
வீயெஸ்வி, படங்கள்: கே.ராஜசேகரன், சொ.பாலசுப்ரமணியன், பிரியங்கா

``இசைப் பேரொளி, தமிழிசை வேந்தர், கலைமாமணி பத்ம பூஷண்...’’ என முதலில் பட்டங்களை அடுக்கிவிட்டுத்தான் சுதா ரகுநாதனை அறிமுகப்படுத்தினார் கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ் அறிவிப்பாளர். ஆனால், `சங்கீத கலாநிதி’ பட்டம் மட்டும் ஏனோ டீலில் அறுந்துவிட்டது!
மன்னார்குடி ஈஸ்வரன் தனி ஆவர்த்தனம் வாசிக்கத் தொடங்க, வந்திருந்தவர்களில் ஒருசிலர் கொத்தாகப் புறப்படத் தயாரானார்கள். `ப்ளீஸ்... எல்லோரும் கொஞ்சம் உட்காருங்க. அஞ்சு, ஏழு நிமிஷம் வெயிட் பண்ணுங்க. இவ்வளவு பெரிய வித்வான் வாசிக்கிறார்... கேட்டுட்டுப் போங்க’ என்று சீறிவிழாமல், தன்மையாகக் கேட்டுக்கொண்டார் சுதா ரகுநாதன். கிளம்பியவர்கள், டி.வி சீரியல்களை அரை மனதுடன் தியாகம் செய்துவிட்டு இருக்கைக்குத் திரும்பினார்கள். ஈஸ்வரன் தொடர்ந்தார். மோர்சிங் ராமன் இணைந்தார். `நல்லவேளை, கிளம்பலே... இல்லைன்னா மிஸ்பண்ணியிருப்போம்!’ என அவர்கள் நினைக்கும் அளவுக்கு அன்றைய `தனி’ ஓஹோ!

வயது ஏறிக்கொண்டேபோனாலும், குரலில் இனிமையும் கச்சேரியில் விறுவிறுப்பும் குறையாதவர் சுதா. ஆலாபனையில் அழகு தேவதையாக ஜொலித்தாள் லலிதா! மேல் ஸ்தாயிப் பயணத்தில் வாய் திறந்து பாடி சங்கதிகளை நீச்சலடிக்கவைத்து, ராகத்துக்குப் புதிய பரிமாணம் தந்து பளீரிடவைத்தார். முடிந்ததும், பின்வரிசையிலிருந்து `வால்யூம் அதிகம்’ என ஒருசிலர் குரல் எழுப்பினர். அந்த வாய்ஸ், மேடை வரை வந்து சேரவில்லை; பாதி வழியில் காற்றில் கலந்துவிட்டது! சியாமா சாஸ்திரியின் `நன்னு புரோவு லலிதா...’வைப் பாடகி பாடியதை, படைத்தவர் கேட்க நேரிட்டிருந்தால், `நன்று’ என்று பாராட்டியிருப்பார்.
மெயினாக தோடி. இசை வாழ்வில் எத்தனையோ முறை தோடியைத் தொட்டிருப்பார் சுதா. சங்கதிகளும் நடுவில் கார்வைகளும் நெருங்கிப் பழகியவர்களுடன் அரட்டையடிப்பது மாதிரி அத்தனை சகஜ பாவம்!
ராகம், தானம், பல்லவிக்கு அமிர்தவர்ஷினி. வரவர எல்லாக் கச்சேரியிலும் ரா-தா-ப ஒரு சடங்கு மாதிரியாகிவிட்டது. வேக வேகமாக ஆலாபனை, கீ கொடுத்த கடிகாரம் மாதிரி தானம், பல்லவி கொஞ்சம், ஸ்வர ராகமாலிகை கொஞ்சம் என்று அவசர அடிகள்தான் அதிகம். மாண்புமிகு பாடக, பாடகிகள் சிந்திக்கவேண்டிய நேரம் இது!

மார்க்கெட்டில் உச்சத்தில் இப்போது இருக்கிறார்கள். வடபழநி மெட்ரோ ரயிலடியிலிருந்து மியூசிக் அகாடமி வரை எங்கு பாடினாலும் கூட்டம் அள்ளுகிறார்கள். கைத்தட்டல்களால் அரங்கம் அதிரும் அளவுக்குப் பாடுகிறார்கள். ரஞ்சனி - காயத்ரி சகோதரிகள், உழைப்பாளிகள்!
தியாக பிரம்ம கான சபாவுக்காக வயலின் ஹெச்.என்.பாஸ்கர், மிருதங்கம் மனோஜ் சிவா, கஞ்சிரா அனிருத் ஆத்ரேயா சகிதம் பாடிய சகோதரிகளின் கச்சேரியில் சுத்ததன்யாசி ஆலாபனையை ரஞ்சனி கவனித்துக்கொண்டு உருக்கினார்.
இந்த சீஸனில் எங்கு கேட்பினும் காம்போதியடா! இங்கே இந்த ராகத்தைத் தன் பொறுப்பில் எடுத்துக்கொண்டார் காயத்ரி. மூன்று ஸ்தாயிகளிலும் அருவி மாதிரி கொட்டிய சங்கதிகள் கேட்போரைக் கிறங்கடித்தன. எல்லாம் உசத்தியான Branded சங்கதிகள். மேலே போகும்போது கையை நீட்டி, இடது காதை மூடி, ஏற்ற இறக்கங்கள் கொடுத்து `சாமி’ வந்துவிட்டது மாதிரியான உடல்மொழியுடன் இவர் பாட, பிரமித்துப்போகிறார்கள் ரசிக மகாஜனங்கள்!
தியாகராஜரின் `மா ஜானகி...’ பாடல், `ராஜராஜ வர...’ வரியில் நிரவல். `எங்கள் ஜானகியைக் கைப்பிடித்ததால்தானே ராவணனைக் கொன்றவன் என்ற கீர்த்தியுடன் நீ சக்கரவர்த்தியாக இன்று விளங்குகிறாய்?’ என்று சீதையின் பெருமை பேசும் பெண்ணிய வரிகள் இவை!
அடுத்து குமுதக்ரியா ராகத்தில் ராகம் - தானம் - பல்லவி. இந்துஸ்தானி இறக்குமதிபோல் தோற்றம்தரும் இந்த ராகத்தில், உஸ்தாத் ரேஞ்சுக்குப் பின்னியெடுத்தார் ரஞ்சனி. அந்தச் சங்கதிகளில்தான் சமுத்திர அலைகள் மாதிரி எத்தனை அசைவுகள்! வயலின் பாஸ்கரும் தன் பங்குக்கு குமுதக்கிரியாவுக்காக பைஜாமா, ஜிப்பா அணிந்தார்!
மூன்று மணி நேரக் கச்சேரியின் முடிவில் வழக்கப்படி அபங்கம் உண்டு - பீலு ராகத்தில் சகோதரிகளே மெட்டுப்போட்டது.
ஒவ்வொரு பாடலுக்கும் ராகம், இயற்றியவரின் பெயர் அறிவித்தார் காயத்ரி. எல்லோரும் இப்படி அறிவிக்க வேண்டும் எனச் சொல்லவில்லை. அறிவித்தால் நல்லா இருக்குமே!
டியர் மேடம்ஸ்... உங்கள் வாத்தியாருக்கு வாத்தியாரான செம்மங்குடி, மேடையில் நோட்புக் பிரித்து வைத்துப் பாடியதில்லை என்பதை நினைவில்கொள்க!
மயிலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸில் ஐஸ்வர்யா ஸ்ரீனிவாஸ். இவரின் குருமார்கள் டி.கே.பட்டம்மாள், ஆர்.கே.ஸ்ரீகண்டன், டாக்டர் பாலமுரளி, பி.எஸ்.நாராயணசுவாமி, சுலோசனா பட்டாபிராமன்... இப்போது ஆ.கே.ஸ்ரீராம்குமார் `குருலேக யெடுவண்டி...’ என்று சும்மாவா பாடினார் தியாகராஜர்!
காலை 9:30 மணிக்குத் திரை விலகும்போது ஹாலில் ஒன்பது பேர் உட்கார்ந்திருந்தால், யாருக்கும் பயமாகத்தானே இருக்கும்? கானடா வர்ணத்தின்போது ஐஸ்வர்யாவின் குரலில் லேசான நடுக்கம். ஒன்பது, தொண்ணூறு ஆன பிறகே சகஜத்துக்குத் திரும்பினார்.
மாயாமாளவகெளளை ராகத்தில் தீட்ஷிதரின் `ஸ்ரீநாததி’ பாடிய ஐஸ்வர்யாவின் அணுகுமுறையில் அழுத்தம்... காம்போதியில் கனம்... ‘ஸ்ரீ சுப்ரமண்யாய நமஸ்தே’ பாடலைக் கையாண்டதில் நேர்மை வெளிப்பட்டது. இவரை வயலினில் கைப்பிடித்து அழைத்துச் சென்ற வி.வி.முராரியிடம் சகோதரப் பாசம் தெரிந்தது.
இரண்டு மணி நேரக் கச்சேரியில் தனி ஆவர்த்தனம் வாசிக்க மிருதங்கம் எஸ்.ஜெ.அர்ஜுன் கணேஷ் இரண்டு நிமிடம் மட்டுமே கிடைக்கப்பெற்றார். `நேர நிர்வாகம்’ பேப்பரில் அரியர்ஸ் வைத்துவிட்டார் ஐஸ்வர்யா!

பாரத் கலாச்சாரில் சித் ஸ்ரீராம். `எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்துக்காக `மறுவார்த்தை பேசாதே...’ பாடலைப் பாடி ஹிட் கொடுத்தவர். காலை 10:30 மணி கச்சேரியில் இவருக்கு முக்கால் ஹால் நிரம்பியிருந்தது. வந்தவர்கள் வழக்கம்போல் 60 ப்ளஸ்காரர்கள். வழக்கத்துக்கு மாறாக, 30 மைனஸ் இளவட்டங்களும் அதே எண்ணிக்கையில்.சினிமா வாழ்க!
கும்மென்ற குரல் வாய்க்கப்பெற்றவர் சித் ஸ்ரீராம். எந்த ஸ்தாயியிலும் எளிதாகப் பாட முடிகிறது. அதுவும் மேல் ஸ்தாயி பஞ்சமத்தைப் பிடிக்கும்போது, திரைப்படங்களில் க்்ளைமாக்ஸ் காட்சிகளின் பின்னணி இசையுடன் இவரது குரலைப் பொருத்திப்பார்க்க முடிகிறது. பாடிக்கொண்டே இருக்கும்போது தலையை முடியைக் கலைத்துவிட்டுக்கொள்வதும், சட்டையின் வலது கையைத் தள்ளிவிட்டுக்கொள்வதுமான மேனரிசங்கள் சென்ற வருடம் பார்த்த மாதிரியே இருக்கின்றன. பாட்டு அப்படியே இல்லை. நல்ல முன்னேற்றம் தெரிகிறது! சின்ன வயது டி.எம்.கிருஷ்ணா மாதிரியும் ஒலிக்கிறார்.
தோடியில் அன்று மாநாட்டுப் பந்தல் போட்டார் ஸ்ரீராம். கீழே, மேலே, இன்னும் மேலே டிராவல் செய்யும்போது `வாவ்’ சொல்லாமல் பலரால் இருக்க முடியவில்லை. சங்கதிகளை உருட்டி மிரட்டி, தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருகிறார்.
`கத்தநுவாரிகி...’ (தியாகராஜர்) கீர்த்தனை. `நித்துர நிராகரிஞ்சி முத்துகா தம்புர பட்டி...’ வரிகளில் நிரவல். தம்புராவை அழகுடன் கையில் ஏந்தி, நிர்மலமான மனதுடனும் ஸுஸ்வரத்துடனும் நியமம் தவறாமல் ராமனை பஜனை செய்பவர்களில் ஒருவராகத்தான் தெரிகிறார் ஸ்ரீராம்!
மியூசிக் அகாடமியில் நிஷா ராஜகோபாலன். தன்னை முந்திக்கொண்டு பலரும், முந்துவதற்குத் தயாராகச் சிலரும் இருப்பது பற்றியெல்லாம் இவர் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. சங்கீதத்தை நேர்மையாக அணுகுகிறார். இலக்கணம் மீறுவதில்லை. சம்பிரதாயம் உடைப்பதில்லை. உச்சரிப்புத் தெளிவு இருக்கிறது இவரிடம். பூர்விகல்யாணி, கரகரப்ரியா ராகப் பாடல்களை சரவெடியெல்லாம் இல்லாமல் கம்பிமத்தாப்பு லெவலுடன் `நச்’சென நிறுத்திக்கொண்டார்.
சிறந்த பல்லவி பாடுபவருக்கு அகாடமி கொடுக்கும் கோல்டு மெடல்மீது நிஷாவுக்கு ஒரு கண் இருப்பது தெரிந்தது! காம்போதியை கம்பீரமாக ஆலாபனை செய்து, தானம் முடித்து பல்லவிக்குப் போகும் முன் அதுகுறித்துச் சிறு குறிப்பு தந்தார். ``ஸ்ரீரங்கா தாளத்தில் அமைந்த பல்லவி’’ என்றார். பண்டிதர்களுக்கு மட்டுமே புரியக்கூடிய, 108 தாளங்களில் ஒன்று என்பது மாதிரியான விளக்கங்கள் அவை. பல்லவி,ஸ்ரீரங்கம் ரங்கநாதர்மீது அமைக்கப்பட்டது என்ற ஒன்றுதான் புரிந்தது!
பதக்கம் கிடைக்க வாழ்த்துகள்!

மதுரத்வனிக்காக ஆர்.கே கன்வென்ஷன் சென்டரில் லால்குடி ஜெயராமனின் வாரிசுகளான லால்குடி கிருஷ்ணன் - லால்குடி விஜயலட்சுமி வயலின் டூயட். அருண்பிரகாஷ், மிருதங்கம். வி.சுரேஷ் கடம். இது மிக அரிதான மைக்லெஸ் கச்சேரி என்பது கவனிக்கப்பட வேண்டியது. (போட்டோவில் தெரியும் மைக்குகள், ரெக்கார்ட் செய்வதற்காக வைக்கப்பட்டவை.)
விஜயதசமி நாளில் இந்த இரண்டு கலைஞர்களின் வீட்டு ஹாலில் பக்கவாத்தி யத்துடன் அவர்கள் வாசித்துப் பழகுவதை நேரில் கேட்ட உணர்வு தந்த கச்சேரி. வயலினின் உண்மையான நாதத்தை அந்த ஹாலின் அமைதியான சூழலில் ரசித்து, சிலிர்க்க முடிந்தது.
சுத்தஸீமந்தினி, கேதாரகெளளை, சந்திரஜோதி, மோகனம், ஆஹிரி, கோசலம் என இருவரும் வாசித்த ஒவ்வொரு ராகத் துளியிலும் `லால்குடி முகம்’ தெரிந்தது. கிருஷ்ணன் வாசித்த ஆஹிரி ஆலாபனை, உருக்கத்தின் உச்சம். அவரும் கண்கலங்கி, ஆடியன்ஸையும் கலங்கடித்தார். தன் பங்குக்கு சந்திரஜோதியை மணம் வீசச் செய்தார் விஜயலட்சுமி.

மைக்குடன் வாசித்தாலே, அருண்பிரகாஷ் மிருதங்கத்தை அடித்து இம்சிக்காமல் சாஃப்ட்டாக வாசிக்கக்கூடியவர். மைக் இல்லாமல் வி.சுரேஷுடன் இணைந்து `தனி’யில் இனிமை நாதம் பொழிந்தார்.
`கோசலை மைந்தனை, ரகுராமனை, நிதம் நினை மறவாமல்...’ என்பது அண்ணனும் தங்கையும் வாசித்த பல்லவி வரி. ஆனால், `சாவித்திரி மைந்தனை, ஜெயராமனை, நிதம் நினை மறவாமல்...’ என்றுதான், வாசிக்கும்போது மனதில் அவர்கள் பாடியிருப்பார்கள்!
- டைரி புரளும்..