பண்ணின பெரிய தப்பு என்ன தெரியுமா? அவனோட ஒண்ணா இருந்தப்ப அப்படிப் படங்கள் எடுத்திருக்கக் கூடாது. எதுக்காக அப்படி எடுத்தேன்னு தெரியல... அதுக்கு என்ன காரணம்னும் புரியல... அதுதான் குற்றவுணர்ச்சியா இருக்கு. என்னதான் மெச்சூர்டா இருந்தாலும் இப்படி முட்டாள்த்தனங்களயும் நிறைய செஞ்சிடறோம்ல! ஏன் அப்படி?’’ என்றாள்.

சில ஆண்டுகளுக்குமுன்பு வெளியான `காயத்ரி’ திரைப்படத்தில் ஒரு காட்சி வருகிறது. அதில் ஒரு ரகசியமான தொழில் காட்டப்படுகிறது. படுக்கையறைக் காட்சிகளை ரகசியமாகப் படம்பிடித்து விற்கிறார்  வில்லன். ஆனால் அதை விற்பதற்காகப் பெரிய நெட்வோர்க் வைத்திருக்கிறார். யாரும் கடைக்குள் வந்து ‘`எனக்கு இரண்டு கேசட்’’ என கேட்டுவாங்கிவிட முடியாது. அத்தனை கெடுபிடிகள். அவ்வளவு குறுகலான நெருக்கடிகள். அதை தாண்டிவருபவர்களுக்கு சில சாம்பிள்களைப் போட்டுக்காட்டுகிறார்கள்.

சொல் அல்ல செயல் - 23

முப்பது ஆண்டுகளுக்கு முன்பு போர்னோ சந்தை இயங்கியது இப்படித்தான்.

சில ஆண்டுகளுக்கு முன்பு கூட ஹோட்டல்களில், உடைமாற்றும் அறைகளில், குளியலறைகளில் கேமராக்களை மறைத்துவைத்துப் படம்பிடித்து அவை ரகசியமாக வெளியிடப்பட்டுக் கொண்டிருந்தன. ஆனால் இன்று ஒவ்வொரு நாளும் வாட்ஸ் அப்பிலும் இன்னபிற சமூகவலைதளங்களிலும் லட்சக் கணக்கான அந்தரங்கமான புகைப்படங்களும் வீடியோக்களும் பதிவேற்றப்படுகின்றன. அவை  இலவசமாக  பகிர்ந்து கொள்ளப்படுகின்றன. அடுத்தவர் அந்தரங்கத்தைப் பகிர்ந்துகொள்கிற யாருக்கும் எந்த வெட்கமும் தயக்கமும் இருப்பதில்லை.

இவையெல்லாம் யாரோ எங்கோ படப்பிடிப்பு செய்த போர்னோ படங்களல்ல. கேமராவை மறைத்துவைத்து எடுக்கப்பட்ட படங்களும் அல்ல. எல்லாமே காதலர்கள் அன்பின் மிகுதியிலும், இளைஞர்கள் இணைய பாதுகாப்பு குறித்த அறியாமையினாலும் செல்போன்களில் அவர்களாகவே அறிந்தே எடுத்துக்கொண்ட நிஜ வாழ்க்கைப்படங்கள். பிறப்பு முதல் இறப்பு வரை எல்லாவற்றையும் படம் பிடித்துக்கொண்டும் அதை சமூகவலைதளங்களில் பகிர்ந்துகொண்டும் இருக்கிற நம்முடைய மூடப்பழக்கத்தின் நீட்சி இது. எப்போதும் எந்நேரமும் திரைகளுக்குள் நம்மை நாமே பார்த்து ரசிக்கிற நார்ஸிஸ மனநிலையின் வெளிப்பாடு.

இணையமெங்கும் இப்படிப்பட்ட அந்தரங்கமான படங்களும் வீடியோக்களும்தான் இப்போதெல்லாம் அதிகமும் பகிரப்படுகின்றன. இரண்டுபேர் அல்லது ஒருவர் எடுத்துக்கொள்ளும் இத்தகைய படங்கள் ஏன் பொதுவெளிக்கு வருகின்றன? உறவுகளில் விரிசல் உண்டாகும் போதும் பழிவாங்கும் முயற்சிகளில் இறங்கும்போதும் இந்த ஆவணங்கள் எவ்விதம் ஆயுதங்களாகின்றன?

உலகெங்கும் இன்று பரவலாக `ரிவென்ஞ் போர்ன்’ (Revenge Porn) பற்றிப்பேசப்படுகிறது. காதலர்கள், நண்பர்கள் ஒருவரையொருவர் பழிவாங்குவதற்கு இத்தகைய படங்களைப் பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள். வாட்ஸ் அப் மூலமாக வீடியோவழி உரையாடக்கூடிய வசதி வந்தபிறகு காதலும் காமமும் தன்னை நிறையவே மாற்றிக் கொண்டிருக்கின்றன. படங்களையும் வீடியோக்காட்சிகளையும் பகிர்ந்துகொள்ள முடியும் என்கிற வசதி வெவ்வேறுவிதமான அபாயங்களையும் கொண்டுவந்திருக்கின்றன.

``உனக்கு சைபர் கிரைம்ல யாரையாச்சும் தெரியுமா?’’ என்று ராஜி கேட்டபோதுதான் அவள் பிரச்சனையில் இருக்கிறாள் என்பதே தெரிந்தது. ``அவன்மேல அவ்ளோ நம்பிக்கை வச்சிருந்தேன். அவன் கேட்டப்பல்லாம் என் உடைகளைக் கழற்றி போட்டுட்டு போட்டோக்களையும் வீடியோ பதிவுகளையும் எடுத்து எடுத்து வாட்ஸ் அப்ல அனுப்பிருக்கேன். எப்பவும் தயங்கினதே இல்லை. அவனுக்கும் எனக்கும் சண்டை, இப்போ அதை வச்சுகிட்டு மிரட்டறான்... வீட்ல சொல்ல பயமாருக்கு. செத்துப்போயிடலாம்போல இருக்கு’’ என அழுதுபுலம்பினாள். சைபர் கிரைமில் நடவடிக்கை எடுப்பதாகச் சொன்னார்கள். ஆனால் அதற்கு முன்பே ராஜி தன்னை யாருமே தொடர்புகொள்ள முடியாதபடி எல்லா அடையாளங்களையும் அழித்துவிட்டு வேலையை விட்டுவிட்டு ஊரைக் காலிசெய்துவிட்டுக் கிளம்பிவிட்டாள்.

அவள் `தன்னுடைய நிர்வாண’த்திற்கு அஞ்சியே எங்கோ தலைமறைவாக வாழ வேண்டியதாயிருந்தது. காதலின் நம்பிக்கைகளை நவீன மாற்றங்கள் எப்போதோ உடைத்தெறிந்து விட்டன. இங்கே ரகசியங்கள் எதுவுமே ரகசியங்கள் இல்லை!

எல்லோரும் எப்போதும் அப்படி இருப்பதில்லை. அப்படி இருக்க, அதையும் மீறி இத்தகயை சூழ்நிலைகள் உருவானால், அதைத் தைரியமாக எதிர்கொள்கிற பக்குவமாவது நமக்கு இருக்கவேண்டும். கேட்பவன் காதலனாகவே இருந்தாலும் அனுப்புவது எதை என்பதைப் பற்றிப் பெண்கள் யோசிக்கவேண்டும். இதுமாதிரியான அசம்பாவிதங்கள் நடந்தபிறகு பதறும் பெற்றோர்களில் எத்தனைபேர்  டீன்ஏஜைக் கடக்கும் பிள்ளைகளிடம் இதைப்பற்றி உரையாடுகிறார்கள்? இணையத்தில் பதிவேறும் ஒரு புகைப்படம் எப்போதும் நாம் அனுப்புகிற தனியொருவனுக்கு மட்டுமே எட்டுவதில்லை என்பதை நாம் ஏன் யாருக்கும் கற்றுத் தருவதில்லை? இணையத்தில் எதைப்பகிரலாம் எதைபகிரக்கூடாது என்பதைப்பற்றிய விழிப்புணர்வை எப்போது அடுத்த தலைமுறைக்கு உருவாக்கப்போகிறோம்?

இங்கே பெண் உடலைப் புனிதமாக்கி, அது பாதுகாக்கப்பட வேண்டியதாக மாற்றி வைத்திருக்கிறோம். அதனாலேயே சின்னதாக உடை விலகினாலும் கூட பெரிய அளவில் விமர்சனங்களை முன்வைக்கிறோம். ஒரு கிரிக்கெட் வீராங்கனை தன் விருப்பப்படி ஓர் உடையை அணிந்துகொண்டு ஒரு புகைப்படத்தைத் தன் சமூகவலைதள பக்கத்தில் வெளியிடுகிறார். “நீ என்ன விளையாட்டு வீராங்கனையா இல்லை கவர்ச்சி நடிகையா’’ எனக் குற்றஞ்சாட்டப்பட்டு அந்தப் பெண் தொடர்ச்சியான வசைகளுக்கு ஆளாகிறார். இங்கே பெண் என்ன உடை அணிய வேண்டும், அந்த உடை எதையெல்லாம் மறைக்க வேண்டும் என்கிற அளவுக்கு விதிகள் வகுக்கப்பட்டிருக்கின்றன! ஆனால் ஒரு பெண்ணை வெறும் உடலாக மட்டுமே பார்க்கக் கூடாது, ஆண் உடலைப்போலவேதான் பெண் உடலும், தன்னைப்போலவேதான் அதுவும் இன்னொரு உயிர் என்று இங்கே எந்த ஆணுக்கும் பயிற்றுவிக்கப்படுவதில்லை. யாரும் தினமும் மூன்றுவேளையும் பாடமெடுப்பதில்லை!

சுமதியைப்போல `அதுக்கென்ன’ என்கிற மனநிலையோடு இப்படிப்பட்ட சூழலை எல்லா பெண்களுமே எதிர்கொள்வது சாத்தியமில்லைதான். ஆனால் அந்த மனநிலைதான் இங்கே கட்டாயத்தேவையாக இருக்கிறது. எல்லா சமூக அழுத்தங்களில் இருந்தும் அவமதிப்புகளில் இருந்தும் நம்மை மீட்கவல்லவை அந்த மனநிலை. வாழ்தலுக்கான உரிமை என்பது வெற்று உடலிலும் அடுத்தவர் சொற்களிலும் இல்லை, அது கட்டுப்பாடுகளையும் அவமதிப்புகளையும் மீறிய வாழ்தலில் இருக்கிறது என்பதை அவர்களுக்கு உணர்த்த வேண்டிய பொறுப்பு இங்கே ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. இருந்தும் தொடர்ச்சியாக இதுமாதிரியான சந்தர்ப்பங்களில் முதலில் பதறுவதே நாமாக இருந்து விடுகிறோம்! சமூக அவமதிப்பிற்கு அஞ்சி அதற்குப் பிந்தைய வாழ்வை எதிர்கொள்ளத் திராணியற்று உடைந்து விழுவதும் நாம்தான். உடன் நின்று எதிர்த்துப் போராடுவதற்கான வலுவைத்தர வேண்டிய உறவுகளும், நண்பர்களும் சொந்தங்களும்தான் முதலில் உடைந்துபோகிறோம்! நம்மையும் நிறையவே தயார் செய்யவேண்டியிருக்கிறது.

தோல்வியடைந்து வீடுதிரும்பும் ஒவ்வொருவரும் எதிர்பார்ப்பதெல்லாம் ``அதுக்கென்ன, பார்த்துக்கலாம்’’ என்று சொல்கிற உதடுகளைத்தான். ஆனால் பெரும்பாலான வீடுகளிலும் பணியிடங்களிலும் நமக்கு ஏனோ அது கிடைப்பதேயில்லை. ஏன் என்றால் எப்போதும் நமக்கு முன்பே நம் தோல்விகளுக்காகவும் வீழ்ச்சிகளுக்காகவும் பதறுகிறவர்களாக இருப்பது அவர்கள்தான். அந்த இடங்கள் குற்றவுணர்வுகளின் உற்பத்திக்கூடங்களாக மாறிவிட்டன!

எளியவர்கள் எப்போதும் குற்றவுணர்வுகளின் வழிதான் வீழ்த்தப்படுகிறார்கள். அதிலும் தோல்வியடைந்தவர்கள்மீது திணிக்கப்படுகிற குற்றவுணர்வு மிகப்பெரியது. மானம், மரியாதை மாதிரியான வார்த்தைகளின்மேல் உருவாக்கப் படுகிற குற்றவுணர்வுகள் ஆட்களைத் தீர்த்துக்கட்டக்கூடியவை. பரீட்சையில் தோல்வியடைவதில் தொடங்கி, படித்து முடித்து வேலையில்லாமல் இருப்பவர்கள், திருமணமாகியும் குழந்தை இல்லாமல் வாழ்பவர்கள், அதிகச் சம்பளம் பெறமுடியாமல் உழைக்கிறவர் எனச் சமூகத்தில் இப்படி திணிக்கப்பட்ட குற்றவுணர்களோடு வாழ்கிறவர்களின் எண்ணிக்கை ஏராளம். அவர்களுக்கெல்லாம் கூட தேவையானது இந்த ``அதுக்கென்ன’’தான்.

 - கேள்வி கேட்கலாம்...