
இன்பாக்ஸ்
ஆண்டோனியோ கிரீஸ்மேன்... கால்பந்து உலகின் புதிய சென்சேஷன். பிரெஞ்சு கால்பந்து வீரரான கிரீஸ்மேன் அட்லெட்டிகோ கிளப் அணிக்காக விளையாடிவருகிறார். சமீபத்தில் லா-லிகா தொடரில் ஒரே போட்டியில் 4 கோல்களை அடுத்தடுத்து அடித்ததில் ரசிகர்கள் எண்ணிக்கை ஏராளமாக ஏறியிருக்கிறது! சீக்கிரமே ஆண்டோனியோ ஸ்பெயினின் புகழ்பெற்ற கால்பந்தாட்ட கிளப்பான பார்சிலோனாவுக்காகவும் ஆடப்போகிறார் என்பதில் ரொம்பவே உற்சாகமாக இருக்கிறது ஆண்டோ ஆர்மி. வர்லாம் வர்லாம்வா!

மீண்டும் நடிக்கவிருக்கிறார் ஐஸ்! குழந்தைபெற்றுக்கொண்டதில் அதிகரித்த உடல் எடையை ஸ்பெஷல் ட்ரெய்னர் உதவியுடன் குறைத்துக்கொண்டிருக்கிறார். அடுத்து இந்தியில் தயாராகவிருக்கும் ஏ.ஆர்.முருகதாஸின் ரமணா ரீமேக்கில் ஐஸ்வர்யாராய்தான் ஹீரோயினாம்! வானவில்லே வானவில்லே...

குவான்டின் டாரன்டினோவின் அடுத்த படத்தில் பிராட் பிட்டும் லியோனார்டோ டி காப்ரியோவும் இரட்டை ஹீரோக்களாக நடிக்கிறார்கள். `சிவனும் சக்தியும் சேர்ந்தா மாஸுடா’ என சமூகவலைதளங்களில் இருவருடைய ரசிகர்களும் கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள். கூடவே தல-தளபதி ரசிகர்களைப்போலவே இருவரில் யாருக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும் என்கிற சர்ச்சைகளையும் துவக்கியிருக்கிறார்கள்! வெயிட்டிங்ங்ங்

தல வீட்டில் ஏற்கெனவே ஒரு பாட்மின்டன் சாம்பியன் இருக்கிறார். இப்போது தளபதி வீட்டிலும் ஒருவர் உருவாகியிருக்கிறார். விஜய்யின் மகள் திவ்யா சாஷா தீவிரமாக பாட்மின்டன் விளையாடிவருகிறார். சென்னையில் உள்ள அமெரிக்கன் பள்ளியில் படித்துவரும் சாஷா பள்ளி அளவிலான போட்டிகளில் விளையாடி வெற்றிபெற்றுவருகிறார். அதேபள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் விஜய்யின் மகன் சஞ்சய் ஆய்வுப்பணிகளில் ஆர்வமாக இருக்கிறார், அதற்கெனப் பள்ளியிலிருந்து விருதும் வாங்கியிருக்கிறார்! மாஸு-கிளாஸு

பாலாவின் `வர்மா’ பட ஷூட்டிங் தொடங்கிவிட்டது. விக்ரமின் மகன் `துருவ்’ ஹீரோவாக நடிக்கும் இந்தப்படம் தெலுங்கில் சூப்பர் ஹிட் அடித்த `அர்ஜுன் ரெட்டி’ படத்தின் ரீ-மேக். துருவ்வுக்கு ஜோடியாக நடிப்பதும் இன்னொரு கலைவாரிசுதான். கெளதமியின் மகள் சுப்புலட்சுமி இந்தப்படத்தின் மூலம் ஹீரோயினாகத் தமிழில் அறிமுகமாகிறார். அடி தூளே!

வெப்சீரிஸ்தான் இப்போதைய ட்ரெண்ட். மாதவன், ராம்கோபால் வர்மா மாதிரியான பெரிய நட்சத்திரங்கள்கூட அந்தப்பக்கம் ஆர்வம் காட்ட ஆரம்பித்திருக்கிறார்கள். தமிழிலும் பரவும் இந்த வெப்சீரிஸ் மாரத்தானில் இணையவிருக்கிறார் பாபி சிம்ஹா. `அருவி’ தயாரிப்பாளர் எஸ். ஆர். பிரபு தயாரிக்கவிருக்கும் வெப்சீரிஸில் அவர்தான் நாயகன். புதுரூட்டுலதான்...

தீபிகா படுகோனுக்குப் பறவைகள் என்றால் கொள்ளைப் பிரியம். அதனாலேயே தீபிகாவைக் கவர அவரின் நண்பர்களெல்லாம் விதவிதமான பறவைகளைப் பரிசளிப்பார்கள். அந்தப் பறவைகளையெல்லாம் தனது பெங்களூரு வசந்த் நகரிலுள்ள வீட்டில் பத்திரமாக வளர்த்துவருகிறார். வீட்டுக்குள் வேடந்தாங்கல்!
கேரளாவில் வெளியாகும் கிரஹலட்சுமி மகளிர் பத்திரிகைதான் சென்ற வாரத்தில் தேசிய வைரல். அட்டைப்படத்தில் கிலு ஜோசப் என்கிற மலையாள எழுத்தாளர் குழந்தைக்குப் பால் கொடுப்பது போன்ற போஸில் இருக்க, பரபரவெனப் பற்றிக்கொண்டது இணையம்.
தாய்ப்பால் கொடுப்பதும் சகஜமான விஷயம்தான் என்கிற கருத்தை ஊக்கப்படுத்தும் விதமாக இந்த அட்டைப்படத்தை வெளியிட்டிருந்தது அந்தப் பத்திரிகை. கவர் போட்டோவுக்கு ஒருபக்கம் பாராட்டுகள் கிடைத்தாலும், இன்னொருபக்கம் எதிர்ப்பும் சில வழக்குகளும்கூட குவியத் தொடங்கியிருக்கிறது. வைரலோ வைரல்!