Published:Updated:

சொல் அல்ல செயல் - 25

சொல் அல்ல செயல் - 25
பிரீமியம் ஸ்டோரி
News
சொல் அல்ல செயல் - 25

அதிஷா - ஓவியங்கள்: ஹாசிப்கான்

குமரகுருவிடம் மணிக்கணக்கில், நாட்கணக்கில், வாரக்கணக்கில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கலாம். கேட்டுக் கொண்டேயிருப்பார். உளறலாம்; கோபப்படலாம்; திட்டலாம்; புலம்பலாம்; கொஞ்சலாம்... நம்முடைய அத்தனை சொற்களுக்கும் கடவுளைப்போலவே புன்னகைப்பார்.

நம் சொற்களை அன்போடு ஏற்றுக் கொள்கிற காதுகளின் தேடல் நமக்கு எப்போதும் தீர்வதேயில்லை. அந்தக்காதுகள் நம்மை எவ்வகையிலும் அவமானத்திற்குள்ளாக்கிவிடக்கூடாது. அந்தக்காதுகள் நமக்குள் ஊடுருவி நம் உணர்வுகளைப் புரிந்துகொள்ளக் கூடியவையாக இருக்கவேண்டும். வாழ்நாளெல்லாம் நாம் அத்தகைய காதுகளுக்கெனக் காத்திருக்கிறோம். அவர்களிடம் நம்மை முழுமையாக ஒப்படைக்கிறோம். குமரகுருவிடம் அப்படிப்பட்ட காதுகள் இருந்தன.

மாம்பலம் ரயில்நிலையத்தின் ஆட்களே இல்லாத பகுதியில்தான் எப்போதும் அமர்ந்திருப்பார் குமரகுரு. நீள பெஞ்சில் எப்போதும் தலைக்கு முட்டுக்கொடுத்துப் படுத்திருப்பார். நாற்பதுகளில் இருந்த அவருக்கு வேலை எதுவும் கிடையாது. கிடைத்த வேலைகளைச் செய்வார். எந்த வேலையும் இல்லாதபோது அந்த ரயில் நிலையத்தில்தான் இருப்பார். அவர் மேன்ஷன் ஒன்றின் சிறிய அறையில் இருந்தார். பதினான்கு ஆண்டுகளுக்கு முன்பு மாம்பலம் ரயில்நிலையத்தில் அவரை முதன்முதலாகச் சந்தித்தேன். அன்று நான் தற்கொலை செய்து கொள்வதாகத் தீர்மானித்திருந்தேன்.

சொல் அல்ல செயல் - 25

வேலைபார்த்த இடத்தில் திருட்டுக்குற்றம் சாட்டப் பட்டிருந்தேன். பொது இடத்தில் வைத்து மோசமாக அவமானப் படுத்தப்பட்டிருந்தேன். வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த நண்பர் களின் கண்கள் என்னை விடாமல் தொந்தரவு செய்து கொண்டிருந்தன.

நாம் எப்போதும் அடுத்தவர் களுடைய கண்களுக்கு அஞ்சுகிற வர்களாக இருக்கிறோம். அந்தக் கண்களின் வழிதான் பலமுடிவு களையும் எடுக்கிறோம். அன்று என் நண்பர்களுடைய கண்கள்தாம் என்னைத் தற்கொலைக்குத் தூண்டின.

செய்யாத குற்றங்களுக்காக வாங்குகிற தண்டனைகளின் வலி அத்தனை எளிதில் சும்மா விடாது. அந்த நேரத்தில் நமக்குள் உருவாகும் அளப்பரிய நெருப்பு நம்மைக் கொலைகாரனாகவும்கூட மாற்றி யாரையுமே எரித்துவிடக்கூடியது. அதே நெருப்பு பலவீனர்களுக்கு தன்னைத்தானே எரித்துக் கொள்கிற வலிமையைக் கொடுத்துவிடும்.

நான் குற்றவாளியாக நின்ற அந்த நாளில் எனக்காகப் பேச என் நண்பர்கள் யாருமேகூட முன்வரவில்லை. அவர்கள் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.  இதுமாதிரியான சந்தர்ப்பங்களில் நாம் கண்களின் வழிதான் உரையாடப் பழகியிருக்கிறோம். பலநேரங்களில் கண்களின் வழிதான் நமக்கான நீதியையும் கூடக் கோரவேண்டி யிருக்கிறது. என் கண்கள் இரக்கத் திற்காக மண்டியிட்டபோது எல்லோ ருடைய கண்களும் தயங்கிப் பின்வாங்கின.

சொல் அல்ல செயல் - 25


எனக்குள் பற்றிக்கொண்ட நெருப்பு... என்னை இரண்டாவது வழியைத் தேர்ந்தெடுக்க வைத்தது. எப்படிச் செத்துப்போவது? மாம்பலம் ஹைரோட்டில் ரயில் தண்டவாளங்களுக்கு நெருக்க மாகத்தான் அப்போது என் வசிப்பிடம் இருந்தது. அதனால் ரயில் தண்டவாளங் களையே என்னைச் சாகடித்துக் கொள்வதற் கான எளிய கருவியாகத் தேர்ந்தெடுத்தேன்.

அன்றைக்கு அவ்வளவு பசித்தது. கையிலிருந்த காசில் எனக்குப் பிடித்த பிரியாணியை நிறைய நிறைய வாங்கிச் சாப்பிட்டேன். எப்போதும் சாப்பிடுகிற அளவைவிடவும் அன்று அதிகமாகவே சாப்பிட முடிந்தது. இன்னும் இன்னும் சாப்பிடவேண்டும்போல இருந்தது. கையில் இருந்த காசு அத்தனைக்கும் சாப்பிட்டு முடித்தேன். வெளியே வந்து ஜூஸ் குடித்தேன். வயிறு வீங்கிவிட்டிருந்தது. யாருக்காவது போனில் அழைத்துப் பேசவேண்டும். யாருக்காவது சொல்லவேண்டும். யாரிடம் சொல்வது.  நாம் செத்துப்போனால் யார் வீட்டுக்குச் சொல்வார்கள்? யோசித்துக் கொண்டே மாம்பலம் ரயில்நிலையத்திற்குள் நுழைந்தேன்.

ரங்கநாதன் தெருவழியாகத்தான் மாம்பலம் ரயில்நிலையத்திற்குள் செல்ல முடியும். எப்போதும் மக்கள் நெரிசலில் மூழ்கியிருந்த அந்த இடத்தில் கடந்து செல்கிற ஒவ்வொரு மனிதனையும் பார்க்கப் பார்க்கப் பொறாமையாக இருந்தது. இவர்களுக்கெல்லாம் எந்த அவமானங்களும் இல்லை. வாழ்க்கையின் எல்லா சுகங்களையும் அனுபவித்துக் கொண்டு சந்தோஷமாக வாழ்கிறார்கள். அவர்களைப் பிடிக்காமல் போனது. பத்தொன்பது வயதேயான இளைஞன் ஒருவனுடைய முதிர்ச்சி அது.

சரசரவெனப் படிகளில் ஏறி ரயில்நிலையத்தின் உள்ளே சென்றேன். தற்கொலை செய்து கொள்வதற்கும் பிளாட்பார்ம் டிக்கெட் வாங்கவேண்டுமா? தலையை சிலுப்பிக்கொண்டு தடதடவென மாம்பலம் ரயில்நிலையத்தின் படிகளில் ஆவேசமாக இறங்கினேன். பிளாட்பாரத்தின் ஆளில்லாத பகுதியை நோக்கி நடந்தேன்.  பிளாட்பார்ம் முடிந்து தண்ட வாளங்கள் மட்டுமே இருக்கிற இடம்வரைக்கும் வந்துவிட்டேன். இன்னும் நடந்தால் கோடம்பாக்கமே வந்துவிடும்.

யாருமே இல்லாத பகுதியில் அடுத்த ரயிலுக்காகக் காத்திருந்தேன். இன்னும் சில நிமிடங்களில் ஏதோ ஒரு ரயில் வரக்கூடும், அப்படியே பாய்ந்துவிடவேண்டியதுதான். கைகளை இறுக்கமாகப் பிடித்துகொண்டேன். என்னை அவமானப்படுத்திய கண்கள் நினைவுக்கு வந்தன. என் கண்கள் கலங்கின. இப்போதாவது நம்புவார்கள், நான் எந்தக் குற்றமும் செய்யவில்லை என்பதை... இப்போது எல்லோருமே பேசிக்கொள்வார்கள் ‘`பாவம் அந்தப்பையன்’’ என்பதாக... யாருக்கெல்லாம் என்னை நிரூபிக்கவேண்டும் என்கிற பட்டியலெல்லாம் மனதில் ஓடிக்கொண்டிருந்தது.

அடுத்த ரயில் வர, தாமதமாகிக் கொண்டே இருந்தது. லேசாகத் தூறிக்கொண்டிருந்த மழை வேகமெடுக்க ஆரம்பித்தது. தாமதம் ஆக ஆக என் மனதை மாற்றிக்கொள்வேனோ என அஞ்சினேன். ‘`தம்பி’’ என்று குரல்கேட்டது. பின்னால் குமரகுரு நின்றுகொண்டிருந்தார்.

வெள்ளை வேட்டியும் மடித்து விட்ட கசங்கிய சட்டையுமாக அவர் நின்றுகொண்டிருந்தார். கைகளில் சிகரட் ஒன்று புகைந்துகொண்டிருந்தது. ‘`என்ன பண்ற?’’ என்றார். ‘`உனக்கு என்னய்யா... மூடிட்டுப் போயா...’’ என்றேன். சாகப் போகிறோம் என்கிற வைராக்கியம் கொஞ்சமாக வீரத்தையும் சேர்த்துக் கொடுத்தது. அந்த மனிதனே என்னை அடித்துக் கொன்று விட்டாலும் நல்லதுதான் என நினைத்தேன். அவர் பதில் பேசாமல் சற்றுத்தள்ளி இருந்த ஒரு பெஞ்சில் அமர்ந்து கொண்டார். அங்கிருந்து என்னையே புன்னகை யோடு பார்த்துக்கொண்டிருந்தார். சாப்பிடும்போதுகூட யாராவது பின்னாலிருந்து நம்மைப் பார்த்துக்கொண்டே இருந்தால் நிம்மதியாக சாப்பிட முடியாது. செத்துப்போகத்தான் முடியுமா?

பின்னாலிருந்து குமரகுரு பார்த்துக்கொண்டே இருந்தது வெறுப்பாக இருந்தது. இந்த நேரத்தில் ரயில் எதுவுமே வரவில்லை. மழையும் விடாமல் அடித்துப்பெய்யத் தொடங்கி யிருந்தது. அவருடைய பார்வையைத் தவிர்க்கவே மனது நினைத்தாலும், மூளை அதைப்பற்றியே சிந்திக்கிறது. குமரகுருவின் புன்னகை, அவமானங்களின் வழி நான் அடைந்த மகா நெருப்பைக் கரைத்துக்கொண்டிருந்தது. அவரை பளார் என்று ஓங்கி அறைய வேண்டும் போல இருந்தது. அவர் பார்க்க நல்ல உடல்வாகோடு ஆறடி உயரத்தில் இருந்தார்.

சொல் அல்ல செயல் - 25

நான் அங்கிருந்து நகர்ந்து இன்னும் சற்று தள்ளி அவர் பார்வையில் படாத இடம் நோக்கிச்சென்றேன். ஆனால், அவர் அங்கும் பின்தொடர்ந்து வந்துவிட்டார். ‘`ரயில் ஒண்ணும் வராதுப்பா...’’ என்றார். நான் கவனிக்காதவன் போல நின்றேன். மீண்டும் சத்தமாகச் சொன்னார். அவர் சொல்வது உண்மை போலவும்தான் இருந்தது. நான் அங்கிருந்து நடக்க ஆரம்பித்தேன். அவர் பின்தொடர்ந்து வந்து என்னை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டார். ‘`யோவ் விடுயா... டேய் விட்ரா..’’ என நான் துள்ளித் துள்ளிக் குதிக்க... அவர் அப்படியே பொத்தி பிளாட் பாரத்தின் நடுவில் கொண்டு போனார். நான் அழ ஆரம்பித்தேன். கத்த ஆரம்பித்தேன். அவருடைய பிடியிலிருந்து என்னை விடுவிக்கத் துடித்தேன். அவர் என்னை கத்துவதற்கு அனுமதித்தார். அவர் தன்னுடைய நெஞ்சுக்குள் பொத்திவைத்துக் கொண்டு என் தலையை அழுத்தி வைத்துக் கொண்டார். அது ஒரு தாயின் அரவணைப்பைப் போலவே இருந்தது. நான் கத்தி ஓய்ந்து அழ ஆரம்பித்தேன். எனக்குள் இருந்த நெருப்பை அந்த மனிதர் அணைத்திருந்தார்.

அன்றைக்கு இரவெல்லாம் மழைபெய்து ஈரமாயிருந்த தி.நகரின் சாலைகளில் நாங்கள் இருவரும் பேசிக்கொண்டு நடந்து கொண்டேயிருந்தோம். நான் அந்தக் கண்களைப்பற்றிச் சொல்லிக்கொண்டே வந்தேன். நண்பர்களின் மௌனம் பற்றிச் சொல்லி அழுதேன். அவர் தன் கரங்களால் என் முதுகில் தட்டிக் கொடுத்தார். நான் பேசவே இயலாமல் மௌனமானேன்.

‘`நான்கூட தற்கொலை பண்ணிக்கலாம்னு நினைச்சிருக் கேன்பா. ஒரு பிரச்னைல குடும்பம் மொத்தமா என்னைக் கைவிட்டுட்டாங்க... வேலை இல்லை. வருமானம் இல்லை. அடுத்த வேளை சாப்பாடு போடவோ சாப்ட்டியானு கேக்கவோ ஆளில்லை. நமக்காக வருத்தப் படவோ நம்மைத் தேடவோ நமக்கு ஆறுதல் சொல்லவோ யாருமே இல்லைன்றது எவ்வளவு வலி தெரியுமா? உலகத்துல யாருக்குமே தேவைப்படாத ஒருத்தனா பயன்படாத மனுஷனா வாழ்றதவிட செத்துடலாம்னு தோணுச்சு.

நல்ல போதைல இருக்கும் போதுதான் இப்படிலாம் தோணும். அன்னிக்கு செம்ம போதை. உடனே முடிவு பண்ணி ரூம்ல எல்லா ஏற்பாடும் பண்ணிட்டேன். நாற்காலி ரெடி... வேட்டியெடுத்து ஃபேன்ல கட்டியாச்சு. ஏற வேண்டியது, தூக்கு மாட்டிக்க வேண்டியது, ஜம்முனு சாகவேண்டியது, அவ்ளோதான். நைட் பண்றதா காலைல பண்றதானு ஒரு குழப்பம்.. யோசிச்சிட்டே தூங்கிட்டேன்’’ என்று சொல்லிவிட்டு பலமாகச் சிரித்தார்.

``காலைல யாரோ கதவைத் தட்டினப்பதான் முழிச்சேன். கதவைத் திறந்துபார்த்தா எதிர்க்க கண்ணன் நிக்குறான். கண்ணன் ஊர்ல என்னோட ஃப்ரெண்டு. அவனுக்கு வயசு 15 தான் இருக்கும். சின்னப்பொடியன். பொறந்த துலருந்தே செமையா ஒட்டிக் கிட்டிருப்பான். அடிக்கடி கிளம்பி இங்க வந்துடுவான். ஊர் சுத்திட்டுப் போயிடுவான். அன்னிக்கும் அவன் வந்து நின்னான். என்னடா இது சாவப்போற நேரத்துல இவன்னு நினைச்சுகிட்டே உள்ளே கூப்ட்டேன். அவன் சுத்தி சுத்திப் பார்த்துட்டே  `என்னண்ணா ஃபேன்ல வேட்டிய காயப் போட்டிருக்கீங்க.. சீக்கிரம் காஞ்சுடும்னா’னு கேவலமா ஜோக் அடிச்சான். நான் அதுக்கே செத்துருக்கணும். இவனுக்குப் புரிஞ்சிடுச்சா இல்ல நடிக்கிறானா, ஒண்ணும் வெளங்கலை...’’ அவர் சொல்லிக் கொண்டே வர, மீண்டும் மழை பெய்யத் தொடங்கியது. நனைந்துகொண்டே நடந்தோம்.

``ஆனா அவன் அன்னிக்கு வராட்டி நான் செத்திருப்பேன். அவன் எதுக்காக வந்தான் தெரியுமா...’’ என்றார்.

‘`அவன் அப்பா சின்ன வயசுல செத்துப் போயிட்டாரு. அம்மா, இவன் குழந்தையா இருக்கும்போதே யாரையோ காதலிச்சு ஓடிப்போயிடுச்சு. அதனால அவன் பாட்டி வீட்ல தங்கிக்கிட்டு சொந்தக்காரங்க வீட்ல சாப்பிட்டு படிச்சிக் கிட்டுருக்கான். மாமா, சித்தப்பா, பெரியப்பானு தினமும் ஒரு வீடுனு சாப்பிட்டுக்குவான். யாருக்குமே அவனைப் பிடிக்காது. ஏன்னா அப்படித் திம்பான். இரண்டு ஆள் சாப்பாட்டை ஒரே ஆளா சாப்புடுவான். ஆனா ஆள் பார்த்தா ஒல்லிக்குச்சியாதான் இருப்பான். அவனுக்குச் சோறு போடறதுக்கு அவங்க சொந்தக்காரங்க வீட்லலாம் யாருக்கும் சந்தோஷம் இல்ல.

இங்க வரதுக்கு மொதநாள் சாப்பிடறதுக்காக யாரோ சொந்தக்காரன் வீட்டுக்குப் போயிருக்கான். அங்க மீன் கொழம்பு கமகமனு அடிச்சிருக்கு. இவனுக்கு மீன்கொழம்புனா உயிராச்சே... இருந்து சாப்பிட்டுத் தான் போகணும்னு உக்காந் துட்டான். அங்க இருந்த பொம்பளை  இவனைப் பார்த்ததும் எங்கே மீனுக்கு பங்குக்கு வந்துருவானோனு... அவன்கிட்ட பத்துக் குடம் தண்ணி அடிச்சுக்குடுக்கச் சொல்லியிருக்கு. இவன் மாஞ்சு மாஞ்சு அடிச்சு, பெரிய டிரம்மை நிரப்பியிருக்கான். தண்ணி யெல்லாம் அடிச்சு முடிச்சுட்டு சாப்பிடலாம்னு வந்து உக்காந்திருக்கான். அந்தப் பொம்பளை இவனைத் தண்ணி அடிக்கச் சொன்ன கேப்ல வீட்ல உள்ளவங்களுக்கு சாப்பாட்டைப் போட்டு முடிச்சிருச்சு.  ‘தம்பி, சாப்பாடு இல்லப்பா. மறுபடியும் வைக்கணும். இன்னிக்கு ஒருநாள் பெரிப்பா வீட்ல சாப்டுக்கோ’னு இழுத்திருக்கு. இவனுக்குக் கோபம் வந்துடுச்சு... `பத்துக்குடம் தண்ணி அடிச்சிருக்கேன்ல அதுக்காகவாச்சும் ஒருவேளை சோறு போடமாட்டீங்களா’னு கேட்டுட்டான் போல. கூடவே இரண்டு கெட்டவார்த்தையும் போட்டுத் திட்டிட்டான் போலருக்கு... எல்லாருமே சேர்ந்து அவனைத் திட்டி அடிச்சுத் துரத்தியிருக்காங்க.

இனிமே எவன் வீட்லயும் உக்காந்து சாப்பிடக்கூடாதுனு முடிவு பண்ணியிருக்கான். உக்காந்து அழுது அழுது தாங்க முடியாம... செத்துப்போகலாம்னு முடிவு பண்ணியிருக்கான். சாகறதுக்கு முன்னால பசிச்சிருக்கு... யார்ட்ட சாப்பாடு கேக்கனு தெர்ல... ஊர்லருந்து கெளம்பிட்டான். கைல அஞ்சு பைசாகூட இல்ல... ரயில்ல டிக்கட் இல்லாம வந்து, சென்ட்ரல்ல இறங்கி நடந்தே மாம்பலத்துக்கு வழிகேட்டு வந்துட்டான்’’ என்று அவர் சொல்ல, நான் ஒல்லியான கண்ணனுக்கு உருவம் கொடுத்துக் கொண்டிருந்தேன்.

``வந்தவன் இந்தக் கதையெல்லாம் சொல்ல சொல்ல... எனக்கு ரொம்ப கஷ்டமாயிடுச்சு. `நானே இங்க பிச்சை எடுக்கறேன். என்கிட்ட ஏன்டா வந்த’னுதான் கேட்டேன். `நீ எப்படி வேணா இருந்துக்கோ குமார்ண்ணா, எனக்குப் பசிக்குது கொஞ்சம் சோறு வாங்கிக்குடு... அது போதும் நான் ஊருக்கே போயிடுவேன்’னான். எனக்கு நெஞ்சு அடைச்சிட்டு வரமாதிரி ஆகிடுச்சு.

சொல் அல்ல செயல் - 25

`நான் எப்போ போய் நின்னாலும் மனசார சோறுபோட ஒருத்தன் எங்கேயோ இருக்கான்ற நம்பிக்கை போதும்ண்ணா. நான் எங்கயாச்சும் போய் பொழச்சுக்குவேன் ... அப்படி யாருமே இல்லைனுதான் சாகலாம்னு போனேன். அப்பதான் உன் நெனைப்பு வந்துது’ன்னான். அவன்ட்ட என்ன சொல்ல முடியும். எனக்கு ஒரு புள்ளை இருந்தான்னா அவனுக்கு அவன் வயசுதான் இருக்கும். அவன் முன்னாடி அழுதுடக்கூடாதுனு இருந்தேன்.

ஆனா, கண்ணுல தண்ணி கொட்டுது. அவன் என்னடான்னா ‘உன்னால சோறுவாங்கித் தர முடியாதுன்னா சொல்லிடு. சேகர் இருக்கான் அவனைப் போய்ப் பார்க்கணும் அடுத்து’ன்றான். அவனை அப்படியே கூட்டிட்டுப் போய் இட்லி வாங்கிக் குடுத்தேன். `என்கூடயே இருந்துடு’ன்னு சொன்னேன். `அதெல்லாம் வேண்டாம். என்னிக்காச்சும் ஒருவேளை சோறுனு வந்து உன்முன்னால நிப்பேன். அப்போ வாங்கிக்குடு போதும்’னு சொல்லிட்டு அன்னிக்கே கிளம்பிட்டான். அன்றைக்கு நான் அவனுக்கு எதுவுமே கொடுக்கல. அவன்தான் எனக்கு நிறைய கொடுத்துட்டுப் போனான்’’ என்றார். 

அவர் சொன்னது கச்சிதமாக எழுதப்பட்ட கதைபோலவே இருந்தது. அது சினிமாவுக்காக எழுதிய கதையாகவும்கூட இருக்கலாம். நிஜமாகவே நடந்தும்கூட இருக்கலாம். ஆனால், அது அந்த நேரத்தில் எனக்குள் நிகழ்த்திய மாயா ஜாலம் மிகப்பெரியது.

அவர் அதைச் சொல்லிக் கொண்டிருந்த போது நாங்கள் அண்ணா மேம்பாலத்தில் ஏறிக் கொண்டிருந்தோம். மேம்பாலத்தின் உச்சியில் இருவரும் நின்று கொண்டிருந் தோம். எப்போதும் வாகனங்கள் முட்டிமோதும் சாலை அது. வாகனங்கள் இல்லாமல் நிர்வாணமாக நிற்கிற மனிதனைப்போல இருந்தது அந்தச்சாலை.  அந்த ஆளில்லாத சாலையை இருவரும் மௌனமாகப் பார்த்துக் கொண்டிருந்தோம்.

‘`வாழ்றதுக்கான நம்பிக்கையை சக மனுஷனைத் தவிர யார்ரா குடுத்துர முடியும். எவனாவது ஒரே ஒருத்தன் உனக்காக இருப்பான். அவன் உனக்கு அந்த நம்பிக்கையைக் குடுப்பான். உன் வாழ்க்கையை அவன் மாத்துவான். கண்ணன் தேடி வந்தான் பாரு 800 கிலோமீட்டர் தாண்டி... இதெல்லாம்தான் மிராக்கிள். கடவுள் நம்பிக்கை இல்லாதவனக்கூட சலனப்படுத்துற சந்தர்ப்பம்.  இங்கே கைவிடப்பட்டவன்னு எவனுமே கிடையாது.

மனுஷங்க மேல நம்பிக்கை இழந்தவங்கதான் நாம எல்லோருமே... எவனோ ஒருத்தன் நமக்கு துரோகம் பண்ணியிருப்பான். எவனோ ஒருத்தன் நம்மைப் புறக்கணிச்சிருப்பான். எவனோ ஒருத்தன் நம்மை ஏமாத்தி அவமானப் படுத்தியிருப்பான். அந்த ஒருத்தனுக்காக எத்தனை பேரை விட்டுட்டு செத்துப்போகத் துணியறோம். எவ்வளவு மோசமான காரியங்களைச் செய்றவங்களா மாறிடறோம். நமக்கு ஆறுதல் தர எத்தனை பேர் இருக்காங்கனு நம்ம மண்டைக்கு அந்தச் சமயத்துல உறைக்கவே உறைக்காது! நம்ம ஆறுதல் எத்தனை பேருக்குத் தேவைப்படும்ங்கறதும் தெரியாது. எவனோ ஒருத்தனுக்காக எவளோ ஒருத்திக்காக அநாவசியமா செத்துப்போவோம்.’’ அண்ணா சாலை   இன்னும்   பத்தடி   உயர்ந்துவிட்டதைப்போல இருந்தது.  விடியல் தொடங்கி இரவு கலைந்து ஒளி புகத்தொடங்கியிருந்தது.

நாங்கள் பேசிக்கொண்டே ரொம்பதூரம் வந்துவிட்டிருந்தோம். கிளம்ப ஆயத்தமானோம். அவர் எல்லா அறிவுரைகளையும் சொல்லி முடித்தார். கடைசியில் கேட்டார். ``எனக்கு ரொம்ப பசிக்குது கைல காசில்ல. காபி டிபன் சாப்பிடுவோமா?’’ என்றார்.

மிகச்சிறிய அவமானத்திற்காக செத்துப்போக நினைத்தவனுக்கு வாழ்வதற்கான நம்பிக்கையை அளித்தவர் குமரகுரு. எங்கு வீழ்ந்தாலும் எப்போதும் அந்த இரவை நினைத்துக்கொள்வேன். எப்போதாவது இந்த உலகில் எனக்கான மனிதர்களே இல்லை என்ற நிலை வந்தால் குமரகுரு இருக்கிறார் என்கிற எண்ணம்தான் முதலில் வரும். எனக்கான ஆறுதலை அவர் தருவார். அவர் எப்போதும் ஆறுதல் சொல்ல, மாம்பலம் ரயில்நிலையத்தில் எனக்காகக் காத்திருக்கிறார் என நினைப்பேன். இப்போது குமரகுரு எங்கே இருக்கிறார் என்பது தெரியவில்லை. காலவோட்டத்தில் அவர் பிரிந்து கரைந்து காணாமல் போனார். நாடோடி தேவதைகள் அப்படித்தான். ஆனால், இப்போதும் வீழும்போதெல்லாம் குமரகுரு அமர்ந்திருந்த பெஞ்சில் சென்று அமர்ந்துகொள்வேன். அந்த இரவை நினைத்துக்கொள்வேன். குமரகுருவைப் போன்ற எளிய மனிதர்களை நோக்கி ஓடுவேன். மனிதர்கள் என்னை எல்லாத் துன்பங்களில் இருந்தும் மீட்டெடுத்திருக்கிறார்கள். சகமனிதர்கள் என் எல்லாத் தீமைகளோடும் என்னை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். மனிதர்கள்தாம் எனக்கான ஆறுதலை எப்போதும் அளித்திருக்கிறார்கள்.

இங்கே யாரும் தனியாக இல்லை. எல்லோருக்குமே ஆறுதல் தரக்கூடிய, தாங்கிப்பிடிக்கிற, ஊக்கப்படுத்துகிற, பிள்ளைபோல் அரவணைக்கிற மனிதர்கள் ஏராளம் உண்டு. நமக்காகப் போராடுகிற, சண்டைபோடுகிற, உரிமைகளை, நீதியைப் பெற்றுத்தருகிற மனிதர்களும் ஏராளம் உண்டு. அவர்கள் நம் கண்களுக்குத் தெரியாத தொலைதூரத்தில் இருக்கிற ரகசியமானவர்கள் அல்லர். அவர்களெல்லாம் நமக்கு மிக அருகில் இருப்பவர்கள். நம்மோடு அன்றாடம் வாழ்வில் பயணிப்பவர்கள்தாம். அத்தகைய மனிதர்களைத் தேடுவதோடு அவர்களில் ஒருவராக நாம் இருக்கிறோமா என்பதையும் அவ்வப்போது பரிசோதித்துப் பார்க்கவேண்டும்.

வீழும்போதெல்லாம் தாங்கிப்பிடிக்கிற கைகள் இங்கே ஏராளம் உண்டு. நம்முடைய கைகளுக்கும் கூட அதே வேலைகள் உண்டு. வீழும் மனிதர் களுக்கான ஆறுதலை நாம் வழங்குகிறோமா? இன்னொரு மனிதன் வாழ்வதற்கான நம்பிக்கையை நாம் கொடுக்கிறோமா? சகமனிதனை அவனுடைய சாதி, மத, வர்க்க, பாலின அடிப்படைகளிலிருந்து விலகி சக உயிராக பாவிக்கத்தொடங்குகிற நொடியில் நம்முடைய கைகள் தானாகவே சகமனிதனுக்காக உயரும். சகமனிதனின் வீழ்ச்சிக்காகப் பதறித்துடிக்கும். அவனை உயர்த்துவதற்காகக் குரல்கொடுக்கும். அவனுக்கான ஆறுதலைத் தர சீறிப்பாயும். அதை நாம் உணர்ந்திருக்கிறோமா? அந்த உணர்வுதான் எல்லாப் போராட்டங் களுக்குமான ஆணிவேர். அந்த உணர்வு இருக்கிற ஒருவனால்தான் அடுத்தவனுக்காகக் களத்தில் இறங்கிப் போராட முடியும்.

- நிறைவு