
மா.பாண்டியராஜன்
`` `ஓடினவன் நின்னா, ஓடினவன் திரும்புனா என்ன ஆகும்னு பார்க்குறியா?... காட்றேன் பாரு’ - இதுதான் படத்தின் ஒன்லைன்’’ - `கோலிசோடா’ மூலம் கோலிவுட்டில் கவனம் ஈர்த்த இயக்குநர் விஜய் மில்டன் `கோலிசோடா - 2’ படத்துடன் களமிறங்குகிறார்.
``கோலிசோடா -2 எடுக்கணும்கிற ஐடியா எப்போ வந்துச்சு?
`` ‘கோலிசோடா’ படத்தின் முதல் பாகம் பண்ணும்போதே இரண்டாம் பாகம் பண்ணணும்னு முடிவு பண்ணிட்டேன். தனக்குக் கிடைச்ச அடையாளத்தை அந்தப் பசங்க எப்படித் தக்கவெச்சுக்கிறாங்க; படிச்சு எப்படி முன்னேறுறாங்க என்பதுதான் கதை. ஆனால், அதை நான் இப்போ எடுக்கல. தனக்கான அடையாளத்தை நிறுவினபிறகு, பொறாமையோடு தங்களை அடக்க நினைக்கும் வில்லன்களுக்கு எதிரா இளைஞர்கள் போராடும் கதையைத்தான் இப்போ `கோலிசோடா - 2’ ஆக எடுக்கிறேன். ஏற்கெனவே நான் எழுதி வெச்சிருக்கிற கதையை, `கோலிசோடா 1.5’னு டைட்டில் வெச்சு அடுத்த படமா எடுக்கலாம்னு இருக்கேன். ’’

“சமுத்திரக்கனிக்கு என்ன கேரக்டர்?’’
`` `அப்பா’ படம் ஹிட்டாகி, `ஆண் தேவதை’ படத்தில் அவர் கமிட்டான சமயத்தில்தான் இந்தக் கதையை அவர்கிட்ட சொன்னேன். ஹீரோவா நடிச்சிட்டிருந்தவரிடம், வயசான ஆள் மாதிரி நடிக்கணும்னு சொல்றதுக்கே ஒரு மாதிரிதான் இருந்துச்சு. ஆனால், சமுத்திரக்கனி எதையுமே யோசிக்காம உடனே நடிக்க ஓகே சொல்லிட்டார். இந்தப் படத்தில் சமுத்திரக்கனிக்கு சாதுவான கேரக்டர். அதிக தோல்விகளைச் சந்திச்சு அதனால் ஏற்பட்ட அனுபவத்தை வெச்சு ஹீரோக்கள் மூணு பேரையும் வழிநடத்துவார்.’’

`` இயக்குநர் கெளதம் மேனனை எப்படி நடிகராக்கினீங்க?
``இந்தப் படத்தோட ஸ்க்ரிப்ட்டை முடிச்சதும் நண்பர்கள்கிட்ட கதையைச் சொல்லும்போதே `இந்தக் கேரக்டர்ல கெளதம் மேனன் நடிச்சா நல்லா இருக்கும்’னு சொன்னேன். நக்கலாச் சிரிச்சாங்க. ஏன்னா, எனக்கும் கெளதமுக்கும் நேரடி அறிமுகமே இல்லை. இந்தப் படம் ஆரம்பிச்சதும் முதல் முறையா ஆடியோ டீசர் பண்ணலாம்னு முடிவு பண்ணுனேன். அதுல யாரைப் பேச வைக்கலாம்னு யோசிக்கும்போது திரும்பவும் கெளதம் மேனன்தான் என் மனசுல வந்தார். லிங்குசாமி மூலம் கெளதம்கிட்ட பேசச்சொல்லி, அவரும் ஓகே சொல்லிட்டார். அந்த ஆடியோ டீசர் நல்ல ஹிட். கெளதமும் செம ஹேப்பி. இதுதான் சரியான டைம்னு ‘படத்துல உங்களுக்கு ஒரு ரோலும் இருக்கு’ன்னு சொன்னேன். ‘விளையாடாதீங்க, எனக்கு நடிக்க வராது’னு சொன்னார். கன்வின்ஸ் பண்ணி நடிக்கவெச்சேன். தமிழ் சினிமாவை வேற ஒரு தளத்துக்கு எடுத்துட்டுப் போற இயக்குநர்கள் மேல எனக்கு மிகப்பெரிய மரியாதை இருக்கு. அப்படி ஒரு இயக்குநரான கெளதம் மேனனோடு வொர்க் பண்ணுனது மறக்க முடியாத அனுபவம்.’’


``சின்ன பட்ஜெட்டில் நல்ல படங்கள் கொடுத்த இயக்குநர்கள், பெரிய பட்ஜெட்னு வரும்போது ஏன் தடுமாறிடுறாங்க?’’
``மற்ற இயக்குநர்கள் பற்றி என்னால் சொல்ல முடியாது. எனக்கு என்ன நடந்ததோ அதை நான் சொல்றேன். `10 எண்றதுக்குள்ள’ படத்துல என்னோட அனுமதி இல்லாமலோ, எனக்குப் பிடிக்காமலோ ஒரு சீன்கூட நான் வைக்கலை. அந்தப் படத்தையும் நான் என் முழுத் திருப்தியோடதான் எடுத்தேன். அந்தப் படத்தை முடிச்சதும் தயாரிப்பு நிறுவனம், ‘நாங்க சொன்ன பட்ஜெட்ல நாங்க கேட்ட தரத்தைவிட அதிகமா பண்ணிட்டீங்க’னு பாராட்டினாங்க. இப்படி எல்லோருக்கும் பிடிச்சுதான் அந்தப் படத்தை முடிச்சு வெளியிட்டோம். ஆனால், அது எங்க மிஸ்ஸாச்சுன்னு இப்போ வரைக்கும் எனக்குத் தெரியல. படத்தில் என்ன குறைன்னு எனக்குத் தெரிஞ்ச பல பேர்கிட்ட கேட்கும் போது நிறைய காரணங்கள் சொன்னாங்க. ஆனா, அது ஒவ்வொண்ணுமே வேற வேற காரணமா இருந்துச்சு.’’