2017 ஸ்பெஷல்
Published:Updated:

“நட்பும் அன்பும்தான் நான்!”

“நட்பும் அன்பும்தான் நான்!”
பிரீமியம் ஸ்டோரி
News
“நட்பும் அன்பும்தான் நான்!”

தமிழ்ப்பிரபா, படம்: தே.அசோக்குமார்

மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருதைப் பெற்றிருக்கிறார் எழுத்தாளர் யூமா வாசுகி. இருபத்தைந்து ஆண்டுக்காலம் தன் படைப்புகளை மட்டுமல்லாது பிறமொழியிலுள்ள முக்கியமான நூல்களையும் தனக்கே உரிய கவித்துவமான மொழிநடையுடனும்,  கலையமைதியுடனும் எழுதிக்கொண்டு வருபவர் யூமா வாசுகி. விருது வென்றவரைச் சந்தித்தேன்.

``சொந்தப் படைப்புகளே கவனிக்கத்தக்க வகையில் எழுதியவரான உங்களுக்கு ‘மொழிபெயர்ப்புக்கான’ சாகித்ய அகாடமி விருது கிடைத்திருப்பது நிறைவாக இருக்கிறதா?’’

``என் படைப்புலகத்திலிருந்து இதை நான் வேறுபடுத்திப் பார்க்கவில்லை. மூல மொழியின் மேன்மை கெட்டுவிடாமல் இருக்க வேண்டும் என்பதற்காக `கசாக்கின் இதிகாசம்’ நாவலுக்கு ஒன்றரை ஆண்டுக்காலம் கடுமையான உழைப்பைச் செலுத்தியிருக்கிறேன். மலையாள மொழிப்பிரிவுப் பேராசிரியர் பிஜு விஜயனுடன் ஒருவாரகாலம் தங்கியிருந்து இந்நாவலிலுள்ள முக்கியமான தருணங்களை விவாதித்தேன். ஏற்கெனவே இந்நாவலுக்காக 2015-ம் ஆண்டின் சிறந்த மொழிபெயர்ப்புக்கான விகடன் விருதைப் பெற்றிருக்கிறேன். தற்போது சாகித்ய அகாடமியும் கிடைத்திருப்பது என் உழைப்புக்கு, என் படைப்புக்குக் கிடைத்த மேலுமொரு அங்கீகாரமாகவே பார்க்கிறேன்.’’

“நட்பும் அன்பும்தான் நான்!”

`` ‘கசாக்கின் இதிகாசம்’ நாவலை மொழிபெயர்க்க வேண்டுமென்ற விருப்பம் எதனால் உருவானது?’’

``இதுவரை நூற்றுக்கும் மேலான புத்தகங்களை மொழிபெயர்த்திருக்கிறேன். எந்த ஒரு புத்தகத்தின் மீதும் தனிப்பட்ட ஈர்ப்பு இல்லாமல் அதனை நான் மொழிபெயர்ப்பதில்லை. யதார்த்தமும், பூடகத் தன்மையும் ஒன்றாகச் சேர்ந்து உச்சம் அடைந்திருக்கும் ஒரு படைப்புதான் `கசாக்கின் இதிகாசம்.’ இன்று நாம் பல ‘இச’ங்களைப் பற்றி விவாதித்துக்கொண்டிருக்கிறோம். நாற்பத்தெட்டு வருடங்களுக்கு முன்பு மலையாள எழுத்தாளர் ஓ.வி விஜயன் புதியதொரு எழுத்து வகைமையில் மிகப்பெரிய சாதனையைச் செய்துவிட்டு தன் படைப்பின் வழியாக நம் காலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறார். அவரைத் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்திய எளிய கருவியாக மட்டுமே நான் இருக்கிறேன்.’’

``யூமா வாசுகி என்கிற பெயரின் பின்னணி என்ன?’’

``என் உற்ற தோழனின் பெயர் முகமது யூசுப். சிறுவயதிலிருந்து நாங்கள் இன்றளவும் நண்பர்கள். அவர் பெயரிலிருந்து `யூ’வும் என்னுடைய இயற்பெயரான மாரிமுத்துவிலிருந்து `மா’வும் எடுத்துக் கொண்டதுதான் யூமா. என் அக்காவுடைய பெயர் வாசுகி. அப்பா என் சிறுவயதிலேயே இறந்துபோன போது அக்காதான் என்னையும் என் அண்ணனையும் வளர்த்து ஆளாக்கினார். நட்பின் அடையாளமாகவும் அன்பின் நன்றியறிதலாகவும் ‘யூமா வாசுகி’ என்று என் பெயரை வைத்துக்கொண்டேன். இதனுடன் சேர்த்து என் வாழ்க்கையின் ஆதாரமான ஒரு ஆளுமை பற்றியும் சொல்ல வேண்டியிருக்கிறது. சென்னை வாழ்க்கையில் ஆதரவற்று அலைந்து கொண்டிருந்த காலகட்டத்தில் என்னை அணைத்துக்கொண்டவர், தமிழினி வசந்தகுமார். நான் எழுதுவதற்கு சகல வழிகளிலும் என்னைத் தூண்டிக்கொண்டே இருந்தார். அவரது தூண்டுதல் இல்லாமல் இருந்திருந்தால் தொடர்ந்து படைப்புலகில் இயங்கிக்கொண்டிருக்கும் வாய்ப்பு இருந்திருக்காது. ஏறத்தாழ ஐந்தாண்டுக்காலம் அவருடைய நிழல்போல உடன் இருந்தேன்.’’

``உங்களுடைய அடுத்த படைப்பு எப்போது? அது எதைப் பற்றியது?’’

``ஓவியக்களம் சார்ந்து `சுதந்திர ஓவியனின் தனியறைக் குறிப்புகள்’ என்கிற பெயரில் நாவல் எழுதி பாதியளவு முடித்துவிட்டேன். ஒருகாலத்தில் முழுநேர ஓவியனாக வாழ்ந்த என் வாழ்க்கையின் சித்திரிப்புதான் இந்த நாவல். அடுத்த வருடம் வெளியாகும்.’’