மற்ற எபிசோடுகள்
Published:Updated:

விகடன் பிரஸ்மீட்: “ஷங்கர் சார் சொன்னா இப்பவே ரெடி!” - சிவகார்த்திகேயன்

விகடன் பிரஸ்மீட்: “ஷங்கர் சார் சொன்னா இப்பவே ரெடி!” - சிவகார்த்திகேயன்
பிரீமியம் ஸ்டோரி
News
விகடன் பிரஸ்மீட்: “ஷங்கர் சார் சொன்னா இப்பவே ரெடி!” - சிவகார்த்திகேயன்

விகடன் நிருபர்களுக்கு மட்டுமேயான பிரத்யேக பிரஸ்மீட் இது. #VikatanPressMeetபடங்கள்: கே.ராஜசேகரன், ப.சரவணகுமார்

“உங்க முதல் படத்தை தியேட்டர்ல பார்த்த அந்தத் தருணம் எப்படி இருந்தது?”

- ம.கா.செந்தில்குமார்

“சத்யம் தியேட்டரில் ஒரு சின்ன ஸ்கிரீன்லதான் ‘மெரினா’ படம் ரிலீஸ் ஆச்சு. ‘நாம பண்ணின விஷயங்கள் சரியா ரிசீவ் ஆகுமா’னு எனக்கு ஏகப்பட்ட யோசனைகள். ‘தியேட்டர்ல ஆடியன்ஸ் எப்படி ரியாக்ட் பண்றாங்கனு பார்க்கலாம்’னு போயிருந்தேன். மூணு வரிசை முழுக்க காலேஜ் பொண்ணுங்க. எல்லோரும் கைதட்டி, ரசிச்சுச் சிரிச்சாங்க. அவங்களோட ரெஸ்பான்ஸைப் பார்த்துட்டு எனக்கு ஒண்ணுமே புரியலை. நான் எப்போதுமே பாண்டிராஜ் சார்ட்ட இருந்து நாலஞ்சு அடி தள்ளி நின்னுதான் பேசுவேன். ஆனால், அன்னைக்கு தியேட்டர்ல இருந்து வெளிய வந்ததும் சந்தோஷம் தாங்காம அவரைக் கட்டிப்பிடிச்சுக்கிட்டேன். மேஜிக் மாதிரி இருந்த என் பட முதல்நாள் முதல் ஷோவை மறக்கவே முடியாது. இந்த அனுபவம் எல்லா நடிகர்களுக்கும் கிடைச்சிருக்கும். ஆனால், முதல் படம் ரிலீஸான அன்னைக்கே அது கிடைக்குமானு தெரியலை. எனக்கு அது கிடைச்சது. ஏன்னா, டிவி மூலம் ஏற்கெனவே அறிமுகமாகியிருந்ததால என் முகம் மக்கள் மனசுல பதிஞ்சிருந்ததும் ஒரு காரணம்.”

விகடன் பிரஸ்மீட்: “ஷங்கர் சார் சொன்னா இப்பவே ரெடி!” - சிவகார்த்திகேயன்
விகடன் பிரஸ்மீட்: “ஷங்கர் சார் சொன்னா இப்பவே ரெடி!” - சிவகார்த்திகேயன்

“ஆங்கரா இருந்தப்போ யார்கிட்டெல்லாம் வாய்ப்பு கேட்டுப் போனீங்க? அந்த அனுபவத்தைப் பற்றிச் சொல்லுங்க?”

- சனா

“அதிகமா முயற்சி பண்ணது வெங்கட் பிரபு சார்கிட்டதான். ஏன்னா, அவர் படத்துலதான் எப்பவும் நாலஞ்சு ஹீரோக்கள் இருப்பாங்க. என் மைனஸ் எல்லாத்தையும் அவர் படத்துல ப்ளஸ் ஆக்கிட முடியும்னு தோணுச்சு. கூட நிறைய பேர் இருப்பாங்க. ஷோல பேசுற மாதிரியே பேசி நடிச்சிடலாம்னு நினைச்சேன். அது மட்டுமில்லாம, யூத் மத்தியில் அவர் படங்களுக்குத் தனி கிரேஸ் இருக்கு. அதனால், அவர் படத்துல நடிச்சா நல்ல ஆரம்பமா இருக்கும்னு நினைச்சேன். தவிர, கேட்டவுடனேயே வாய்ப்பு தரணும்ங்கிறது இல்லை. அவரோட கேங்க்ல இருக்குறவங்களை வெச்சுப் படம் பண்ணாலே அவர் இன்னும் நிறைய படங்கள் பண்ணலாம். அப்புறம், ‘வழக்கு எண் 18/9’ படத்துக்கான ஆடிஷன்ல கலந்துகிட்டேன். அந்த ரோல்தான் ஸ்ரீ பண்ணினார். ‘வேலைக்காரன்’ பாத்துட்டு பாலாஜி சக்திவேல் சார் பாராட்டினது ரொம்பவே சந்தோசமா இருந்துச்சு. அதிகமா நான் வாய்ப்பு கேட்டுப் போகலை. காரணம், அப்போ டிவிக்கும் சினிமாவுக்குமான தூரம் ரொம்பவே அதிகமா இருந்துச்சு.”


“நீங்க ரொம்ப மெனக்கெட்டு நடிச்ச சில காட்சிகள், மக்கள் மத்தியில் பேசப்படாமலே போயிருக்கும். அப்படி இருந்தா அவை என்னென்ன சீன்ஸ்?”

 - நந்தினி சுப்பிரமணி

“அப்படி ஒண்ணும் பெரிசா இல்லை. நான் மெனக்கெட்டுப் பண்ணினது ‘ரெமோ’தான். பதினெட்டு மணி நேரம் வேலை இருக்கும். சாப்பிட முடியாது. வயிறு வலிக்கும். அந்த வலியிலும் பெண்ணுக்கு உண்டான நளினத்தைக் கொண்டு வரணும்.  இவ்ளோ கஷ்டப்பட்டாலும் மக்கள்ட்ட இருந்து கிடைச்ச ரெஸ்பான்ஸ் நல்லாவே இருந்துச்சு. குழந்தைகள் எல்லோருக்குமே அந்தப்படம் ரொம்பப் பிடிச்சுப்போச்சு. எனக்கு ரொம்பவே ஹேப்பி.”

விகடன் பிரஸ்மீட்: “ஷங்கர் சார் சொன்னா இப்பவே ரெடி!” - சிவகார்த்திகேயன்

“கமல்  ரசிகர்களுக்கும் உங்களுக்கும் என்ன பஞ்சாயத்து? அன்னைக்கு மதுரை ஏர்போர்ட்ல என்னதான் நடந்துச்சு?”

- நித்திஷ்

“ஏர்போர்ட்ல திடீர்னு கூட்டமா வந்தாங்க. ரெண்டு மூணு கைகள் டமால் டுமீல்னு பின்னாடி வந்து விழுது. என்ன நடக்குதுன்னு புரியறதுக்குள்ள காருக்குள்ள வந்துட்டேன். ஏன் அப்படிப் பண்ணினாங்கன்னு அவங்ககிட்டதான் கேட்கணும். ‘ஏன் அப்படிப் பண்ணினாங்கனு தெரியலை. அவங்களுக்காக நான் மன்னிப்பு கேட்டுக்குறேன்’னு கமல் சார் அன்னைக்கே சொன்னார். எனக்கு மன்னிப்பெல்லாம் தேவைப்படலை.  அதை நானும் அப்படியே விட்டுட்டேன்.”

“அரசியல்ல ஆர்வம் இருக்கா, அப்படி இருந்தா உங்க கொள்கை கோட்பாடுகள் என்னவா இருக்கும்?”

- ஆர்.சரண்

“சாதாரண மனுஷனுக்கு இப்போ இருக்கிற சோஷியல் மீடியா மூலமா அரசியல் நிகழ்வுகள் எந்தளவு தெரியுமோ, அது எல்லாமே எனக்கும் தெரியும். அதுக்காக எனக்கு அரசியல் தெரியும்னு சொல்லிட முடியாது. அரசியல் ஆர்வம் வேற, செயல்படுறதுங்கிறது வேற. அரசியலுக்குப் பெரிய பக்குவம் வேணும். அதுக்குள்ள வர்றதைப்பற்றி நான் இதுவரைக்கும் யோசிச்சது இல்ல. அதனால கொள்கைகளைப் பற்றியும் யோசிக்கலை.”

விகடன் பிரஸ்மீட்: “ஷங்கர் சார் சொன்னா இப்பவே ரெடி!” - சிவகார்த்திகேயன்

“இயக்குநர் ஷங்கர் படத்துல நடிக்க ஆசைனு சொல்லியிருக்கீங்க. இப்ப இருக்கிற அரசியல் சூழல்ல அவர் ‘முதல்வன்-2’ படத்தை எடுத்தா, அதுல நீங்க நடிப்பீங்களா?”

- அய்யனார் ராஜன்

“ரெடிதான். இப்பவே அவர் ஆபீஸுக்குப் போய் அக்ரிமென்ட்ல கையெழுத்துப் போட்டுடுவேன். ஷங்கர் சார் இருக்கார்... அது போதுமே. வேற என்ன வேணும். ‘முதல்வன்’ வரும்போதே அது பிரச்னை இல்லாத, மக்களுக்குப் பிடிச்ச படமாத்தான் இருந்துச்சு. இதுவும் கண்டிப்பா அப்படித்தான் இருக்கும். ஸோ, நான் ரெடிதான்.”

“உங்க அப்பா விஜயகாந்த் ரசிகர்னு கேள்விப்பட்டோம். இதை விஜயகாந்த்கிட்ட சொல்லியிருக்கீங்களா?”

- நா.சிபிச்சக்கரவர்த்தி

“நேரா அவர்கிட்ட சொல்ற வாய்ப்பு கிடைக்கலை. அவர் பையன்கிட்ட சொல்லியிருக்கேன். அவர் விஜய்காந்த் சார்கிட்ட சொல்லியிருக்கார். அதைக் கேட்டதும் அவர் ரொம்ப சந்தோஷப்பட்டிருக்கார். சாருக்கு ஞாபகம் இருக்குமான்னு தெரியல, அப்பா டியூட்டில இருந்தபோது ஒரு முறை சார்கிட்ட போன்ல பேசியிருக்காங்க. அப்பாவுக்குத் தெரிஞ்ச நண்பர் மூலமா இந்த வாய்ப்பு கிடைச்சது. விஜய்காந்த் சாரை மீட் பண்ற வாய்ப்பு கிடைச்சா கண்டிப்பா இதைச் சொல்லுவேன்.” 

விகடன் பிரஸ்மீட்: “ஷங்கர் சார் சொன்னா இப்பவே ரெடி!” - சிவகார்த்திகேயன்

“கிரிக்கெட் சீசன் ஆரம்பிச்சிருச்சு. நீங்க கிரிக்கெட் ரசிகர், நல்லாவும் கிரிக்கெட் விளையாடுவீங்கனு கேள்விப்பட்டோம். கிரிக்கெட்ல உங்க அதிகபட்ச ஸ்கோர் என்ன? சி.எஸ்.கே டீம் மீண்டும் ஐ.பி.எல்லுக்குத் திரும்பியிருக்கிறதை எப்படிப் பார்க்குறீங்க?”

- சார்லஸ்

“தோனி தலைமையில் மீண்டும் சென்னை டீம் வர்றது ஒரு மாஸ் மொமன்ட்தான். ரொம்பநாள் கழிச்சி சி.எஸ்.கே விளையாடப்போறாங்க. முடிஞ்சளவு ஸ்டேடியம்ல இருந்து பார்க்கணும்னு ஆசையா இருக்கு. சின்ன வயசுல இருந்தே எனக்கு கிரிக்கெட் ரொம்பப் பிடிக்கும். நிறைய விளையாடியுமிருக்கேன். இப்ப ஓ.எம்.ஆர்லதான் ரெகுலரா விளையாடுறோம். நான் ஆல்ரவுண்டர். நான் ஒரு டீம் ஃபார்ம் பண்ணியிருக்கேன். இதேபோல தனுஷ் சார், அட்லீ, விக்னேஷ் சிவன், ஆர்.ஜே.பாலாஜினு நிறைய பேர் டீம் வெச்சிருக்காங்க. அவங்க
கூட எல்லாம் மேட்ச் போடுவோம். 10 ஓவர் மேட்ச்தான். ஒரு முறை அட்லீ டீம்கூட விளையாடும்போது 100 ரன்னுக்கு மேல அடிச்சேன். அன்னைக்கு நல்ல ஃபார்ம்ல இருந்தேன். யார் பௌலிங் போட்டாலும் அடி வெளுத்தேன். ஸ்டம்பை மறைச்சு நின்னுகிட்டு, ‘சுத்துடா சிவகார்த்திகேயா’னுதான் எல்லா மேட்சுமே விளையாடுவேன். அன்னைக்கு 10 ஓவர்ல டமால் டுமீல்னு 100 ரன் அடிச்சது செம ஹேப்பி.”

 “ஒரு மாஸ் என்டர்ட்டெயினர், க்ளாஸ் ஆக்டர். ரெண்டுல எதைத் தேர்ந்தெடுக்க விரும்புறீங்க?”

- பரிசல் கிருஷ்ணா

“மாஸ் என்டர்ட்டெயினரைத்தான் செலக்ட் பண்ணுவேன். ஏன்னா, மாஸ் என்டர்ட்டெயினரா இருக்கறதைக் கதை மட்டுமே  முடிவு பண்ணிடாது. கதையைத் தாண்டி ஸ்கிரீன் ப்ரசென்ஸ் ரொம்பவே முக்கியம். ஆடியன்ஸோட கனெக்ட் இருந்தா மட்டுமே அது சாத்தியப்படும். க்ளாஸ் ஆக்டரை, ஓர் இயக்குநர் நினைச்சா உருவாக்கிடலாம். ஆனா, மக்களோட கனெக்ட்ல இருந்தால்தான் மாஸ் என்டர்ட்டெயினரா இருக்க முடியும். அது ரொம்பவே சவாலான விஷயமும்கூட. அதுமட்டுமில்லாம, ஹிட், ரீச் எல்லாமே மாஸ் என்டர்ட்டெயினருக்குத்தான் நிறைய இருக்கு. ஸோ, அதுவா இருக்கணும்னுதான் ஆசைப்படுறேன்.”

அடுத்த வாரம்...

“இதுவரை உங்களைப்பத்தி யாருக்கும் தெரியாத ரகசியம் ஒண்ணு சொல்லுங்க?”

* தனுஷ்-சிவகார்த்திகேயன்-அனிருத்... இது, தமிழ் சினிமாவின் வெற்றிகரமான கூட்டணிகள்ல ஒண்ணு. அந்தக் கூட்டணி மறுபடியும் அமையுமா? தனுஷ்கூட இன்னமும் டச்ல இருக்கீங்களா?”