தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

அடிமை முதல் ஆணவம் பிடித்தவள் வரை!

அடிமை முதல் ஆணவம் பிடித்தவள் வரை!
பிரீமியம் ஸ்டோரி
News
அடிமை முதல் ஆணவம் பிடித்தவள் வரை!

தமிழ் சினிமாவில் பெண்கள்சுகுணா திவாகர் - படங்கள் உதவி: ஞானம்

பொதுவாக ஆண்களை வணங்குபவர்களாகவும், அவர்களுக்குக் கட்டுப்படுபவர்களாகவும் பெண்களைச் சித்திரித்த தமிழ் சினிமாவில், `தேசத்துரோகி' என்பதற்காகத் தன் கணவனைக் கொலை செய்த `அந்த நாள்' மனைவி ஒரு புதுமையான பாத்திரம்தான்!

அடிமை முதல் ஆணவம் பிடித்தவள் வரை!

ந்த ஆண்டு, தமிழ் சினிமாவின் நூற்றாண்டுத் தொடக்க விழா. இதுவரையி லான தமிழ் சினிமாக்களில் பெண்கள் எப்படி சித்திரிக்கப் பட்டிருக்கிறார்கள், பெண்களுக்கான இடம் என்ன, அவர்களது உணர்வு கள் எப்படி பதியப்பட்டிருக் கின்றன என்று ஆராய்வது ஒருவகையில் நூற்றாண்டு காலத் தமிழ் சினிமா வரலாற்றை ஆராய்வதும் தான்.

தொடக்க காலத் தமிழ் சினிமாக்கள் வைதீகப் புராணக் கதைகளை அடிப் படையாகக் கொண்டவை யாகவே இருந்தன. அவற்றில் இடம்பெற்ற மாந்தர்கள் மேட்டுக்குடி மனிதர் களாகவும், பேசப்பட்ட மொழி தமிழைச் சிதைத்த மேட்டுக்குடி மொழியாகவுமே இருந்தது. பெண்களைக் காலங்காலமாக அடிமைகளாகச் சித்திரித்த வைதீகக் கதைக்களங்களை அடிப்படையாகக் கொண்டிருந்ததால், அந்த சினிமாக்களில் பெண்கள் அடிமைகளாகவே சித்திரிக்கப் பட்டனர் என்பதைத் தனியாகச் சொல்ல வேண்டியதில்லை.

திராவிட இயக்கத்தினரின் வருகைக்குப் பிறகே, தமிழ் சினிமாவின் முகம் மாறத் தொடங்கியது. திராவிட இயக்கத்தைச் சேர்ந்த அண்ணா, மு.கருணாநிதி, எம்.ஆர்.ராதா, என்.எஸ்.கிருஷ்ணன், கே.ஆர்.ராமசாமி, திருவாரூர் தங்கராசு, சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர் எனப் பலரும் சினிமாவிலும் நுழைந்து அரசியல் கருத்து களைப் பரப்பத் தொடங்கினர். சினிமா என்ற சக்திவாய்ந்த ஊடகத்தைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்ட முதல் இயக்கம் திராவிட இயக்கமே. சாதி எதிர்ப்பு, சமத்துவம், தமிழ்மொழிப்பற்று, வடவர் எதிர்ப்பு, மதவாத எதிர்ப்பு, வைதீக எதிர்ப்பு, பார்ப்பனிய எதிர்ப்பு, நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு, தொழிலாளிகள் உரிமை எனப் பெரியாரின் கருத்துகளைப் பிரதிபலித்தார்கள் என்றாலும், பெரியாரின் பெண்ணியக் கருத்துகளை திராவிட இயக்க சினிமாக்கள் பிரதிபலிக்கவில்லை என்பதே உண்மை.

மொழி, தேசியம், இலக்கியம், சாதி, குடும்பம், கற்பு, குழந்தைப்பேறு என எல்லாவற்றிலும் இருந்த ஆணாதிக்கத்தை பெரியார் கடுமையாக விமர்சித்தார். திராவிட இயக்க சினிமாக்களில் பெண்கள் சித்திரிக்கப்பட்டவிதமோ இதற்கு நேர்மாறாக இருந்தது. வைதீகவாதிகள் ராமாயணத்தையும் மகாபாரதத்தையும் முன்வைத்தால், திராவிட இயக்கத்தார் சிலப்பதிகாரத்தையும் கண்ணகியையும் திருக்குறளையும் சங்க இலக்கியத்தையும் புறநானூற்றுத் தாயையும் முன்வைத்தனர். பெண்களைப் பொறுத்த வரையிலோ, இரண்டுமே ஒரே மாதிரியான சித்திரிப்புகளைக் கொண்டவையாக இருந்தன. பத்தாயிரம் தடவைக்குமேல் நாடகமாக அரங்கேற்றப்பட்டு, திரைப்படமாக்கப்பட்ட `ரத்தக்கண்ணீர்’, பல வகைகளில் முற்போக்குக் கருத்துகளைக் கொண்டிருந்தது என்றாலும், அதன் வில்லியாக, திருமண உறவுக்கு வெளியே இருந்த ஒரு பெண்ணே சித்திரிக்கப்பட்டார். `காந்தா’ என்ற அந்தக் கதாபாத்திரமே எல்லா தீமைகளின் உருவமாக இருந்தது.

அடிமை முதல் ஆணவம் பிடித்தவள் வரை!

எம்.ஆர்.ராதா ஏற்றிருந்த `மோகன்’ கதாபாத்திரம் மூடநம்பிக்கைகளைக் கேள்வி கேட்கும் நவீன கதாபாத்திரமாக இருந்த போதும், அதன் ஒழுக்கக் குறைவு என்பது அந்தக் கதாபாத்திரத்தின் நம்பகத்தன்மை யைக் குலைத்தது. மோகனின் மனைவி போன்ற கட்டுப்பெட்டித்தனமான பெண் ணையே `நல்ல பெண்’ணாக `ரத்தக்கண்ணீர்’ முன்வைத்தது. `ரத்தக்கண்ணீர்’ காந்தாவும் கருணாநிதியின் `மனோகரா’ வசந்த சேனையும் ஒரே மாதிரியான பிம்பங்கள் (இரண்டு படங்களும் ஒரே ஆண்டில் வெளியானவை). திருமணம், குடும்பம் என்னும் அமைப்புக்கு வெளியே இருந்த பெண்களை வில்லிகளாகவும், கணவனைக் காப்பாற்றப் போராடும் மனைவியும் பாசக்காரத் தாயும் லட்சியப் பெண்களாகவும் சித்திரிக்கப்பட்டனர். பல்வேறு சிக்கல்களில் சிக்கித்தவிக்கும் பெண்களைக் காப்பாற்று பவர்களாக ஆண்கள் சித்திரிக்கப்பட்டனர். `பராசக்தி’ கல்யாணியும் குணசேகரனும் உதாரணங்கள். அதேநேரத்தில் தன்னைக் கொலை செய்யத் திட்டமிட்ட கணவனை ஏமாற்றி, `வாராய் நீ வாராய்...’ எனப் பாட்டுப் பாடி மலையுச்சியிலிருந்து தள்ளி விட்ட `குண்டலகேசி’ இலக்கியப் பாத் திரத்தை `மந்திரிகுமாரி’யிலும், படித்த, சுய சிந்தனையுள்ள பெண்ணைப் `பராசக்தி’ யிலும் கருணாநிதி உருவாக்கியிருந்தார் என்பதும் உண்மையே.

எம்.ஜி.ஆர் தனிப்பெரும் நாயகனாக உருவெடுத்தபோது, ஆணாதிக்கச் சித்திரிப்பு உச்சம் பெற்றது. `இப்படித்தான் இருக்க வேணும் பொம்பள... இங்கிலீசு படிச்சாலும் இன்பத்தமிழ் நாட்டிலே’, `பொம்பளை சிரிச்சா... போச்சு’ என்று ஆணாதிக்கக் கருத்துகளை அள்ளித்தெளித்தார்
எம்.ஜி.ஆர். `மாட்டுக்கார வேலன்’ போன்ற எம்.ஜி.ஆர் படங்களிலும் `பட்டிக்காடா பட்டணமா’ போன்ற சிவாஜி கணேசன் படங்களிலும் படித்த பெண்கள் திமிரானவர் களாகவும் கலாசார எதிரிகளாகவும் சித்திரிக்கப்பட்டனர். `லேடீஸ் கிளப்’ என்பது திமிர்கொண்ட, கணவனை மதிக்காத பெண்கள் கூடிப்பேசும் இடமாகவும், அவர்களது அடையாளமாக நவநாகரிக உடைகளும் ஹேண்டுபேக்கும் சித்திரிக்கப் பட்டன.

இப்படிப்பட்ட திமிர் பிடித்த, படித்த பெண்களை அடக்கி, அவர்களுக்குக் `கலாசாரத்தின் பெருமை’யை உணர்த்தும் `பெரும்பொறுப்பு’ எம்.ஜி.ஆருக்கும் சிவாஜிக்கும் இருந்தது. பின்னாளில் `தம்பிக்கு எந்த ஊரு’ தொடங்கி `படையப்பா’ வரை இந்தக் ‘கடமை’யைச் செவ்வனே ரஜினிகாந்த் நிறைவேற்றினார். எம்.ஜி.ஆரைப் போலவே `பெண்களில் எத்தனை வகையுண்டு’, `பெண்கள் எப்படி இருக்க வேண்டும்’ என்பது மாதிரியான வரையறைகளையும் அவர் போதித்தார். `சகலகலா வல்லவன்’, `சிங்காரவேலன்’ போன்ற படங்களில் திமிர் பிடித்த, படித்த பெண்களை அடக்கும் `கடமை’யை கமல்ஹாசன் செய்தாலும், அதை அவர் நீண்டகாலத்துக்குத் தொடரவில்லை. ஆனால், வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு நாயகர்கள், `திமிர் பிடித்த பெண்ணை அடக்குவது’ என்ற `கடமை’யைத் தொடரவே செய்தனர். படித்த, நாகரிக உடைகள் அணிந்த, சுயச்சார்புள்ள, தானாகவே முடிவெடுக்கும் பெண்கள் எப்போதுமே தமிழ் சினிமாக்களில் இடையூறாகவே பார்க்கப்பட்டனர். தாய்ப்பாசம், காதல், தந்தைப்பாசம், தங்கைப்பாசம், குடும்ப உறவின் மேன்மை, தேசபக்தி, கலாசார விழுமியங்கள் எனப் பல்வேறு அடிப்படைகளை முன்வைத்து எடுக்கப்பட்ட பெரும்பாலான படங்களிலும் ஆண்களே செயல்படுபவர்களாகவும் பெண்கள் ஆண்களைச் சார்ந்திருப்பவர் களாகவுமே சித்திரிக்கப்பட்டார்கள். இதற்குச் சீர்திருத்த, முற்போக்கு, தமிழ்ப்பற்றுப் படங்களும்கூட விதிவிலக்கல்ல.

நீண்டகாலம் வரை வில்லனிடம் சிக்கிக் கொண்ட நாயகிகளும் நாயகனின் தங்கை களும் ஓர் ஆண் வந்து காப்பாற்றுவதற்காகவே காத்திருந்தனர். தமிழ் சினிமா டூயட் பாடல்களைக் கவனித்தாலும் நமக்கு ஓர் உண்மை விளங்கும். பெரும்பாலான டூயட் பாடல்களில் நாயகன், நாயகியைப் பாலுறவுக்கு அழைப்பான். `எல்லாம் திருமணத்துக்கு அப்புறம்தான்’ என்று சிணுங்குவாள் நாயகி. எப்படியோ, திருமணம் என்னும் புனித ஏற்பாட்டையும் குடும்பம் என்னும் மகத்தான அமைப்பையும் சீர்குலைக்கத் துடிக்கும் ஆண்களை மட்டுப்படுத்தி, புனிதங்களை மீட்டெடுக்கும் `பெரும் பொறுப்பு’ பெண்களுக்குத்தான் இருந்தது. நமது நூற்றாண்டு காலத் தமிழ் சினிமா வரலாற்றில் பெரும்பாலான சினிமாக்களில் பெண்களின் சித்திரிப்பு என்பது இப்படியாகத்தான் அமைந்தது.

அடிமை முதல் ஆணவம் பிடித்தவள் வரை!

பாலசந்தர், பாரதிராஜா போன்ற இயக்குநர்கள் பாரதியாரை ஆதர்சமாகக் கொண்டு சில படங்களை எடுத்தார்கள். `புதுமைப்பெண்’, `மனதில் உறுதி வேண்டும்’ என்று படங்களின் தலைப்பும் பாரதியின் அடையாளங்களைத் தாங்கியிருந்தன. சாதி, மதம், குடும்பம், தேசியம் போன்றவற்றைப் பெண்ணிய நோக்கில் கேள்விக்குட்படுத்திய பெரியாரை தங்கள் `பெண்ணிய’ப் படங்களில் தவிர்த்த இருவரும் மதம், பழைமைவாதப் பண்பாடு ஆகிய வரம்புகளுக்குள் பெண்களின் உரிமைகளைப் பேசிய பாரதியாரைத் தங்கள் கருத்தியல் முன்னோடியாக முன்வைத்தனர். அந்தப் படங்களும்கூட இதே சிக்கல்களுடன் மதம், குடும்பம் போன்ற பழைமைவாத அமைப்பு களைக் காப்பாற்றுவதாகவே முடிந்தது. பாலசந்தரின் `சிந்து’வும் (சிந்து பைரவி) `கல்கி’யும் (கல்கி) ஆண்களுக்குக் குழந்தை பெற்றுக்கொடுத்து `புதுவிதமான புரட்சி’யை நிகழ்த்தினர். ஒப்பீட்டளவில் இந்த முதிர்ச்சியற்ற பெண்ணியப் படங்களைவிட பாரதிராஜாவின் `கருத்தம்மா’ முக்கியமான பெண்சினிமா எனலாம். பாலசந்தரின் படங்கள் உயர்சாதி, மேட்டுக்குடி மற்றும் நடுத்தரவர்க்க மதிப்பீடுகளையே பிரதிபலித்துக்கொண்டிருந்தபோது, `கருத்தம்மா’, பெண்சிசுக் கொலை என்ற அசலான பிரச்னையை எடுத்து, கிராமத்துப் பெண்ணியப் பார்வையில் பேசியது. பாலசந்தரின் மற்ற படங்களோடு ஒப்பிடும்போது அவரது `தண்ணீர் தண்ணீர்’ ஓரளவு இயல்போடு பெண்ணை மையப் படுத்திய சினிமா என்று சொல்லலாம். ருத்ரய்யாவின் `அவள் அப்படித்தான்’ படமே இன்றளவும் முக்கியமான பெண்ணிய சினிமாவாகப் பலராலும் நினைவுகூரப் படுகிறது. பழைமைவாதச் சிந்தனைகளை மட்டுமல்லாது பாசாங்கான நவீன சிந்தனை களையும் அது கேள்விக்குட்படுத்தியது. பாலு மகேந்திராவின் படங்கள் கலையம்சத்தில் முக்கியமான நகர்வு என்றாலும், ஆண்களின் பிரச்னைகளையே பேசியவை அவரது சினிமாக்கள். `மறுபடியும்’ படம் மட்டுமே `தனித்து வாழும் பெண்’ என்ற கருத்தாக்கத்தை முன்வைத்த, பாலுமகேந்திராவின் ஒரே சினிமா என்றாலும், முக்கியமான தமிழ் சினிமா.

சாதிப்பெயர்களை டைட்டிலாகக் கொண்டு சாதிப் பெருமிதங்களை முன்வைத்து டஜன் கணக்கில் சினிமாக்கள் வந்த காலம் தமிழ் சினிமாவின் இருண்ட காலம். சாதியமும் ஆணாதிக்கமும் எப்போதும் நேர்விகிதத் தொடர்புடையவை என்பதை நிரூபிப்பதைப்போல இந்தச்  சாதிய சினிமாக்களில் பெண்கள் அடிமை களாகவே சித்திரிக்கப்பட்டனர்.பெரும்பான்மை மதவாத சினிமாக்கள், இட ஒதுக்கீடு என்னும் சமூகநீதிக் கொள்கைக்கு எதிராக எடுக்கப்பட்ட சினிமாக்கள், சிறுபான்மையினரைத் தீவிரவாதிகளாகச் சித்திரித்த சினிமாக்கள், என்கவுன்ட்டர் சினிமாக்கள் என எல்லா பிற்போக்கு சினிமாக்களும் அடிப்படையில் ஆணாதிக்க சினிமாக்களாகவே இருந்தன.

கடந்த பத்தாண்டுகளில் தமிழ் சினிமாவின் நிறமும் முகமும் மாறியிருக்கின்றன. புதிய பணிவாய்ப்புகள், பொருளாதார உறவுகளில் ஏற்பட்ட மாற்றங்கள், பெண்கள் அதிகமும் படிக்கவும் வேலைக்குச் செல்லவும் ஏற்பட்ட நிலை, மேற்கத்தியக் கலாசாரம் நமது அன்றாட வாழ்க்கையில் ஏற்படுத்திய தாக்கங்கள், காட்சி ஊடகங்களின் பெருக்கம் எனப் பல்வேறு விஷயங்கள் இன்றைய தமிழ் சினிமாக்களில் பிரதிபலிக்கத் தொடங்கி யிருக்கின்றன. கட்டுப்பெட்டித்தனமாகப் பெண்களைக் காட்டுவது என்பதுபோய், பெண்கள் ஓரளவுக்குச்  சுதந்திரமுள்ளவர் களாகவும் சுயச்சார்புள்ளவர்களாகவும் காட்டப்படுகின்றனர். பெண்கள் ஆண்களை அழைக்கும் முறை, பழகும் முறை, குடிப்பது, சிகரெட் குடிப்பது, ஏ ஜோக் அடிப்பது, பாலியல்ரீதியிலான விஷயங்களைப் பகிர்ந்துகொள்வது எனப் பெண்கள் குறித்த சித்திரிப்புகள் ரொம்பவே மாறியிருக்கின்றன. தாலி சென்டிமென்ட், தங்கச்சி சென்டி மென்ட் போன்ற அபத்தங்களிலிருந்து தமிழ் சினிமா தப்பியிருக்கிறது.

அடிமை முதல் ஆணவம் பிடித்தவள் வரை!

`இறைவி’, `தரமணி’ போன்ற சினிமாக்கள் ஆண்களை மையப்படுத்திய, ஆண்களின் கதைகளைப் பேசும் சினிமாக்களாக இருந்தாலும் பெண்களின் பிரச்னைகளைக் கவனத்தில் எடுத்த சினிமாக்களாகவும் இருந்தன.

சாதி ஒழிப்பையும் ஆணாதிக்க எதிர்ப்பையும் இணைத்துக் கருத்தியல் தெளிவோடு வந்த படம் `மகளிர் மட்டும்’. ஆண்களே நாயகர்களாகத் திரையை ஆக்கிரமித்த தமிழ் சினிமாவில், ஒரு பெண்ணை மக்கள் நாயகியாக முன்னிறுத்திய `அறம்’ படத்தையும் கணக்கிலெடுக்க வேண்டும். மாற்றங்கள் வரவேற்கத்தக்கவை என்றாலும், செல்ல வேண்டிய தூரம் அதிகம். குறிப்பாக, சினிமாக்களில் பெண்களுக்கான வெளி உருவாகியிருக்கும் அதேநேரத்தில் பெண் வெறுப்புப் பாடல்களும் பெண் வெறுப்பு வசனங்களும் கணிசமான வரவேற்பு பெறுவது குறித்தும் சிந்திக்க வேண்டும். பெரும்பாலும் குடித்துவிட்டுக் குத்தாட்டம் போடும் இத்தகைய பாடல்களும் இளைஞர்களைக் குறிவைத்து நாயகர்கள் பேசும் வசனங்களும் பெண்களைக் காதலித்து ஏமாற்றுபவர்களாகவும் ஆண்களை அப்பாவிகளாகவும் சித்திரிக்கின்றன. வீட்டுச் சிறையைத் தாண்டி வெளியே வந்து படிக்கத் தொடங்கும், பணிபுரியத் தொடங்கும், தனக்கான துணையைத் தானே தேர்ந்தெடுக்கத் தொடங்கும் பெண்களைக் கண்டு அஞ்சும் ஆண்களின் மனநிலைதான் இது. ஒருவகையில் படித்த பெண்களைத் திமிரானவர்களாகச் சித்திரித்த பழைய சினிமாவின் இன்றைய வடிவம் இது.

ஆணாதிக்கம் என்பது வெறுமனே திரையில் மட்டும் விரிவதல்ல; திரைக்கு வெளியிலும் இயங்குகிறது. நூற்றாண்டு காணும் தமிழ் சினிமாவில் நடிப்பைத் தாண்டி பல துறைகளில் பெண்களின் பங்கு மிகமிகக் குறைவு. கட்டட வேலை, விவசாயக் கூலி வேலை போன்ற உடலுழைப்பு சார்ந்த பணிகளில் ஆணுக்கு ஒரு கூலி, பெண்ணுக்கு ஒரு கூலி என்ற நிலையே இருந்தது; இருக்கிறது. கார்ப்பரேட் நிறுவனங்களில் இந்த நிலை மாறி, இருவருக்கும் சமமான சம்பளம் வழங்கப்படுகிறது. ஆனாலும், நவீன வளர்ச்சியின் உச்சமாக விளங்கும் தமிழ் சினிமாவில், இன்னும் ஹீரோக்களின் சம்பளத்தைவிட ஹீரோயின்கள் வாங்கும் சம்பளம் மிகமிகக் குறைவு என்பதிலிருந்தே ஆணாதிக்கத்தின் செல்வாக்கைப் புரிந்து கொள்ளலாம்.