
சனா, படம்: வீ.நாகமணி
``சீரியல்ல நடிக்கப் போறேன்னு சொன்னவுடனேயே என்னைவிட என் மாமியார் ரொம்ப சந்தோஷம் ஆகிட்டாங்க. சரியா எட்டு மணிக்கு டிவி முன்னாடி பிரசென்ட் ஆகிடுவாங்க. ‘மா, இன்னைக்கு உன் நடிப்பு நல்லாயிருந்துச்சு மா’னு உடனே போன் பண்ணிச் சொல்லுவாங்க. ஆனா, என் வீட்டுக்காரர்தான், ‘ உன்னைக் கஷ்டப்படுற மாதிரி பாக்க முடியல’னு ரொம்ப ஃபீல் பண்றார்’’ - சிரித்தபடியே உற்சாகமாகப் பேசுகிறார் சன் டிவி ‘நாயகி’யின் நாயகி விஜயலட்சுமி.
``என்ன திடீர்னு சீரியல் பக்கம் வந்துட்டீங்க?’’
``கல்யாணம் ஆனவுடன் சினிமா வேண்டாம்னு நான்தான் முடிவு பண்ணுனேன். மகன் நிலன் பிறந்தவுடன் அவனைப் பார்த்துக்கவே நேரம் சரியா இருந்துச்சு. இடையில் ‘பண்டிகை’ படம் தயாரிச்சேன். இதுக்கு இடையில் நிறைய சீரியல்கள் வாய்ப்பு வர ஆரம்பிச்சது. ஆனா, அப்ப எனக்கு சீரியல்ல நடிக்கிற ஐடியா இல்ல. கேம் ஷோ ஏதாவது வந்தா பண்ணலாம்னுதான் இருந்தேன். ஏன்னா, பெரிய கமிட்மென்ட் இருக்காது. நான், நானா போயிட்டு ஜாலியா வரலாம்னு நினைச்சேன்.
ஒரு நாள் நானும், ஃபெரோஸூம் படத்துக்குப் போயிருந்தோம். அங்க பார்த்தா ‘தெய்வமகள்’ சீரியல் இயக்குநர் குமரன்சார் வந்திருந்தார். `இந்தப் பொண்ணு நம்ம சீரியலுக்கு கரெக்டா இருப்பா’னு, என்னைப் பார்த்தவுடனேயே அவருக்குத் தோணியிருக்கு. என் வீட்டுக்காரர்கிட்ட அவரை அறிமுகப்படுத்திக்கிட்டு, ‘என் சீரியல்ல மேடம் நடிப்பாங்களா’னு கேட்டார். ஃபெரோஸ் உடனே, ‘பக்கத்துலதானே இருக்காங்க அவங்ககிட்டயே கேளுங்க’னு சொல்லிட்டார். அப்புறம் என்கிட்ட குமரன் சார் கதை சொன்னார். எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்துச்சு. `நாயகி’ சீரியல்ல நடிக்க ஓகே சொல்லிட்டேன்.’’

``சீரியல் நடிகை அனுபவம் எப்படி இருக்கு?’’
``சினிமாவில் நடிக்கும்போது மேக்அப் கலையாம இருக்கணும்ங்கறதுக்காக அப்படியே உட்கார்ந்த இடத்திலேயே இருப்போம். சீரியல்ல அப்படியில்லை. டேக் அப்படினு சொல்லிட்டா தூங்கிட்டு இருந்தாகூட தலையை அப்படியே சீவிட்டு நடிக்க வந்துருவேன். மேக்அப்பே போடாமதான் நடிக்கிறேன். அதுமட்டுமில்லாம, வீட்டுக்குப் பக்கத்துலதான் ஷூட்டிங் ஸ்பாட். அதனால பையனைப் பார்க்கணும்னு தோணுச்சுனா பிரேக் டைம்ல வீட்டுக்கு ஓடிடுவேன். சினிமாவைவிட சீரியல் ஷூட்டிங் ரொம்ப ரிலாக்ஸா இருக்கு. வேலைக்குப் போற ஃபீலே இல்லை. முக்கியமா என் கேரக்டர் ஆனந்தி எனக்கே ரொம்பப் பிடிச்சிருக்கு. எல்லாப் பெண்களும் அவங்கவங்க வீட்ல நாயகிதான். அவங்க எல்லோருடைய பிரதிபலிப்பாதான் நான் நடிக்கிறேன்.’’
``சீரியல் நடிகையா நீங்க சந்திச்ச சவால் என்ன?’’
``முதல் நாள் ஷூட்டிங் போறப்போ டைரக்டர்கிட்ட ரொம்ப பந்தாவா, ‘சார், எனக்கு ப்ராம்ப்ட் தேவையில்ல. தமிழ் நல்லா பேசுவேன். அதனால நானே வசனம் பேசுறேன்’னு சொன்னேன். ஆனா, மனப்பாடம் பண்ணிப் பேசவே முடியல. ஏன்னா, சினிமான்னா ஒரு நாளைக்கு ரெண்டு, மூணு சீன்ஸ்தான் இருக்கும். அதனால, மனப்பாடம் பண்ணி வசனம் பேசிருவேன். இங்க ஒரு நாளுக்கே நிறைய சீன்ஸ் எடுக்குறாங்க. அடுத்தடுத்த சீன்ஸுக்குத் தாவிட்டே இருக்கோம். அதனால, எனக்கு மனப்பாடம் பண்ற வேலையெல்லாம் வேலைக்கு ஆகாதுன்னு தோண ஆரம்பிச்சிடுச்சு. இயக்குநர் சொன்னபடி ப்ராம்ப்ட் எடுக்க ஆரம்பிச்சுட்டேன்.’’
``சீனியர் நடிகை அம்பிகாகூட நடிக்குற அனுபவம் எப்படியிருக்கு?’’
``அவங்க சீனியர் ஆர்ட்டிஸ்ட்டா இருந்தாலும் பந்தாவே இல்லாம நடந்துக்குவாங்க. குழந்தை மாதிரி ரொம்ப ஸ்வீட். ஃப்ரீ டைம்ல அவங்க நடிச்ச படங்களைப் பத்தி, ரஜினி, கமல் பத்தியெல்லாம் சொல்லுவாங்க. ஷூட்டிங் ஸ்பாட்ல ஜாலியா பேசிட்டிருப்போம்.’’
``தயாரிப்பாளர் விஜயலட்சுமியோட அடுத்த படம் எப்போ?’’
``நானும், என் கணவரும் லவ் பண்ணிட்டிருக்கும் போதே சினிமா தயாரிக்கணும்னு முடிவு பண்ணிட்டோம். என் கணவர் இயக்கிய `பண்டிகை’ படம்தான் முதல் தயாரிப்பு. ஆனா, தயாரிப்பாளர் பொறுப்பை ஏத்துக்கிட்ட உடனே எனக்கும், என் கணவருக்கும் இடையே நிறைய டிஷ்யூம் டிஷ்யூம். ஆபீஸுக்குப் போனாகூட என் ரூமுக்குப் போயிட்டு அவரைப் பாக்காம அப்படியே ரிட்டன் ஆகிருவேன். போதும்டா சாமி இந்தத் தயாரிப்பாளர் வேலைனு நினைக்குற அளவுக்கு ஆகிருச்சு. ஆனா, ஷூட்டிங் ஷெட்யூல் முடிஞ்சிருச்சுன்னா ஜாலியா பேசிக்கிட்டு ஊர் சுத்த ஆரம்பிச்சுருவோம். இன்னும் சில மாதங்களில் நாங்க தயாரிக்கப்போற அடுத்த படத்தைப் பற்றிய அறிவிப்பு வரும்.’’
``இயக்குநர் விஜயலட்சுமியை எதிர்பார்க்கலாமா?’’
``நிச்சயமா. இயக்குநர் ஆசை நிறையவே இருக்கு. அப்பாவோட டைரக்ஷனை சின்ன வயசுல இருந்தே பாத்துப் பழகினதால எனக்குள்ளயும் ஒரு டைரக்டர் ஒளிஞ்சிட்டிருக்கார். அவரை சீக்கிரம் வெளியே கொண்டுவரணும்.’’
`` `மிஸ்டர் சந்திரமெளலி’ படத்துல பாட்டெல்லாம் எழுதியிருக்கீங்க. நீங்க ஒரு கவிஞர்னு சொல்லவேயில்லையே?
``அடடே... இது தெரியாதா... நான் எவ்வளவு காதல் கவிதைகள் எழுதியிருக்கேன்னு என் கணவர்கிட்ட கேளுங்க. அவர்தான் முதல்ல ‘பண்டிகை’ படத்துல பாட்டு எழுதச் சொன்னார். அப்புறம் ‘மிஸ்டர் சந்திரமெளலி’ படத்துல என் அக்கா கணவர் இயக்குநர் திரு பாட்டு எழுதக் கூப்பிட்டார். `கார்த்திக் சார் பழைய கார்த்திக் சாரா ஹேப்பி மூடுல திரும்ப வர மாதிரி சீன். நீ எழுதிக் கொடு’னு சொன்னார். எனக்கு செம ஹேப்பி. உடனே எழுதி அனுப்பினேன். இசையமைச்சு முடிச்சவுடனே முழுப்பாட்டையும் கேட்டேன். சூப்பரா வந்திருக்கு. நீங்களும் கேட்டுட்டுச் சொல்லுங்க.’’

``இன்னைக்குதான் ‘தெய்வமகள்’ சீரியல் ஆரம்பிச்ச மாதிரியிருக்கு. அதுக்குள்ள அஞ்சு வருஷம் ஓடிருச்சு. இந்த சீரியலுக்கு ரசிகர்கள் கொடுத்த ஆதரவு ரொம்பப் பெரிசு. பெரியவங்களும், குழந்தைகளும் தெய்வத்துக்கு சமம்னு சொல்லுவாங்க. அது ரெண்டுமே என் சீரியல்ல இருந்துச்சு. ஒண்ணு நிர்மலா அம்மா, இன்னொன்னு மகா பாப்பா. இது எனக்கு மட்டுமில்ல, ‘தெய்வமகள்’ செட்டுக்கே சந்தோஷம்.
இப்போ, என் புது சீரியல் ‘நாயகி’ ஆரம்பிச்சு வெற்றிகரமா போயிட்டிருக்கு. எப்பவும் மெரினா கடற்கரைப் பக்கம் போறப்போ உழைப்பாளர் சிலையைப் பார்ப்பேன். அப்போ, ‘இந்த உழைப்பாளர் சிலையில ஒரு பெண் சிலைகூட இல்லையே’னு தோணும். ஏன்னா, பெண்களும் குடும்பப் பொருளாதாரத்தில் அவங்க பங்கைக் கொடுக்க ஆரம்பிச்சுப் பல வருஷம் ஆச்சு. அப்படிப்பட்ட பெண்களை இந்த உழைப்பாளர் சிலையில் சேர்த்துக்கவேயில்லை. இதுக்கான பதில்தான் ‘நாயகி’. நிஜ வாழ்க்கையில் எல்லோரும் நாயகிகள்தான். இந்த சீரியல்ல அம்பிகா மேடமும் நடிக்கிறாங்க. அவங்களுக்கும் பவர்ஃபுல்லான கேரக்டர்தான். சம்பாதிக்காத புருஷன்கிட்ட ஒரு பொண்டாட்டி எப்படி குடும்பம் நடத்துறாங்க. அதுவும், அந்தப் புருஷனைத் தள்ளி வைக்காம, எப்படி போராடி வாழ்றாங்க என்பதை அம்பிகா கேரக்டர் சொல்லும். நம்ம சமூகத்தில் அம்பிகா கேரக்டர் மாதிரி நிறைய பெண்கள் இருக்காங்க. `தெய்வமகள்’ அண்ணியார் பேர் எப்படி ரீச் ஆச்சோ, அதே மாதிரி அம்பிகா கேரக்டர் பேர் இந்த சீரியல்ல பெரிய ரீச் ஆகும். யக்கானுதான் அவங்களை எல்லோரும் கூப்பிடுவாங்க.
என் சீரியல்ல எப்போதும் பெண்களுக்கு இருக்குற முக்கியத்துவம் மாதிரியே ஆண்களுக்கும் நிறைய முக்கியத்துவம் கொடுப்பேன். அதனாலேயே என் சீரியலுக்கு ஆண் ரசிகர்களும் அதிகம். ‘திருமதி செல்வம்’, ‘தென்றல்’, ‘தெய்வமகள்’ வரைக்கும் என் சீரியலை நிறைய ஆண்கள் பார்த்துப் பாராட்டியிருக்காங்க. என் முதல் சீரியலிலிருந்து என்கூட ட்ராவல் பண்ற என் டீம் இந்த சீரியல்லயும் தொடர்ந்து வராங்க. முக்கியமா என் கேமராமேன் மார்ட்ஸ் தொடர்ந்து என்கூடவே வொர்க் பண்றார்.’’
- இயக்குநர் எஸ்.குமரன்