
இன்பாக்ஸ்
பிக் பாஸுக்குப் பிறகு வந்து குவிந்த பட வாய்ப்புகளைப் பொறுமையாகத் தேர்ந்தெடுக்கிறார் ஓவியா. ராகவா லாரன்ஸோடு காஞ்சனா 3-ல் நடிக்க ஒப்புக்கொண்டவர், அதன்பிறகு எந்தப் படத்திலும் இன்னும் கமிட் ஆகவில்லை. `பிக் பாஸு’க்குப் பிறகு என் மார்க்கெட் வேற லெவல் என ஓவியா சொல்ல, `சம்பளம் செட் ஆகலம்மா’ எனப் பதறுகிறார்கள் தயாரிப்பாளர்கள். காத்திருக்கிறார் ஓவியா.
பேபியை மூட் அவுட் ஆக்காதீங்க!

எடையைக் குறைத்து, பொறுப்பைக் கூட்டி வந்திருக்கிறார் சிம்பு. மணிரத்னம் இயக்கும் அடுத்த படத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாஸில், அர்விந்த்சாமி, ஜோதிகா, பிரகாஷ் ராஜ் எனப் பலரும் சிம்புவுடன் நடிக்கிறார்கள். முதலில் `அர்ஜுன் ரெட்டி’யில் நடித்த விஜய் தேவரகொண்டா நடிப்பதாக இருந்த கேரக்டரில்தான் சிம்பு நடிக்கவிருக்கிறார். இந்த ஸ்பெஷல் புராஜெக்ட்டுக்காக சமீபத்தில் மணிரத்னம் மேற்பார்வையில் சிம்புவுக்கு நடிப்புப் பயிற்சி அளிக்கப்பட்டது. மிகப்பொறுப்போடு நேரம் தவறாமல் பயிற்சியில் கலந்துகொண்டு மணிரத்னத்துக்கே ஷாக் கொடுத்திருக்கிறார் சிம்பு.
சிம்பு சிலிர்ப்புகள்!

2017-ல் அதிகம் சம்பாதித்த பிரபலங்களின் டாப் 100 பட்டியலை வெளியிட்டுள்ளது ஃபோர்ப்ஸ் பத்திரிகை. இதில் முதலிடத்தைப் பிடித்திருக்கிறார் சல்மான்கான். அவருடைய ஆண்டு வருமானம் 232 கோடி ரூபாய். ஒரு நாளுக்கு 63 லட்சம் ரூபாய் சம்பாதிக்கிறார் சல்லு பாய்! இரண்டாமிடத்தில் ஷாரூக்கான் 170 கோடியுடன் இறங்குமுகம் காண, மூன்றாவது இடத்தில் என்ட்ரி கொடுத்திருக்கிறார் விராட் கோலி. அவருடைய ஆண்டு வருமானம் 100 கோடி! இந்தப்பட்டியலில் தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்களும் இருக்கிறார்கள். இதில் 25வது இடத்தில் சூர்யா, 27வது இடத்தில் அஜித்குமார், 31வது இடத்தில் விஜய்க்கும் இடம் கிடைத்திருக்கிறது. கோடியா கொட்டுது!
பால் தாக்ரேவாக தாறுமாறு லுக்கில் வந்திறங்கியிருக்கிறார் நவாஸுதின் சித்திக்கி. பால்தாக்ரேயின் பயோபிக்கான `தாக்ரே’-யில் நவாஸுதின்தன் அதிரடி நாயகன். படத்தை பால்தாக்ரேயின் பிறந்தநாளான ஜனவரி 23-ம் தேதி வெளியிடவிருக்கிறார்கள். இந்தப்படம் பாபர் மசூதி இடிப்பும், அதைத்தொடர்ந்து மும்பையில் நடந்த கலவரங்களும், அந்தச் சமயத்தில் பால்தாக்ரே மேற்கொண்ட நடவடிக்கைகளையும் பற்றிப் பேசவிருக்கிறதாம்! தாக்கரே தாக்கம்!

சூர்யா - செல்வராகவன் கூட்டணியில் உருவாகும் அடுத்த படம் ஸ்பை த்ரில்லர். 2018 தீபாவளிக்குத் திட்டமிடப்பட்டுள்ள இந்தப்படம் சிம்புவுக்காக எழுதித் தொடக்கவிழா மட்டுமே கண்ட ‘கான்’ படத்தின் கதைதான். ஆனால், சூர்யாவுக்கு ஏற்றபடி மாற்றி எழுதியிருக்கிறார் செல்வராகவன். ஸ்க்ரிப்ட் எழுதும் இடைவேளைகளில் பாச அப்பாவாக, கடவுள் பக்தனாக ட்விட்டரில் நெகிழ்ச்சி ஸ்டேட்டஸ்களைத் தட்டிக் கொண்டிருக்கிறார் செல்வராகவன். செல்வானாலே சென்ட்டிதான்!
ஏஞ்சலினா ஜோலியிடமிருந்து பிரிந்ததற்குப் பிறகு சிங்கிளாகவே இருந்த பிராட் பிட் இப்போது ஜெனிஃபர் லாரன்ஸோடு மிங்கிளாகியிருக்கிறார். ஜெனிஃபரைக் காதல் வலையில் விழவைக்கவேண்டும் என்பது பிராட் பிட்டின் பல நாள் ஸ்கெட்ச் என்கிறார்கள் பப்பராஸிக்கள். ஆனால், ஜெனிஃபரே `வி ஆர் ஜஸ்ட் ஃப்ரெண்ட்ஸ்’ என ஸ்டேட்டஸ் தட்டியிருக்கிறார். ஸ்க்ரிப்ட் இப்படித்தான் ஆரம்பிக்கும்!

இளைஞர்களுக்கு ஒரு நற்செய்தி. டிஸ்கவரியின் புகழ்பெற்ற ‘மேன் Vs வைல்ட்’ நிகழ்ச்சியின் இந்தி வெர்ஷனை சன்னி லியோன் தொகுத்து வழங்குகிறார். ``டிஸ்கவரி சேனல் என் ஆல்டைம் ஃபேவரிட். அதிலும் பியர் கிரில்ஸ் என் கனவு நாயகன். அவரால் பாப்புலரான அந்த நிகழ்ச்சியை நான் தொகுத்து வழங்குவதன் மூலம், இன்னும் என்னை நான் பிரபலப்படுத்திக்கொள்ள முடியும். நிகழ்ச்சியை இதுவரை பார்த்திராதவர்களைக்கூட என்னால் பார்க்க வைக்க முடியும்” என எமோஷன் ஆகியிருக்கிறார் சன்னி. மறந்துவிடாதீர்கள்... மறந்தும் இருந்துவிடாதீர்கள்!