2017 ஸ்பெஷல்
Published:Updated:

“என் குழந்தைக்குக் கல்யாணம்!”

“என் குழந்தைக்குக் கல்யாணம்!”
பிரீமியம் ஸ்டோரி
News
“என் குழந்தைக்குக் கல்யாணம்!”

ரமணி மோகனகிருஷ்ணன்

‘`என் மகள் அரித்ரா திருமண வயதை அடைந்துவிட்டாள்.  ‘என் அம்மா, அப்பா என் திருமணத்துக்கு வருவதற்கான சூழ்நிலை அமைந்தால் மட்டுமே நான் திருமணம் செய்துகொள்வேன்’ என்று பிடிவாதமாக இருக்கிறாள். நாங்களும் எங்களுக்கு பரோல் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறோம். அரசும் நீதிமன்றமும் எங்களுக்கு உதவிசெய்ய வேண்டுகிறோம். என் மகள் திருமணத்தை நல்லபடியாக நடத்த வேண்டும், உறவினர்கள் அனைவரையும் ஒருசேரப் பார்க்க வேண்டும்’’ - நளினியின் வார்த்தைகளில் தவிப்பு மிகுந்திருக்கிறது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனைக் கைதியான நளினி, 26 வருடங்களாகச் சிறையிலிருக்கிறார். 21 வயதில் சிறைக்குச் சென்றவருக்கு இப்போது 47 வயதாகிறது. தன் மகளின் திருமணத்தைப் பற்றிய கவலை, சிறை வேதனையை இப்போது இந்தத் தாய்க்கு இரட்டிப்பாக்கியிருக்கிறது. அவர் மகளுக்குத் திருமண ஏற்பாடுகளைச் செய்ய, 6 மாதகால பரோல் வேண்டி நளினி தாக்கல்செய்த மனு உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கிறது. இந்நிலையில், நளினியின் வழக்கறிஞர் மூலமாக நளினியிடம் பேட்டி கண்டேன்.

“என் குழந்தைக்குக் கல்யாணம்!”

‘`26 வருடங்களுக்கு முன்பு, நளினி என்பவர் யார்?”

‘’ஒரு நடுத்தரக் குடும்பத்துப் பெண். வில்லிவாக்கத்தில்தான் எங்கள் வீடு இருந்தது. என் தாத்தா காந்தியவாதி. என் அம்மா செவிலியர், அப்பா காவல்துறை அதிகாரி. எனக்கு ஒரு தங்கை, ஒரு தம்பி. 21 வயதில், இந்த வழக்கில் சிக்கிவிட்டேன். அந்தக் காலத்தில் ஈழத் தமிழர்களுக்குத் தமிழகத்தில் ஆதரவு இருந்தது. என் தம்பியும் அப்படித்தான் இருந்தான். அவனது தொடர்பின் மூலம் ஈழத்திலிருந்து வந்து இங்கு தங்கியிருந்த முருகனை காதலித்தேன். 1991 ஏப்ரல் 22-ல், கோயிலில் வைத்து அவர் எனக்குத் தாலிகட்டினார். அது என் வீட்டுக்குத் தெரியாத நிலையில், நான் என் அம்மா வீட்டிலேயே தங்கிவந்தேன். ஒரு மாதத்துக்குள்ளாக, மே 21-ம் தேதி ராஜீவ்காந்தி கொல்லப்பட, சூழ்நிலை மோசமானது. என் திருமணம் பற்றி வீட்டில் தெரியவந்தபோது பிரளயமே வெடித்தது. எனது 21 வயதில் வழக்கில் சிக்கி நான் கைதியானேன்.’’

‘`சிவராசனை எப்படித் தெரியும்?’’

‘` `இலங்கை அதிபர் ஜெயவர்தனேவின் தலையீட்டால் இந்திய அமைதிப்படையின் வருகை சண்டையாக மாறிப்போனது. அதனைச் சரிசெய்ய இந்தியத் தலைவர்களுக்கு மாலை அணிவித்து உறவை வளர்த்துக்கொள்ளலாம்’ என்று சிவராசன் என்பவர் இங்கு வந்திருப்பதாகவும், முடிந்தால் என்னை உதவச்சொல்லியும் என் கணவர் கேட்டார். அவர் எங்கள் வீட்டு முகவரியை சிவராசனுக்குக் கொடுக்க, 1991-ம் ஆண்டு மே மாதம் 3-ம் தேதி என்னை வந்து சிவராசன் சந்தித்தார். அப்போது அவருடன் இரண்டு பெண்களும் வந்திருந்தார்கள். அவர்கள்தான் சுபாவும் தனுவும்.

நலம் விசாரித்துவிட்டு, தனுவுக்குக் காய்ச்சல் அடிப்பதாகவும் பார்த்துக்கொள்ளும்படியும் வாசலில் நின்றபடியே சொல்லிவிட்டு சிவராசன் போய்விட்டார். நான் தனுவைக் கவனித்துக்கொண்டேன். அடுத்த நாள் வெளியில் சென்றோம். பொருள்கள் வாங்கிக்கொண்டார்கள். தனுவும் சுபாவும், ‘படத்துக்கு போலாம் அக்கா’ என்று கேட்டுக்கொண்டே இருந்ததால், படத்துக்குச் சென்றோம். முதன்முதலாக அன்றுதான் அவர்கள் திரையரங்குக்கு வருவதாகச் சொல்ல, எனக்குக் கண்கலங்கிவிட்டது. மறுநாள் காலை சிவராசன், அவர்கள் இருவரையும் அழைத்துக்கொண்டு போய்விட்டார். அப்படித்தான் சிவராசனை முதன்முதலில் சந்தித்தேன்.’’

‘`மே 21-ம் தேதி என்ன நடந்தது?’’

‘`என் கணவர் இலங்கைக்குச் சென்றுவிட்டுத் திரும்பி இரண்டு நாள்களாகியிருந்தன. ஆனாலும், அவரை என்னால் பார்க்க முடியவில்லை. நான் அப்போது கர்ப்பமாக இருந்தேன். அது குறித்து என் கணவரிடம் பேச வேண்டும் என்று நினைத்தேன். ஆனால், முடியவில்லை.

21-ம் தேதி... நான் என் அலுவலக மேலாளரிடம் விடுப்பு அனுமதி பெற்று, என் கணவரைப் பார்க்க அவர் வீட்டுக்குச் சென்றேன். அங்கு அவர் இல்லை. ராஜீவ் காந்திக்கு மாலை அணிவிக்க வேண்டும் என்று, சிவராசன் என்னை ஏற்கெனவே அழைத்திருந்தார். `சரி, அங்கு கிளம்புவோம்’ என்று சுபா, தனுவுடன் ஸ்ரீபெரும்புதூர் சென்றோம். நிகழ்வு முடியும்வரை எதுவும் சாப்பிட முடியாது என்று கூறி சிவராசன் எங்களுக்கு உணவு வாங்கித்தந்தார். நான் ராஜீவ் காந்தி போன்றவொரு தலைவரை அருகில் இருந்து பார்க்கப்போகும் ஆவலிலிருந்தேன். விழா அரங்குக்குச் சென்றபோது, அங்கிருந்த பல தலைவர்களை  சிவராசனுக்குத்  தெரிந்திருந்ததை அறிந்துகொண்டேன்.

சிவராசன், தனுவை வி.ஐ.பி-க்கள் இருக்கும் இடத்தில் உட்காரவைத்துவிட்டு, ஓர் ஓரமாக நின்றுகொண்டார். நானும் சுபாவும் அங்கு நிகழ்ந்த இசைக்கச்சேரியைப் பார்த்துக் கொண்டிருந்தோம். பின்னர், ராஜீவ் காந்தி வரும் வேளையில் சுபா என்னைத் தரதரவென இழுத்துக்கொண்டு நடக்கத் தொடங்கினார். 200 அடி நடந்த பிறகு ஒரு பெரிய வெடிச்சத்தம் கேட்டது. கூடவே ஓலங்களும் கேட்கத் தொடங்கின. என்னையும் சுபாவையும் அழைத்துக்கொண்டு சிவராசன் ஓர் ஆட்டோவில் ஏறி, யாரோ ஒருவரின் வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்தார்.  ‘தனு எங்கே?’ என்று கேட்டதற்கு, ‘அவள் பத்திரமாக வந்துவிடுவாள்’ என்று கூறினார். வீட்டுக்குச் சென்றதும் சுபா அழுதார். அதைப்பார்த்து நானும் அழுதேன்.

மறுநாள், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட செய்தியை பேப்பரில் பார்த்தேன். நாங்கள் வீட்டிலேயே முடங்கிக்கிடந்தோம். என் மனதுக்குள் ஏதோ குழப்பமும் பயமும் ஓடியது. என் வேண்டுதல் எல்லாம் வயிற்றில் இருக்கும் என் குழந்தையைப் பற்றியதாக இருந்தது. அங்கிருந்து கிளம்பி, ராயப்பேட்டையில் இருந்த என் அம்மாவின் வீட்டுக்குச் சென்றேன். என் கணவரும் அங்கு வந்திருந்தார். குண்டுவெடிப்பு நிகழ்வு பற்றிக் கேள்விப்பட்டு, அங்கு சென்றிருந்த எனக்கு ஏதாவது ஆகிவிட்டதா என்று அவர் பதறிப்போயிருந்தார்.’’

“என் குழந்தைக்குக் கல்யாணம்!”

‘`சிறைக்குச் சென்றது எப்போது?”

‘`நான் ஜூன் 15-ம் தேதி கைது செய்யப்பட்டேன். அப்போது இரண்டு மாதம் கர்ப்பமாக இருந்தேன். காவல்துறை எங்களைத் தேடியதால் பல்வேறு துன்பங்களுக்கு ஆளாகி ஏழு நாள்கள் சாப்பாடு இல்லாமல் இருந்ததில், எனது உடல் மிகவும் பலவீனமாகியிருந்தது. நான் கைதுசெய்யப்பட்டு, கையில், காலில் விலங்குமாட்டி வைக்கப்பட்டிருந்தேன்.  மசக்கையில் அந்த இடத்திலேயே வாந்தியெடுத்து, அதே இடத்திலேயே படுத்துறங்கினேன். எனது துன்பத்தைச் சொல்ல வார்த்தைகள் இல்லை.’’

‘`உங்கள் குழந்தையும் சிறைவாசத்தில் தன் வாழ்க்கையை ஆரம்பித்திருக்கிறதே...”

‘`ஆம்... பிரசவத்துக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, வழியிலிருந்த பிள்ளையார் கோயிலில் வேண்டிச் சென்றேன். பிரசவம் முடிந்து சிறைக்குத் திரும்பிய பின்னர், குழந்தை பால் குடிக்கவில்லை. அதைச் சரிசெய்வதற்கான கவனிப்புகள் கொடுக்க முடியாமல், குழந்தை பசியால் அழும்போதெல்லாம் நானும் என் கணவரும் சேர்ந்து அழுவோம். எனக்குப் பிள்ளையார் இஷ்ட தெய்வம் என்பதால், மகளுக்கு ‘அரித்ரா’ என்று பெயர்வைத்தேன். என் கணவர், ‘மேகரா’ என்று அழைப்பார்.

நாங்கள் அடைக்கப்பட்டிருந்த 10 x 12 அளவுள்ள அறைதான், அரித்ராவுக்கு உலகமாக இருந்தது. சில பொம்மைகளை வைத்திருந்தோம். அவற்றுடன் விளையாடுவாள். சிறையிலிருந்த கோவை சுசீந்திரன், ராபர்ட் பயாஸ், என் தம்பி பாக்கியநாதன் அறைகளுக்கெல்லாம் சென்று அவர்களுடன் விளையாடுவாள். அவளுக்கு இரண்டு வயதானபோது, பெண் காவலர்களின் வளையல், செயினை எல்லாம் வாங்கி, நகையில்லாமல் இருக்கும் எனக்குப் போட்டு விடுவாள். மாலை லாக்கப் நேரத்தில், எங்காவது மறைந்துகொள்பவளைத் தேடிப்பிடித்து என்னுடன் சேர்த்து லாக்கப் செய்வார்கள்.சில நேரங்களில் லாக்கப் கம்பிகளுக்குள் புகுந்து வெளியேறிவிடுபவளை மீண்டும் கம்பி வழியாக அறைக்குள் கொண்டுவர நாங்கள் படாதபாடு படுவோம்.’’

‘`உங்கள் குழந்தையைச் சிறையிலிருந்து வெளியே அனுப்ப எப்போது முடிவெடுத்தீர்கள்?”

‘`ஒரு முறை சேலம் சிறைக்கு என்னை மாற்றினார்கள். அங்கு சென்றபோது, சேலம் சிறையின் நுழைவுவாயிலுக்கு அருகே பசுக்களும் கன்றுகளும் கட்டப்பட்டிருந்தன. அதைப் பார்த்த என் மகள், ‘அம்மா இதெல்லாம் என்ன?’ எனக் கேட்டாள். உலகத்துக்கு எவ்வளவு அந்நியமாக அவள் வளர்ந்துகொண்டிருக்கிறாள் என்று நான் உணர்ந்த நொடியில் உடைந்துவிட்டேன். இனியும் என் மகள் சிறைக்குள் வளர வேண்டாம் என்று, இரண்டரை வயதில் அவளை, கோவைக்கு எங்கள் உறவினர் சுசீந்திரன் வீட்டுக்கு அனுப்பிவைத்தோம்.’’

‘`சிறை வாழ்க்கையில் ஏதாவது மாற்றங்கள்..?

‘`சிறையில் எனக்கு தெய்வமாக இருந்து, எனக்கும் என் குழந்தைக்கும் உதவிசெய்தவர்கள் இருக்கிறார்கள். நான் கர்ப்பிணியாக இருந்தபோது சில பெண் காவலர்கள் அவர்களுடைய வீட்டிலிருந்து எடுத்துவந்த உணவைக்கொடுத்து, ‘சீக்கிரம் சீக்கிரம்...சாப்பிடு’ என்பார்கள். அப்போது என் கருவைக் கலைக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன என்பதால், நான் அதை உண்ண மறுத்தேன். அந்த உணவை தாங்கள் சிறிது சாப்பிட்டுவிட்டு, ‘இப்போவாச்சும் நம்பு, சாப்பிடு’ என்பார்கள் கண்கலங்கியபடி. அவர்களெல்லாம் தெய்வம்தான் எனக்கு.

சிறையில் எனக்கு வேலை தருவதில்லை. அதனால் சம்பளமும் இல்லை. என் கணவர் வேலைசெய்து மாதாமாதம் சம்பாதித்து வைத்துள்ளார். எனக்குப் பார்வைப் பிரச்னை உள்ளது. சிரமப்பட்டு செய்தித்தாள் படிப்பேன். அதில் வரும் சமையல் குறிப்புகளை எனது நோட்டில் எழுதிவைத்துக்கொள்வேன். சமையலறைக்குச் செல்லும்போது என் துன்பங்கள் எல்லாம் மறந்து சமைக்க ஆரம்பித்துவிடுவேன்.’’

‘`இப்போது உங்கள் விருப்பம் என்ன?”

‘`நான், என் கணவர், மகள் மூவரும் ஒன்றாக வாழவேண்டும். நான் சமைத்து, என் மகளுக்கு ஊட்டிவிட்டபடி நாங்கள் மூவரும் ஒன்றாகச் சாப்பிட வேண்டும். என் குழந்தைக்குக் கல்யாணம். அதை நல்லபடியாக முடிக்கவேண்டும்.”