பேட்டி - கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

“ஹீரோவும் கிடையாது... வில்லனும் கிடையாது!”

“ஹீரோவும் கிடையாது... வில்லனும் கிடையாது!”
பிரீமியம் ஸ்டோரி
News
“ஹீரோவும் கிடையாது... வில்லனும் கிடையாது!”

வெற்றிமாரனின் வேட்டைக்களம்... வடசென்னை!ம.கா.செந்தில்குமார், கே.ஜி.மணிகண்டன்

‘அன்பு’ தனுஷ், ‘ராஜன்’ அமீர், ‘சந்திரா’ ஆண்ட்ரியா

“ ‘பொல்லாதவன்’ முடிஞ்சதும் இந்தப் படத்தை எடுக்கலாம்னு நினைச்சோம். மிகப்பெரிய  செலவாகும் என்பதால் அப்போதைக்குத்  தள்ளிவெச்சோம். அப்புறம், ஒவ்வொரு படம் முடிச்சதும், இதைக் கையிலெடுப்போம். அப்படி ‘விசாரணை’யை முடிச்சிட்டு, ‘இப்போ, கண்டிப்பா பண்றோம்’னு முடிவெடுத்து பட்ஜெட் ரெடி பண்ணிட்டு தனுஷுக்குப் போன் பண்ணுனேன். ‘அடப்போங்க சார்... எனக்கு 15 கோடிக்கு பிசினஸ் இருக்கும்போது, 30 கோடிக்கு பட்ஜெட் கொடுத்தீங்க. 30 கோடிக்கு பிசினஸ் இருக்கும்போது, 45 கோடிக்கு பட்ஜெட் கொடுத்தீங்க. 45 கோடிக்கு பிசினஸ் இருக்கிறப்போ 60 கோடிக்கு பட்ஜெட் கொடுக்குறீங்களே’னு சிரிச்சார்.  `எப்படி சார் ப்ரொட்யூசரை கன்வின்ஸ் பண்றது?’னு கேட்டார். இருவரும் யோசித்தபடி அமர்ந்திருந்தோம். ‘இந்த ரிஸ்க்கை நாமே   எடுப்போம்’னு சொன்ன தனுஷ், ‘நானே ப்ரொட்யூஸ் பண்றேன்’ என்றார்.  35 வருஷ வாழ்க்கையை உள்ளடக்கிய கதை இது. ஒரு படத்துல சொல்ல முடியாது. சில பாகங்களா பண்ணலாம்னு ஐடியா இருக்கு. முதல் பாகத்தை ஜூனில் வெளியிடத் திட்டமிட்டிருக்கோம்” - தான் வளர்க்கும் காக்கெட்டு கிளி `ஐரின்’, செல்லப்பூனை ‘மின்னலை’க் கொஞ்சியபடி `வடசென்னை’ வளர்ந்த கதை சொல்கிறார் வெற்றிமாறன்.

“2002-ல் என் நண்பர் ஆண்ட்ரூவோட பைக் காணாமல் போச்சு. அதைவெச்சு ஒரு கதை பண்ணலாம்னு பைக் திருட்டு நெட்வொர்க்கைத்  தேடிப் போனோம். அப்ப நிறைய மனிதர்களை சந்திச்சோம். வடசென்னை ஏரியாவில் ஒரு நபர், ‘பைக் திருடுறது எல்லாம் வேற ஆட்கள்; நாங்க வேற’னு சொல்லி,  அவருடைய  வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.  ‘இந்த ஏரியாவின் ஆகச்சிறந்த கதை சொல்லி இவர்தான்’னு எனக்குத் தோணுச்சு. பல  சம்பவங்களைத் திரைக்கதையாவே சொன்னார். அவரோட அனுபவங்களைக் கேட்கக் கேட்க மலைப்பா இருந்துச்சு.  எனக்கு நெறைய பேர்கள், இடங்கள் ஞாபகத்துல வெச்சுக்க முடியல. ‘வேணும்னா உங்களுக்குக் கைப்பட எழுதியே கொடுத்திடுறேன்’னு வடசென்னையின் அண்டர்வேர்ல்ட், லோக்கல் பாலிடிக்ஸ், அங்கே இருக்கிற மனிதர்கள், அவங்க வாழ்வியல்னு எல்லாத்தையும் 80 பக்க நோட்டுல எழுதி அடக்கிட்டார். அந்த 80 பக்க நோட்டுதான் இந்த ‘வடசென்னை’யின் மூலக்கதை!”

“ஹீரோவும் கிடையாது... வில்லனும் கிடையாது!”

“கேட்கவே சுவாரஸ்யமா இருக்கு. படம் பேசும் விஷயங்கள் என்ன?”

“ஒரு இயக்குநரா நான் யார், என் அரசியல் நிலைப்பாடு எதுன்னு சொல்ற சமூகப் பொறுப்புள்ள இடத்துல இப்ப இருக்கேன். இந்தப்படம் எடுக்க எடுக்க தன்னைத்தானே எழுதிக்கொண்டதுனுதான் சொல்லணும். அதுக்குக் காரணம், கதை, களம், கதாபாத்திரம்தான். ஏன்னா இதில் ஹீரோ, வில்லன்னு யாரும் கிடையாது. எல்லாரும் எல்லாமாவும் இருக்காங்க. ஒவ்வொருத்தரும் கதைக்குத் தேவையான முக்கியமான கதாபாத்திரங்கள்தான். வடசென்னை மக்களோட வாழ்வியல்தான் களம். இங்கே இருக்கிற மக்களோட நிலம் பிடுங்கப்பட்டு, வாழ்வாதாரம் மறுக்கப்பட்டு நெருக்கடியில் தள்ளப்படும்போது, அந்த மக்கள் என்ன பண்ணுவாங்க? போராடுவாங்க. அந்தப் போராட்டமும் அவங்க வாழ்க்கையும்தான் மொத்தப் படமும். ‘அன்பு’ங்கிற கேரக்டர்ல தனுஷ். அந்த இளைஞனோட வாழ்க்கை ஓட்டத்துக்கு, ‘வடசென்னை’ மனிதர்கள் பலம் சேர்ப்பாங்க. தனுஷ் மட்டுமில்லாம, எல்லா கேரக்டர்களுக்கும் ஒரு வாழ்க்கை, ஒரு எமோஷன் கொடுத்திருக்கோம். ‘ராஜன்’ கேரக்டர்ல நடிச்சிருக்கிற அமீர், ‘குணா’ கேரக்டர்ல வர்ற சமுத்திரக்கனி, ‘செந்திலா’க நடிச்சிருக்கும் கிஷோர்,  ‘தம்பி’யா டேனியல் பாலாஜி, `வேலு’வா பவன், ‘சந்திரா’வா நடிச்சிருக்கிற ஆண்ட்ரியா, `பத்மா’வா ஐஸ்வர்யா ராஜேஷ் எல்லோரும் வடசென்னையின் அசல் மனிதர்கள்.”

“எத்தனை பாகங்களா பண்ற ஐடியா இருக்கு?”

“ஆரம்பத்துல ஒரு படமாத்தான் எழுத ஆரம்பிச்சோம். எழுதி முடிக்கும்போது, கதையும் கதாபாத்திரமும் அவ்வளவு இருந்ததால் ரெண்டு பாகமா எடுத்தா நல்லாருக்கும்னு தோணிச்சு.  படமா எடுத்து முடிக்கும்போது அதைவிடவும் அதிகமா இருக்கும்போல. ஆனால் எல்லாமே முதல் பாகத்தின் நேர்த்தியிலும், வணிக ரீதியிலான வரவேற்பிலும்தான் இருக்கு. எல்லாம் சரியா நடந்தா, இது தமிழ் சினிமாவுல ஒரு புது முயற்சியாத்தான் இருக்கும்.” 

“ஹீரோவும் கிடையாது... வில்லனும் கிடையாது!”

‘`அமீர், சமுத்திரக்கனி, சுப்ரமணியம் சிவா, தனுஷ் என்று பல இயக்குநர்கள். எப்படி இருந்தது ஷூட்டிங் ஸ்பாட்?”

``இயக்குநர்கள் நடிகர்களா இருப்பது எனக்கு ரொம்ப வசதியா இருக்கு. ஏன்னா நான் கொஞ்சம் சோம்பேறி. என்னுடைய தவறுகளை அவங்க அக்கறையோட சுட்டிக்காட்டி அதை பேலன்ஸ் பண்ணுவாங்க.  அமீர்கிட்ட, ‘மற்ற இயக்குநர்களோட படங்கள்ல நடிக்கிற ஐடியா இருக்கா?’னு கேட்டேன். ‘கேட்குறது யாருங்கிறதைப் பொறுத்துதான் இருக்கு’ன்னார். ‘என் படத்துக்குதான் கேட்கறேன்’னு சொன்னேன். ‘நடிக்கிறேன்’னார். கதைய சொல்ல ஆரம்பிச்சேன்.  ‘கதையெல்லாம் வேணாம். நடிக்க வரேன்’னார்.   இப்படித்தான் அமீர் இந்தப் படத்துக்குள்ள வந்தார். ஒருநாள் ஷூட்டிங் நாலு மணிக்கு முடிஞ்சப்போ அவசரமா கெளம்பினார். கேட்டதுக்கு  காலைல 11 மணிக்கு அவங்க சித்தி இறந்துட்ட செய்தி வந்ததைச் சொன்னார்.   சொன்னா, நாங்க கெளம்பச் சொல்லுவோம்னு சொல்லாம இருந்திருக்கார்.  ஒரு நடிகரா அவரோட உழைப்பைப் பார்த்து அசந்துட்டேன். இது மட்டும் இல்ல. இதுபோல நிறைய.  ‘இயக்குநர்  கேட்பதைச் செய்ய முடியாமப் போயிடக்கூடாது’னு சொல்லிட்டே இருப்பார்.   ஷூட்டிங் ஸ்பாட்ல, அமீர் நடிக்காத ஷாட்கள்லயும் என் கண்கள் பார்க்காத இடங்களையும் அவரோட கண்கள் பார்த்திடும். பீரியட் கதைங்கிறதால, சின்னச் சின்ன விஷயங்களுக்கும் அதிகமான கவனம் செலுத்த வேண்டியிருக்கு. அவர் நுணுக்கமான விஷயங்களை கவனிச்சுச் சொல்லுவார்.  அதேமாதிரி சமுத்திரக்கனியோட மெமரி வேற லெவல். ஒரு சீன் பேப்பர் கொடுத்தா, எல்லா நடிகர்களோட வசனங்களையும் படிப்பார். அவரே எல்லாருக்கும் வசனப்பயிற்சி கொடுப்பார். நாம கடைசியா போய் மாடுலேஷன் பார்த்துட்டா போதும். சுப்பிரமணியம் சிவா எவ்வளவு பெரிய க்ரவுடையும் தன் கைக்குள்ள வெச்சிருப்பார். அவர் சொல்றத அந்தக் கூட்டம் கேட்கும். தனுஷ் எப்போதுமே ஒரு இயக்குநராகவோ, தயாரிப்பாளராகவோ செட்ல இருந்தது கிடையாது. நடிகரா மட்டும்தான் இருந்தார். பேசறப்ப ஒரு வரி, ஒரு வார்த்தைன்னாலும்  ‘இப்படிச் சொல்லலாமா?’னு கேட்டுட்டுத்தான் பண்ணுவார்.”

“தனுஷ் கேரக்டர் எப்படி வந்திருக்கு?”

``படத்தில்  தனுஷ், அன்பு - கேரம் பிளேயர். நேஷனல் லெவல்ல விளையாட முயற்சி பண்றவர். வேர்ல்ட் சாம்பியன் ஆகணும் என்பதே அவரோட கனவு. இப்படி ஒரு கனவோட இருக்கிற ‘அன்பு’ கேரக்டருக்கு என்ன நடந்தது என்பதுதான் படம். 15 வயசுல இருந்து 30 வயசு அன்புவை இதுல  பாக்கப்போறீங்க.   மற்ற படங்களைவிட,  இந்தப் படத்துக்கு தனுஷ் கொடுத்த உழைப்பை என்னால மறக்கவே முடியாது. ஒரு ஜெயில் சீக்வென்ஸுக்கு 35 நாள்கள் தனுஷை வெச்சு ஷூட் பண்ணினோம். ஆனா, அவர் பேசுன மொத்த வசனமே சில வார்த்தைகள்தான். வருவார், நடப்பார், பார்ப்பார்... இப்படியேதான் இருந்தது அந்தப் போர்ஷன். ஏன்னா, படம் என்னவா வளர்ந்துக்கிட்டிருக்கு, எப்படி முடியப்போகுதுனு எல்லாமே தனுஷுக்குத் தெரியும். ‘நீங்க எடுங்க சார், நான் நடிக்க வந்திருக்கேன். அவ்வளவுதான்’னு சொல்வார். இந்தக் கதையோட வலிமையைத் தெரிஞ்சுக்கிட்டு, ‘பட்ஜெட் அதிகமாயிடுச்சுனா யூஸ் ஆகும்ல, ரெண்டு கமர்ஷியல் படம் பண்ணிட்டு வந்திடுறேன்’னு சொல்லிட்டுப் போய் சில படங்களை முடிச்சிட்டு வந்தார். 15 வயசு டீன் ஏஜ்ல தொடங்கி, 30 வயசு ஆளா மாறுற வரை படத்துல தனுஷுடைய  பரிணாமம் அவ்வளவு முதிர்ச்சியுடன் இருக்கும்.”

“ஹீரோவும் கிடையாது... வில்லனும் கிடையாது!”

‘`ஆண்ட்ரியா - ஐஸ்வர்யா ராஜேஷ்... கலவையா ரெண்டு ஹீரோயின்களைத் தேர்ந்தெடுத்திருக்கீங்களே?”

``ஆண்ட்ரியாவுக்கு காலத்தால் மறக்க முடியாத கதாபாத்திரம். தவிர ‘வடசென்னை’னு பேச ஆரம்பிச்ச நாளிலிருந்து மாறாத ஒரே    ஆர்ட்டிஸ்ட் அவர் மட்டுமே. அதுக்குக் காரணம் ‘சந்திரா’ கதாபாத்திரத்துக்கு அவங்க பொருத்தமா இருப்பாங்க அப்டிங்கற நம்பிக்கைதான்.  மெட்ராஸ் ஸ்லாங் தெரியாத மாடர்னான ஆண்ட்ரியா, அவங்க கமிட்மென்ட்னால அதை சரி பண்ணினாங்க. இந்தக் கேரக்டருக்கு அவர் கொடுத்த உழைப்பு மிக மிக அதிகம். உயிரைக் கொடுத்து நடிச்சிருக்கார்னுதான் சொல்லணும். ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியாவுக்கு நேரெதிர்.   சென்னைப் பொண்ணு, தமிழ் தெரிஞ்ச திறமையான நடிகை. ஓப்பனிங் சீன்லேயே ரணகளமா சண்டைபோட்டபடிதான் அறிமுகமாவாங்க. அவங்ககூட வொர்க் பண்றப்பதான் மொழி தெரியாத நடிகைகளோட வொர்க் பண்றது எவ்வளவு பின்னடைவா இருக்குன்னு ரியலைஸ் பண்ணினேன்”

“ஹீரோவும் கிடையாது... வில்லனும் கிடையாது!”

``நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள்... குறிப்பிட்ட சிலரோட தொடர்ந்து இயங்கிட்டிருக்கீங்க. என்ன காரணம்?”

“`முறைப்பாவே திரிவார்’னு டேனியல் பாலாஜிக்கு ஒரு அடையாளம் இருக்கு. ஆனா, அவர் நண்பர்களுக்கும் கூட இருக்கறவங்களுக்கும்  பல உதவிகள் செஞ்சுட்டிருக்கற நல்ல மனுஷன். ஒரு  கோயில்கூட இப்ப கட்டிக்கிட்டு இருக்கார். ‘பொல்லாதவனு’க்கு அப்பறம் இப்பதான் நாங்க சேர்ந்து வொர்க் பண்றோம். அவரையும் இந்தப் படத்துல வேறொரு விதத்துல காட்டியிருக்கோம். கிஷோர், அமீரின் நண்பரா நடிச்சிருக்கார். கிஷோரோட வொர்க் பண்றது எப்பவுமே எனக்கு சந்தோஷமான அனுபவம்தான். முன்னைவிட கிஷோர்கிட்ட இருந்து நிறைய விஷயங்கள் கத்துக்கறேன். அவர் விவசாயம் பண்ணிட்டிருக்கார். நான் விவசாயம் பண்றதுல ஆர்வமா இருக்கேன். என்னுடைய எல்லா படங்களிலும் கிஷோரும், மூணார் ரமேஷும்தான் தொடர்ந்து நடிச்சிருக்காங்க.  ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் ஆரம்பத்துல இருந்தே என்கூட வொர்க் பண்றார். இந்தப் படத்தை ஒளிப்பதிவுல வேறவிதமா அணுகியிருக்கார். இசைக்கு இதில் சந்தோஷ் நாராயணன்கூட சேர்ந்திருக்கேன். நான்கு பாட்டு, ஒரு ஒரிஜினல் கானா பாட்டு வெச்சிருக்கோம். ஏகப்பட்ட ஃபுட்டேஜ். சிஸ்டமே ஹேங்க் ஆகி, ஒருவாரம் கழிச்சு இப்போதான் வந்திருக்கு. கொஞ்சம் கொஞ்சமா கட் பண்ணி கட் பண்ணி ஒட்டிக்கிட்டிருக்கோம். இது ரொம்ப சிரமமான வேலைதான். எடிட்டர் ஜி.பி.வெங்கடேஷ் அதை நல்லவிதமா பண்ணிடுவார். இவங்களோட பயணப்படுறது எனக்குப் பிடிச்சிருக்கு.” 

“ஹீரோவும் கிடையாது... வில்லனும் கிடையாது!”

“வடசென்னைக்குனு பிரத்யேக அரசியல் இருக்கு. அதை இதில் எதிர்பார்க்கலாமா?”

“நிச்சயமா! ஆனா, அது கதையோட கலந்திருக்கும். அரசியல்வாதிகளோட தீர்மானங்கள் மக்களை நேரடியா பாதிக்காதுனு ஒரு மாயை இருக்கு. ஆனா ஒரு தலைவரின் மரணம், கட்சி ரெண்டா உடையும்போது ஏற்படக்கூடிய மாற்றம்... இப்படி சில விஷயங்களும் படத்துல இருக்கு. தவிர, சில அரசியல் முடிவுகள் மக்களுக்கு நல்லதையும் செய்யும்;  கெடுதலையும் ஏற்படுத்தும். எல்லாமே படத்துல இருக்கு.  ஏற்கெனவே சொன்னதுமாதிரி, கிட்டத்தட்ட 30 வருட வாழ்வியல் பதிவுல, உலகக்கோப்பை கிரிக்கெட் வெற்றி, பெரும் அரசியல் தலைவரின் இழப்பு, அரசியல் மாற்றம் எல்லாம் நடக்கும். அப்படி நடக்கிறதெல்லாம் இந்தப் படத்தில் இருக்கும்!”

“படங்களின் வழியாக அரசியல் பேசும் இயக்குநர்கள் அதிகமாகிட்டாங்களே?”

``இது, ரொம்ப ரொம்ப ஆரோக்கியமான விஷயம். ராமில் தொடங்கி, ரஞ்சித், கோபி நயினார் இவங்கள்லாம் ரியல் பாலிடிக்ஸ் பேசற இயக்குநர்கள். ரஞ்சித், தன் வாழ்க்கையையே ஒரு பொலிட்டிகல் ஸ்டேட்மென்ட்டாத்தான் பார்க்கிறார். தவிர, எல்லாருமே தன் அரசியல் நிலைப்பாட்டைச் சொல்ற கட்டாயத்துல இருக்கோம். எனக்கு என்ன தோணுதோ, அதைச் செய்வேன். மற்றவர்கள் மாதிரி என்னால மேடையில் பேச முடியாது; அதை என் படைப்புல ரெண்டு ஷாட்டா வைக்க முடியும். அதைத் தொடர்ந்து பண்ணுவேன்.”