தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

``என்னை எனக்கு ரொம்பவே பிடிக்கும்!'' - வித்யா பாலன்

``என்னை எனக்கு ரொம்பவே பிடிக்கும்!'' - வித்யா பாலன்
பிரீமியம் ஸ்டோரி
News
``என்னை எனக்கு ரொம்பவே பிடிக்கும்!'' - வித்யா பாலன்

வித்தியாசம்ஆர்.வைதேகி - படம் : ப.சரவணகுமார்

ங்கிலத்தில் gorgeous என்றொரு வார்த்தை உண்டு. அழகு, ஈர்ப்பு, வசீகரம், பகட்டு என அதற்குப் பல அர்த்தங்கள். இந்த அர்த்தங்களையெல்லாம் ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமானால் ‘வித்யா பாலன்’. ‘சில்க் மார்க் எக்ஸ்போ’வில் கலந்துகொள்ள சென்னை வந்திருந்த பாலிவுட்டின் கார்ஜியஸ் லேடியுடன் ஒரு ஸ்வீட் சாட்...

சில்க்குக்கும் வித்யாவுக்கும் ஜென்மத் தொடர்பு இருக்கும்போல... சேலையில் தொடங்கி, சினிமா வரை வித்யாவுக்குப் பட்டென்றால் அவ்வளவு பிரியமா?

‘`பட்டுனு சொல்றதைவிடவும் புடவைன்னா அவ்வளவு பிடிக்கும்னு சொல்லணும். எங்கம்மா காட்டன் சேலைதான் உடுத்துவாங்க. ஸ்பெஷல் தினங்களுக்காக அவங்ககிட்ட பிரமாதமான காஞ்சிபுரம் பட்டுச்சேலை கலெக் ஷன்ஸ் இருந்தது. அம்மா மட்டுமல்ல... அத்தை, பெரியம்மானு பலரையும் அழகழகான பட்டுப்புடவைகள்ல பார்த்திருக்கேன். அந்தப் புடவைகளோட கலரும் டெம்பிள் பார்டரும்... அடடா, அவ்வளவு அழகு! என் லேட்டஸ்ட் ரிலீஸ் ‘துமாரி சுலு’ படத்திலும் எனக்கு முழுக்க முழுக்கச் சேலைகள்தான். அந்த கலர்ஸும் ஃப்ளோரல் டிசைன்ஸும் அவ்வளவு அழகு! மும்பை வெயில்ல ஷூட் பண்ணினபோது அந்தச் சேலைகள்ல செம கூலா ஃபீல் பண்ணினேன்...’’ - கூல் வித்யாவின் பேச்சு ஜில் சென்னை பக்கம் திரும்புகிறது.

‘`என் அத்தை  (அப்பாவின் தங்கை) சென்னையில் இருந்தாங்க. அவங்களைப் பார்க்க சென்னை வரும் போதெல்லாம் மெரினா பீச்சை மிஸ் பண்ணினதே இல்லை. மாடலா, டி.வி ஆங்க்கரா ஆன பிறகு வேலைக்காக அடிக்கடி சென்னை வந்திருக்கேன். ஒவ்வொருமுறை சென்னைக்கு வரும்போதும் அவ்வளவு பெருமையா ஃபீல் பண்ணியிருக்கேன். அம்மாவுக்குப் பட்டுப் புடவையும் மைசூர்பாவும் வாங்காம மும்பை போனதே இல்லை...’’ - மைசூர்பாவை விடவும் இனிப்பான நினைவுகளை அசைபோடுகிறார் வித்யா.

``என்னை எனக்கு ரொம்பவே பிடிக்கும்!'' - வித்யா பாலன்

‘சில்க்’ பிடித்ததால்தான் ‘சில்க்’ கேரக்டரும் பிடித்ததோ?

‘`  `டர்ட்டி பிக்சர்’ படத்துல சில்க் கேரக்டர்ல நடிச்சது ரொம்ப அருமையான எக்ஸ்பீரியன்ஸ். நான் அவங்களை ‘மூன்றாம் பிறை’ படத்துல மட்டும்தான் பார்த்திருக்கேன். ‘டர்ட்டி பிக்சர்’ல நடிக்கிற வாய்ப்பு என்னைத்தேடி வந்தபோது அவங்களைப் பத்தி நிறைய தெரிஞ்சுக்கிட்டேன். அந்தப் படம் அவங்களோட உண்மைக்கதையைத் தழுவி, கொஞ்சம் கற்பனைகள் சேர்த்து எழுதப்பட்டதுனு தெரிஞ்சது. என் மனசைத் தொட்ட கதை. படத்தோட டைரக்டர் மிலன் லுத்ரியா, ‘உங்களுக்கு சில்க் மேல மரியாதை இருந்தாதான், ஆடியன்ஸுக்கும் மரியாதை வரும்’னு சொன்னது எனக்கு நல்லா ஞாபகமிருக்கு. இந்த உலகத்துல எல்லாருமே மரியாதைக்குரியவர்கள்தான்னு புரிஞ்சுக்கிட்டேன். ஸ்மிதாவின் அடையாள மான கவர்ச்சியான உடலைத் தாண்டி, அவங்க எப்படிப்பட்ட மனுஷினு புரிஞ்சுக்கிட்டேன். அந்தப் படமும் கேரக்டரும் எனக்கு ஐ ஓப்பனரா இருந்தன. ரொம்பவே என்ஜாய் பண்ணினேன்...’’ - வித்யாவின் விவரிப்பில் சில்க் உயர்ந்து நிற்கிறார்.

அழகுத் தமிழ் பேசுகிற வித்யாவுக்குத் தமிழ்ப் படங்களில் நடிக்கிற ஐடியா உண்டா?

‘`நிறைய தமிழ்ப் படங்கள் பார்க்கறதில்லை. கடைசியா பார்த்தது ‘கபாலி’. மாதுங்கால என் மொத்த குடும்பத்தினரோடு தியேட்டருக்குப் போய்ப் பார்த்து அவ்வளவு என்ஜாய் பண்ணினேன். ரஜினிகாந்த்தை ஸ்கிரீன்ல பார்க்கிற எக்ஸ்பீரியன்ஸ் வேற லெவல். செம ஃபன் அது.

ரேவதியோட நடிப்பு எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவங்க நடிச்ச ‘மெளன ராகமு’ம் ‘அஞ்சலி’யும் என் ஃபேவரைட்ஸ். அந்த மாதிரியான கதைகளுக்காகத்தான் நான் வெயிட் பண்றேன்...’’ - தமிழுக்கு வருவதில் தயக்கங்கள் இல்லை என்றாலும், வித்யாவுக்கு பாலிவுட் மீதே பிரியம் அதிகம்.

‘`பாலிவுட்தான் என் சினிமா கரியரை ஆரம்பிச்சு வெச்ச இடம். அங்கேதான் நான் நிறைய விஷயங்களைக் கத்துக்கிட்டிருக்கேன். பாலிவுட்டாலதான் நான் இன்ஸ்பையர் ஆகியிருக்கேன். நடிகையாகணும்கிற என் கனவை வளர்த்து நனவாக்கினதும் பாலிவுட்தான். நான் எதிர்பார்க்காத பெயரையும் புகழையும் கொடுத்ததும் அதுதான். அதனால பாலிவுட்தான் என் உலகம்...’’ - நன்றி நவில்பவர், எந்த சினிமாப் பின்னணியும் இல்லாமல் சொந்த முயற்சியில் உயரம் தொட்டவர். அதிலும் அவருக்குப் பெருமையே.

‘`சினிமாத் துறையில தெரிஞ்சவங்க யாராவது இருந்திருந்தா, அது என் கரியர்ல பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கும்னு நான் நினைக்கலை. காட் ஃபாதரோ, சொந்தக்காரங்களோ இருந்தால்தான் சினிமாவுல ஜெயிக்க முடியும்னும் நான் நம்பலை. அந்த மாதிரியான சப்போர்ட் ஒரு தனிப்பட்ட நபரின் வளர்ச்சிக்கு உதவும் என்பதிலும் எனக்கு உடன்பாடு கிடையாது. எனக்குக் கடவுள் என்கிற சூப்பர் பவர் மட்டும்தான் எல்லா இடங்கள்லயும் துணையா இருக்கிறதா நம்பறேன். நான் இன்னிக்கு இருக்கிற இந்த இடம் எனக்குச் சந்தோஷத்தைக் கொடுக்குது. நான் பண்ற வேலைகள் திருப்தியைக் கொடுக்குது...’’ - ஹேப்பியாகச் சொல்பவர், நிஜ வாழ்க்கையில் ‘துமாரி சுலு’ படத்தின் நாயகியைப் போன்றவராம்.

‘`சுலுவுக்கும் என் நிஜ கேரக்டருக்கும் பெரிய வித்தியாசங்கள் இல்லை. அவளை மாதிரியே நானும் ரொம்ப ஹேப்பியான கேரக்டர். ரெண்டு பேரும் எந்த விஷயத்தை யும் முயற்சி செய்து பார்க்கத் தயங்க மாட்டோம். மனசுலபட்டதைப் பட்டுனு பேசிடுவோம். சுலுவுக்குள்ளே நிறைய வித்யாவைப் பார்த்தேன். அதனாலதான் இந்தப் படத்துக்கு ஓகே சொன்னேன்...’’ - சுலுவாக மாறிப் பேசுகிறவருக்குத் திரைத் துறையில் பெண்களின் வளர்ச்சி மகிழ்ச்சியைத் தந்திருக்கிறதாம்.

‘`இந்தச் சமூகத்துல சினிமாங்கிறது ஒரு பகுதி. ரொம்ப நாசூக்காகவும் பொழுது போக்காகவும் சொல்லப்பட்டாலும் சினிமா கதைகள் பெரும்பாலும் நம் நிஜ வாழ்க்கையின் பிரதிபலிப்புகள்தான்.  சமீபகாலமா சினிமாவில் பெண்கள் சித்திரிக்கப்படற விதத்துலயும் ஹீரோயின் கேரக்டர்கள்லயும் நிறையவே மாற்றங்கள் வந்திருக்கு. பெண்களின் குரல்களுக்கு மதிப்பளிக்கப்படறதே மிகப்பெரிய மாற்றம்தான். முழுமையான மாற்றத்துக்கு இன்னும் கொஞ்ச தூரம் போகணும்.’’

``என்னை எனக்கு ரொம்பவே பிடிக்கும்!'' - வித்யா பாலன்

பாசிட்டிவ் பேசுபவரின் பார்வையில் எது பெண்ணியம்?

‘`வாய்ப்புகளைப் பெறுவதிலும் உங்க வாழ்க்கையை உங்க விருப்பப்படி வாழ்வதிலும் ஆண்களைப்போலவே உங்களுக்கும் உரிமைகள் உண்டு என்கிறதை உணர்தல்தான் பெண்ணியம்.’’

சித்தார்த் ராய் கபூருடனான மணவாழ்க்கை வித்யாவை மாற்றியிருக்கிறதா?

‘`கல்யாணத்துக்குப் பிறகு வாழ்க்கை நிறையவே மாறியிருக்கு. ஆனா, எல்லாமே பாசிட்டிவான மாற்றங்கள். உங்களுக்குப் பிடிச்ச ஒருவரோடு வாழ்க்கையைப் பகிர்ந்துகிற அனுபவம் அலாதியானது. ஒவ்வொரு நாளும் அந்த அனுபவம் உங்களுக்கு ஏதோ ஒன்றைக் கத்துக்கொடுக்குது. சேர்ந்து டிராவல் பண்ற அந்த ஃபீல் கிரேட். ரெண்டு பேருமே அவங்கவங்க வேலைகள்ல பிசியா இருக்கோம். ஆனாலும், எங்க ரொமான்ஸ் நாளுக்கு நாள் ஸ்ட்ராங் ஆகிட்டிருக்கு. சாதாரண வாழ்க்கையை வாழ்ந்து பழகினவங்க ரெண்டு பேருமே. சித்தார்த் மாதிரியான லைஃப் பார்ட்னர் அமைஞ்சது எனக்கான ப்ளெஸ்ஸிங்னுதான் சொல்லணும்.’’

அடுத்து..?

‘`பெரிசா எந்தத் திட்டமும் இல்லை. கோல் செட் பண்ணிட்டு அதுக்கேத்தபடி வாழற ஆளில்லை நான். நடந்து முடிஞ்சது முடிஞ்சதுதான். நடக்கப்போறது என் கட்டுப்பாட்டில் கிடையாது. அதனால இந்த நிமிஷத்தைச் சந்தோஷத்தோடும் திருப்தியோடும் வாழறது மட்டும்தான் சரினு நம்பறேன்.’’

அவள் வாசகிகளுக்குச் சொல்ல விரும்புவது?

‘`இது அட்வைஸ் இல்லை. என் அனுபவம். எல்லாப் பெண்களும் ட்ரை பண்ணிப் பார்க்க வேண்டிய மேஜிக். பெண்கள் பெரும்பாலும் அவங்க உடலை வெச்சே பார்க்கப்படறாங்க, அடையாளப்படுத்தப்படறாங்க. நானும் என் வாழ்க்கையில `பாடி ஷேமிங்' அனுபவத்துக்குள்ளாகியிருக்கேன். அது என்னை ரொம்பவே பாதிச்சிருக்கு.

இந்த உலகம் என் உடம்பைப் பார்த்துப் பரிகாசம் பண்றதை நினைச்சு, நானும் என் மிச்ச நாள்களை அப்படியே கவலையுடன் நகர்த்தறதைப்போல பரிதாபம் வேற இல்லைனு உணர்ந்தேன். என் உடலை நேசிக்கவும் அப்படியே ஏத்துக்கவும் பழகினேன்.

தன் உடலை வெறுக்கிறவங்களுக்கும் மத்தவங்களால பரிகாசத்துக்குள்ளாக்கப் படறவங்களுக்கும் ஒரு மேஜிக் சொல்றேன்.

தினமும் காலையில எழுந்ததும் கண்ணாடி முன் நின்னுக்கிட்டு உங்களை ரசிச்சபடி, ‘யாருக்குப் பிடிக்குதோ இல்லையோ... என்னை எனக்கு ரொம்பவே பிடிக்கும்’னு சொல்லிப் பழகுங்க. ஆரம்பத்துல அதுல உங்களுக்கு உடன்பாடில்லாம உணரலாம். காலப்போக்குல நிச்சயம் அது உண்மையாகும். உங்களை நீங்க நேசிக்க ஆரம்பிச்சிருப்பீங்க.’’

வாவ்!