பேட்டி - கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

“மீண்டும் எம்.ஜி.ஆர் ஹீரோ, ஜெயலலிதா ஹீரோயின்!”

“மீண்டும் எம்.ஜி.ஆர் ஹீரோ,  ஜெயலலிதா ஹீரோயின்!”
பிரீமியம் ஸ்டோரி
News
“மீண்டும் எம்.ஜி.ஆர் ஹீரோ, ஜெயலலிதா ஹீரோயின்!”

நா.சிபிச்சக்கரவர்த்தி, படம்: சொ.பாலசுப்ரமணியன்

எம்.ஜி.ஆர் தயாரித்து, இயக்கி, நடித்த பிரமாண்டமான படம் ‘உலகம் சுற்றும் வாலிபன்’. இந்தப் படத்தின் தொடர்ச்சியாக ‘கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு’ என்ற படத்தை எடுக்கத் திட்டமிட்டிருந்தார் எம்.ஜி.ஆர். ஆனால், முதலமைச்சராகிவிட்டதால் அவரால் அந்தப் படத்தை எடுக்க முடியாமலேயே போனது. அந்த `கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு' படத்தைத் தற்போது அனிமே‌ஷனில் தயாரிக்க முடிவு செய்திருக்கிறார், எம்.ஜி.ஆரின் நண்பர், மறைந்த ஐசரி வேலனின் மகன் ஐசரி கணேஷ்.

``நான் இப்போ இந்த அளவுக்கு இருப்பதற்கு முக்கியமான காரணம் எம்.ஜி.ஆர்தான். எங்க அப்பா இறந்தபிறகு எங்க குடும்பம் ரொம்பக் கஷ்டத்துல இருந்தது. அப்போ அவர்தான் என்னைக் கூப்பிட்டு உதவி செஞ்சார். அந்த உதவியை வெச்சுதான் நான் வேல்ஸ்  கல்லூரியையே தொடங்கினேன். இந்த 25 வருஷத்துல 25 நிறுவனங்களை உருவாக்கியிருக்கேன். ரொம்ப நாளாகவே தலைவருக்கு ஏதாவது பண்ணணும்னு நினைச்சுக்கிட்டிருந்தேன். எம்.ஜி.ஆர் நூற்றாண்டுவிழாவை முன்னிட்டு இந்தப் படத்தைப் பண்ணியே ஆகணும்னு முடிவு பண்ணினேன்.  தலைவர் எம்.ஜி.ஆரை மீண்டும் அதே உற்சாகம், துறுதுறுப்போடு திரையில் பார்க்கலாம்.

“மீண்டும் எம்.ஜி.ஆர் ஹீரோ,  ஜெயலலிதா ஹீரோயின்!”

படத்தோட இயக்குநர் இப்ப இருக்கும் இளம் ஹீரோயினைப் படத்துல நடிக்க வைக்கலாம்னு சொன்னார். தமன்னா நான் தயாரித்த ‘தேவி’ படத்துல நடிச்சாங்க. ஹன்சிகா ‘போகன்’ படத்துல நடிச்சாங்க. நயன்தாராவும் எனக்குப் பழக்கம்தான். இவர்களில் யாரையாவது ஒருவரை நடிக்க வைக்கலாம்னுதான் இருந்தோம். ஆனா, எனக்குத் தலைவரோட 28 படங்கள் சேர்ந்து நடிச்ச ஜெயலலிதா அம்மாவையே ஹீரோயின் ஆக்கலாம்னு தோணுச்சு. இப்போ ‘கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு’ படத்தில் எம்.ஜி.ஆர் ஹீரோ, ஜெயலலிதா ஹீரோயின்.”

 “எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகத்தில் நடந்த எம்.ஜி.ஆர் சிலை திறப்பு விழாவில் ரஜினி 40 நிமிடங்கள் தொடர்ந்து அரசியல் பேசினார். அந்த மேடையில் நீங்களும் இருந்தீங்களே...”

``ஏ.சி.எஸ், எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர், எனக்கு அண்ணன் மாதிரி. அவர்தான் அந்த விழாவுக்கு என்னை அழைத்தார். ரஜினி சார் பேச ஆரம்பித்ததும்தான் அது அரசியல் மேடையாக மாறியது. அதேமாதிரி கமல் சாரும் கட்சி ஆரம்பிச்சுத் தீவிரமா இறங்கியிருக்கார்.  எனக்கு ரெண்டு பேருமே நல்ல நண்பர்கள். ரெண்டு பேர் அரசியல் வருகையையும் ஆர்வத்துடன் எதிர்பார்க்கிறேன்.”

“இலவச மருத்துவம், இலவசக் கல்வி போன்ற விஷயங்கள் இப்போது தீவிரமாகப் பேசப்படுகின்றன. நீங்கள் இவ்வளவு கல்வி நிறுவனம் நடத்தி வருகிறீர்கள். இந்த விஷயத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?”

“என்னுடைய கல்வி நிறுவனங்களில் ஒவ்வொரு வருடமும் சேரும் மாணவர்களில் 15 முதல் 20 சதவிகிதம்  இலவசமாகத்தான் சேர்க்கிறேன். இது இப்ப நான் எடுத்த முடிவு கிடையாது. கடந்த 15 வருடங்களாக இப்படி இலவசக் கல்வி கொடுத்திட்டுவர்றேன்.”

“மீண்டும் எம்.ஜி.ஆர் ஹீரோ,  ஜெயலலிதா ஹீரோயின்!”

`எந்த அடிப்படையில் இலவசக் கல்விக்கான மாணவர்களைத் தேர்ந்தெடுப்பீங்க?”

 ``நடிகர் சங்கத்துக்குன்னு 100 சீட் இலவசமா ஒதுக்கிட்டேன். அதுல நடிகர் சங்கம் வசதியில்லாத, படிக்க முடியாத மாணவர்களை செலக்ட் செய்து, அதுபற்றிய விவரங்களைச் சங்க லெட்டர்பேடில் எழுதி எனக்கு அனுப்புவாங்க. அவங்களுக்கு  மூன்று வருடங்களோ நான்கு வருடங்களோ முழுவதும் இலவசக் கல்வி அளிக்கிறேன். அதுபோல ‘அகரம் ஃபவுண்டேஷனு’க்குன்னு கொஞ்சம் சீட்ஸ் இலவசமா ஒதுக்கறேன். இது மட்டுமல்லாமல் ஃபெப்சி டிரஸ்ட் மூலம் வருகிறவர்களுக்கும், விளையாட்டுக் கோட்டாவில் சாதனை செய்தவர்களுக்கும் நிறைய சீட் இலவசமாகத் தருகிறேன். ஒரு வருடத்துக்கு 500 முதல் 600 மாணவர்கள் வரை இலவசமாக எங்கள் நிறுவனத்தில் கல்வி பயில்கின்றனர்.”

``நீங்கள் 25 வயதிலேயே கல்லூரியை ஆரம்பித்துவிட்டீர்கள். உங்கள் ரத்தத்திலேயே சினிமா ஊறியிருந்தாலும் எப்படி கல்லூரியை நடத்திக்கொண்டே சினிமாவிலும் இருக்கீங்க?”

``எனக்கு  நடிகன் ஆகணும்னுதான் பெரிய ஆசை இருந்தது. நான் ஸ்கூல்ல படிக்கும்போதே நாடகங்களிலும், கலை நிகழ்ச்சியிலும் நடிச்சிருக்கேன். நான் காலேஜ் படிக்கும்போதே ஒரு படத்தைத் தயாரிச்சேன். படத்தின் பெயர் ‘வாக்குமூலம்.' இயக்குநர் கே. சுபாஷ். அந்தப் படத்தின் ஹீரோவும் நான்தான். கல்லூரி தொடங்கியபிறகு நடிப்பதைக் கொஞ்சம் குறைத்துக்கொண்டேன். இன்னமும் அந்த ஆசை இருக்கு. எதையும் நாம் முழு ஈடுபாட்டோட செய்தால் எத்தனை வேலை வேண்டுமானாலும் பார்க்கலாம். நான்  என் வாழ்க்கையில் கற்றுக்கொண்டது இதுதான்.”

`` ‘2.0’ -ல் நீங்கள் நடித்ததாகச் செய்திகள் வந்ததே, உண்மையா?”

``அதை ஷங்கர் சார் வெளியில சொல்லக்கூடாதுன்னு சொல்லியிருந்தார். ஆனா அவர் வெளியிட்ட டீஸர்ல நான் இருந்ததால் எல்லோருக்கும் தெரிஞ்சுடுச்சு. ஷங்கர் சார் என்னோட நெருங்கிய நண்பர். அவர் எனக்காகவே ஒரு கேரக்டர் உருவாக்கி, ‘நீங்கதான் நடிக்கணும்’னு சொன்னார். அதை மறுக்க முடியாமல்தான் நடித்தேன். நான் நடித்து கிட்டதட்ட 15 வருடங்கள் ஆகிவிட்டன. கடைசியாக நான் நடித்த படம் ‘1 2 3.' அதில், எனக்கு ஆட்டோ டிரைவர் வேடம். இப்ப ரெண்டு வருஷமாத்தான் சில படங்கள் நடிக்கிறேன். ‘2.0’ படத்தில் என் கேரக்டர் என்னன்னு சொல்லமாட்டேன். படம் பார்த்துட்டு என் நடிப்பு எப்படி இருக்குன்னு சொல்லுங்க.”

நிச்சயமா!