Published:Updated:

உயிர்மெய் - 24

உயிர் மெய்
பிரீமியம் ஸ்டோரி
News
உயிர் மெய்

மருத்துவர் கு.சிவராமன்

ந்த வாரம் உயிர் மொய். `என்ன இது அச்சுப்பிழை?’ எனப் பதற வேண்டாம். மெய்யாலுமே இது `உயிர் மொய்’ பற்றியதுதான். குழந்தைப்பேறு உதவி சிகிச்சையில் உள்ள எக்குத்தப்பான செலவு பற்றிய அறிக்கைதான் இந்தக் கட்டுரை. காய்ச்சலுக்கும் தலைவலிக்குமே கணிசமாக மொய் எழுத வேண்டிய சூழலில் குழந்தைப்பேறில் சிக்கல் என்றால், எவ்வளவு ஆகும் என்பதை முதலில் சின்னதாக மனதில் மினி டீசர் ஓட்டிப் பார்த்துக்கொள்ளுங்கள். குழந்தைகள், இதயம் பலவீனமானவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் (அவர்களுக்குத்தான் அவசியமில்லையே...) முழுப்படத்தை பார்ப்பதைத் தவிர்க்கலாம். மற்றவர்கள் முதல் சீனில் இருந்து பார்க்கலாம்.

உயிர் மொய்யின் முதல் செலவு  சோதனைச் செலவு. ``மறுபடி நீங்க முதல்ல இருந்து சோதிச்சுப் பார்க்கணும். அந்த புளூ கலர் ஃபைல், சிவப்பு கலர் ஃபைலில் இருக்கிறதெல்லாம் போன வாஆஆஆரம் எடுத்தது (மறுபடி இது அச்சுப்பிழையல்ல...ஆஸ்பத்திரியின் குரல்.) அதனால, உங்க ஹஸ்பெண்டுக்கு மூணாவது மாடி, நீங்க அண்டர் கிரவுண்டுல இருக்கிற பரிசோதனைக் கூடத்துல ஒட்டுமொத்தமா அத்தனை சோதனைகளையும் செய்யணும்” என்பதுதான் செலவுக்கணக்கின் முதல்படி.  வழக்கமாக, கார்ப்பரேட் ஸ்டைலில் இயங்கும் நிறைய மருத்துவமனைகள், `ஆண்கள் பேக்கேஜ்’ என ஆண்களுக்கான அத்தனை சோதனைகளையும் செய்ய 25,000 ரூபாய் வாங்குகின்றன. பெண்களுக்கு, கர்ப்பப்பை சார்ந்த சில கூடுதல் ஸ்கேன் சிகிச்சைகள் தேவைப்பட்டால், 35,000-த்திலிருந்து 40,000-  வரை கேட்கிறார்கள்.

உயிர்மெய் - 24

``சார் எதுக்கு ரத்தக் கொழுப்பு, கிட்னிக்கான டெஸ்டெல்லாம்?’’ என்கிற பொதுஅறிவுக் கேள்வியை மட்டும் வாய்தவறிக்கூட அங்கே கேட்கக் கூடாது. ``ஹலோ... இங்கே நீ டாக்டரா... நான் டாக்டரா? 10 வருஷம் படிச்சுட்டு வந்திருக்கோம். எதை எப்போ பார்க்கணும்னு எனக்குத் தெரியும். பிள்ளை வேணும்னா பாரு... இல்லைன்னா கவர்மென்ட் ஆஸ்பத்திரிக்குப் போ’’ எனக் கலங்காமல் சொல்லும் மருத்துவமனைகள் நகரின் அத்தனை தெருமுனைகளிலும் அலங்காரமாக வந்தாகிவிட்டது. ஒருவேளை இன்னும் ஐந்து வருடங்கள் கழித்துப் போனால், `நீட்’டில் வந்த சேட்ஜி மருத்துவர்கள், ``தும் நீட் லிக்கானா? தும் நீட் கோர்ஸ் கா டப்பு மாலும் ஹை?’’ என்று புரியாத மொழியிலும்கூட திட்டுவார்கள்.  `உலகத்தரமான சிகிச்சை’ என முழங்கும் பல மருத்துவமனைகள், சோதனை செய்வதில் உலகத்தரத்தை, குறிப்பாக உலக சுகாதார நிறுவன வழிகாட்டுதலைக் கடைப்பிடிக்கின்றனவா என்பது சாமி சத்தியமாக யாருக்கும் தெரியாது. அவசியமில்லாமல், ஒரு சொட்டு ரத்தத்தைக்கூட யாரிடம் இருந்தும் எடுத்துச் சோதிக்க மருத்துவ வழிகாட்டுதல்  குழு (Medical ethics) அனுமதிப்பதில்லை. ``அதெல்லாம் எங்க அனுபவத்துல அவசியமானது’’ என்கிற பதிலுக்குள்ளும், நம் அவசரங்களுக்குள்ளும் அத்தனை Ethics-ம் அலட்சியப் படுத்தப்படுகின்றன. 

சோதனை செய்தே சொத்தைக் கரைத்தவர்கள் உயிர் மெய் ஓட்டத்தில் கணிசம் பேர் உண்டு. ``டி- 5-யில் FSH, AMH  எல்லாம் பார்த்திடுங்க. டி-23-யிலே புரோஜெஸ்டிரான் பார்க்கணும்’’ எனச் சொல்பவருக்கு, கருத்தரிப்புத் தாமதத்தில் கஷ்டப்படுவோரில் கணிசம் பேர் மாதச் சம்பளம் வாங்கிக் கஷ்டப்படுபவர்கள் எனத் தெரியாது. டி-31-ல் வாங்கும் சம்பளத்தில்தான் ஒவ்வொரு நாளும் ஓடுகிறது. டி-24-ம் தேதிக்குப் பிறகு அவர்கள் வாங்குகிற காபித்தூள் கடன், ஓசி போன் ரீசார்ஜ் பற்றி எல்லாம் தெரிவது இல்லை. குழந்தைப்பேறுக்கான சிகிச்சைக்கு முன்னதாகவே என்ன நடக்கிறது என அறிவதற்கு கிட்டத்தட்ட ஒரு லட்சம் ரூபாய் இன்றைக்கு நகர்ப்புற மருத்துவமனைகளில் தம்பதிகளிடம் இருந்து பெறப்படுகின்றன. அநேகமாக எல்லா மருத்துவமனைகளிலும், அவர்களின் பிரத்யேகச் சோதனை நிலையம் இருப்பதால், வெளிச் சோதனை நிலையத்துக்கு அவர்களை அனுப்ப அனுமதிப்பதே இல்லை.

உயிர்மெய் - 24

``ரத்தச் சோதனையெல்லாம் சரியா இருக்கு. இன்னும் தாமதமாச்சுன்னா, ஒரு லேப்ராஸ்கோப், ஒரு டியூப் டெஸ்ட், ஒரு ஃபாலிகுலர் சோதனை...’’ எனப் பட்டியிலிட மயக்கமே வரும். இரவில் வரும் `குவா... குவா...’ கனவில் அத்தனை மயக்கமும்  தெளிந்து ``ஏண்டி... நாம என்ன புது ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷினா வாங்கப் போறோம்? உன் கன்னம் மாதிரியே குழி விழுந்த கன்னம் உள்ள பாப்பா பெத்துக்கத்தானே...’’ என்று சொல்லி காலையில் மூணு வட்டிக்குக் கடன் வாங்கி, ஆஸ்பத்திரிக்கு வருவோர் இப்போது நிறைய பேர். அவர்கள் `கருக்குழாயில் அடைப்பு இருக்கிறதா?’ என அறிய 2,500 ரூபாய், `ஃபாலிகுலர் சோதனை’ என்னும் முட்டையின் வளர்ச்சியை அறியச் செய்யப்படும் ஸ்கேன் சோதனைக்கு 3,000 ரூபாய், அதுவே  லேப்ராஸ்கோப்போ, ஹிஸ்டிராஸ்கோப்போ (Hysteroscope) செய்யப் போனால், செலவு ரூபாய் 10,000-த்திலிருந்து 15,000 வரை ஆவது உறுதி.

சோதனையெல்லாம் செய்து, மருந்து மாத்திரை வணிகத்துக்குப் போகையில், நேரடியாகவும் மறை முகமாகவும் ஆகும் செலவு எக்குத்தப்பாக இருக்கும். இதில் மாற்று மருத்துவத்துறையின் போர்வையைப் போத்திக் கொண்டு, அப்படியே ``நான் காளங்கிச்சித்தரின் கடைசிப் பேரனின் கொள்ளுப் பேரன்’’ அல்லது ``எங்க மொத்தக் குடும்பமே 200 தலைமுறையாக மூலிகை வைத்தியம் செய்றோம்’’ எனச் சொல்லி, இந்தச் சிகிச்சைக்கு வாங்கும் பணம் நபருக்கு நபர் மாறுபடும். ஆடி காரில் வருகிறீர்களா, ஆட்டோவில் வருகிறீர்களா என்பதைப் பொறுத்துத் தொகை மாறும். என்ன மருந்து, என்ன சிகிச்சை என்பதைப் பேசாமல், எடுத்த எடுப்பில் மாதத்துக்கு 20,000 ரூபாய் எனப் பேரம் பேசும் கூட்டம் இங்கு அதிகம். விலை படியவில்லை என்றால், ``எவ்ளோ இருக்கோ கொடுத்துட்டு, எடுத்துட்டுப் போங்க’’ எனும் லாட்ஜ் லேகிய வியாபாரிகளும் இதில் கணிசமாக உண்டு.

எந்த ஒரு சிகிச்சைக்குச் சென்றாலும், நாம் சாப்பிடும் மருந்துக்கு என்ன பெயர், அதன் தயாரிப்பு விவரங்கள் உள்ளிட்டவை நமக்குக் கண்டிப்பாகத் தெரிந்திருக்க வேண்டும். மருத்துவர் தரும் பிரிஸ்கிரிப்ஷன் பேப்பரில் கொட்டை எழுத்துகளில் மருந்தின் விவரம் தெளிவாக எழுதித் தரப்பட வேண்டும். வாங்கும் மருந்து, அரசு அனுமதி பெற்ற மருந்தகத்தில் தயாரிக்கப்பட்டதா, அத்தனை தகவல்களையும் கொண்ட லேபிள் ஒட்டப்பட்டிருக்கிறதா எனப் பல சம்பிரதாயங்களைப் பார்க்க வேண்டும். ``கறுப்பு மருந்து மூணு பாட்டில், சிவப்பு மாத்திரை காலையில் ஒண்ணு, ராத்திரியில ஒண்ணு... நாங்களே தயாரிக்கும் மருந்தாக்கும்’’ எனக் கடையில் மருந்தை வாங்கி, அதன் லேபிளைக் கழற்றி வீசி எறிந்துவிட்டு, இஷ்டத்துக்கு விலை வைத்து, ஏமாற்றி விற்பது சட்டப்படித் தவறு. பின்னாளில் ஏதாவது பிரச்னை இருந்தால், `இதுவரை சாப்பிட்டது என்ன மருந்து?’ எனத் தெரியாமல் நுகர்வோர் அல்லாடுவதும், பெரும் அல்லல்படுவதும் இப்படியான ஏமாற்றுதல்களால்தான். இங்கே மட்டுமல்ல, `மூலிகை’ என்ற பெயரை வைத்துக்கொண்டு உலகெங்கும் நிறையவே உட்டாலக்கடிகள் ஏராளமாக நடப்பது உண்டு. `பெண் குழந்தை வேண்டுமென்றால், ஏழு லட்ச ரூபாய் கொண்டு வாருங்கள்...’ என இணையத்தில் கேட்டு, ரகசியமாக அதற்குப் பணம் கட்டி, வெளிநாட்டுக்குச் சென்று திரும்பிய மாபெரும் அறிவாளியை எனக்குத் தெரியும். அதேபோல், இங்கே உள்நாட்டில்,  `இதுக்கு மருந்து செய்ய, ஆண் கரடியின் வலது நகம் வேண்டும்; புலிக் கொழுப்பு கணிசமாக வேண்டும்’ என புருடாவிட்டு, வனஸ்பதியில் லேகியம் செய்து விற்கும் போலிகளிடம் ஏமாந்து இழக்கும் பணமும்  ஏராளம்.

உயிர்மெய் - 24

துறை எதுவாக இருந்தாலும், அறம் சார்ந்த மருத்துவர்கள் நிறைய பேர் எல்லா இடங்களிலும் இன்னமும் இருக்கிறார்கள். 15 ரூபாய் பணம் வாங்கிக்கொண்டு, நாடிபிடித்துப் பார்த்து, ``சாயந்திரம் வா, மருந்து தாரேன்’’ எனச் சொல்லிவிட்டு, மாலையில், அவனுக்கு நெருஞ்சி முள்ளும், அவளுக்குக் கற்றாழைச் செடியின் சோறும் சைக்கிளில் போய்ப் பறித்துவந்து கொடுத்து, மூச்சுப்பயிற்சியைக் கற்றுக் கொடுத்து, கரிசனமாக வாழ அறிவுறுத்தி, கருத்தரிக்க வைத்த கிராமத்து வைத்தியர்களும் இருக்கிறார்கள். 30 ரூபாய் ஆலோசனைக் கட்டணம் வாங்கிக்கொண்டு, செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரியின் தலைமைப் பொறுப்பில் இருந்து ஓய்வுபெற்றுவிட்டு, தன் முதுமையிலும், ஐந்து ரூபாய்க்கு ஆங்கில மருந்தை எழுதிக் கொடுத்து, கருத்தரிப்பைச் சாத்தியமாக்கிய மகளிர் நல பேரா. சக்கரவர்த்தி போன்றவர்களும் இன்னமும் அறம் சார்ந்த மருத்துவத்தைச் சத்தமில்லாமல், ஏழைகளுக்குச் செய்துகொண்டுதான் இருக்கின்றார்கள்.

மருத்துவத்தில் சரியாகாதபோது, ஐ.யூ.ஐ., ஐ.வி.எஃப், இக்சி எனத் தேவைப்படுகையில், கேட்கப்படும் தொகையும் அதற்குப் பின்னால் உள்ள வணிகமும் கூவத்தூர்-புதுச்சேரி ரிசார்ட் பரிவர்த்தனைகளைப்போல கணக்கிட முடியாதது.  சாதாரணமாகச் சிறு நகரில் 5,000 ரூபாய்க்குச் செய்யப்படும் ஐ.யூ.ஐ. (அதாவது, கர்ப்பப்பைக்குள் விந்தை சிரிஞ்ச் வழியாகச் செலுத்துதல்)-க்கு நகரங்களில் 20,000 ரூபாய் வரை வாங்கப்படுகிறது. குறைந்தபட்சம் நான்கு, ஐந்து தடவை நடத்தப் படும் இந்த முறையில் கருத்தரித்துவிட்டால், அத்துடன் செலவு முடிந்தது. அது என்னவோ தெரியவில்லை. இப்போதெல்லாம் அநேகமாக, ஐ.யூ.ஐ. வெற்றிபெறும் விகிதம் குறைந்துகொண்டே வருகிறது. முன்பு ஐ.யூ.ஐ. அதிக விகிதத்தில் வெற்றி பெற்ற காலம் உண்டு. இப்போது சோதனைக்குழாய் பேபி எனும் இக்சி/ ஐ.வி.எஃப்-தான் பெரும்பாலான மருத்துவமனைகள் வலியுறுத்துவது. சாதாரணமாக இரண்டரை முதல் மூன்று லட்ச ரூபாய் செலவாகும் இந்த முயற்சிக்குத்தான் இப்போது வங்கிக் கடன், ஈ.எம்.ஐ. வசதி எல்லாம் வந்துவிட்டன. கூடுதலாக, ஐ.வி.எஃப்-பில் கரு நின்றுவிட்டது என்றால், `படு ஜாக்கிரதையாக அந்தப் பெண்ணைப் பார்க்க வேண்டியிருக்கிறது’ என மருத்துவமனைகளைச் சுற்றி உள்ள விடுதிகள், வீடுகளில், 10 மாதம் டெலிவரி ஆகும் வரை மாதத்துக்கு 7,000-10,000 ரூபாய் வரை, வாடகை கொடுத்துத் தங்கவைக்கப்படுவதும் இப்போது வாடிக்கையாகி வருகிறது. இரண்டு ஆஸ்பத்திரிகளில் சோதனையும், அதன்பின் நான்கு ஐ.யூ.ஐ., கடைசியாக இரண்டு ஐ.வி.எஃப் நடந்து குழந்தை பெற வேண்டுமானால், மொத்தத்தில் இன்றைக்கு 10 லட்ச ரூபாய் அவசியம்.

`சரி, இன்ஷூரன்ஸ் இருக்குதே...’ என்றால், `குழந்தைப்பேறை யார் நோய் என்றார்கள்? அதற்கெல்லாம் இன்ஷூரன்ஸ் கிடையாது’ என அடித்துச் சொல்கிறார்கள் மருத்துவக் காப்பீடு வியாபாரிகள். `சினைப்பை நீர்க்கட்டியை அகற்ற, எண்டொமெட்ரியோசிசில் (Endometriosis) தேவையற்ற திசுக்களை நீக்க’ எனக் கணிசமாகக் காசு செலவாகும். குழந்தைப் பிறப்புக்கு என இல்லையென்றாலும், பல பிரச்னைகள் வராமலிருக்க, இந்தச் சிகிச்சைகளைச் செய்தாக வேண்டும். ஆனால், குழந்தைப்பேறுக்கெனச் சொல்லி இதற்கான பணத்தைத் திருப்பித் தர மாட்டோம் என நிராகரிக்கிறது மருத்துவக் காப்பீடு. ``இந்த போர்ஷனை மட்டும் நான் வேற ஆஸ்பத்திரியில் செஞ்சுக்கிறேன். இன்ஷூரன்ஸ் காசாவது கிடைக்கும்” என மகப்பேறு மருத்துவரிடம் சொன்னால், ``அதெப்படி? இங்கேதான் பண்ணணும்; அவங்க எக்குத்தப்பா எதையாவது அறுத்துட்டாங்கன்னா..?’’ எனப் பயமுறுத்த, பத்து வருடங்களாகப் போட்ட இன்ஷூரன்ஸும் உதவாக்கரை பேப்பராக பீரோவில் மட்டும் இருக்கும்.

உயிர்மெய் - 24

இன்று, மருத்துவம் நிச்சயம் ஒரு சேவைத் தொழில்தான். வெறும் சேவையாக இல்லை. ஆனால், அந்தச் சேவைத்தொழிலும், மருந்து நிறுவனங்களுக்கிடையில் நடக்கும் போட்டி யிலும், ஆதிக்கக் கோலோச்சி, வெறிபிடித்து வணிகம் செய்யும் பல பன்னாட்டு நிறுவங்களின் பிடியிலும் பாண்டித்யம் மிக்க நம் மருத்துவர்களில் பலரும் வழியின்றிச் சிக்குவதுதான் வேதனை. ஐ.வி.எஃப்-க்கான அத்தனை விலைகூடிய மருந்துகள், உபகரணங்களின் அடக்கவிலையும் விற்பனை விலையும் பெரும் வேறுபாடு உள்ளவை. `ஒன்று வாங்கினால், ஒன்று இலவசம்’ என மருத்துவமனைக்கு விற்கப்படும் வணிக உத்தி இந்தத் துறையில் உள்ள அனைவருக்கும் தெரிந்தது. `இந்த விஷயத்தில், இந்தியாவின் மருந்துவிலைக் கட்டுப்பாடு ஆணையம் என்ன செய்கிறது?’ எனப் பேச எவரும் தயாராக இல்லை. இதயத்தில் பொருத்தும் ஸ்டென்ட்டை (Stent) 10,000 ரூபாய்க்குத் தயாரித்த உள்ளூர் நிறுவனத்துக்கு மூடுவிழா நடத்திவிட்டு, ஒன்றரை லட்ச ரூபாய்க்கு இன்னமும் வெளிநாட்டு ஸ்டென்ட் வாங்கிக் கணிசமாக லாப வணிகம் நடத்தும் நிறுவனங்களின் இன்னொரு கம்பெனிதான் கருத்தரிப்பு மருத்துவத்துக்கும்  வணிகக் கட்டமைப்பு செய்கிறது. அங்கே எப்படி அறம்சார் வணிகத்தை எதிர்பார்க்க முடியும்?

``ஏங்க 32  நாள் ஆச்சு. இந்த முறை நின்னுடுமா?’’ என இரவில் விழியோரத்துக் கண்ணீரை விட்டுவிடக் கூடாது என அடக்கிக்கொண்டு கேட்கும் மனைவியின் கைகளைப் பற்றி, ``இத்தோட ஏழு லட்ச ரூபாய் ஆகிடுச்சு. இனிமே காசு சேர்த்துட்டுத்தான் காதலே பண்ணணும்’’  எனச் சொல்லி அழும் கணவனுக்கு இத்தனை வலிக்குமான ஒரே மருந்து குழந்தைப்பேறு மட்டும்தான். அதன் சாத்தியம் என்னவோ, `நீட்’டுக்குத் தன்னைத் தயார்படுத்திக்கொள்ள 60 வாட்ஸ் குண்டு பல்பின் அடியில் படிக்கும் அரசுப்பள்ளி மாணவனின் வெற்றியைப் போன்றதுதான்.

- பிறப்போம்...