
மிஸ்டர் மியாவ்
கேள்வி
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்கள் இருவரும் அரசியலில் பிஸி. சினிமா, பெரும் பிரச்னையில் சிக்கியிருக்கிறது; ஸ்டிரைக் நடந்துகொண்டிருக்கிறது. பிரச்னை குறித்து, இருவரிடமிருந்தும் இதுவரை எந்தக் கருத்தும் வரவில்லை. ‘ரஜினி, கமல்... எப்போ குரல் கொடுப்பீங்க?’

வைரல்
பெண்கள் தினத்தையொட்டி பாலிவுட் கலைஞர்கள் சிலர் இணைந்து உருவாக்கிய ‘ஐ ஆம் ஸாரி’ என்ற குறும்படத்தில் நடித்திருக்கிறார் ரித்திகா சிங். அஸ்வினி சவுத்ரி என்பவர் இயக்கிய இந்தக் குறும்படம், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை மையப்படுத்தியது. யூடியூபில் லட்சத்துக்கும் அதிகமான பார்வையாளர்களைப் பெற்றிருக்கும் இந்தக் குறும்படத்தை #iamsorry என்ற ஹேஷ்டாக்கில் பாராட்டித் தள்ளி ட்ரெண்டிங்கில் இடம்பிடிக்க வைத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.
• திருமணத்துக்குப் பிறகு, ரீ-என்ட்ரி கொடுத்திருக்கிறார், ப்ரியாமணி. தமிழில் வெளியான ‘கொடி’ படம், கன்னடத்தில் ‘துவாஜா’ என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. தமிழில் த்ரிஷா நடித்த அரசியல்வாதி கேரக்டரில்தான் ப்ரியாமணி நடித்துக்கொண்டிருக்கிறார்.
ஹாட் டாபிக்
முடிவுக்கு வராமல் தொடர்கிறது, திரைப்படத் துறையின் பிரச்னை. தயாரிப்பாளர்கள் சங்கக் கூட்டத்தில், எல்லா சினிமா நிகழ்வுகளையும் நிறுத்திவைக்கும் முடிவை ஒருமனதாக எடுத்திருக்கிறார்கள். டிஜிட்டல் சினிமா நிறுவனங்களுக்கும் தயாரிப்பாளர்களுக்குமான இந்தப் பிரச்னைக்கு முடிவு கிடைக்கும்வரை, புதிய படங்களின் விளம்பர அறிவிப்புகள்கூடப் பத்திரிகைகளில் இடம்பெறாது என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால், தயாரிப்பாளர்களிடம் இதுவரை வசூலித்துக் கொண்டிருந்த வி.பி.எஃப் தொகையைத் திரையரங்க உரிமையாளர்களிடம் வசூலிக்கலாமா என ஆலோசித்துக் கொண்டிருக்கின்றன டிஜிட்டல் சினிமா நிறுவனங்கள்.

• காஜல் அகர்வால் சமீபத்தில், தெலுங்கில் நடிகர் ரவி தேஜாவுடன் நடிக்க ஒரு படத்தில் ஒப்பந்தமானார். ஆனால், திடீரென அதிலிருந்து விலகிவிட்டார். ‘சம்பளச் சிக்கல்தான் காரணம்’ என்கிறார்கள். இப்போது, அவருக்குப் பதிலாக அனு இம்மானுவேல் நடிக்கிறார்.
ஹைலைட்
அஜித் - நயன்தாரா நடிப்பில் சிவா இயக்கவிருக்கும் ‘விசுவாசம்’ படத்தின் படப்பிடிப்பு வருகிற 23-ம் தேதி ஹைதராபாத்தில் நடைபெறுவதாக இருந்தது. ஸ்டிரைக் காரணமாக இது திட்டமிட்டபடி நடைபெறாது என்றாலும், ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் அமைக்கப்படும் செட் வேலைகளை நிறுத்தவேண்டாம் என்று சென்டிமென்ட் காரணமாக அறிவுறுத்தியிருக்கிறாராம், தயாரிப்பாளர். படத்துக்காக இரண்டு பாடல்களை கம்போஸ் செய்துமுடித்துவிட்டாராம், இசையமைப்பாளர் இமான்.
• ஏற்கெனவே கபடி, கிரிக்கெட் போட்டிகளை மையமாக வைத்துப் படம் இயக்கிய சுசீந்திரன், இப்போது கால்பந்துப் போட்டியை மையமாக வைத்துப் புதிய படம் ஒன்றை இயக்கவிருக்கிறார். புதுமுகங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகவிருக்கும் இந்தப் படத்துக்கான நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெறுகிறது.

• பார்ட்-டூ படங்களின் பட்டியலில் லேட்டஸ்டாக இணைந்திருக்கிறது, ‘சுந்தரபாண்டியன்.’ சசிகுமாரை வைத்து முதல் பாகத்தை இயக்கிய எஸ்.ஆர்.பிரபாகரனே இந்தப் படத்தையும் இயக்குகிறார். ஏற்கெனவே சசிகுமார், சமுத்திரகனி காம்போவில் ‘நாடோடிகள்-2’ படமும் உருவாகிக் கொண்டிருக்கிறது.