
தமிழ்ப்பிரபா, படம்: கே.ராஜசேகரன்
சராசரி மனிதர்களின் உருவ அமைப்பு கொண்டவரல்லர் நாகேஷ். இரண்டரை அடி உயரம். வறுமையைத் தின்று வளரும் குடும்பம். உடன் பிறந்த எட்டுப் பேரில் இரண்டு அண்ணன், இரண்டு சகோதரிகள் மட்டும் உயிரோடு இருக்கிறார்கள். அவரவர் வாழ்வில் அவரவர் நகர்ந்துவிட, வயது முதிர்ந்த தாயையும், விபத்தில் கால்களை இழந்த அக்காவையும், நடைபாதையில் செருப்பு வியாபாரம் செய்து காப்பாற்றி வருகிறார் நாகேஷ்.
1998-ம் ஆண்டிலிருந்து, பெரம்பூர் பின்னிமில்லுக்கு அருகே உள்ள மேட்டுப்பாளையம் சாலையில் செருப்பு, பெல்ட், பர்ஸ் ஆகியவற்றை ஒன்பது ஆண்டுகளாக விற்பனை செய்தவரின் சாலையோரக் கடையை, 2006-ல் பெய்த பெருமழையொன்று வாரி அணைத்துக்கொண்டது. அங்கிங்கு என 5000 பணம் புரட்டிக்கொடுத்த அக்காவின் உதவியால் மறுபடியும் பொருள்களை வாங்கிப்போட்டு நம்பிக்கை என்கிற ஆசனத்தில் அமர்ந்து வியாபாரம் செய்துகொண்டிருந்த நாகேஷின் செவிகளில், பேரிடியாய் விழுகிறது அந்தச் செய்தி. தனக்கு ஆதரவாக இருந்த ஒரே அக்கா சாலை விபத்தில் இரண்டு கால்களையும் இழந்து வீட்டில் முடங்கிப்போகிறார்.
தன்னிடமிருந்த பொருள்களை விற்று அக்காவின் மருத்துவச் செலவுகளைப் பார்த்தவர், பின்னர் நண்பர் ஒருவரிடம் பணம் திரட்டி அதே பின்னி மில் சாலையோரத்தில் செருப்புக்கடை வைக்கிறார். 2015 பெருமழை வெள்ளத்தில் கடை எப்படி இருக்கிறதென்று பார்ப்பதற்கு வெளியே வந்தபோது அவரே மூழ்கிவிடும் அளவுக்கு வெள்ளம் இருக்க கடையை எப்படிக் கண்டுபிடிக்க முடியும்? மறுபடியும் பணம் புரட்டி, கடை. இந்தமுறை 2016-ல் வந்த வர்தா புயல் அவர் கடையை பத்திரமாக எடுத்துச் சென்றது. இனி கடை வைத்தால் அது சிறியதாக இருந்தாலும் கூடாரம் போட்டதாகத்தான் இருக்க வேண்டும் என்று நினைத்தபோதுதான் நாகேஷுக்கு, அந்த வழியாய் காரில் சென்ற ஒரு நபரின் அறிமுகம் கிடைத்திருக்கிறது.

அவர் தன் நண்பர்களிடம் நாகேஷைப்பற்றிச் சொன்னதும், அவர்களின் கூட்டுதவியினால் நுங்கம்பாக்கம் கல்லூரிச்சாலையில் இரும்பினால் செய்யப்பட்ட சிறிய கூடாரக் கடை வைத்துக் கொடுத்து, வியாபாரத்திற்காக விதவிதமான ஷூக்களும், செருப்புகளும் வாங்கிக்கொடுத்திருக்கிறார்கள்.
கடந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்து இங்கே கடை வைத்திருக்கிறார் நாகேஷ். எப்போதும் அவருக்கு எதிரியாய் வந்து நிற்கும் இயற்கைச்சீற்றம் இம்முறை அவரிடம் தோற்றது. சமீபத்தில் பெய்த பெருமழைச் சமயத்தில்கூட வண்ண வண்ணக் காலணிகளுக்கு நடுவே இரும்புக்கோட்டையில் ராஜா அமர்ந்திருப்பது போல அமர்ந்து வியாபாரம் பார்த்திருக்கிறார்.
“நாப்பத்தி நாலு வயசாய்டுச்சு சார் எனக்கு. அம்மாவும் அக்காவும் எனக்குக் கல்யாணம் பண்ணிப் பாக்கணும்னு ஆசைப்படுறாங்க” எனச் சொல்லும்போது நாகேஷ் முகம் முழுதும் சிரிக்கிறது.
ஆனால், வியாபாரம் முன்புபோல இல்லை. கடை வைத்திருந்த பழைய இடத்தைக்காட்டிலும் இது பரப்பரப்பாக இயங்கும் சாலை என்பதால் வாகனங்கள் விரையும் அந்தப் பகுதியில் யாரும் இவர் கடையைப் பொருட்படுத்துவதாக இல்லை. ஆனால், எண்பத்தெட்டு வயதாகிப் பார்வை மங்கிப்போன அம்மாவுக்காகவும், காலிழந்த அக்காவுக்காகவும் இன்னும் எத்தனை சவால்களைச் சந்திக்கவும் நாகேஷ் தயாராகவே இருக்கிறார்!