மற்ற எபிசோடுகள்
Published:Updated:

தெய்வத்தான் ஆகாதெனினும்! - க்ளவுனிங் டாக்டர்

தெய்வத்தான் ஆகாதெனினும்! - க்ளவுனிங் டாக்டர்
பிரீமியம் ஸ்டோரி
News
தெய்வத்தான் ஆகாதெனினும்! - க்ளவுனிங் டாக்டர்

தமிழ்ப்பிரபா, படம்: கே.ராஜசேகரன்

``சின்ன வயசுல இருந்தே எனக்கு சினிமா மேலதான் ஆர்வம். ஆனா, வீட்ல இன்ஜினீயரிங் படின்னு சொல்லிட்டாங்க. கடைசி செமஸ்டர்ல சேர்த்து வெச்சிருந்த 13 அரியர்ஸையும் ஒருவழியா கிளியர் பண்ணிட்டு சினிமால நடிக்க, சென்னை கிளம்பிவந்துட்டேன்’’ என அறிமுகம் கொடுக்கிறார் மாயா. சோஷியல் மீடியாக்களில் `மென்டல் மாயா’ என்கிற அடைமொழியுடன் அராத்தாக வலம்வரும் மாயா இப்போது `துருவ நட்சத்திரம்’, `2.0’ என சினிமாவில் பிஸி.  

``சென்னை வந்ததும் தற்செயலா ஜேம்ஸ் வசந்தன் சார் இயக்கிய `வானவில் வாழ்க்கை’ படத்தில் பாடவும், நடிக்கவும் வாய்ப்பு கிடைச்சது. படம் ஒழுங்கா போகலை. அதனால், இனிமேல் சினிமால நடிக்க வாய்ப்பு கிடைக்காதுனு மன உளைச்சலாகி ஆறு மாசம் வீட்டுக்குள்ளேயே உட்கார்ந்துட்டேன்.  அப்பதான் வீட்டுக்குப் பக்கத்துலேயே ‘லிட்டில் தியேட்டர்’னு ஒரு நாடக்குழு வொர்க் ஷாப் நடத்துறாங்கன்னு கேள்விப்பட்டு  அவங்களைப் போய்ப் பார்த்தேன்’’ என்னும் மாயா, இன்று லிட்டல் தியேட்டர் டிராமா குழுவில் மிக முக்கியமான பர்ஃபாமர். ஆனால், இவற்றைவிட மாயாவுக்கு மனநிறைவு தரும் பட்டம் `க்ளவுனிங் டாக்டர்’.
 

தெய்வத்தான் ஆகாதெனினும்! - க்ளவுனிங் டாக்டர்

`` ‘Laughter heals faster’னு சொல்லுவாங்க. நாங்க மெடிக்கல் டாக்டர் கிடையாது. ஆனா அவங்களாலகூட பேஷன்ட்கிட்ட கொண்டுவர முடியாத மாற்றத்தை, நாங்க கொண்டுவர முடியும். நோயோட வலி, டென்ஷன், பணம் எவ்வளவு ஆகுமோங்கிற பயம்னு பல விஷயங்களால, ஹாஸ்பிட்டல்ல எப்போதும் ஒரு இறுக்கமான சூழல் இருக்கும். அப்படியான ஒரு சூழலை எங்களோட கோமாளித்தனத்தால சந்தோஷமாக்க முயற்சி பண்ணுவோம். ஒரு உண்மை என்னன்னா நோயை குணப்படுத்துறதுல மெடிசனுக்கு மட்டுமே பங்கில்லை, பேஷன்ட்டுக்கு நாம கொடுக்கிற, ஷேர் பண்ணிக்கிற சின்னச்சின்ன சந்தோஷங்கள்கூட இன்னும் வேகமாக குணப்படுத்தும். அதுல ஒரு பங்கைத்தான் நாங்க செஞ்சிட்டிருக்கோம்” என்று புன்னகைக்கிறார் மாயா.

இவர் பெரும்பாலும் தேர்ந்தெடுப்பது சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவ மனையைத்தான். வாரத்திற்கு மூன்று முறை தன் குழுவினருடன் அங்கே சென்றுவிடுகிறார். எட்டு மாடிகளில் உள்ள அனைத்து வார்டுகளுக்கும் சென்று அங்குள்ள குழந்தைகளிடம் பேசுவது, கைவிரல்களைக் கொண்டு மேஜிக் செய்வது, தங்களுக்குள்ளேயே சண்டையிட்டுக்கொள்வது, நடந்து போய் தரையில் வழுக்கி விழுவது, கதவுக்குப் பின் ஒளிந்துகொண்டு மூக்கு நுனியின் மீது இருக்கும் சிவப்புப்பந்தை உருளச் செய்வது போன்ற எளிமையான விஷயங்கள்தான் செய்கிறார் மாயா. ஆனால், அவை அந்தச் சூழலையே மகிழ்வானதாக மாற்றுகிறது. வலியை மறந்து குழந்தைகள் சிரிக்கிற காட்சிகளை நினைவுகூரும்போது மாயாவின் கண்கள் கலங்குகின்றன.

“இந்தியால எல்லா ஹாஸ்பிட்டல்லயும் ஒரு க்ளவுன் டாக்டர் இருக்கணும்கிறதை நிர்வாகம் புரிஞ்சிக்கணும். அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகள்ல ஹாஸ்பிட்டலுக்கு ஒரு க்ளவுன் டாக்டர் இருக்கணுங்கிறதை சட்டமாவே வெச்சிருக்காங்க” என்கிறார் மாயா.

தெய்வத்தான் ஆகாதெனினும்! - க்ளவுனிங் டாக்டர்

“சென்னைல ஒரு பெரிய பிரைவேட் ஹாஸ்பிட்டல்ல போய் க்ளவுனிங் பண்ணிட்டி ருக்கும்போது ஒரு சின்னப் பையனைப் பார்த்தோம். அவனுக்கு உடம்பு முழுக்க பேரலைஸ்ட் ஆகியிருந்தது. தாடையைக்கூட அசைக்க முடியல. அவங்கிட்ட பேசலாம்னு நாங்க போனபோது, அவங்க அப்பா அம்மா ‘எங்க பையனை எங்களுக்குப் பாத்துக்கத் தெரியும்... நீங்க கிளம்புங்கன்னு’ ரொம்பக் கோபப்பட்டாங்க. `டூ மினிட்ஸ் மட்டும் உங்க பையன்கிட்ட ஸ்பென்ட் பண்ண விடுங்கன்னு’ கேட்டேன். அவங்க சரின்னு தலையை மட்டும் ஆட்டிட்டு ரூமுக்கு வெளில போய்ட்டாங்க. அந்த பையனோட சிரிப்புச் சத்தம் கேட்டு உள்ள வந்த அவங்க அம்மா அழுதது இன்னும் என் கண்ணுக்குள்ளயே நிக்குது” எனக் கலங்குகிறார்.

மாயாவிடம் இதுபோன்ற நிறைய அனுபவங்கள் இருக்கின்றன. தன்னுடைய நையாண்டியின் மூலம் இறுக்கமான சமூகத்தைச் சிரிக்க வைக்கும் கலைஞர்களுக்குக் காலத்தில் எப்போதும் அழியாத இடமுண்டு.
புன்னகை எனும் மருந்தால் பலரின் மனக்காயங்களை ஆற்றும் மாயாவுக்கு வாழ்த்துகள் பல!