மற்ற எபிசோடுகள்
Published:Updated:

விகடன் பிரஸ்மீட்: “மரணத்தை மறந்துட்டு இஷ்டத்துக்கு ஆடுறாங்க!” - விஜய் சேதுபதி

விகடன் பிரஸ்மீட்: “மரணத்தை மறந்துட்டு இஷ்டத்துக்கு ஆடுறாங்க!” - விஜய் சேதுபதி
பிரீமியம் ஸ்டோரி
News
விகடன் பிரஸ்மீட்: “மரணத்தை மறந்துட்டு இஷ்டத்துக்கு ஆடுறாங்க!” - விஜய் சேதுபதி

படங்கள்: க.பாலாஜி

பரிசல் கிருஷ்ணா

``ராஜபாளையம்   டு ‘ஒரு  நல்ல  நாள் பார்த்துச் சொல்றேன்’... உங்கள் பயணம் பற்றிச் சொல்லுங்களேன்?’’

``ஆசைப்படுங்க. நேர்மையா ஆசைப்படுங்க. அப்படி ஆசைப்படுற பிண்டத்தோட ஆசையை சுத்தியிருக்கிற இந்த அண்டம் நிறைவேத்தித் தரும். நாமளா எதையும் நிரூபிக்கணும்னு அவசியமில்லை. ஸ்பெஷலா தெரியணும்னும் அவசியமில்லை. எல்லாம் சரியா நடக்கும். அதுவும் தானாவே நடக்கும்.’’

சுஜிதா சென்

``நிறைய கேரக்டர்கள் பண்ணியிருக்கீங்க. ‘இந்த கேரக்டர் மாதிரி வாழணும்’, ‘இந்த கேரக்டர் மாதிரி வாழக் கூடாது’ன்னு  எதுவும் யோசிச்சிருக்கீங்களா?’’


`` ‘பண்ணையாரும் பத்மினியும்’ கேரக்டரா வாழலாம். ‘சேதுபதி’யும் சுமார் மூஞ்சி குமாரும் ஓ.கே. ‘இறைவி’ கணவனா வாழவே கூடாது. என் மனைவியைக் கேட்டா, நான் அந்த மாதிரிக் கணவனா இருக்கேன்னுதான் சொல்லுவாங்க.’’

விகடன் பிரஸ்மீட்: “மரணத்தை மறந்துட்டு இஷ்டத்துக்கு ஆடுறாங்க!” - விஜய் சேதுபதி

உ. சுதர்சன் காந்தி

``ஜாலியா ஒரு பேட்டி எடுக்கணும். நிருபர் நீங்கதான். யாரைப் பேட்டி எடுக்க ஆசைப்படுறீங்க?’’


“ஜனா சார். (இயக்குநர் ஜனநாதன்) என்னைப் பொறுத்தவரை அவர் ஒரு அறிவுக் களஞ்சியம். எதைப் பத்தி வேணாலும் அவர்கிட்ட பேசலாம். நிறைய தெரிஞ்சுக்கலாம். அடுத்ததா தியாகராஜன் குமாரராஜா. ஒரு இயக்குநர்ங்கிறதைத் தாண்டி நிறைய விஷயங்கள் பேசணும்னு நான் நினைக்கிற ஒருத்தர் அவர். ரெண்டு பேருமே கொஞ்சம் சீரியஸான ஆளுங்கதான். ஜாலி இண்டர்வியூவா ஆக்கறதுக்கு கொஞ்சம் மெனக்கெட்டுக் கேள்விகள் தயார் பண்ணணும்!”

சனா

``ஒரு தயாரிப்பாளராக சினிமா அனுபவம் எப்படியிருக்கு?’’


``சினிமா எடுக்கிறது நாம விருப்பப்பட்டுச் செய்றது. ஆனா, அந்தப் படத்தை வியாபாரம் செய்றது இருக்கே, அந்த இடத்தோட தன்மையே வேற. இதுக்கு நான் யாரையும் குறை சொல்ல விரும்பலை. குறை சொன்னா நான் புரிஞ்சிக்கிட்டது அவ்ளோதான். அந்த இடத்துக்கெனச் சில நியாய தர்மங்கள் இருக்கு. ‘மேற்குத் தொடர்ச்சி மலை’னு எடுத்தேன். சிலர் பயமுறுத்தினாங்க. ‘ஏமாத்திடுவாங்க’ன்னாங்க. ‘ஏமாத்தினா ஏமாத்திட்டுப் போகட்டும்’னு நினைச்சுட்டேதான் இறங்கினேன். நான் படம் எடுக்கத்தான் வந்தேன். கொள்ளையடிக்க வரலை. என்னோட மனசுல தயாரிப்பாளரா நிறைவாவே உணர்றேன். எங்க அப்பா இப்ப இருந்தா, நான் சினிமா எடுக்கறது அவரை சந்தோஷப்படுத்தியிருக்கும்.’’

சார்லஸ்

``உங்கள் பேட்டிகள்ல  தொடர்ந்து மரணத்தைப் பற்றிப் பேசிட்டே வர்றீங்களே... ஏன்?’’


“மரணத்தை மறந்துடு றாங்க இல்லையா, அதனாலதான். மறந்துட்டு தான் இஷ்டத்துக்கு ஆடறாங்க. நம்புங்க, எல்லோரும் ஒருநாள் செத்துப்போறவங்கதான். இது தெரிஞ்சாலே போதும். அன்பு, கருணையெல்லாம் தானா வந்திடும்.”

சுகுணா திவாகர்

``தமிழ் சினிமாக்களில் க்ளிஷேக்கள் இருந்தாலும் ‘நல்லது வெல்லும்’னு அறத்தை வலியுறுத்தியது நல்ல விஷயம். ஆனால் ‘சூது கவ்வும்’, ‘பீட்சா’ மாதிரியான உங்க படங்கள் ‘தப்பான வழியில பணம் சம்பாதிக்கலாம்; எப்படியாவது ஜெயிக்கலாம்’னு  கத்துத் தர்றது அறத்துக்கு எதிரானதில்லையா?’’


 `` `இப்படிக்கூட வாழறான் பாருங்கய்யா’னு இந்தச் சமூகத்துல யாரையாவது சுட்டிக்காட்டறதில்லையா? அப்படிப்பட்ட ஆள்களை அப்படியே சொன்னதுதான் ’சூது கவ்வும்’. அப்படி வாழ்றதை நக்கல் பண்ணினோம். ‘பீட்சா’வும் அப்படித்தான். விமர்சனம் செய்கிற ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பார்வை இருக்கும். அதில் தப்பில்லை. ஆனா ஒரு ரசிகன் தியேட்டர்ல எழுந்து நின்னு கைதட்றான்னா, அவன் மனசுல நினைச்சது ஸ்க்ரீன்ல காட்டப்படுதுன்னுதானே அர்த்தம். தப்பா சம்பாதிக்கிறவன் போற பாதைதான் சரின்னு முடிவில் சொல்லலையே!”

விகடன் பிரஸ்மீட்: “மரணத்தை மறந்துட்டு இஷ்டத்துக்கு ஆடுறாங்க!” - விஜய் சேதுபதி

பரிசல் கிருஷ்ணா

`` ‘விஜய் சேதுபதி நேர்மையானவர்’ - இப்படிப் பல இடங்கள்ல பலர் சொல்லியிருக்காங்க. நீங்க என்ன சொல்றீங்க?’’

``நேர்மைக்கும் இயல்புக்கும் வித்தியாசம் இருக்கு. ஒரு விஷயத்தை என்னால பண்ன முடிஞ்சா முடியும்னு சொல்லுவேன். அப்படிச் சொல்லி, அதை முடிச்சுத் தந்தா அதுக்குப் பேர் நேர்மையில்லை. இயல்பு. நேர்மைங்கிறது வேற லெவல். வெளியில இருந்து பார்த்து ஒருவர் நேர்மையானவர்னு சர்ட்டிபிகேட் தந்துட முடியாது. ஒவ்வொருத்தருக்குள்ளேயும் இருக்கும் ஒருத்தனுக்குத்தான் அந்த நேர்மை பத்தித் தெரியும்.”

சுஜிதா சென்

``நீங்கள் நடித்த படங்களில் உங்களுக்கு ரொம்பப் பிடித்த படம் எது?’’


`` ‘ஆரஞ்சு மிட்டாய்.’ எனக்குப் பாடம் கத்துக் கொடுத்த படம் அது. நானே அதுக்கு டயலாக் எழுதியிருக்கேன். பிஜூ சார் என் குரு. அவர்தான் என்னை எழுதச் சொன்னார். பேப்பரை எடுத்தா எனக்கு எழுத வரலை. அதனால கேமரா ஆன் பண்ணினதும் டயலாக் சொல்லி நடிக்கத் தொடங்கிடுவேன். பிறகு பேசின வார்த்தைகளை வெச்சு வசனங்கள் எழுதினோம். ஒரு காட்சியைப் பல கோணத்துல அணுகலாம்கிற பாடத்தை இந்தப் படம் தந்தது. எங்கப்பாவோட கேரக்டரை மனசுல வச்சுதான் அதை எழுதினேன். எங்க அப்பாவும் பிடிவாதக்காரர். பிஜூ சார் அப்பாவும் பிடிவாதமா இருப்பார். படம் எங்கப்பாவை ரொம்பவே ஞாபகப்படுத்திச்சு. அவரோட போட்டோவையும் படத்துல காட்டியிருப்போம்.’’

அய்யனார் ராஜன்

`` `இப்போது படமாக எடுக்கலாம்’ என நீங்கள் சிபாரிசு செய்கிற உங்களது ஆரம்பகாலக் குறும்படங்கள் எவை?’’


`` ‘ராஜா ராணி’. பாபி சிம்ஹா நடிச்சிருப்பான்.  சூதாட்டம் பத்தினது. நான் பாபியோட சேர்ந்து நடிச்ச ‘ராவணன்’ கூட நல்லா இருக்கும். ‘பெட்டி கேஸ்’னு ஒரு கதை. ரீல் பெட்டி காணாமப் போறது பத்தினது. கார்த்திக்கிட்ட நான் ‘இதைக் கதையாகப் பண்ணுங்க’னு கேட்டுட்டே இருக்கேன். நான் போலீசா நடிச்சிருந்தேன். இது எல்லாத்தையும் விட, ‘நீர்’ நிச்சயம் பண்ணணும். மீனவனோட பிரச்னை. ஷாட் அழகா இருக்கும். குண்டடிபட்டு அண்ணன் இறந்து தம்பி மடியில் கிடப்பான். அந்தப் படகு அனாதையா மிதந்து வரும். இதை நம்ம மீனவர்கள் நிலையாவே நான் பார்க்கறேன். அவங்களைக் கண்டுக்காம ரொம்ப அசால்ட்டா கடந்து போறாங்க. ஆனா, சொந்த நாட்டுப் பிரச்னையைப் படமா எடுத்தீங்கன்னா, இன்னைக்கு ரிலீஸ் பண்ண விடுவாங்களான்னு தெரியல.’’