
படங்கள்: க.பாலாஜி
அய்யனார் ராஜன்
பதின்பருவத்தில் உங்கள் ஃபேவரைட் ஹீரோ யார்?
“அப்படி யாரும் இல்லைங்க. நான் சினிமாவே பார்க்க மாட்டேன். காலேஜ்ல மத்த பசங்க சினிமாவுக்குப் போனா, என்னைக் கழட்டி விட்டுட்டுப் போயிடு வாங்க. நான் மட்டு மல்ல, என் குடும்பத்துல என் அண்ணன், தம்பி, தங்கச்சி... எல்லோருமே யாருக்கும் ஃபேன் இல்லை. ஏன்னு காரணமும் தெரியலை.”

சக்தி தமிழ்ச்செல்வன்
இயக்குநர் மகேந்திரன் படங்களைப் பிடிக்கும் எனச் சொல்லியிருக்கிறீர்கள். அவர் படங்களில் உங்களை பாதித்த அல்லது மிகவும் பிடித்த கேரக்டர் பற்றிச் சொல்லுங்களேன்...
“பெரிய சீனுக்கு மெனக்கெடுவாங்க இல்லையா?! அது வேணாம், சிம்பிளான சீன் போதும்னு சொல்லியிருக்கும் அவர் படங்கள். அந்த சிம்பிள் சீனை நம்பியிருக்கிறார் பாருங்க, அதன்மூலமா எங்களுக்கெல்லாம் பாடம் எடுத்திருக்கார்னு சொல்வேன். அவர் எங்களோட சொத்து. எப்ப எந்தச் சந்தேகம் வந்தாலும் அவரோட படங்களைத் திரும்பிப் பார்க்கலாம். ‘உதிரிப் பூக்கள்’ல தண்ணீருக்குள் இறங்குகிறவரை அந்த அப்பனை வெறுக்கறோம். தண்ணீருக்குள் இறங்குகிற அந்த நொடி அந்தக் குழந்தைகள் எட்டிப் பார்க்கும் பாருங்க, அப்ப அதே அப்பனுக்காக இரக்கப்படுறோம். பெரிய சிந்தனை இது. கேரக்டர் சொல்லணும்னா, ‘முள்ளும் மலரும்’ காளியை எனக்கு ரொம்பப் பிடிக்கும்.”
இரா.கலைச்செல்வன்
சினிமாவில் எதைக் கண்டாவது பயம் வருவதுண்டா?
“டான்ஸ். மூணு நாள் டான்ஸ் சீக்வன்ஸ் நடக்கப் போகுதுன்னா, முதல் நாளே அந்த மூணாவது நாள் சாயங்காலத்தை மனசுக்குள்ள கொண்டு வந்திடுவேன். ஆக்சுவலி, எனக்குன்னே மூவ்மென்ட் சிம்பிளாத்தான் வச்சிருப்பாங்க. ஆனா அசிஸ்டென்ட் ஆடிக் காட்டறப்பவே பயம் ஆரம்பிச்சிடும். இறங்கிட்டா சமாளிச்சிடுவேன். ஆனா, ஏன் நான் பயப்படுறேன்னு தெரியலை.”
ஆர்.சரண்
இன்றைய தேதியில் எந்த இளம் இயக்குநர், நடிகரைப் பார்த்து வியக்கிறீர்கள்?
“ ‘அருவி’ படம் குறித்து நிறைய பேர் பேசினாங்கன்னு கேள்விப்பட்டேன். அருண்பிரபு புருஷோத்தமனுக்கு வாழ்த்துகள். இந்தக் கேள்வியில இருந்து ஹீரோவை எடுத்துடலாம். ஏன்னா, ‘இவன் யாரு வியக்கறதுக்கு’ன்னு ஒரு கேள்வி வந்துடக் கூடாது. நானே இன்னும் வளரணும். ஆனா, யார் சினிமாவுக்கு வந்தாலும் சினிமாவைப் புரிஞ்சுகிட்டு, கத்துக்கிட்டு ஈடுபாட்டோட இயங்கணும். ஜெயிச்சவங்ககிட்ட இருந்து மட்டுமே கத்துக்கணும்னு இல்லை. ஒரு ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்கிட்ட இருந்துகூட ஒரு நடிகன் கத்துக்கலாம்.”

சார்லஸ்
ஏன் உங்கள் படங்கள்ல சில ஹீரோயின்கள் தொடர்ச்சியா நடிக்கிறாங்க?
“ஏன் இந்தக் கேள்வியை என்கிட்ட மட்டுமே கேட்கிறீங்க? ராதிகா மேடம் சிரஞ்சீவி சார்கூட 30 படங்களுக்கு மேல நடிச்சிருக்காங்களாம். இந்தக் கேள்வியே தேவையில்லாததுன்னு நினைக்கிறேன். ஒரு நடிகையோட ஒரு படம்தான் நடிக்கணுமா என்ன? நடிகையோட கேரியர் ரொம்பச் சின்னது. அதுல ஒரு படம் நடிச்சவங்க திரும்ப நடிக்கக்கூடாதுன்னு கண்டிஷன்லாம் போடறது நியாயமில்லை. மேலும், இதுமாதிரியான கேள்விகள் வரும்போது திறமையான நடிகைகளுக்குத் தொடர்ச்சியா நடிக்கிற வாய்ப்பு குறைஞ்சுபோகும். அதனால, இந்தமாதிரிக் கேள்விகளைக் கேட்காம இருக்கிறதுதான் நல்லது!”
இரா.கலைச்செல்வன்
உங்கள் நடிப்பு குறித்து மக்களிடம் எந்த மாதிரியான கமென்ட்டுகளை எதிர்பார்க்கிறீர்கள்?
“எதிர்பார்ப்புங்கிறதைவிட இப்படிச் சொல்லலாம், நான் ஒரு படத்துக்காகக் கஷ்டப்பட்டு நடிச்சிருக்கலாம். ஆனா, நான் ‘கஷ்டப்பட்டு நடிச்சிருக்கேன்’னு மக்களுக்குத் தெரியக்கூடாது.”
நா.சிபிச்சக்கரவர்த்தி
சினிமாவே பார்க்காம இருந்த நீங்கள், எப்போது, எப்படி உங்களுக்குள் இருந்த நடிகனை அடையாளம் கண்டீர்கள்?
“காலேஜ் இறுதிக்கட்டத்துல சில நண்பர்கள் ‘உன் மூஞ்சி நல்லா இருக்குடா’ன்னு உசுப்பேத்தி விட்டாங்க. துபாய்ல இருந்தப்ப எங்க அண்ணன் அவன் பங்குக்கு என்னைப் போட்டோ எடுத்து ‘போட்டோஜெனிக்’னு சொன்னான். ஒருகட்டத்துல கடனை அடைக்க, நடிக்கணும்கிற நிலைமை வந்தது. எனக்குள்ள இருந்தவன் அசிங்கப்பட விரும்பலை. அதனால நடிச்சே ஆகணும்னு வெளியில வந்தான்.”

சுகுணா திவாகர்
`சூது கவ்வும்’, ‘பீட்சா’ போன்ற படங்களின் வருகைக்கு முன்பு, ஹீரோயிசப் படங்களே அதிகம் வெளியாகின. ஆனால், ஹீரோயிசம் இல்லாத படங்களின் மூலம் கதை நாயகனாக உருவானவர் நீங்கள். இந்த மாற்றத்தை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்? அதேநேரத்தில், ‘றெக்க’ போன்ற ஹீரோயிசப் படங்களிலும் நடிக்கிறீர்களே?
“என் படங்கள்ல ஹீரோயிசம் இல்லைன்னு யார் சொன்னது? ஒரு நல்ல செயலைச் செய்துட்டு ஸ்லோமோஷன்ல நடந்து வந்தாலே அது ஹீரோயிசம்தான். மக்களைக் கவரும் செயலைச் செய்தால் போதும், படத்தின் காட்சி உங்களைக் கவர்ந்தால் போதும்னு நினைக்கிறேன். என்னோட படங்களில் வழக்கமான ஹீரோயிசம் இல்லாம இருக்கலாம். ஆனால், எல்லாப் படங்களிலுமே ஹீரோயிசம் வேற வேற ரூபத்துல இருக்கத்தான் செய்யுது.”
- விஜய் சேதுபதி வருவார்...