
எம்.வடிவேல், ஓவியம்: பாரதிராஜா
ஒரு காதல் ஒட்டுமொத்தத் தமிழகத்தின் பேசுபொருளானது இளவரசன் - திவ்யா திருமணத்தின்போதுதான். தலித் இளைஞனான இளவரசனை திவ்யா திருமணம் செய்துகொள்ள, திவ்யாவின் தந்தை தற்கொலை செய்துகொள்ள, இளவரசனின் கிராமமே கொளுத்தப்பட, காதல் திருமண வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்துக்கு வர, நீதிமன்றத்தில் ``என் அம்மாவுடனே போகிறேன்’’ என திவ்யா சொல்ல, இளவரசன் மர்மமான முறையில் இறக்க... என அதிர்ச்சி தரும் திருப்பங்களுடன் எல்லாமே நடந்துமுடிந்து நான்கு வருடங்களாகிவிட்டன. இந்தச் சம்பவங்களின்போது திவ்யாவுக்கு வயது 19.
திவ்யாவுக்கு இந்தச் சமூகத்தின் மீது எவ்வளவு வெறுப்பு இருந்ததோ அதே அளவு ஊடகத்தின் மீதும் இருந்தது. அதனால்தான் நான்கு வருடங்களாக யாரிடமுமே பேசாமல் தவிர்த்துவந்தார். இப்போது திவ்யாவிடமிருந்து வேகவேகமாகத் தெறித்து வந்துவிழும் வார்த்தைகளில் அவ்வளவு முதிர்ச்சி. பக்குவம். வலி நிறைந்த வார்த்தைகளுடன், ஆனால் மிக வலிமையாகப் பேசினார் திவ்யா.

``எப்படி இருக்கீங்க திவ்யா... இப்ப என்ன பண்றீங்க?’’
``நிம்மதியும் சந்தோஷமும் மட்டும்தான் இல்ல. அதைத்தவிர மத்த எல்லாமே எனக்கு இருக்கு. ஆமாம். மத்த எல்லாமே இருக்கு. வீடு, சாப்பாடு, குடும்பம்னு நல்லாத்தான் இருக்கேன். பி.ஏ இங்கிலீஷ் கரஸ்ல முடிச்சிட்டு இப்போ ஒரு காலேஜ்ல பி.எட் செகண்ட் இயர் படிச்சிட்டிருக்கேன். டிகிரில 70 பர்சென்ட் மார்க்ஸ் வாங்கினேன். பி.எட்ல-யும் 78 பர்சென்ட் மார்க்ஸ் வாங்கியிருக்கேன். என்னோட கவனம் முழுக்க இப்ப படிப்புலதான் இருக்கு. நல்லா படிச்சு முடிச்சு ஒரு டீச்சர் வேலைக்குப் போய், அம்மா, தம்பிக்கு உதவியா இருக்கணும்னு நினைக்கிறேன். அவ்ளோதான் வாழ்க்கைல என் எய்ம்.’’
``உங்க குடும்பத்தின் தற்போதைய சூழல் என்ன?’’
``அப்பாவோட கவர்மென்ட் வேலை அம்மாவுக்குக் கிடைச்சிருக்கு. மாசம் ஏழாயிரம் ரூபா சம்பளம். தம்பி ஓசூர்ல ஒரு பிரைவேட் கம்பெனில வேலைக்குப் போயிட்டிருக்கான். அம்மாவோட வாழ்க்கையை நான் கெடுத்துட்டேன். என்னால வாழ்க்கையை இழந்த எங்க அம்மாவை நான் கடைசி வரைக்கும் நல்லபடியா பார்த்துக்கணும்னு நினைக்கிறேன்.’’
``திவ்யாவுக்கு இப்போது சுதந்திரம் இருக்கா?’’
``நீங்க சுதந்திரம்னு எதைக் கேக்குறீங்க? எங்க அம்மா எனக்கு முழுச் சுதந்திரம் கொடுத்திருக்காங்க. எங்க வீட்டுக்குத் தேவையான எல்லாத்தையும் நானும் எங்க அம்மாவும்தான் தர்மபுரிக்கு ஸ்கூட்டர்ல போய் வாங்கிட்டு வர்றோம்.
ஆனா, எங்க அம்மாவும் நானும் ஒண்ணா போயிட்டு வர்றதைக்கூட ஊர்ல பலவிதமா பேசுறாங்க. `அவங்களுக்குக் கொஞ்சமாவது கவலை இருக்கா பாருங்க’ன்னெல்லாம் சொல்றாங்க. அம்மாவும் நானும் ஒரு ஆவரேஜ் வாழ்க்கையைக்கூட வாழ முடியல. எனக்கு ரொம்ப வலிக்குது. வலி தாங்க முடியல.
ரோட்டுல எங்க வீட்டுப்பக்கம் யாராவது போனாக்கூட ``அதோ பார், அந்த வீடுதான், அதான் திவ்யா’’னு கைகாட்டிட்டுப் போறாங்க. பெட்ரோல் போடப்போனா `அந்தப் பொண்ணுதான் திவ்யா’னு பேசிக்கிறாங்க. கார் எடுத்துக்கிட்டு யார் யாரோ `காலேஜ் புராஜெக்ட் பண்றோம், உங்ககிட்ட பேசணும், என்ன நடந்துச்சு சொல்லுங்க’ன்னு வர்றாங்க. மருந்துக்கடைக்கு ஒரு மருந்து வாங்கக்கூடப் போக முடியல. அப்படி என்னதான் நான் தப்பு பண்ணுனேன்னு எனக்குத் தெரியல. ஒரு காதல் பண்ணுனது குத்தமா? எல்லோருக்கும் வர்றதுதானே அது. எனக்குப் பிடிச்சவனைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு அவனோட வாழணும்னு நினைச்சேன். அதுல என்ன தப்பு இருக்கு?
கொஞ்ச நாள் முன்னாடி ஒரு ஸ்கூல்ல டீச்சர் வேலைக்குக் கேட்டா, ``டீச்சர்னா கொஞ்சம் ஒழுக்கம்

எதிர்பார்ப்பாங்க’’ன்னு சொல்றாங்க. அப்படி என்ன நான் ஒழுக்கம் கெட்டுப்போயிட்டேன்? பல சமயம் வெளில இந்த மாதிரி விஷயங்களை தைரியமா ஃபேஸ் பண்ணிட்டு வந்தாலும், வீட்டுக்கு வந்ததும் மனசு வலிக்க ஆரம்பிச்சிடுது. செத்துடலாமோன்னு பலமுறை யோசிச்சிருக்கேன்.
சின்ன வயசுல இருந்தே நல்லா டிரஸ் பண்ணுவேன். இப்போ காலேஜுக்கு நல்லா டிரஸ் போட்டுட்டுப் போகணும்னு ஆசைப்பட்டுத் துணி எடுத்துட்டு வந்தாக்கூட அதைப் போட்டுட்டு வெளில போக பயமாயிருக்கு. ``ஜாலியா சுத்துதுன்னு’’ கமென்ட் அடிப்பாங்களேன்னு தோணுது. என்னைப் பாத்து எங்க அம்மாவும் நல்ல துணி போடுறதில்லை.
நான் மட்டும் அப்படியென்ன தப்பு செஞ்சிட்டேன்னுதான் தோணிக்கிட்டே இருக்கு. கொஞ்ச நாள் முன்னாடி என் ஃப்ரெண்டோட போன்ல பேசிக்கிட்டிருந்தேன். அவ ``ஒரு நிமிஷம் இரு திவ்யா, குழந்தை அழுவுறான்’’னு சொன்னா. (அழுகிறார்) இந்த வயசுல எனக்கும் ஒரு குழந்தை இருந்திருக்கும்ல, நானும் சந்தோஷமா இருந்திருப்பேன்லனு இந்த மாதிரி தாட்ஸ் வரும்போதுதான் ஏக்கமாகிடுது. என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் கல்யாணமாகி குழந்தைகளோடு இருக்காங்க. நானும் இப்படித்தான ஒரு புருஷன், குழந்தைன்னு எனக்குப் புடிச்ச வாழ்க்கையை வாழ ஆசைப்பட்டேன். ஏன் என் விஷயத்துல எல்லோரும் இப்படிப் பண்ணிட்டாங்கன்னு தோணிட்டே இருக்கு. `இந்தப் பொண்ணு இன்னும் அப்படியேதான் இருக்காளா’ன்னு பேசுறாங்க. நீங்க என்னவேணா என்னைப்பத்திப் பேசுங்க. ஆனா, ஃபேஸுக்கு முன்னாடி என்னை அவமானப்படுத்தாதீங்க. அதைத்தாங்குற தைரியம் எனக்கு இல்ல. ரொம்ப வலிக்குது. இங்க பேசிப்பேசியே சாவடிச்சிடுவாங்களோன்னு தோணுது. என்னை விட்டுடுங்க. நல்லது சொல்லக்கூட என்னைப் பாக்க யாரும் வராதீங்க. இந்த சமுதாயத்தோட எந்த சகவாசமும் வெச்சிக்க நான் விரும்பல. யாரோட ஞாபகத்துலயும் இருக்க எனக்குப் பிடிக்கல.’’
``திவ்யா, எந்த இடத்தில் உங்கள் காதல் வாழ்க்கையை இழந்ததாக உணர்கிறீர்கள்?’’
``லவ் பண்ணுனதே தப்புன்னு ஒத்துக்கமுடியல. `அவன் ஜீன்ஸ் பேன்ட் போட்டுனு உன்னை மடக்குனானா’ன்னு கேட்டாங்க. அவன், அவனுக்குப் புடிச்ச ஜீன்ஸ் பேன்ட் போட்டான். நானும்தான் ஜீன்ஸ் போட்டேன். இதுல என்ன இருக்கு. அவன் எந்த ஹீரோயிஸமும் என் முன்னாடி பண்ணல. நானும் எந்த ஹீரோயின் மாதிரியும் அவன் முன்னாடி பண்ணல. எங்களுக்கு வந்தது ஒரு இயல்பான காதல். அவ்ளோதான். எனக்குப் புடிச்சிருந்துச்சு. அதை எங்க அப்பாகிட்ட சொன்னேன். அவரு புரிஞ்சிக்கல. அவர் வேணாம்னாரு, நான் புரிஞ்சிக்கல. என் வயசுக்கு நான் புரிஞ்சிக்கல. என் வயசை எங்க அப்பா புரிஞ்சிக்கல. இதுதான் நடந்துச்சு.
`இளவரசனைக் காதலிக்கிறேன்’னு நான் சொன்னதும் எனக்கும் எங்க அப்பாவுக்கும், வாக்குவாதம் வர ஆரம்பிச்சது. எங்க அப்பா கேட்ட கேள்விங்களுக்கு நான் ஆவேசமா பதில் சொல்லுவேன். ஒரு தடவை அப்பா `இல்லம்மா, நீ காதலிச்ச பையன் 60, 70 கிலோமீட்டர் தாண்டி இருந்தாக்கூட சாதி ஒரு பிரச்னையில்லை. சரி, உன் வாழ்க்கைனு விட்டுருவேன். ஆனா, இதே வழில இருக்கான்மா. வேணாம்’ன்னு சொன்னார். நம்ம அப்பாவே இவ்ளோ இறங்கிவர்றாரே, அப்போ கல்யாணம் பண்ணிட்டா எல்லாம் சரியாய்டும்னுதான் இளவரசனோடு போனேன். எங்க அப்பா ரொம்ப போல்டான மனுஷன். அதனால நான் பாசிட்டிவா மட்டும்தான் யோசிச்சேன். நெகட்டிவா கொஞ்சம்கூட யோசிக்கல. எங்க அப்பா தற்கொலை பண்ணிப்பாருன்னு நான் நினைச்சே பார்க்கல.
எங்க அப்பா செத்ததிலிருந்து, வேதனை தாங்க முடியாம என்னைவிட இளவரசன்தான் அவ்ளோ அழுவான். `என்னாலதான் உங்க அப்பா செத்துட்டார்’னு ரொம்ப ஃபீல் பண்ணுவான். ஏன்னா, எங்க அப்பா அளவுக்கு இளவரசன் என்மேல பாசம் வெச்சிருந்தான். அந்த நேரத்துலதான் இளவரசன் ஊரையே அடிச்சு எரிச்சிட்டாங்க. வீடுங்களை எரிச்சதைக் கேள்விப்பட்டதும் பயந்துட்டேன். பதிலுக்கு எங்க கிராமத்தையும் எரிச்சிட்டதா சொன்னாங்க. இன்னும் பதறிட்டேன். நானும் இளவரசனும் சரியா வாழவே இல்லை. ஒவ்வொரு நாளும் அடுத்து என்ன நடக்குமோன்னு அவ்ளோ பயமா இருக்கும்.
கோர்ட்ல லாஸ்ட்டா விசாரணை முடிஞ்சு போறப்போ இளவரசன் என்னைப் பார்த்துட்டே நடந்து போனான். ஒரு வார்த்தையும் பேசல. ஆனா, அவன் ஏதோ பேச வந்தானோ, நாமளாவது `என்ன இளவரசா’ன்னு கேட்டிருக்கலாமோனு இப்ப தோணுது. அந்தப் பார்வைதான் இன்னும் என் கண் முன்னாடி இருக்கு.
இப்ப அம்மா, `நான்தான் வாழ்க்கையை இழந்துட்டேன். நீ பிடிச்சவனோட சந்தோஷமா இரும்மா’னு சொல்றாங்க. அப்ப கோர்ட்ல இருக்கும்போதே `திவ்யா, நான்தான் வாழ்க்கையைத் தொலைச்சிட்டேன். நீயாவது புருஷனோட இரு’ன்னு சொல்லியிருந்தா நான் கொஞ்சம் யோசிச்சிருப்பேன். ஆனா, அம்மாவால எதையும் அப்ப பேசமுடியல. அம்மா, நாம இல்லாமல் கஷ்டப்படுறாங் களோன்னு நினைச்சுதான், அம்மாகூடப் போறேன்னு சொன்னேன். இப்ப அம்மாவே நீ யாரையாவது கல்யாணம் பண்ணிட்டு சந்தோஷமா இரும்மான்னு சொல்றாங்க. ஆனா, வேற யாரையும் நினைக்க என்னால முடியல.’’
``தப்பான முடிவு எடுத்துட்டதா நினைக்கிறீங்களா?’’
``கொஞ்சம் பொறுமையா இருந்திருக்கலாமோன்னு யோசிக்கிறேன். அப்பாகிட்ட இன்னும் பேசிப் புரியவெச்சிருக்கலாமோனு தோணுது.’’
``உங்களுக்கு எதுவும் மிரட்டல் இருக்கா?’’
``என்னை யாரும் மிரட்டல, என்னை யாரும் அடிமைப்படுத்தல. நான் வீட்ல அம்மாவோடு இருக்கேன். எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை.’’
``இன்னொரு வாழ்க்கை அமைச்சுக்கலாம்னு அம்மா சொல்றாங்களே... அவங்க சொல்றதுல நியாயம் இருக்கே?’’
``இளவரசன் மேல எனக்கு வந்த அந்த ஈர்ப்பு வேற யார் மேலயாவது வருமான்னு எனக்குத் தெரியாது. அதை நான் இந்த நிமிஷம் வரைக்கும் விரும்பல. நான் சொல்ல விரும்புறது ஒண்ணே ஒண்ணுதான். எங்களை வெச்சு அரசியல் பண்ணாதீங்க. எங்களை விட்டுடுங்க. எங்க வலியைக் கிளறாதீங்க. நாங்க ஒண்ணா வாழ உதவி செய்யாத இந்த ஊரும், எந்த அரசியல் தலைவரும் எங்களைப் பத்தி மேடையில பேசி ஆதாயம் தேடினா, அதைவிட அசிங்கம் வேற இல்லை.’’