மற்ற எபிசோடுகள்
Published:Updated:

தெய்வத்தான் ஆகாதெனினும்! - "இன்னைக்கு உங்களுக்கு என்னோட கிஃப்ட்!”

தெய்வத்தான் ஆகாதெனினும்! - "இன்னைக்கு உங்களுக்கு என்னோட கிஃப்ட்!”
பிரீமியம் ஸ்டோரி
News
தெய்வத்தான் ஆகாதெனினும்! - "இன்னைக்கு உங்களுக்கு என்னோட கிஃப்ட்!”

தமிழ்ப்பிரபா, படம்: கே.ராஜசேகரன்

``பக்கத்துல இருக்கிற ஸ்கூலுக்கு என் பொண்ண தோள்ல வெச்சுத் தூக்கிட்டுப் போனப்போ அவளுக்குப் பத்தொன்பது வயசு. ‘இவ்ளோ வயசாயிடுச்சு இதுக்கு அப்புறம் ஸ்கூல்ல சேத்து என்ன ஆகப்போகுது’ன்னு சொன்னப்போ என்னைவிட என் பொண்ணு ரொம்ப அவமானப்பட்டா. அவளுக்கு உடம்புலதான் குறையே தவிர மூளையில இல்லைங்க” என நிவேதாவின் அம்மா சொன்னபோது அதை ஆமோதிக்கும் விதமாகத் தலையை ஆட்டிச் சிரித்தார் நிவேதா.

ஒன்றரை வயதில் திடீரென ஒரு நாள் ஜுரம் அதிகமாக மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றதற்குப் பிறகு நிவேதா பழையபடியே வீடு திரும்பவில்லை. பன்மெய்ப்புல சவால் கொண்டக் குழந்தையாக மாறினார் நிவேதா. அப்படிப்பட்ட நிவேதா இப்போது தன் இருபத்தேழு வயதில் டெல்லி சென்று தேசிய விருது பெற்றுவந்திருக்கிறார்.

நிவேதாவுக்கு கேட்கும் திறனும் பேசும் திறனும் இல்லை. காலூன்றிச் சரியாக நடக்க முடியாது. உடல் முழுதும் எப்போதும் நடுங்கிக்கொண்டே இருக்கும். உடல்ரீதியாக இப்படிப் பல சவால்களைக் கொண்ட ஒரு பெண் தன்னுடைய நம்பிக்கையினாலும், பெற்றோர்களின் அரவணைப்பினாலும் மட்டுமே வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

நிவேதாவின் நிலையை வைத்து அவரை சராசரிப் பள்ளியிலும் சேர்க்க முடியவில்லை. நிவேதாவால் நடக்க முடியாது என்பதால் காது கேளாதோர் பள்ளியிலும் அவரை  அனுமதிக்க மறுத்துவிட்டனர். பிறகு வீட்டருகில் உள்ள பள்ளியில் ஆறாம் வகுப்புவரை அவரைப் படிக்க வைத்தார்கள்.  அதற்கு மேல் அந்தப் பள்ளியிலும் நிவேதாவால் படிக்க இயலவில்லை.

தெய்வத்தான் ஆகாதெனினும்! - "இன்னைக்கு உங்களுக்கு என்னோட கிஃப்ட்!”

சுமார் பத்தாண்டுகளாக நிவேதாவை வீட்டிலேயே  வைத்திருக்க வேண்டிய சூழல். மிகவும் தனிமையாக உணர்ந்த நிவேதா மன அழுத்தத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்தார். பிறகு தனக்காகவே வாழ்கையை அர்ப்பணித்திருக்கும் பெற்றோர்களின் முகம் நினைவுக்கு வர, தனக்கென அடையாளங்களை உருவாக்கும் மனோதிடத்துடன், வீட்டில் நாம் பயன்படுத்திக் குப்பைத்தொட்டியில் வீசும் பொருள்களைக் கலைப்பொருள்களாக மாற்றும் வேலையைச் செய்ய ஆரம்பித்தார். அம்மா அப்பா வேலை முடிந்து வீட்டுக்கு வரும்போது அவர்களை அசத்தும்விதமாக ‘`இன்னைக்கு உங்களுக்கு என்னோட கிஃப்ட்’’ என்று கொடுத்து அசத்துவார்.

பன்மெய்ப்புல சவால் உள்ளவர்களுக்கு என்று சென்னைக்கு அருகே முட்டுக்காட்டில் சிறப்புப் பள்ளி இருக்கிறதென்று பெற்றோர்களுக்குத் தெரிந்தபின் நிவேதாவை அங்கே கொண்டு சேர்த்திருக்கிறார்கள். நிவேதாவின் நம்பிக்கை அதிகரித்திருக்கிறது. அங்கே முறையாகப் பயிற்சி பெற்ற பின்னர் இன்னும் விதவிதமான அணிகலன்கள், நகைகள் செய்யக் கற்றுக்கொண்ட நிவேதா அங்கு பயிலும் ஆயிரம் மாணவர்களிலேயே சிறப்பாகத் திகழ்ந்திருக்கிறார். தான் செய்த பொருள்களை அங்கேயே விற்பனை செய்து அதில் வந்த வருவாயில் தன் அப்பாவுக்கு இரண்டு சட்டைகள் வாங்கிக்கொடுத்திருக்கிறார்.  ``என்னோட வாழ்க்கையில நான் சம்பாதிச்ச பெரிய சொத்துன்னா அந்த ரெண்டு சட்டைதான் சார்” என்று  நிவேதாவின் அப்பா  சொல்லும்போது, நாக்கு வெளியே தொங்கிய நிலையில் சிரிக்கிறார் நிவேதா. 
 
நிவேதாவின் திறமையை அறிந்த National Institute for Empowerment of Persons with Multiple Disabilities என்கிற மத்திய அரசு அமைப்பு, நிவேதாவைத் தற்சார்புத் திறனாளியாக தேசிய அளவில் அங்கீகரித்துக் கௌரவித்திருக்கிறார்கள்.

எப்போதும் நடுங்கிக்கொண்டிருக்கும் கைகளைக் கொண்டு நிவேதா செய்த விதவிதமான காதணிகள், நெக்லஸ், செல்போன் கையுறைகள், கலைவண்ண வேலைப்பாடுகளுடன் செய்த மிதியடிகள் என்று விதவிதமான பொருள்கள் வீடு முழுக்க இறைந்துகிடக்கின்றன. நிவேதா அருகில் சென்று ``எப்படி இருக்கீங்க?’’ என்று  கேட்டால், அவர் சிரித்துக்கொண்டே கண்களை மூடி, பறப்பது போல இரண்டு கைகளையும் அசைக்கிறார்!