Published:Updated:

சொல் அல்ல செயல் - 24

சொல் அல்ல செயல் - 24
பிரீமியம் ஸ்டோரி
News
சொல் அல்ல செயல் - 24

அதிஷா - ஓவியங்கள்: ஹாசிப்கான்

டி.வி-யில், சினிமாவில், போஸ்டரில் என எங்கே சிவகார்த்திகேயனைக் கண்டாலும் கோபப்படுவான் ராகவன். நடிகர் சிவகார்த்தி கேயனைத்தான்! ராகவன் என்னோடு சில ஆண்டுகளுக்கு முன்பு அறைத்தோழனாக இருந்தவன். சிவகார்த்திகேயன் தொலைக்காட்சியில் இருந்து சினிமாவுக்குக் குடி பெயர்ந்து கொண்டிருந்த காலகட்டம். அப்போதுதான் சில திரைப்படங்களில் தலைகாட்ட ஆரம்பித்திருந்தார்.

ராகவனுக்கு சிவகார்த்திகேயனைக் கண்டாலே ஆகாது. அதிலும் குடித்துவிட்டால் ஏகவசனத்தில் திட்ட ஆரம்பிப்பான். திட்டிக்கொண்டே எக்கச்சக்க வாய்ஸ்களில் மிமிக்ரி பண்ணிக் காட்டுவான். ரஜினியில் தொடங்கும் அவனுடைய கச்சேரி  சிம்பு, தனுஷ் வரைக்கும் போகும். பேசிப்பேசி எமோஷனலாகி அழுது சாய்ந்துவிடுவான்.

தோற்றுப்போனவர்களுடைய கதைகள் எல்லாமே ஒரே அச்சில் வார்க்கப்பட்டவை. ராகவனுடைய கதையுமே அதேவகைதான். ராகவனுக்கு சிறுவயதில் இருந்தே பெரிய மிமிக்ரி கலைஞன் ஆவதுதான் லட்சியம். பள்ளியில் விளையாட்டாகத் தொடங்கிய பழக்கம் அது. அப்போதெல்லாம் மிமிக்ரி நிகழ்ச்சிகள் அடங்கிய கேசட்டுகள் கிடைக்கும். அதையெல்லாம் வாங்கிப் போட்டுப்பார்த்துக் கேட்டுக் கேட்டு அதுபோலவே செய்து பழகியவன்.

சொல் அல்ல செயல் - 24

எப்படிப்பட்ட துர்பாக்கியமான வாழ்க்கை வாழ்பவருக்கும் ஒட்டுமொத்த வாழ்வில் மகிழ்ச்சிகரமான காலகட்டம் என்ற ஒன்று நிச்சயம் இருக்கும். நாம் எப்போதெல்லாம் உடைந்துபோகிறோமோ...ஏங்கித் தவிக்கிறோமோ... அப்போதெல்லாம் அந்த நினைவுகள்தான் நமக்கு மருந்தாகும். அந்த நிகழ்வுகளைப் பகிரும்போதும் அந்தக் காலத்தின் சுவடுகளை நாம் அத்தனை வாஞ்சையோடு ஸ்பரிசிக்கிறோம். ராகவன் ஒவ்வொரு முறையும் தன்னுடைய மிமிக்ரி வாழ்வைச் சொல்லும்போதும் அதன் ஒரு பகுதியை மீண்டும் வாழ்ந்து பார்த்து அந்த மகிழ்ச்சியில் திளைப்பதைப் பார்த்திருக்கிறேன். 

குழந்தையாக இருக்கும்போது ரஜினிபோலப் பேசியதில் தொடங்குவான். பிறகு, பள்ளியில் மாறுவேடப் போட்டியில் எம்.ஆர்.ராதா போலப் பேசிக் கைத்தட்டல்களை வாங்கியது... எனத் தொடரும் அவனுடைய கதை.

அந்தக் கதைகளை அவன் சொல்லும்போது அவனுடைய பேச்சில் நூறு குரல்களைக் கேட்கலாம். அப்பாவின் கண்டிப்பையும் மீறி ஆர்கெஸ்ட்ராக்களில் பேசிய நாள்களைப்பற்றிச் சொல்லும் போது அங்கே முளைத்த காதல் வந்துவிடும். கல்லூரிக்காலத்தில் பேசியது பற்றிச் சொல்லும்போது அவனுடைய கனவுகளால் நிறைந்துவிடும்.

சொல் அல்ல செயல் - 24


``ஒரு காமெடி புரோகிராம் ஆடிஷன். நான் ஃபர்ஸ்ட் ரவுண்ட் செலக்ட் ஆய்ட்டேன். அடுத்த ரவுண்ட் சென்னையில.  ஆனா, அப்பா போகவிடலை. அப்பதான் நான் காலேஜ் சேர்ந்திருந்தேன். படிப்பு கெட்டுடும். அது இதுன்னு என்னைப்போட்டு மிரட்டி வீட்ல உட்கார வெச்சாங்க... அன்னைக்கு என்னை விட்ருந்தா, நான் பெரிய ஆளா வந்திருப்பேன்டா... எங்கப்பன் பொறம்போக்காலதான் என் வாழ்க்கையே நாசமாப் போச்சு, அந்த ஆளால இன்னைக்கு இப்படி மார்க்கெட்டிங் எக்ஸிக்யூட்டிவ் ஆகி தெருத்தெருவா பையைத் தூக்கிட்டுத் திரியறேன். எங்கூட ஆடிஷன் வந்து செலக்டான சிவகார்த்திகேயன், இப்போ எங்க இருக்கான் பார்த்தியா!’’ என்று புலம்பித்தான் கதையை முடிப்பான்.

சிவகார்த்திகேயன் ஹீரோவாக அறிமுகம் என்று ஊரெல்லாம் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்த நாள் அது. ராகவன் நன்றாகக் குடித்துவிட்டுவந்து புலம்ப ஆரம்பித்தான். சிவகார்த்தி கேயனை மிக மோசமான கெட்ட வார்த்தைகளில் திட்டத் தொடங்கினான். கூடவே தன் தந்தையையும் அவன் திட்டத் தவறவில்லை. கையில் கிடைத்ததை எல்லாம் அடித்து உடைக்க ஆரம்பித்தான். கேட்டுக்கு வெளியே போகிற வர்களை எல்லாம் திட்ட ஆரம்பித்தான். அவனை எத்தனை அடக்கியும் அடங்கவேயில்லை.

மாபெரும் தோல்விக்குப் பிந்தைய ஒரு சோகத்தை அவன் அன்றைய இரவில் வெளிப்படுத்தினான். அது ஓர் இறுதி யுத்தத்தைப்போல அத்தனை மோசமாக இருந்தது.

அவனுடைய சொற்கள் எல்லாம் வலியோடும் கண்ணீரோடும் வெளியேற்றிக் கொண்டிருந்தன. சிவகார்த்தி கேயனுக்குக் கிடைத்திருப்பது, தான் தவறவிட்ட வாய்ப்புதான் என்று ராகவன் நினைத்தான். தன்னுடைய வாய்ப்பை அந்த நடிகர் பறித்துவிட்டதாகப் புலம்பினான்.

பக்கத்து வீடுகளில் இருந்துவந்து சண்டை போடத் தொடங்கி னார்கள். சென்னை மாதிரியான ஊரில் பேச்சிலர்களுக்கு வீடு கிடைப்பது அத்தனை எளிதான விஷயமில்லை. பக்கத்து வீடுகளை அணுவளவு தொந்தரவு செய்தாலும் அடுத்தநாள் பெட்டியோடு அடுத்த வீட்டைத்தேடி அலையவேண்டி வரும். ராகவனால் நாங்கள் வேறு வீடு தேடி அலைய நேரிடும் என எதிர்பார்த்தோம்.

ராகவனை அழைத்துக் கொண்டுபோய் குளியலறையில் அமரவைத்துத் தண்ணீரை ஊற்றினோம். அங்கேயும் அவன் அழுதான். எங்கள் கால்களைக் கட்டிக்கொண்டு விசும்பினான்.  ‘`நான் எப்பவோ செத்துப் போயிருக்கணும்டா மச்சான். வாழ்க்கையில வாய்ப்பு ஒருவாட்டிதான் வரும். விட்டா போச்சு... போச்சு... போச்சு...’’ எனத் தலையில் அடித்துக் கொண்டு அழுதான். அவன் தலையில் தண்ணீரைக் குடம் குடமாக ஊற்றிக்கொண்டிருந்தோம். அவன் நடுநடுவே வெவ்வேறு குரல்களில் நடித்துக் காண்பித்தான். ``எப்படி பண்றேன்... செமயாருக்கா... எல்லாம் வேஸ்ட்டுடா... போச்சுடா... எத்தனை லட்சம் வாட்டி ப்ராக்டீஸ் பண்ணிருப்பேன் தெரியுமா?’’ என்று மம்முட்டி குரலில் பேசினான். அந்த இரவு முழுக்க நாங்கள் விழித்திருந்தோம்.

அவனைத்  தூக்கிக்கொண்டுவந்து ஹாலில் போட்டு வைத்துவிடடு அமர்ந்திருந்தோம். . ஹவுஸ் ஓனர் என்ன சொல்வரோ என்கிற அச்சத்தோடு அடுத்த விடியலுக்குக் காத்திருந்தோம். தன்னந்தனியாக சேனல் மாறிக்கொண்டிருக்கிற தொலைக் காட்சிப் பெட்டியைப்போல உறக்கத்தில் ராகவன் வெவ்வேறு குரல்களில் வெவ்வேறு உணர்வுகளில் உளறியபடி படுத்திருந்தான். தானாகவே வால்யூம் கூடுவதைப்போல தொடர்ந்து சத்தமாகக் கத்திக்கொண்டும், திட்டிக்கொண்டும், உளறிக்கொண்டும் இருந்தான். அந்த இரவில் அவனை எங்களில் ஒருவன் அடித்துதான் அமைதிப்படுத்தி உறங்கவைக்க வேண்டியதாக இருந்தது.

காலையில் எழுந்ததும் இரவு நடந்த பிரச்சனை களுக்காக ராகவன் எல்லோர் கால்களிலும் விழுந்து மன்னிப்புக் கேட்டான். ‘`சிவகார்த்திகேயன்மீது எந்தக் கோபமும் இல்லை.’’ என்றான். குடிகாரர்களுக்கே உரிய குணங்களில் ஒன்று இது. இரவு போதையில் எல்லா நாட்டியங்களையும் ஆடி விட்டு, விடிந்ததும் மன்னிப்புக் கேட்பது. மன்னிக்கிற அளவுக்கு நாங்களும் உத்தமர்களாக இருக்கவில்லை. மன்னிக்க வேண்டிய அளவுக்கு ராகவனும் எந்தத் தவறையும் செய்திருக்கவில்லை.

‘`அப்போ மிஸ் ஆகிடுச்சு... சிவகார்த்திகேயேன் ஹீரோ ஆய்ட்டாரு. அதெல்லாம் ரைட்டு... இப்போ என்னடா கேடு உனக்கு. இப்போ ட்ரை பண்றதுதானே. இன்னமும் மிமிக்ரி பண்றீல்ல, இப்பவும் உனக்குத் திறமை இருக்குல்ல, வாய்ப்புக் கிடைக்கும்லடா’’ என்று எங்களில் ஒருவன் கேட்டான்.

‘`இல்ல மச்சான். அது முடியாது. நடுவுல எத்தனை வருஷம் எவ்வளவு வேகமா ஓடிப்போயிடுச்சுத் தெரியுமா. எனக்கு சிவகார்த்திகேயன் மேல கோபம்னு நினைக்கிறியா... இல்ல கோபமெல்லாம் என்மேலதான். அதைதான் பாவம் அந்தாள் மேல காட்றேன். நான் ஜெயிச்சு நின்னுருந்தா சிவகார்த்திகேயன் மாதிரிதான் நின்னுருப்பேன். அவரை நானாதான் பார்க்கிறேன். `ஜெயிச்ச நான்!’ இப்போகூட எல்லாத்தையும் விட்டுட்டுப்போயி சினிமா, டி.வி-னு ட்ரை பண்ணலாம்தான். ஆனா, வேலையை விடணும். ரிஸ்க் எடுக்கணும். என்னால முடியாது. அவ்ளோ பயம். சின்னவயசுல இருந்து எப்பவும் யார் விரலையாவது பிடிச்சிக்கிட்டே நடன்னு கத்துக் குடுத்திருக்காங்க, ஒருவேளை பட்டினி கிடக்க பயம். சொல்லப்போனா இதையெல்லாம் விட்டுட்டு வெளியே வந்தா, நல்லாக்கூட இருப்பேன்னு தோணும். ஆனாலும், ஒரு மோசமான எதிர்காலம் எப்பவும் பயமுறுத்தும்டா...’’ ராகவன் கடைசியாக அழுதது அப்போதுதான்.

சொல் அல்ல செயல் - 24

ராகவனைப்போல எத்தனை எத்தனை பேரை நமக்குத்தெரியும். அந்த `எத்தனை’களில் நாமும்கூட இருக்கலாம். மிகப்பிரபலமான ஓவியனாகும் ஆசையோடு வாழ்க்கையைத் தொடங்கியவர் பரமேஸ்வரன். கடைசியில் ஏதோ தினவேலையில் சிக்கிக்கொண்டு, வேலையையே முழுமூச்சாகச் செய்தார்.  ஆனால் ஓவியத்தை துறந்துவிட்ட வலி எப்போதும் அவரைத் துரத்தியது. பரமேஸ்வரனின் வலிக்குப் பின்னால் இருந்ததும் ராகவனின் அதே எதிர்காலம் குறித்த அச்சம்தான்.

இங்கே எல்லோருக்குமே இத்தகைய கற்பனையான அச்சங்கள் ஏராளம். அவைதான் எப்போதும் நம் பயணத்தின் பெருந்தடையாக இருப்பவை. இந்தப் புனையப்பட்ட கற்பனைகளை நாம் மட்டுமே உருவாக்குவதில்லை. அவை நம் சூழலால் வளர்ப்பால் எதிர்கொள்ளும் சவால்களால் என வாழ்க்கை முழுக்க உருவாகுபவை. அவை நம் பாதுகாப்பு உணர்வின் பிள்ளைகள்நமக்கு வசதியாக இருப்பதையும், நமக்கு ஆபத்தில்லாத விஷயங்களையுமே இந்தக் கற்பனைகள் வலியுறுத்துபவையாக இருக்கின்றன. அதை நோக்கித்தான் நாம் நகர்கிறோம். ஆனால், அந்த அச்சங்கள்தான் நம்மை எப்போதும் முன்னேறிச் செல்ல முடியாதவர்களாக எதையுமே எதிர்த்துக் கேள்வி கேட்க முடியாதவர்களாக, அடிமைகளாக வைத்திருக்கின்றன. நாம் கற்பனையில் சுவர்களைஉருவாக்குகிறோம். அந்த சுவர்களுக்குள் சிக்கிக்கொண்டு சிறைக்கைதிகளாக அமர்ந்திருக்கிறோம்.

`அய்யோ அவருக்குப் பிடிக்காது’, `என் மிஸஸ் இதையெல்லாம் விரும்ப மாட்டா’ என எப்போதும் ஏதோ ஓர் அச்சத்திலேயேதானே வீட்டிலும் கூட வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இன்று பிரிந்துபோகிற காதல்களின் மிக முக்கியமான சிக்கலே பொசசிவ்நெஸ் என்கிற அதீதப் பிரியம்தான். அதை உருவாக்குவதும்கூட இதே வகை கற்பனையான அச்சங்கள்தான். `எங்கே இந்தப் பெண் நம்மைவிட்டுப் பிரிந்துவிடுமோ...’, `எங்கே இவன் வேறொரு பெண்ணோடு பேச ஆரம்பித்து விட்டானோ...’, காதலியின் நண்பன் வெறும் நண்பனாகத்தான் இருக்கிறானா? ஃபேஸ்புக்கில் யாரோ ஒரு பெண்ணுக்குக் காதலன் போட்ட ஹார்ட்டின் வெறும் ஹார்ட்டின் மட்டும்தானா? என நவீனக்காதலில் உருவாகும் புனைவான அச்சங்கள் நம்மைப் பைத்தியமாக்கிவிடக் கூடியவை.

‘`ஒருத்தர்மீது நமக்குக் காதலைவிட அதிகமா இருக்க வேண்டியது நம்பிக்கைதான். அந்த நம்பிக்கையைச் சோதிக்கிற இடமா இருக்கிறதே நம்ம மனசுதான். அந்த மனசை ஜெயிச்சுட்டா, வேற எதாலேயும் அந்தக் காதலை உடைக்க முடியாது.’’ என்று எப்போதும் சொல்வார் தோழி ஜான்ஸி. அது காதலுக்கு மட்டும் அல்ல; நட்புக்கும், ப்ரியத்துக்கும், வேறெந்த உறவுக்கும்கூடப் பொருந்தும். உறவுகள் எதுவாக இருந்தாலும் கற்பனையான அச்சங்களை எதிர்கொள்ளத் தேவையானது சக மனிதன்மீது வைக்கிற நம்பிக்கைகள்தான் இல்லையா?

சந்திரமோகன் நெடுநெடுவென ஒல்லியாக எழுத்தாளர் சுஜாதாபோலவே இருப்பார். ஏரியாவின் புகழ்பெற்ற ப்ளம்பராக அவர் இருந்தார். சந்திரமோகனுக்கு இன்னொரு பெயர் இருந்தது. `பிள்ளை பிடிக்கிறவன்.’

அதிகாலையிலேயே வீடு வீடாக வருவார் சந்திரமோகன். ஒவ்வொரு வீட்டிலும் நின்று. ``நம்ம தெருவுல தினமும் நைட் ஆனா, கரன்ட் கட் ஆகுது, வயசானவங்க, பெரியவங்களுக்கெல்லாம் பெரிய தொந்தரவா இருக்கு. அதைச் சரி செய்யச்சொல்லி இதுவரை பலமுறை ஈ.பி ஆபீஸ்ல கம்ப்ளைன்ட் குடுத்துட்டோம். இதுவரை சரியே ஆகலை. அதைச் சரிசெய்யச் சொல்லி எம்.எல்.ஏ. வீட்டு முன்னால ஒரு போராட்டம் பண்ணப்போறோம். உங்க வீட்ல இருந்து ஓர் ஆளை அனுப்புங்க’’ என்பார்.

எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியான மரியாதை அவருக்குக் கிடைக்காது. சில வீடுகளில் அவரை `அதெல்லாம் வேண்டாங்க’ என்று ஊட்டி வர்க்கி விற்பனை செய்யவந்த ஆளைப்போல விரட்டி அடிப்பார்கள். சில வீடுகளில் உள்ளே அழைத்து `டீ சாப்பிட்டுத்தான் போகணும்’ என வற்புறுத்திக் கொடுப்பார்கள். சிலர் விதவிதமான சால்ஜாப்புகளை சொல்லுவார்கள். ‘`இது நமக்கான போராட்டம்.  நம் உரிமைகளுக்கான போராட்டம். நாம் கேட்காமல் இருந்தால், எந்த மாற்றமும் நடக்காது. அவசியம் வாங்க’’ என்று அன்பாக வலியுறுத்திச் சொல்வார் சந்திரமோகன்.

குடிநீர், சாக்கடை, குப்பைத்தொட்டி, அங்கன்வாடி, மின்சாரம் என அவர் போராடாத விஷயங்களே இருக்காது. அவருடைய இந்தப் போராட்டங்களும்கூட மோசமாக விமர்சிக்கப்பட்டிருக்கிறது. அவர் விளம்பரத்திற்காக செய்கிறார், எதிர்கட்சிக் காசு என வசைபாடப் பட்டிருக்கிறார். எல்லாமே சந்திரமோகனுக்குத் தெரியும். இருந்தாலும் அவர் அதையெல்லாம் எளிதில் கடந்து செல்கிறவராக இருந்தார்.

மக்களை ஒன்று திரட்டாமல் இங்கே எந்த மாற்றமும் சாத்தியமில்லை என்பதைச் சந்திரமோகன் உணர்ந்திருந்தார். அவர் எப்போதும் இளைஞர்களை நாடிவந்தார். அவர்களைப் போராட வலியுறுத்தினார். எந்நேரமும் அவர்களை அரசியல்மயமாக்க வேண்டியதன் அவசியத்தைப் போதித்தார். வளரிளம் பையன்களாக இதையெல்லாம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த எங்களுக்கு சந்திரமோகனின் செயல் ஆச்சர்யமாக இருக்கும். இவருக்கு ஏன் இந்த வேலை? என்பதைத் தாண்டி அவரிடம் கேட்க எங்களிடம் எந்தக் கேள்வியும் இருந்தது இல்லை.

சந்திரமோகன் எதிர்த்து நிற்கிற ஆட்கள் பற்றிய பயம் எங்களுக்கு எப்போதும் இருந்தது. அவர்கள் முதலாளிகள், அரசியல்வாதிகள், ரவுடிகள். அவர்களிடம் பணமும் ஆயுதமும் இருக்கிறது. அவர்கள் எந்த நேரத்திலும் சந்திரமோகனைக் கொன்று விடலாம் என அஞ்சினோம். இவரோடு சேர்ந்து போராடுவதால், எங்களுக்கும் அடி விழும் என்கிற அச்சம் எங்களுக்கு இருந்தது.

‘`அண்ணே உங்களுக்குப் பயமா இல்லையாண்ணே... அவங்க உங்களை அடிச்சா என்னண்ணே பண்ணுவீங்க? நீங்க பாட்டுக்கு எங்களை வேற இழுத்துவிட்டுப் போய்ருவீங்க. அந்த ஆளுங்க நைட் வீட்டுக்கு வந்து எங்க அப்பா அம்மாவை அடிச்சா என்னண்ணே செய்றது? போராட்டம் பண்ணின நாம அடிவாங்கினா  அர்த்தமிருக்கு. ஆனா, சம்பந்தமே இல்லாதவங்க ஏன் காயப்படணும்?’’ என்று அவரிடம் பதற்றத்தோடு பேசியது நினைவிருக்கிறது. அது ஓர் ஆதி ஆச்சம். வேட்டை விலங்கிடமிருந்து தப்பிச்செல்ல நினைக்கிற ஒரு சிறிய விலங்கின் முதுகெலும்புச் சிலிர்ப்பு. இங்கே வளர்கிற ஒவ்வொரு குழந்தையிடமும் அதிகாரம் குறித்துப் பெற்றோர்களும் பள்ளிகளும் உருவாக்கிய உணர்வுகளின் தொடர்ச்சி. அதிகாரத்தில் இருப்பவர்கள் நினைத்தால் உங்களை அழித்து நிர்மூலமாக்கிவிடுவார்கள். உங்களுடைய எதிர்காலத்தை நாசமாக்கிவிடுவார்கள் என்று திரும்பத் திரும்பச் சொல்லிச்சொல்லி மழுங்கடிக்கப்பட்ட மூளைகளில் இருந்து உதிக்கிற அச்சம்.

‘`அய்யோ அவன் அடிச்சிடுவானேன்னு ஒரு பயம் வருது பார்த்தியா உன்கிட்ட, அதுதான் அவனோட பலம். அவன் என்னைக்காவது உன்கிட்டவந்து நீ இதுக்கு எதிரா போராடினா உன்னை அடிப்பேன்னு சொல்லிருக்கானா? அவன் இதுவரை யாரையாவது அடிச்சிருக்கானா? ஆனா, உன் மனசுல எப்படி அந்த அச்சம் உருவாச்சு? அவனை எதிர்த்துக் கேட்டா அவன் அடிப்பான். அவனை பகைச்சுகிட்டா நிம்மதியா வாழ முடியாது... இப்படியெல்லாம் அச்சங்களை உருவாக்கினது யாரு? நாமளா நினைச்சுக்கிறது.  இங்கே அப்படி அச்சப்பட்டு எல்லோரும் அமர்ந்திருக்கணும்னுதான் நம்மை ஆளறவங்க எப்பவும் நினைக்கிறாங்க. அதனாலதான் எதிர்த்துக் கேட்டா அடிப்பாங்க... திமிறி எழுந்தா உதைப்பாங்கனு நம்மளை நம்ப வெச்சிருக்காங்க... மக்கள் ஒண்ணு சேர்ந்தா யானைபலம் வரும். ஆனா, அவங்களோட இந்தக் கற்பனையான அச்சம் இருக்கு பாரு, அதுதான் சங்கிலி. அதை யானை நினைச்சா, அறுத்து எறிஞ்சிட முடியும். ஆனா, அது நினைக்காது. தான் கட்டப்பட்டிருக்கோம், தன்னைப் பாகன் அடிச்சுடுவான்னு பயந்துகிட்டே தலையை ஆட்டிக்கிட்டுப் பிச்சை எடுக்கும். அவன் அடிப்பான்னு கற்பனை பண்ற... சரி, ஏன் நீ திருப்பி அவனை அடிக்கிற மாதிரிக் கற்பனை செய்றதில்லை. ஏன்னா, நாம சாதாரண மனுஷங்க. ரொம்ப வீக்கானவங்கன்னு நாம நம்புறோம்.’’ என்பார்.

இங்கே நாம் போராட வேண்டும், போராடக் கூடாது, எதிர்த்து நிற்க வேண்டும், நிற்கக் கூடாது என்பதையெல்லாம்கூட முடிவு செய்பவை கற்பனையில் உருவாக்கப்பட்ட இந்த அச்சங்கள்தான். அதிகாரத்தில் இருப்பவர்கள் எப்போதும் நம்மைக் கற்பனையான அச்சங்களின் வழிதான் கட்டுப்படுத்துகிறார்கள். ஆளும் அரசாங்கத்தில் தொடங்கி, அலுவலக உயர் அதிகாரி, வீட்டின் தலைவர் என எல்லா பாஸ்களும் ஆள்வது இப்படித்தான்.

மத அடிப்படைவாதிகள் தொடர்ச்சியாகப் பல்வேறுவிதமான புதுப்புது விதிமுறைகளை உருவாக்குவதன் பின்னணி இதுதான். இந்துமத அடிப்படை வாதம் பேசுகிறவர்கள் இதே நாட்டின் சிறுபான்மையினர்மீது தொடர்ச்சியாக ‘நான் அனுமதிப்பதால்தான் நீ வாழ்கிறாய்’ என்கிற எண்ணத்தை விதைப்பது கூட இவ்வகைக் கற்பனை அச்சத்தை உருவாக்குகிற செயல்களில் ஒன்றுதான். சாதி சார்ந்து நடக்கிற படுகொலைகளில் தொடங்கி இங்கே கலப்புத் திருமணம் செய்துகொள்கிறவர்கள்மீது நடத்தப்படுகிற ஆணவப்படுகொலை வரை எல்லாமே உருவாக்க விழைவது என்ன?

ஒருமுறை அந்த அச்சத்தை உருவாக்கிவிட்டால் திரளான மக்களை எப்போதும் கட்டுப்படுத்தி வைத்திருக்க முடியும் என்பதை அதிகாரம் அறிந்தே இருக்கிறது.

அலுவலக மீட்டிங்கில் ஒரு குறிப்பிட்ட நபர் வரும்போது எல்லோரும் எழுந்து நிற்க வேண்டும் என்கிற விதியெல்லாம் இருக்காது. யாரோ ஒருவர் மட்டும் முதலில் எழுந்து நின்றிருப்பார். அதனாலேயே எழுந்து நிற்காமல் போனால் அவரால் நாம் தண்டிக்கப்படுவோமோ என்கிற அச்சத்தினாலேயே ஒவ்வொருவராக எழுந்து நிற்பார்கள். அதிலும் ஒரு சிலர் நிற்கலாமா வேண்டாமா என்கிற தயக்கத்திலேயே பல ஆண்டுகளுக்கு அரைகுறையாக எழுந்து நிற்பதையெல்லாம் சகஜமாக எல்லா அலுவலகங்களிலும் பார்க்க முடியும்.

சந்திரமோகன் எப்போதும் எங்களிடமிருந்து நீக்க முயன்றது அந்த அச்சத்தைத்தான். பயங்களில் இருந்து விடுபடுவதற்கான ஒரே வழி அதையெல்லாம் நேருக்கு நேராக எதிர்த்துநின்று எதிர்கொள்வது மட்டும்தான்.

நம்மைச்சுற்றி விதவிதமான அச்சங்களால் வெவ்வேறு வண்ணங்களில் ஏராளமான கோடுகளை உருவாக்கி வைத்திருக்கிறோம். அந்தக் கோடுகளுக்குள்தான் நாம் எப்போதும் வாழ்கிறோம். அதையெல்லாம் தாண்டிச் செல்லாதே என இங்கே யாரும் தடுப்பதில்லை. அதையெல்லாம் நாமாகவேதான் நினைத்துக்கொள்கிறோம். கோட்டுக்கு இந்தப் பக்கம் இருப்பதுதான் நமக்குப் பாதுகாப்பானது, நம்மைச்சுற்றி இருப்பவர்களுக்கு நல்லது, வருங்காலத்தைப் பாதிக்காதது என முடிவெடுத்து எப்போதும் அந்தக் கோடுகளை அச்சத்தோடு பார்த்துக் கடக்கிறோம். ஆனால், ஒருநாளும் கோடுகளுக்கு அந்தப் பக்கம் இருக்கிற உண்மையை நாம் பார்க்க முனைவதே இல்லை.

இருள் நிறைந்த பகுதிகளில் ஆபத்துகள் இருக்கலாம்தான். ஆனால், அடிமைப்பட்டு விரும்பாத வாழ்க்கையை வாழ்வதைவிட அந்த மனக்குகைகளுக்குள் நுழைந்து ஒரு கை பார்த்துவிடலாம்தானே? ஏன் என்றால்... சீறிஎழவேண்டிய சிறுத்தைகள் வாழ்வது அந்த மனக்குகையில்தான்!

- கேள்வி கேட்கலாம்...