```மேற்குத் தொடர்ச்சி மலை' ரிலீஸுக்குப் பிறகு, நிறைய கதைகள் என்னைத் தேடி வருது. போகிற இடமெல்லாம் என்கூட நின்னு செல்ஃபி எடுக்கிறாங்க. பலபேர் போன் பண்ணி வாழ்த்துகள் சொல்றாங்க. சந்தோஷமா இருக்கு. இதற்காக, என் மனைவிக்குத்தான் முதலில் நன்றி சொல்லணும். ஏன்னா, இந்தப் படத்துல வந்த ஈஸ்வரி கேரக்டர் மாதிரி, என் மனைவி நூறு ஈஸ்வரிக்குச் சமம். நான் ஜெயிப்பேன்னு என்மேல நிறைய நம்பிக்கை வெச்சிருந்தாங்க'' - கண்களில் கண்ணீர் திரளப் பேசுகிறார் 'மேற்கு தொடர்ச்சி மலை' படத்தின் நாயகன் ஆண்டனி.
''என் சொந்த ஊர் திண்டுக்கல். திருச்சியில் எம்.ஏ தமிழ் படிச்சு முடிச்சதும் சினிமாவுல நடிக்கணும்னு சென்னைக்கு வந்துட்டேன். இந்த ஊர்ல பொழைக்கிறதே பெரும்பாடா இருந்தது. கிடைச்ச வேலையையெல்லாம் செஞ்சேன். ஹோட்டலில் சர்வர் வேலை பார்த்தேன். இடைப்பட்ட சமயத்துல ஒவ்வொரு சினிமா கம்பெனியா வாய்ப்பு கேட்டு அலைஞ்சிக்கிட்டு இருந்தேன். 'வெண்ணிலா கபடிக்குழு' படத்துல ஒரு சின்ன ரோல் கிடைத்தது. இந்தப் படத்துல நானும், விஜய் சேதுபதி அண்ணாவும் ஒண்ணா சேர்ந்து நடிச்சிருப்போம். 'களவாணி' படத்திலேயும் சின்ன ரோல் பண்ணேன். சினிமாவில் சொல்லிக்கொள்ளும்படியான எந்த ரோலும் கிடைக்கலை. அப்படி அலைஞ்சு திரிஞ்சுக்கிட்டு இருக்கும்போது, இயக்குநர் லெனின் சாரைப் பார்த்து, 'மக்கள் மனசுல பதியிற மாதிரி உங்க படத்துல எனக்கொரு கேரக்டர் கொடுங்க அண்ணா'னு கேட்டேன். ரெண்டு நாள் கழிச்சு கூப்பிட்டார், 'நான் ஒரு படம் எடுக்கிறேன். விஜய் சேதுபதி தயாரிக்கிறார்'னு சொன்னார். எனக்கு ஏதாவது ஒரு நல்ல ரோல் இருக்குனு சொல்வாரானு எதிர்பார்த்துக்கிட்டு இருந்தேன்.
'படத்தோட கதாநாயகன் நீதான்'னு சொல்லி அதிர்ச்சி கொடுத்தார். லெனின் சார் சொன்ன வார்த்தைகளை என்னால நம்பவே முடியல. மகிழ்ச்சியில குதித்தேன். இந்தப் படத்தோட கதையில் முதலில் விஜய்சேதுபதி அண்ணா நடிக்கிறேன்னு சொன்னார். ஆனா, அவருடைய உடல்வாகு படத்தோட கதைக்கு செட் ஆகாதுனு இயக்குநர் மறுத்துட்டார். விஜய் சேதுபதி அண்ணாகிட்ட படத்தோட ஹீரோனு என் பெயரை டைரக்டர் சொன்னப்போ, 'நல்லா பண்ணுவான், அவனே நடிக்கட்டும்'னு சொல்லியிருக்கார். படம் பார்த்துட்டு, 'ஏழு வயது பையனுக்கு அப்பாவா நடிக்கிற கேரக்டர் லுக்குக்கு உன் முகம் செட் ஆகுமானு சந்தேகம் இருந்தது. படம் பார்த்த பிறகுதான் தெரியுது, இந்தக் கேரக்டருக்கு நீதான் கரெக்ட்!"னு சொன்னார் விஜய் சேதுபதி அண்ணா.
தேனியில் ஷூட்டிங். அங்கே இருந்த மலையைக் காட்டி இங்கேதான் படப்பிடிப்பு நடக்கப் போகுதுனு சொன்னாங்க. ரெண்டு வருஷம் அந்த ஊருலேயே தங்கி அங்கே நடக்கிற எல்லா விஷயத்தையும் கவனிச்சோம். முக்கியமா, இந்தப் படத்துல ஏலக்காய் தூக்கி சுமக்குற தொழிலாளியா வருவேன். எனக்கு மலையோட மக்களின் பேச்சு, நடை, வேலைனு எல்லாம் பக்காவா வரணும்னு இயக்குநர் லெனின் என்னை மலையேறி இறங்கிற ஏலக்காய் வேலையைப் பார்க்க சொல்லிட்டார். நானும், அங்க இருக்கிற மக்களோட சேர்ந்து ஏலக்காய் மூட்டையை ஒரு வருஷம் தூக்கிச் சுமந்து சம்பளம் வாங்கினேன். கிட்டதட்ட 5 வருஷமா இந்தப் படத்தோட வேலைகள் நடந்தன. இந்த இடைப்பட்ட காலத்தில் தயாரிப்பாளருடைய கம்பெனியிலிருந்து எனக்கு பத்தாயிரம் ரூபாய் மாத சம்பளம் கொடுத்தாங்க.
இந்தப் படத்தோட ஷூட்டிங் ஸ்பாட்டே எனக்கு விசித்திரமான அனுபவத்தைக் கொடுத்தது. ஏன்னா, டயலாக்ஸ் சீட்டை கையிலே வெச்சிக்கிட்டு டைரக்டர் சார் வேலை வாங்கமாட்டார். வாய்மொழியில் இதுதான் டயாலக்ஸ்னு சொல்லிருவார். அதை அப்படியே ஸ்பாட்டில் பேசுவோம். படத்துல பாக்கியம் அம்மா கேரக்டர் வரும். அவங்க உண்மையாவே மேற்குத் தொடர்ச்சி மலை மேலே கடையை வெச்சி பொழைப்பு நடத்திக்கிட்டு இருக்காங்க. அதை அப்படியே இயக்குநர் திரையில் காட்டினார்.
என் வாழ்க்கையில் ஒருமுறையாவது இளையராஜா சாரை நேரில் பார்க்கணும்னு ஆசைப்பட்டேன். அவருடைய இசையில் நாயகனா நடிச்சது எனக்கு பெரிய சந்தோஷத்தைக் கொடுத்தது. ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு ஒருமுறை இளையராஜா சார் நேரில் வந்தார். எங்க கூட சேர்ந்து கால்நடையா நடந்து வரேனு சொன்னார். ஆனா, அவரால ரொம்ப தூரம் மலை ஏற முடியாதுனு கட்டாயப்படுத்தி ஜீப்பில் கூப்பிட்டு வந்தோம். படக்குழுவில் இருந்த எல்லார் கூடவும் சேர்ந்து போட்டோ எடுத்துக்கிட்டார்.
'மேற்குத் தொடர்ச்சி மலை' படம் உருவாகி கிட்டதட்ட இரண்டு வருடங்கள் கழித்துதான் படம் ரிலீஸ் ஆச்சு. சொந்தகாரங்க, நண்பர்கள் படம் எப்போ ரிலீஸ்னு கேட்கும் போதெல்லாம் கொஞ்சம் சங்கடமா இருக்கும். இன்னைக்கு படம் ரிலீஸ் ஆகி எல்லாருடைய கேள்விக்கும் பதில் சொல்லிருச்சு. இதைவிட பெரிய சந்தோஷம் என்ன இருக்கு''னு மகிழ்ச்சியாக முடிக்கிறார் 'மேற்குத் தொடர்ச்சி மலை' ரங்கசாமி.