
BIGG BOSS கற்றுத்தரும் மேலாண்மைப் பாடங்கள்!
ஆங்கிலம், ஹிந்தியில் ஹிட் அடித்த பிக் பாஸ் நிகழ்ச்சி, தமிழிலும் ஹிட் அடித்து நிறைவு பெற்றுள்ளது. மக்களைப் பெரிதும் கவர்ந்த இந்த நிகழ்ச்சியானது மேலாண்மை தொடர்பான பல பாடங்களை நமக்குச் சொல்லித் தருகிறது. அந்தப் பாடங்கள் இதோ...

சாய்ஸ் இல்லாத நிலை
இந்த சீரியலுக்கான முன்னோட்டம் வந்தபோது, ‘இதில் கமல்ஹாசனா, உச்சத்தில் இருக்கும் அவருக்கு ஏன் இந்த வேண்டாத வேலை?’ என்றுதான் பலரும் நினைத்தார்கள். ஆனால், நூறு நாள்களில் ‘வாவ்’ சொல்ல வைத்ததோடு, ‘இந்த வேலையைச் செய்ய இவர்தான் சரி’ என எல்லோரும் சொல்லுமளவுக்கு கமல் தனது பிராண்டை நிரூபித்திருக்கிறார்.
நம்மைத் தேடி வரும் வாய்ப்புகளை மிகச் சரியாகப் பயன்படுத்திக்கொள்வதுடன், அந்த வேலையைச் சிறப்பாகச் செய்து, சாய்ஸே இல்லாத நிலையை உருவாக்கிவிட வேண்டும்.
அதுமட்டுமல்ல, தனிமனிதன் என்கிற அளவில் தனது ஆதங்கத்தைச் சமூக இணையதளங்களில் அடிக்கடி வெளிப்படுத்திய கமல், தனக்குக் கிடைத்த பிக் பாஸ் மேடையைப் பயன்படுத்தி, தன்னால் ஓர் அரசியல் தலைவராகவும் விளங்க முடியும் என்கிற இமேஜை உருவாக்கினார்.

நமக்குக் கிடைக்கும் எந்த வாய்ப்பையும் சரியாக, நமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள நாம் தவறக் கூடாது என்பதே பிக் பாஸ் கமலிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய மேனேஜ்மென்ட் பாடம்.
தனித்தன்மையை இழந்துவிடாதீர்கள்
‘நீங்கள் எந்த நிலையிலும் உங்களுக்கான தனித் தன்மையுடன் இருக்க வேண்டும். எந்தச் சூழ்நிலையிலும் யாருக்காகவும் நீங்கள் உங்களை சமரசம் செய்துகொள்ள வேண்டியதில்லை. மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்றெல்லாம் யோசிக்காமல், உங்களுக்குச் சரியென்று பட்டதைச் செய்யுங்கள்’ - இவைதான் ஓவியா நமக்குக் கற்றுத் தரும் பாடங்கள்.
இப்படியெல்லாம் இருந்தால் கஷ்டங்கள் வருமே என்று நீங்கள் கேட்கலாம். வரத்தான் செய்யும். இந்தக் கஷ்டங்களே நமக்கு ஒரு ‘பிராண்ட் இமேஜை’ப் பெற்றுத் தரும். தனது உணர்வுகளை மறைக்காமல் வெளிக்காட்டிய ஓவியாவைப் பலரும் பலவிதமாக விமர்சித்தார்கள். தொடர்ந்து தனித்தன்மையுடன் இருக்கமுடியாத நிலையில், பிக் பாஸின் வீட்டை விட்டே வெளியேற வேண்டிய கட்டாயம்கூட அவருக்கு ஏற்பட்டது. அதன்பிறகுதான், அவர் மீது எல்லோருக்கும் அனுதாபம் உருவாகி, அவரை ஃபாலோ செய்ய ஆரம்பித்தனர்.
பெரிய அளவில் சினிமா வாய்ப்புகள் இல்லாத நிலையில் பிக் பாஸின் வீட்டுக்கு வந்த ஓவியா, மீண்டும் பிரபலமடையக் காரணம், அவரின் நேர்மையான அணுகுமுறையே. இது அவர் கற்றுத் தரும் பாடம்.
தவறைத் திருத்திக்கொண்டு, முயற்சி செய்யுங்கள்
ஆரம்பத்தில் பரிச்சயமில்லாத நபராக அறிமுகமாகி, தனக்குக் கொடுத்த வேலைகளைச் சரியாகச் செய்து, ஒரு சிக்கலான சர்ச்சையில் சிக்கி வெளியேறும் நிலைக்குத் தள்ளப்பட்ட ஒரு நபர், தன் தவறை ஒப்புக்கொண்டு, மீண்டும் முயற்சி செய்வதன் மூலம் வெற்றி பெற முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார் ஆரவ்.

நாம் எந்தத் தவறும் செய்யாத அளவுக்கு மகான்கள் அல்ல. என்றாலும், தவறு செய்தபின் அதை ஒப்புக்கொண்டு, நம்மைத் திருத்திக் கொண்டு மீண்டும் முயற்சிசெய்தால், நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்பதை பிக் பாஸ் ஆரவ் மூலம் நாம் கற்றுக்கொள்ளலாம்.
உழைப்பு + தலைமைப் பண்பு
உங்களுக்குக் கொடுத்த வேலையைச் சரியாகச் செய்வது அவசியமான ஒன்றுதான். ஆனால், அதோடு நீங்கள் ஒரு டீம் ப்ளேயராகவும் இருக்க வேண்டும். இந்த இக்கட்டான சூழலில், இருக்கும் வளங்களை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ள வேண்டும். இந்த விஷயங்கள் இல்லாவிட்டால் 100% உங்கள் செயல்பாடு சரியாக இருந்தாலும், உங்களால் முதலிடத்தைப் பிடிக்க முடியாது.
கணேஷ் கடின உழைப்பாளி என்றாலும் தலைமைப் பண்பில் ஏற்பட்ட சில சிறு குறைகளே அவரைப் பின்தங்க வைத்தது. நீங்கள் கடின உழைப்பாளியாக இருந்தால், கூடவே கொஞ்சம் தலைமைப் பண்பையும் வளர்த்துக்கொள்ளுங்கள். அது வெற்றிக்கு உங்களை முன்னிலைப்படுத்தும்.
பன்முகத்தன்மை
‘எந்தப் பொறுப்பைத் தந்தாலும், அதை சிறப்பாகச் செய்து முடிக்க சிலர் மட்டுமே எப்போதும் தயாராக இருப்பார்கள். அவர்கள் தன்னைச் சுற்றியுள்ளவர்களுடன் நன்கு நட்பு பாராட்டுவார்கள். அவ்வப்போது இயற்கையாக எழும் சலிப்பை, சில நிமிடங்களில் கடந்துவரும் பக்குவம் அவர்களுக்கு இருக்கும். இவர்கள் வெற்றி மகுடம் சூட இயலாவிட்டாலும், மக்கள் மனதில் நிச்சயம் இடம்பிடிக்க முடியும்’ என்பதற்கு நல்லதொரு எடுத்துக்காட்டு, சிநேகன். பிக் பாஸில் ‘எலிமினேஷனு’க்காக இவர் பெயர் பரிந்துரை செய்யப்பட்டபோதும், மக்கள் ஆதரவு தந்து அவரை நிராகரித்துவிடவில்லை. மக்கள் நினைத்ததால்தான், அவருக்கு ஆதரவாக வாக்களித்து, அவரைக் காப்பாற்றினார்கள். இதற்குக் காரணம், அவரிடமிருந்த கடின உழைப்பும், பன்முகத்தன்மையும்தான்!

சரியான முடிவெடுத்தல்
பிக்பாஸ் போட்டியில் முதல் ஆளாக வெளியேறியவர் ஸ்ரீதான். காரணம், இந்த இடம் தனக்குச் சரிவராது என்று சட்டென அவர் தெரிந்துகொண்டதே. தனக்கு இந்த இடம் சரிப்பட்டு வராது என்று தெரிந்தும், கொஞ்சம் பொறுத்துத்தான் போவோமே எனத் தாக்கு பிடித்த பரணி, சுவரேறி வெளியேற முயற்சி செய்தார். ஒரு சூழ்நிலை உங்களுக்குச் சரிவராது என்று தெரிந்தால், வெளியேறத் தயங்கக் கூடாது. அப்படி செய்யத்தவறினால், பிற்பாடு அதுவே பெரிய தலைவலியாக மாறிவிடும் என்பதே இவர்கள் இருவரும் கற்றுத் தரும் பாடம்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் தவிர, அந்த நிகழ்ச்சியே சில மேலாண்மைப் பாடங்களை நமக்குக் கற்றுத் தருகிறமாதிரி இருந்தது. தலைமைக் குணம் இருப்பவர்களே ஜெயிப்பதற்கு வாய்ப்புண்டு, நமக்குத் தரப்படும் வேலை (Task) எதுவாக இருந்தாலும் அதில் முழுமனதுடன் ஈடுபட வேண்டும், எதைப் பற்றியும் அவசரப்பட்டு ஒரு முடிவுக்கு வருவதைவிட, கொஞ்சம் பொறுமை காப்பதன் மூலம் சரியானதொரு முடிவை எப்படி எடுக்க முடியும், எல்லாவற்றி லும் பாசிட்டிவ், நெகட்டிவ் என இரு பக்கங்களைப் பார்க்க வேண்டியதன் அவசியம்... என இந்நிகழ்ச்சி நமக்குக் கற்றுத் தரும் பாடங்கள் பல!
- ச.ஸ்ரீராம்