பேட்டி - கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

எனக்குப் பேரு வெச்சது இளையராஜா!

எனக்குப் பேரு வெச்சது இளையராஜா!
பிரீமியம் ஸ்டோரி
News
எனக்குப் பேரு வெச்சது இளையராஜா!

அய்யனார் ராஜன்

‘`மை டியர் ப்ரெட்டி வில்லேஜ் பீப்புள்... நீங்க என்னை அதிசயமா பார்க்கறது, எனக்கு கொஞ்சம் ஷையா இருக்கு..’’ - 40 ஆண்டுகளுக்கு முன் ‘16 வயதினிலே’ படத்தில் சத்யஜித் பேசிய முதல் வசனம். படம் வெளியாகி, பங்குபெற்ற பலரையும் புகழின் உச்சங்களுக்கு எடுத்துச்சென்றது... சத்யஜித் என்ன செய்கிறார்? `மயில்’ டாக்டரிடம் பேசினேன்.

‘‘அந்த ஒரேயொரு படம்தான் நாற்பதாண்டு தாண்டியும் என் அடையாளம். அதைச் சுமந்தபடியே, தமிழகத்தை விட்டுக் கிளம்பிவிட்டேன்” என்கிறார் சத்யஜித். ‘16 வயதினிலே’ படத்துக்குப் பிறகு தமிழில் நாற்பதுக்கும் மேற்பட்ட படங்கள், 15க்கும் மேலான சீரியல்களில் நடித்து, திருமணம், குழந்தைகள் எனக் குடும்பத்துடன் சென்னையில் வசித்துவந்த சத்யஜித், தற்போது சொந்த ஊரான பெங்களூருக்கே திரும்பியிருக்கிறார். சமீபத்தில் அங்கு அவர் மகளின் திருமணம் நடந்துமுடிந்திருக்கிறது.

‘`டிகிரி முடிச்சுட்டு பெங்களூரு அரசு ஆஸ்பத்திரியில ஃபேமிலி ப்ளானிங் ட்ரெய்னியா வேலை பார்த்திட்டிருந்தேன். எங்களோடது சினிமாவை விரும்பாத மரபான இஸ்லாமியக் குடும்பம். ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்ல சேரணும்னு வீட்டுல யார்கிட்டயும் சொல்லிக்காம சென்னைக்கு ஓடிவந்துட்டேன். நாலே மாசம்தான். அண்ணன் கண்டுபிடிச்சு  இன்ஸ்டிட்யூட்ல வந்துட்டார். அதுக்குள்ள இன்ஸ்டிட்யூட்ல நல்ல பேர் வாங்கியிருந்ததால, ‘இவரை அனுப்ப முடியாது’ன்னு அண்ணன்கிட்ட சொல்லிட்டாங்க.

எனக்குப் பேரு வெச்சது இளையராஜா!

நான் நல்லாப் படிச்சு கோல்டு மெடல் வாங்கினேன். அந்த நியூஸ் என் போட்டோ வோட  பேப்பர்ல வந்திருந் துச்சு. அன்னைக்கு நைட் போட்டோகிராபர் லக்ஷ்மி காந்தன் என்னைத் தேடி வந்தார். உடனே கிளம்பச் சொன்னார். படிச்சு முடிச்ச கையோட, ஒரு படம் கமிட் ஆகுதுன்னா கேக்கணுமா? என்ன ஏதுனு எதுவும் கேக்காம கிளம்பிட்டேன்.

‘அம்மன் கிரியேஷன்ஸ்’ ஆபீஸ் போனோம். என்னைப் பார்த்த ராஜ்கண்ணு சார், ‘வெள்ளக்காரப் பயலையே பிடிச்சுட்டு வந்துட்டீங் களேப்பா’ன்னார்.

‘தலை நிறைய மல்லிகப்பூ வச்சுகிட்டு, பட்டுப் பாவாட கட்டிகிட்டு நீ நடந்து போனா எப்படி இருக்கும் தெரியுமா மைல்...’ இந்த டயலாக்தான் அங்க நான் முதன்முதலா பேசிக் காமிச்சது (சத்யஜித்தின் கண்கள் கலங்குகின்றன).

அப்ப பாரதிராஜா சார் வெளியூர் ஷூட்டிங்ல இருந்தார். ராஜ்கண்ணு சார், பாரதிராஜா சார்கிட்ட போன்ல என்னைப் பத்திச் சொல்ல, உடனே ஏர்போர்ட் கிளம்பச் சொல்லிட் டாங்க. ஏர்போர்ட்ல ரஜினியும் கமலும் இருந்தாங்க. எல்லோருமே கொள்ளேகால் போய் இறங்கினோம். என்னைப் பார்த்ததும் பாரதிராஜா சார், ‘வாய்யா என் டாக்டரே’ன்னு தமிழ்ல பேசினார். நான் ‘இங்கிலீஷ் ப்ளீஸ்’னேன்.

‘நல்லா டயலாக் பேசுறான்னீங்க, தமிழே தெரியாதுங்கிறான். எங்கய்யா புடிச்சீங்க இவனை’ன்னார். அப்புறம் மனப்பாடம் செஞ்சு நான் பேசிக் காட்டின பிறகு கொஞ்சம் சமாதானம் ஆனாலும், ‘மயிலு’ன்னு கூப்பிடச் சொன்னா, ‘மைல்’ங்கிறானே’னு தலையில அடிச்சுக்கிட்டவர், கடைசியில, ‘இதுகூட நல்லாதான் இருக்குய்யா, இருந்துட்டுப் போகட்டும்’னு விட்டுட்டார்.

எனக்குப் பேரு வெச்சது இளையராஜா!

படம் ரிலீஸாகி சூப்பர் ஹிட் ஆச்சு. என் கேரக்டரும் நல்லாவே ரெஜிஸ்டர் ஆயிடுச்சு. அந்தப் படத்துக்கு சம்பளமா எனக்குக் கிடைச்ச பணம் 2,500 ரூபாய். ஷபீர்ங்கிற என் பேரை படத்துக்காக ‘சத்யஜித்’னு மாத்தினது இளையராஜா சார். அதெல்லாமே என் லைஃப்ல எவர்கிரீன் மொமென்ட்ஸ்.’’

``சினிமாக் கனவில் வந்து கோல்டு மெடல் வாங்கிய உங்களுக்கென சினிமா ஒரு பாதை அமைத்துத் தரவில்லையா?”

``இதுவரை அதுக்கான காரணம் புரிபடவே இல்லை. இத்தனைக்கும் அந்தப் படத்துக்குப் பிறகு நிறைய படங்கள்ல நடிச்சிருக்கேன். பாரதிராஜா சார்கிட்ட அசிஸ்டென்டா இருந்த மணிவண்ணன், மனோபாலா ரெண்டு பேரோட முதல் படத்துலயும் நடிச்சேன். நான் நடிச்ச ‘அறுவடை நாள்’, ‘பிக்பாக்கெட்’ எல்லாம் பெரிய ஹிட். கமலோட ‘ஹேராம்’லகூட நடிச்சேன். எல்லோருமே சொன்ன ஒரு விஷயம், ‘16 வயதினிலே மாதிரி வரலை’ங்கிறதுதான். அதுக்கு நான் என்ன செய்ய முடியும்?

ஒரு கட்டத்துல எனக்கு வந்த வாய்ப்புகளேகூட, ‘16 வயதினிலே’ அடையாளத்தை வெச்சே கிடைச்சது. கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டாவோ, வில்லனாவோ எனக்குனு சினிமாவுல ஒரு ரூட் அமையாததுக்கு இந்த அடையாளம்கூட ஒரு காரணமா இருந்திருக்கலாம். ஆனா அதை நினைச்சு நான் பெருசா வருத்தப்பட்டதில்லை. அந்தவொரு படத்தைவெச்சு தமிழக மக்கள் இப்ப வரைக்கும் என்னை ஞாபகம் வச்சிருக்காங்களே, அதையே மிகப்பெரிய பெருமையா நினைக்கறேன்.’’

எனக்குப் பேரு வெச்சது இளையராஜா!

“இடைப்பட்ட காலத்துல என்ன பண்ணிட்டிருந்தீங்க?”

‘`என் லைஃப்ல பணத்துக்கு என்னைக்கும் பிரச்னை இருந்ததில்லை. அன்பான மனைவி, அருமையான ரெண்டு குழந்தைகள்னு குடும்ப வாழ்க்கையை ரசிச்சு வாழ்ந்திட்டிருக்கேன். சினிமா மூலமா வருமானம் வராதப்ப, அதை பிசினஸ் தந்துச்சு. ஆனா, என் காலத்துக்குப் பிறகு என் குடும்பத்தில சினிமா இருக்காது என்பது எனக்குப் பெரிய வருத்தம். ஒரு ஃபங்ஷன்ல என் மகளைப் பார்த்த மிஷ்கின், ‘ஹீரோயின் ஆக்குறேன்’னார். ‘என் லைஃப், என் முடிவு’னு நான் எப்படி முடிவெடுத்தேனோ அதேபோல பொண்ணுகிட்ட முடிவை விட்டுட்டேன். என் மகளை சினிமா அட்ராக்ட் பண்ணலை. ‘ஸாரி மிஷ்கின் சார்’னேன். ‘நல்ல முடிவு சார்’னார். பையனும்கூட சினிமாவைக் கண்டு ஓடத்தான் செய்றான்.”

“ஏன் குடும்பத்தோட பெங்களூருக்கு?”

“நான் பிறந்து வளர்ந்தது கோலார். ஆனா என் சொந்தபந்தங்கள் முழுக்க பெங்களூருல இருக்காங்க. மனைவி வழி உறவுல மகளுக்குத் திருமணம் கமிட் ஆச்சு. எனக்கு, என் பொண்ணு பக்கத்துலயே இருக்கணும்னு ஆசை. பாரதிராஜா சார்கிட்டகூடச் சொல்லாம வந்துட்டேன். அவர் என்னை மன்னிக்கணும். இங்க வந்துட்டேனே ஒழிய, தமிழ்நாட்டுடனான என் தொடர்பு ஒருநாளும் விடுபட்டுப்போகாது. நான் நடிச்ச சில தமிழ்ப் படங்கள் ரிலீஸாக வேண்டியிருக்கு. தொடர்ந்து நிறைய தமிழ்ப்படங்கள் நடிக்கவும் போறேன்.”

எனக்குப் பேரு வெச்சது இளையராஜா!

“ஸ்ரீதேவி...”

‘`அவங்க மறைவுச் செய்தி கேட்டது முதல் ரெண்டு நாள் தூங்கலை. அவங்களைப் பற்றிய நினைவுகள் வரிசையா வந்து போகுது.  ஒருமுறை மும்பை ஏர்போர்ட்ல ரெண்டு ஃபேமிலியும் சந்திச்சோம். ‘என் டாக்டர் ஹீரோவைப் பாருங்க அப்படியே இருக்கார்; நீங்க உடம்பைக் கவனிக்கவே மாட்டேங்கிறீங்களே’ன்னு போனி கபூர்கிட்ட சொல்லி, கணவருக்கு என்னை அறிமுகப்படுத்தினார் ஸ்ரீதேவி.”

“ரஜினியும் கமலும் அரசியல் களத்துக்கு வந்திருக்கிறதைப்பற்றி...”

“நான் அறிமுகமான படத்துல ஒருத்தர் ஹீரோ. இன்னொருத்தர் வில்லன். ஒரு நண்பனா ரெண்டு பேருக்கும் ஆல் தி பெஸ்ட்!”