Published:Updated:

தமிழ் சினிமாவுக்கு இது பெருமிதம்... பேரனுபவம்! - `மேற்குத்தொடர்ச்சி மலை’ விமர்சனம்

தமிழ் சினிமாவுக்கு இது பெருமிதம்... பேரனுபவம்! - `மேற்குத்தொடர்ச்சி மலை’ விமர்சனம்

தமிழ் சினிமாவுக்கு இது பெருமிதம்... பேரனுபவம்! - `மேற்குத்தொடர்ச்சி மலை’ விமர்சனம்

Published:Updated:

தமிழ் சினிமாவுக்கு இது பெருமிதம்... பேரனுபவம்! - `மேற்குத்தொடர்ச்சி மலை’ விமர்சனம்

தமிழ் சினிமாவுக்கு இது பெருமிதம்... பேரனுபவம்! - `மேற்குத்தொடர்ச்சி மலை’ விமர்சனம்

தமிழ் சினிமாவுக்கு இது பெருமிதம்... பேரனுபவம்! - `மேற்குத்தொடர்ச்சி மலை’ விமர்சனம்

சினிமா ஓர் உலகப் பொதுமொழி என்பார்கள். அதில் வெகு சில படங்கள் மட்டுமே நமக்கு ஒரு வாழ்வியல் அனுபவத்தைப் பரிசாக அளிக்கும். படம் முடிந்து வெளியே வரும்போது உள்ளே கனம் அதிகமாகி நம் எடை அதிகரிக்கும். அதன் மாந்தர்களும் நம்மோடு உரையாடிக்கொண்டே நடைபோடுவது போன்ற பிரமை ஏற்படும். 'மேற்குத் தொடர்ச்சி மலை' அப்படியான ஒரு படம்.

உலகமெங்கும் குறுக்கும் நெடுக்குமாக விரவிக்கிடக்கும் அத்தனை உழைக்கும் மக்களுக்கும் ஒரே ஒரு குறிக்கோள்தான் - 'காணி நிலம் வேண்டும், அதில் பாதம் புதைய நடந்து திளைக்க வேண்டும்.' மேற்குத் தொடர்ச்சி மலைச்சாரலில் வசிக்கும் ரெங்கசாமிக்கும் அதுதான் குறிக்கோள். விடியற்காலை 4 மணிக்கு எழுந்து விடுவிடுவென மலையேறி மூட்டை ஏலக்காயை நாலு நடை சுமந்து வந்து சேர்த்து கிடைக்கும் பணத்தில்தான் தன் கனவை நிறைவேற்ற வேண்டும். ஆசையைத்தூண்டி அருகில் வந்தவுடன் மறைந்துபோகும் பாலை கானல் நீர்போல ஒவ்வொரு தடவையும் அவரின் லட்சியம் நிறைவேறாமல் தள்ளிக்கொண்டே போகிறது. அது இறுதியாக ஈடேறியதா இல்லையா என்பதுதான் கதை. 

இதுமட்டும்தான் கதையா என்றால்... இல்லை. மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒவ்வொரு முகடும் ஆயிரக்கணக்கான கதைகளைத் தாங்கி நிற்பதைப்போல இந்தப் படமும் ஏராளமான கதைகளைப் புதைத்து வைத்திருக்கிறது. படத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் தேர்ந்த கதைசொல்லிகளாக இருக்கிறார்கள். வீம்பாக இளவட்டங்களுடன் போட்டிப் போட்டு மூட்டை தூக்கும் வனகாளியிடம் ஒரு பெரு மழைநாளில் மலையேறிய கதை இருக்கிறது. மூளை பிசகி மரங்களுக்கு ஊடாகப் புலம்பித் திரியும் கிறுக்குக் கிழவியிடம் யானைகள் பற்றிய யாருக்கும் தெரியாத ஒரு ரகசியமிருக்கிறது. தினமும் எஸ்டேட்டுக்கு சுமை ஏற்றிச் செல்லும் கிழவரின் பொக்கைவாய் பற்களுக்கிடையில் கழுதைக்கும் மலைப்பாதைக்கும் இடையேயான ஒரு காதல்கதை இருக்கிறது. இந்த மண்ணும் மலையும் மாந்தர்களும்தான் மேற்குத் தொடர்ச்சிமலையை மறக்க முடியாத அனுபவமாக்குகிறார்கள்.

ரெங்கசாமியாக நடித்திருக்கும் ஆண்டனிக்கு இந்தப் படம் பெருமைமிகு விசிட்டிங் கார்டு. கொஞ்ச நாள்களாக நிலவிவந்த யதார்த்த கிராமத்து ஹீரோவுக்கான வெற்றிடத்தை இயல்பாக நிரப்புகிறார். அவர் தவிர, படத்தில் முகம்காட்டும் அத்தனை பேரும் ஹீரோக்கள்தான். 'என்னா மாமா' என வெட்கத்தில் சிணுங்கும் காயத்ரி, 'இதே சும்மாவிடக்கூடாது சகாவே' என நெஞ்சை நிமிர்த்தும் கம்யூனிஸ்ட் சாக்கோ, 'என் புருஷன் பேரெல்லாம் வாயால சொல்ல மாட்டேன்' என அந்த வயதிலும் தயங்கும் பொன்னம்மா, 'இன்னிக்குத்தான்டா உனக்காக நீ மூட்டை தூக்குற' என நெகிழும் கங்காணி... இப்படி எக்கச்சக்கமான பேர் நகமும் சதையுமாக மலைப்புறத்து வாழ்வியலை நம் கண்முன் நிறுத்துகிறார்கள். டைட்டில் கார்டில் கோடங்கிபட்டி பொண்ணுத்தாயி, தேவாரம் சொர்ணம் என வாசிப்பதற்கே வித்தியாசமாக இருக்கிறது. அநேகமாக அதிக ஹீரோக்கள் நடித்த படம் இதுவாகத்தான் இருக்கும்.

தேனி ஈஸ்வர் குறிஞ்சி பூப்பதுபோலத்தான் படங்கள் செய்வார். அதிலும் குறிஞ்சிப் பரப்பென்றால் உடல், பொருள், ஆவி எல்லாவற்றையும் பனியில் கரையக் கொடுத்துவிடுவார்போல! ஆரம்பக் காட்சிகளுக்குப் பின் கதை நிஜத்தில் நம்மைச் சுற்றி நடப்பதுபோலவே இருக்கிறது. அவ்வளவு தத்ரூபம்!  சாக்கோவை பார்க்கத் தூரத்து மரத்திலிருந்து ஒருவர் கயிறுவழியே இறங்கி ஆளுயுர புதர்களுக்கு மத்தியில் நடந்து மேடேறும் அந்த ஒரு காட்சியில் அவ்வளவு அழுத்தம். படம் முழுக்க இப்படியான காட்சிகள் நிறைய இருக்கின்றன. 'பேரன்புகள்' தேனி ஈஸ்வர்!

கதையின் கனத்தை மேலும் மேலும் ஏற்றுவதில் வெற்றிகொள்கிறது இசைஞானியின் இசை. சிறுதெய்வமான சாத்தானின் கோயிலில் நம் நரம்புகளில் தொற்றிக்கொள்ளும் அவரின் விரல்வித்தை இறுதியாக முதுகு காட்டி அமர்ந்திருக்கும் ரெங்கசாமியிடமிருந்து விடைபெறும்போது பூதாகரமாக ஆட்கொள்கிறது. ஒளிப்பதிவுக்கும் இசைக்கும் தன்னாலான நியாயம் செய்திருக்கிறார் எடிட்டர் காசிவிஸ்வநாதன். இத்தனை பேரையும் ஒன்றிணைத்து ஒரு நல்ல கதையைத் தயாரித்தமைக்காகத் தயாரிப்பாளர் விஜய்சேதுபதிக்கு தேங்க் யூ!

பெயருக்கேற்றாற்போல கதைகளினூடே ஒருதலைமுறையின் அரசியல் பேசுகிறார் இயக்குநர் லெனின் பாரதி. முன்னேறத் துடிக்கும் ஒடுக்கப்பட்ட பூர்வகுடி ஒரு பெரும் போராட்டத்துக்குப் பின் தொடங்கிய இடத்திலேயே வந்து நிற்க, பிழைக்க வந்த லோகு சுயநல முதலாளியாக ஆதிக்கம் செலுத்தும் வர்க்க அரசியல் முகத்திலறைகிறது. சாலைகள்தான் காட்டை அழிக்கும் முதல் வழி என்பதே நிதர்சனம். காட்டை மட்டுமல்ல, அதன் மாந்தர்களையும் சாலைகள் என்ன செய்யும் என சாக்கோ வழியாகப் பேசியிருக்கிறார். தொழிற்சங்கங்களை அழிக்க வஞ்சகமாகத் திட்டம் போட்டுவிட்டு, 'இப்ப எந்தா செய்யும் சகாவே?' என நக்கலாக சிரிக்கும்  முதலாளித்துவத்தின் கோர முகமும் இந்தப் படத்தில் பல்லிளிக்கிறது.

இதைத்தாண்டி படத்தில் பாராட்ட ஒரு முக்கிய விஷயமிருக்கிறது. அது, எளியவர்களின் 'பேரன்பினாலான உலகம். வஞ்சனையில்லாமல் வாஞ்சையாக ஒருவருக்கொருவர் கைகொடுத்து தூக்கிவிடுவதும், மண்ணின் மணம் வீசும் நையாண்டியால் ஒருவரை ஒருவர் வாரிவிடுவதுமான அழகியல் நிச்சயம் இன்னொரு முறை நம்மை படம் பார்க்கவைக்கும்.

குறைகள் எனக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் தோன்றும் ஒரே விஷயம், ஆங்காங்கே தென்படும் செயற்கைத்தன்மை. ஒன்றிரண்டு கேரக்டர்கள் தவிர மற்றவற்றில் கேமராவுக்குப் பரிச்சயம் இல்லாதவர்கள் நடித்திருப்பதால் இந்த நாடகத்தன்மை என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. ’கமர்ஷியல் படங்களுக்கான கூறுகள் மிஸ்ஸாவது குறைதானே!’ எனச் சிலருக்குத் தோன்றலாம். ஆனால், இது நம்மிடையே உலாவும் மனிதர்களின் நிஜ வாழ்வியல். அதனால் மற்றுமொரு சினிமாவாக இதை எடைபோடாதிருத்தல் நலம்!

நாம் எல்லாருமே மேற்குத் தொடர்ச்சிமலைத் தொடரை ஒருமுறையாவது கடந்து வந்திருப்போம். குளுமையும் கொண்டாட்டமுமான கனவுப் பிரதேசமாகவே அதைப் பார்த்துப் போயிருப்போம். அடுத்த முறை அம்மலைத் தொடரைக் கடக்கும்போது கூர்ந்து கவனியுங்கள். ரத்தம் கக்கும் குரலில் வனகாளியின் இருமலும், 'எல்லாத்தையும் கொன்னுப்போட்ருவேன்' என்ற கிறுக்குக்கிழவியின் அலறலும் தூரத்து மரத்தில் சடசடத்துப் பறக்கும் ரெங்கசாமியின் வேட்டியும் உங்களுக்குத் தென்படக்கூடும். நிஜத்தில் அதுவும்தான் 'மேற்குத் தொடர்ச்சி மலை'!