
படங்கள்: பா.காளிமுத்து, க.பாலாஜி
பரிசல் கிருஷ்ணா
உங்களுக்குள் ஒரு ஸ்க்ரிப்ட் ரைட்டர் இருப்பதாகச் சொல்லியிருந்தீர்கள். அந்த ஸ்க்ரிப்ட் ரைட்டர் எத்தனை கதைகள் வைத்திருக்கிறார்?
ஸ்க்ரிப்ட் ரைட்டர் இருந்தார். ஸ்க்ரிப்ட் எல்லாம் கூட இருக்கு; ஆசையும் இருக்கு. ஆனா தூசு தட்ட இப்ப தயாரா இல்லை. கடன் இருக்கு. கடமை இருக்கு. தயாரிப்பாளர் ஆனதே பெரிய விஷயம்.

சுகுணா திவாகர்
பெரியார் விருது உங்களுக்குக் கிடைத்தது. பெரியாரியம், கடவுள் குறித்த உங்கள் பார்வை என்ன?
எனக்கு கடவுள் நம்பிக்கை இருக்கு. நான் உணர்கிறேன். என் மனைவிகிட்ட ஒருமுறை நான் இதுபத்தி விவாதிச்சிருக்கேன். பேரன்பும், பெருங்கருணையுமே கடவுள், அல்லது இந்த அன்பு, கருணை வழியேதான் கடவுளை அடைய முடியும்னு நான் நம்பறேன். சக மனுஷன் மீது காட்டுகிற அன்பும் கருணையுமே ஆன்மிகம்னு சொல்வேன். பெரியாரைக் கடவுள் மறுப்பாளர்ங்கிற ஒரே கோணத்துல இங்க பார்க்கிறாங்க. பொதுவா தலைவரோட கருத்துங்கிறது அவரோட சொந்தக் கருத்து மட்டுமில்லை. அது ஒரு தொடக்கப் புள்ளி. அதைப் பிடிச்சுக்கிட்டு, மேற்கொண்டு சிந்திக்கணும்கிறதுக்காகச் சொல்றது. அந்தச் சிந்தனையில் மனிதம் இருக்கணும். அன்பையும் கருணையையும் விடுத்து, ‘கடவுளுக்காகக் கொலை செய்யத் தயார்’ங்கிறான் பாருங்க, அவன்தான் என்னைப் பொறுத்தவரை நாத்திகவாதி. ‘என்ன பண்ணினாலும் கடவுள் நம்மைத் தண்டிக்க வரமாட்டார்’னு அவன் நம்பறான். அதனாலதான் அந்த வேலைகளைத் தொடர்ந்து செய்துட்டு வர்றான்.
சக்தி தமிழ்ச்செல்வன்
அடுத்து முதல்வராகப் பதவியேற்கிறவர், முதல் கையெழுத்து எதற்குப் போட வேண்டுமென விரும்புகிறீர்கள்?
மக்கள்கிட்ட வந்து தெளிவா பேசணும்கிறதே என் முதல் கோரிக்கை. ஒரு குடும்பத்துல அப்பாவைப் பார்த்து எனக்கு அதைச் செய்; இதைச் செய்னு பிள்ளைங்க கேக்கறாங்க, அப்பா கூப்பிட்டு உட்கார வச்சு ‘வீட்டோட நிலைமை இது’ன்னு சொன்னார்ன்னா, பத்து பிரச்னைகளில் நாலு குறையலாம். பொறுப்பைப் பிள்ளைங்க எடுத்துக்கிடுவாங்க. அந்த மாதிரி நாட்டின் நிலைமையை மக்கள்கிட்டப் பேசி விளக்குங்க. ஒரு கையெழுத்துப் போடறது மூலமா எல்லாம் சரியாகிடாது. பிரச்னை இங்க நிறைய இருக்கு.

இரா.கலைச்செல்வன்
உங்கள் ரசிகர் மன்றங்களை ஒருங்கிணைக்கத் தொடங்கியிருக்கிறீர்களா?
இல்லை. ரசிகன் நல்லா இருக்கணும்னு விரும்பறேன். கோஷம் போட்டுட்டே அவன் தேங்கிடக் கூடாதுன்னு நினைக்கிறேன். ஒரு ரசிகன் என் பட போஸ்டர் ஒட்டறப்ப விழுந்து அடிபட்டுட்டான். அவனைக் கூப்பிட்டு நல்லாத் திட்டி அனுப்பினேன். ‘கூட்டத்தையும் ஆட்டத்தையும் கலைச்சிடுவேன்’னு எச்சரிச்சேன். எனக்குச் சாதகமா ரசிகர்களைப் பயன்படுத்தற எண்ணம் எனக்கு இல்லை.
பிரதீப் கிருஷ்ணா
எங்கேயாவது எப்போதாவது அவமானப்பட்டிருக்கீங்களா?
அவமானப்படாதவங்களே இருக்க மாட்டாங்க. இருந்தா அவங்க வெற்றியாளரா இருக்க மாட்டாங்க. இருபது முதல் முப்பத்தைஞ்சு வயசு வரை சந்திக்கிற அவமானங்களே, சிந்திக்க வைக்கும்கிறதை நான் உணர்ந்திருக்கேன். அதனால என்னைக் கேட்டா அவமானம் ஒவ்வொருத்தருக்கும் தேவை.
பிரதீப் கிருஷ்ணா
இதுவரை கிடைத்த பாராட்டுகளில் மறக்க முடியாதது எது?
சந்தனக் கடத்தல் வீரப்பன் இறந்தப்ப ‘இப்படியும் இருக்கலாம்’னு ஒரு கதை எழுதினேன். அந்தக் கதையை எங்கப்பாகிட்டக் காட்டினேன். படிச்சுப் பார்த்துட்டு ‘உங்கிட்ட இப்படியொரு பாண்டித்துவம் இருக்காடா?’ன்னார். மறக்க முடியாத பாராட்டா இன்னிக்கும் அந்த வார்த்தையைத்தான் நினைக்கறேன்.
சனா
திருநங்கையாக நடித்த அனுபவம் எப்படி?
திருநங்கையா நடிச்சப்ப ‘நளினம்’கிற ஒரு விஷயம் மூலமா எனக்குள்ள இருக்கிற பெண்மையை உணர்ந்தேன். அவங்களை நினைச்சு ரொம்பவே வேதனையும்பட்டேன். வீடும் ஒதுக்குது; சமூகமும் ஒதுக்குது. ஆனா, விதிக்கப்பட்ட நாள் வரைக்கும் இங்க வாழ்ந்தாகணும். அவங்களோட நிலைமை மாறணும்னு ஆசைப்படறேன். நிச்சயம் மாறும்.


ஆர்.சரண்
பணம் குறித்த உங்கள் மதிப்பீடு?
நம்முடைய எல்லாப் பிரச்னைகளுக்கும் தீர்வு பணம்னு நான் நம்பினேன். எந்த அளவுக்கு உச்சமா நம்பினேனோ, அந்த அளவுக்கு அது பொய்னு உணர்ந்துகிட்டேன். என்னோட இந்தக் கருத்துதான் சரின்னு நீங்க எடுத்துக்கத் தேவையில்லை. நல்லதும் கெட்டதும் நிறைஞ்ச உலகத்துல எல்லாச் சிந்தனைகளுக்கும் இடமிருக்கு.
பரிசல் கிருஷ்ணா
இப்ப கேட்கப்போற கேள்விகளுக்கு உங்க படம் பேருதான் பதிலா இருக்கணும்.. ரெடியா சார்?
தமிழ்நாட்டோட இப்போதைய அரசியல் நிலைமை எப்படி இருக்கு?
ஒரு நல்லநாள் பார்த்து சொல்றேன்

ஒரு ஷோவுல யாரைக் கடத்திட்டுப் போகணும்னு கேட்டப்ப நயன்தாரானு சொன்னீங்க. அவங்க கூட ஜோடியாவும் நடிச்சிட்டீங்க. உங்க கையால ஆனந்தவிகடன் விருதும் அவங்களுக்கு கொடுத்திட்டீங்க. இதையெல்லாம் நினைச்சுப் பாக்கறப்ப உங்களுக்கு என்ன தோணும்?
ஆண்டவன் கட்டளை
உங்க ஃபேமலிய நெனைச்சுப் பாக்கறப்ப என்ன படம் தோணும்?
சேதுபதி
நீங்க நேரடி அரசியலுக்கு எப்ப வருவீங்க?
ரம்மி
நீங்க நல்லா நடிச்ச போர்ஷன் படத்துல வராம எடிட்டிங்ல கட் ஆனா என்ன நெனைப்பீங்க?
நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம்
சினிமால ஹிட் ஆகறதுக்கான ஃபார்முலா என்ன?
ஆரஞ்சு மிட்டாய்
நீங்க பேய்த்தனமா நடிச்ச படம்?
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா?