
“டாஸ்மாக் சாங் நடிக்க மாட்டேன், பெண்களைக் கிண்டலடிக்கும் பாடலில் ஆட மாட்டேன்!” - சிவகார்த்திகேயன் சத்தியம்#VikatanPressMeetபடங்கள்: கே.ராஜசேகரன், ப.சரவணகுமார்
விகடன் நிருபர்களுக்கு மட்டுமேயான பிரத்யேக பிரஸ்மீட் இது.
கொஞ்சம் காதல், கொஞ்சம் காமெடி, கொஞ்சம் எமோஷனல், கொஞ்சம் சீரியஸ்... அதுதானே சிவகார்த்திகேயனின் சினிமா அடையாளம். விகடன் பிரஸ்மீட்டிலும் கிட்டத்தட்ட அதே ஃபீல்தான்...
‘`மூன்றுமணிநேரம், 25 நிருபர்களின் சரமாரிக் கேள்விகள், எதிர்கொள்ள வேண்டும்... கலந்துகொள்கிறீர்களா?’’ என்று சிவகார்த்திகேயனிடம் கேட்டதும் பதில் வந்தது. ‘‘வருகிற வியாழக்கிழமை காலை 11மணிக்கு, இடம் உங்கள் சாய்ஸ்!’’ நுங்கம்பாக்கம் `தி பார்க்' ஹோட்டலில் கூடினோம். சொன்ன நேரத்துக்கு ஷார்ப்பாக வந்து சேர்ந்தார் சிவா. அரங்கத்தின் கதவைத் திறந்ததும், “ரஜினி, கமல்... யாருக்கு ஓட்டுப் போடப்போறீங்க?”, “தினகரன் புதுக்கட்சி பற்றி உங்க கருத்து?”, “உங்க ட்விட்டருக்கு யார் அட்மின்?” என்று விதவிதமான கேள்விக்கணைகளை விகடன் நிருபர்கள் மைக்குடன் தொடுக்க, சின்னதாய் ஜெர்க் ஆனார் சிவா. ‘`ஆகமொத்தம் நீங்க என்கிட்ட பதிலை எதிர்பார்க்கலை, அப்படித்தானே?’’ என அந்த நிமிடத்தைக் கலகலப்பு ஆக்கினார்.

அரைமணிநேரம் போட்டோஷூட். அசராமல் போஸ் கொடுத்தவர், ``புக் முழுக்க என் படத்தைத்தான் போடப்போறீங்கபோல, இவ்ளோ போட்டோ எடுக்குறீங்களே!’’ எனக் கலாய்த்தார்.
விகடனில் இடம்பெற்ற குட்டிச் செய்தி ஒன்றுதான், சிவகார்த்திகேயனுக்கும் விகடனுக்குமான முதல் பிணைப்பு. பிறகு, பேட்டிகள், கட்டுரைகள் எனத் தொடங்கி, ஆனந்த விகடன் அட்டைப் படங்களை அலங்கரித்தது, தீபாவளி மலர் அட்டையில் இடம்பிடித்தது என்று வளர்ந்து நின்றார். சிறந்த நிகழ்ச்சித் தொகுப்பாளராக விகடன் விருது பெற்றது, டாப் 10 மனிதர்கள் விருதை பெற்றது, விகடன் பேட்டிகளில் சிவகார்த்திகேயன் பகிர்ந்துகொண்ட விஷயங்கள் என விகடனுக்கும் சிவகார்த்திகேயனுக்குமான உறவு மிக நீண்டது. அவற்றையெல்லாம் தொகுத்துச் சிலநிமிடக் காணொளியாகத் திரையிடப்பட்டது. விழிகள் விரிய வீடியோவைப் பார்த்து ரசித்தார், சிவா.
மிமிக்ரி கலைஞராக இருந்ததில் தொடங்கி, டாப் ஹீரோ லிஸ்டில் இடம்பிடித்த தருணம் வரை... விகடன் புகைப்படக் கலைஞர்கள் எடுத்த புகைப்படங்கள் அத்தனையும் அரங்கத்தில் வைத்திருந்தோம். ஒவ்வொன்றாக ஆச்சர்யத்தோடு பார்த்து, ‘‘இந்த போட்டோ என்கிட்டயே இல்லைங்க” என்று வியந்தார்.
சிவா மேடையேறி சோபாவில் அமர்ந்தார். `உட்கார்ந்திருக்கிற சோபா கம்ஃபர்ட்டபிளா இருக்குல்ல...' என நிகழ்வைத் தொகுத்து வழங்கிய இரா.கலைச்செல்வன் கேட்டார். `ரொம்ப கம்ஃபர்ட்டபிளா இருக்குங்க, ஏன் கேட்குறீங்க?' என்றார் சிவா.
``மூன்று மணிநேரம் நீங்க ஓடவும் முடியாது; ஒளியவும் முடியாது!’' என்று சொன்னதும், டிரேடு மார்க் புன்னகையோடு ‘‘ரெடி ஸ்டார்ட்’’ எனக் கேள்விகளை எதிர்கொள்ளத் தயாரானார் சிவா.
அப்பாவின் இடத்தில் குடும்பத்தை வழிநடத்தும் அக்கா, வெகுளியான அம்மாவிடம் சிவா சொன்ன பொய்கள், தன்னுடைய முதல் வாய்ப்பு, விமர்சனங்கள் என சிவகார்த்திகேயன் பதில்கள் அத்தனையும் உணர்வுபூர்வமாகவும் சுவாரஸ்யமாகவும் அமைந்திருந்தன. தன் வாழ்க்கைப்பாதையை, தன்னுடைய விருப்பு வெறுப்புகளை, தன் பார்வைகளை அழுத்தந்திருத்தமாகப் பதிவுசெய்தார் சிவா.
ஆனந்த விகடன் வெளியாகும் அதே நாளில், ‘சினிமா விகடன்’ யூடியூப் சேனலிலும் சிவாவின் பதில்களை வீடியோவாகவும் பார்க்கலாம்.

“ ‘மெரினா’ படத்துக்காக நீங்க வாங்கின சம்பளத்தை என்ன செஞ்சீங்கன்னு ஞாபகமிருக்கா? இப்போ வாங்குற சம்பளத்துல என்ன வாங்கணும்னு நினைக்கிறீங்க?”
- ஸ்ரீராம்
“அந்த சம்பளத்தை ரெண்டா பிரிச்சு ஒரு பாதியை அம்மாகிட்ட கொடுத்து, ‘யாருக்காச்சும் கொடுக்கணும்னு நினைச்சா கொடுங்க’னு சொன்னேன். இன்னொரு பாதியை வீட்ல இன்னும் பத்திரமா அப்படியே வெச்சிருக்கேன். எனக்கான தேவைகள்னு பெரிசா ஒண்ணும் இல்லை. புதுசு புதுசா போன் லாஞ்ச் ஆகும்போது அதை வாங்கிடுவேன். முன்ன இருந்ததைவிட இப்ப பெரிய வீடு, கார் எல்லாம் இருக்கு. நான் ஷாப்பிங்கூடப் போறதில்லை. எல்லாமே என் மனைவிதான் பாத்துக்கிறாங்க. அதனால், இதை வாங்கணும், அதை வாங்கணும்னு பெருசா எதையும் யோசிச்சதில்லை.”

“ ‘அந்தப் பையனுக்கு பிசினஸ் இருக்கானு பார்த்துக்கோ’னு உங்களைப்பற்றிச் சொன்னவங்க இப்ப என்ன சொல்றாங்க?”
- நா.சிபிச்சக்ரவர்த்தி
“ ‘பிசினஸ் இருக்கு, பார்த்துக்கோ’னு சொல்றாங்க.”
“ரஜினி, கமல் ரெண்டு பேருமே அரசியலுக்கு வந்துட்டாங்க. இவங்கள்ல உங்க சாய்ஸ் யார்?”
- அய்யனார் ராஜன்
``ரெண்டு பேருமே அவங்களோட நிலைப்பாடு என்னனு இன்னும் சொல்ல ஆரம்பிக்கலை. நான் ஓட்டு போடுறதைப் பத்தி வீட்லகூட டிஸ்கஸ் பண்ணிக்க மாட்டேன். ஓட்டு போடுறதுங்கிறது மிகப்பெரிய பொறுப்பு. அது யாருக்கு என்பது எனக்கு மட்டுமே தெரிஞ்ச உண்மை, ரகசியம்.”

“நீங்க ஸ்கூல் படிக்கும்போது குஷ்பு ரசிகரா இருந்ததாகவும், அவங்களைப் பார்க்க உங்க தாத்தாவோடு போனீங்க என்றும் கேள்விப்பட்டோமே?”
- சனா
“அப்பெல்லாம் எனக்கு குஷ்பு மேடத்தை, அவங்களோட டான்ஸை ரொம்பப் பிடிக்கும். எங்க எல்லோரையும்விட எங்க தாத்தாவுக்குதான் குஷ்பு மேடத்தை ரொம்பப் பிடிக்கும். அவருக்கு குஷ்புனுகூடச் சொல்லத்தெரியாது. ‘குஸ்ப்பு’னுதான் சொல்லுவார். நான் ஸ்கூல் படிச்சுட்டிருக்கும்போது குஷ்பு மேடம் வீட்டுப் பக்கத்துலதான் என் சித்தி வீடும் இருந்துச்சு. லீவுக்கு சித்தி வீட்டுக்கு வரும்போதெல்லாம் ஒரு தடவையாச்சும் குஷ்பு வெளியே வருவாங்களா, அவங்களைப் பார்த்திடமாட்டோமானு பால்கனியிலேயே நிப்போம். எங்களை சாக்கா வெச்சு எங்க தாத்தாவும், ‘பிள்ளைகளுக்கு குஷ்புவ காட்டிடுவோம்’னு கூடவே நிப்பார். ரெண்டு, மூணு நாள் வெயிட் பண்ணிப் பார்த்தோம். அவங்க வரவேயில்லை. அப்பறம் அவங்க வீட்டுல வேலை பார்த்த ஒரு அக்கா, குஷ்பு ஆட்டோகிராப் போட்ட ஒரு போட்டோவைக் கொடுத்தாங்க. அதை நான் எங்க வீட்டு ஹால்ல வெச்சுட்டேன். அதைப்பார்த்த எங்க அப்பா, ‘இதை யார்றா இங்க வச்சது?’னு சொல்லி எங்கயோ போட்டுட்டார். சினிமாவுக்கு வந்ததுக்கு அப்பறம் அந்த ஞாபகங்கள் எல்லாத்தையும் குஷ்பு மேம்கிட்ட சொன்னேன். சிரிச்சாங்க.”

“நீங்க டீடோட்டலர்னு கேள்விப்பட்டோம். ‘ஆனா, உங்க பெரும்பாலான படங்கள்ல டாஸ்மாக் பாட்டு இடம்பெறுது. பெண்களைக் கிண்டலடிக்கும் பாடல்களும் வருது. ‘வேலைக்காரன்’ படத்தில் நச்சு உணவுகளைச் சாப்பிடக்கூடாதுன்னு சொன்ன நீங்க, டாஸ்மாக் சாங்கையும் பெண்களைக் கிண்டலடிக்கும் பாடல்களையும் வைக்கிறது மட்டும் எந்த விதத்துல சரியா இருக்கும்?”
- ரீ.சிவக்குமார்
“இது ரொம்ப நல்ல கேள்வி. நீங்க பழைய படங்கள் பத்தியே பேசிட்டிருக்கீங்க. `வேலைக்காரன்' படத்துல ஒரு நல்ல விஷயம் சொன்னேன். ஆனா, ‘நீ ‘ரெமோ’ படத்துல அப்படி பண்ணிருக்க’னு பின்னாடியே இழுக்குறீங்க. அப்படி இருந்து, வளர்ந்து வர்றது ஒரு ப்ராசஸ். பொன்ராம் சாருடன் இப்ப பண்ணிட்டிருக்குற ‘சீமராஜா’ படத்துல, பொண்ணுங்களைக் கிண்டல் பண்ற மாதிரி பாட்டும் இல்ல, டாஸ்மாக் சீனும் இல்ல. இனிமேல் இந்த மாதிரி சூழ்நிலை வராது. அஞ்சு வருஷம் கழிச்சு இந்த மாதிரி கேள்வியே என்கிட்ட கேட்க மாட்டீங்க. `ஓப்பன் தி டாஸ்மாக்கு' பாட்டுப் பண்ணும்போது எனக்கு எதுவும் தெரியாது, ஜாலியா இருந்தது. ஆனா இப்போ, என் இயக்குநர்களே அந்தமாதிரியான காட்சிகளைத் தவிர்த்துடுறாங்க. இனிமே டாஸ்மாக் சாங்கும் பெண்களைக் கிண்டலடிக்கும் பாட்டும் என் படத்தில் இருக்காது!”

“விஜய் ஆடும்போது அந்தக் கஷ்டமே முகத்துல தெரியாத மாதிரி ஆடுவார். அவரை மாதிரியே நீங்களும் ரொம்ப ஈஸியா ஆட ஆரம்பிச்சிட்டீங்க. மிகக் குறைவான காலத்துல அதுக்கு நீங்க எடுத்துக்கிட்ட மெனக்கெடல்கள் பற்றிச் சொல்லுங்க?”
- ப.சூரியராஜ்
“ ‘மனம் கொத்திப் பறவை’ படப் பாட்டுல நான் ஆடுறதைப் பார்த்துட்டு, ‘ஏன் நல்ல பாட்டுக்கு எக்சர்சைஸ் பண்ணிகிட்டு இருக்க?’னு வந்த ஒரு ட்வீட்தான், ‘நம்மளை இம்ப்ரூவ் பண்ணிக்கணும்’னு தோண வெச்சுச்சு. ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ மாதிரியான படங்கள்ல வர்ற பாடல்களை என்ஜாய் பண்ணி ஈஸியா ஆடிட முடியும். ஆனா, ‘மான் கராத்தே’ மாதிரியான படங்கள்ல வர்ற வெஸ்டர்ன் பாடல்களுக்கு ஆடுறது சிரமமா இருந்துச்சு. முதல்ல அவங்க கொடுக்குற ஸ்டெப்பை சரியா பண்ணிடணும்னு நினைச்சுப் பண்ணுனேன். அதை ஸ்கிரீன்ல பார்க்கும்போது அழகா இருந்துச்சு. டான்ஸுக்கு ரிகர்சல் பண்ணும்போது, அஞ்சு நிமிஷம் எக்ஸ்ட்ராவா கேட்டு கொஞ்சம் அதிகமா ப்ராக்டீஸ் பண்ணிக்குவேன். இப்பெல்லாம் அப்படிப் பண்ணியே ஆகணும்னு மாஸ்டர்ஸ் சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க. அவங்க சொல்ற ஸ்டெப்பை மாத்தாம அப்படியே ஆடிடணும்னு நினைப்பேன். ஆனா, இன்னும் நல்லா ஆடணும்னு நினைக்கிறேன். விஜய் சார் ஆடும்போது மெனக்கெடலே அவர் முகத்துல தெரியாது, ஒரு கிரேஸ் இருக்கும். அவரளவுக்கு இல்லாட்டியும் அந்த பெர்ஃபெக்ஷனைக் கொண்டுவரணும்னு முயற்சி பண்ணிட்டிருக்கேன்.”

“காதலிக்கலைனா கொலை பண்றது, ஆசிட் அடிக்கிறது மாதிரியான சம்பவங்களுக்கு சினிமா ஒரு காரணம்னு குற்றம் சாட்டப்படுது. அதை எப்படிப் பார்க்கிறீங்க?”
- குணவதி
“சினிமாவுலயே அந்த மாதிரி பண்ணக்கூடாதுனும் காட்சிப்படுத்தியிருக்காங்க. சினிமால இருக்கிறவங்ககிட்ட இதைக் கேட்டா, ‘நடக்குறதைத்தான் காட்சிப்படுத்துறோம்’னு சொல்வாங்க. சினிமாவில் எல்லாமே இருக்கு. அதுல இருந்து என்ன எடுத்துக்குறோம்ங்கிற புரிதல்தான் முக்கியம். படிப்பும் அறிவும் இந்த விஷயத்துல நமக்கு உதவியா இருக்கும். சினிமாவுக்குச் சில கடமைகள் இருக்குங்கிறது உண்மை. ஆனா, இந்த மாதிரி நடக்குறதுக்கு சினிமாதான் காரணம்னு பழிசுமத்துறது தவறு. சமூகப் பார்வை, தனி மனித ஒழுக்கம் இந்த மாதிரி நிறைய விஷயங்கள் இதுல அடங்கியிருக்கு. அதனால், சினிமாவால்தான்னு சொல்றதை என்னால் ஏத்துக்க முடியாது.”

“வாய்ப்பு கேட்டு நடையா நடந்திருப்பீங்க, அப்போ உங்களுக்கு வந்த ஒரு முக்கியமான போன்கால் பத்தி சொல்லுங்க.. யார் கால் பண்ணாங்க.. என்ன நடந்துச்சு அதுக்கு அப்புறம்?”
“கமல் ரசிகர்களுக்கும் உங்களுக்கும் என்ன பஞ்சாயத்து, மதுரை ஏர்போர்ட்ல என்னதான் நடந்துச்சு?”
இன்னும் பல கேள்விகளுக்கு எஸ்கேவின் பதில்கள் அடுத்தவாரம்...