பேட்டி - கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

“ரெண்டு பேருக்குமே கோபம் இருந்துச்சு!”

“ரெண்டு பேருக்குமே கோபம் இருந்துச்சு!”
பிரீமியம் ஸ்டோரி
News
“ரெண்டு பேருக்குமே கோபம் இருந்துச்சு!”

சனா, படங்கள்: பா.காளிமுத்து

“பொண்ணு பார்க்க லேட்நைட் போனதால தேனுக்கு என்மேல கோபம். நான் நடிச்ச படம் ஒண்ணுகூடப் பார்த்ததே இல்லைனு சொன்னதுல அவங்கமேல எனக்கும் கோபம். பெண் பார்த்துட்டு வந்தபிறகு இரண்டுபேரும் போன்ல பேச ஆரம்பிச்சதும் அந்தக் கோபமெல்லாம் போயிடுச்சு” மனைவி தேன்மொழியைப் பார்த்துச் சிரித்தபடி பேசுகிறார் ராம்தாஸ். ‘முண்டாசுப்பட்டி’ முனீஸ்காந்துக்கும் வேலூரைச் சேர்ந்த தேன்மொழிக்கும் வடபழனி முருகன் கோயிலில் டும்...டும்...டும்... நடந்து முடிந்திருக்கிறது.

“ராகுகாலத்துக்கு முன்னாடி பெண் பாக்க வரணும். ஆனா, இவங்க வரும்போது ராகுகாலம் ஆரம்பமாயிடுச்சு. ராகுகாலம் முடியிறவரைக்கும் ஊர்லயே சுத்திட்டு,   இவங்க வீட்டுக்கு வரும்போது ராத்திரி ஆகிடுச்சு. தயங்கிக்கிட்டேதான் வந்தாங்க. இவங்களோட இயல்பான குணம், நடவடிக்கையைப் பார்த்ததுமே பிடிச்சுப்போச்சு. உடனே ஓகே சொல்லிட்டேன்” என்று தேன்மொழி வெட்கத்துடன் சொல்ல, சிரித்தபடி தொடர்கிறார் ராமதாஸ்.

“ரெண்டு பேருக்குமே கோபம் இருந்துச்சு!”

“வீட்ல எனக்கு வருஷக்கணக்குல பொண்ணு பார்த்துட்டு இருந்தாங்க. ஒரு கட்டத்துக்குமேலே, ‘இனி நமக்குப் பொண்ணே கிடைக்காது. பொண்ணு பாக்குறதேயே நிறுத்திடலாம்’னு நெனச்சேன். அந்த சமயத்துலதான் எனக்கு தேன்மொழி கிடைச்சாங்க. இவங்களைப் பார்க்குறதுக்கு முன்னயே, இவங்களோட பேர் எனக்குப் பிடிச்சிடுச்சு. அப்ப நான் ‘கலகலப்பு-2’ ஷூட்டிங்ல இருந்தேன். ஊர்ல இருந்து என் தங்கச்சி தேவி போன் பண்ணி, ‘உனக்குப் பொண்ணு பார்க்கப் போகணும். எப்ப வர்ற’னு கேட்டாங்க. எனக்குச் சொந்த ஊர் மதுரை. ‘பொண்ணு பார்க்குறதா இருந்தா நம்ம ஊர்ப்பக்கமே பாருங்க’னு சொல்லியிருந்தேன்.

‘பொண்ணு ஊர் வேலூர்’னு தங்கச்சி சொன்னதும், ‘அந்த ஊர்ல ஏன்யா பார்த்தாங்க’னு மனசுல நெனச்சுகிட்டு, “இன்னும் பத்து நாள் ஷூட்டிங் இருக்கு. முடிச்சதும் வர்றேன்’’னு சொன்னேன். ‘சரி பொண்ணு எப்படி இருக்காங்கனு பார்ப்போமே’னு போட்டோவைப் பார்த்தப்பவே எனக்குத் தேனைப் பிடிச்சிடுச்சு’’ என்று ராம்தாஸ் விட்ட இடத்தைத் தேன்மொழி தொடர்கிறார்.

“ரெண்டு பேருக்குமே கோபம் இருந்துச்சு!”

“என் ஃப்ரெண்ட்ஸ்  எல்லாருக்கும் இவரைத் தெரிஞ்சிருக்கு. ஆனா, எனக்குத்தான் இவர் யார்னு தெரியலை. நான் அவ்வளவா சினிமா பார்க்கிறது கிடையாது. அதுக்கப்புறம் இவர் படங்களைப் பார்க்க ஆரம்பிச்சேன். ‘பசங்க 2’, ‘மரகத நாணயம்’ படங்களில்  நல்லாவே நடிச்சிருந்தார். ஆனா, ‘மரகத நாணயம்’ பட க்ளைமாக்ஸ்ல இவர் இறந்துடுற மாதிரி வந்ததால, அந்தக் காட்சி எனக்குப் பிடிக்கவே இல்லை” தேன்மொழி சொல்வதைக் கேட்டுச் சிரித்த ராம்தாஸ் தொடர்கிறார்.

“பொண்ணு பார்க்கப்போனப்ப ‘பிடிக்கலை’னுதான் சொல்வாங்கனு நெனச்சேன். ஆனா பிடிச்சிருக்குனு சொன்னபிறகும் இவங்க வீட்ல, ‘உங்க ஜாதகம் வேணும்’னு கேட்டாங்க. ஏன் என்ன விஷயம்னு கேட்டேன். ‘இல்ல, விக்கிபீடியாவுல உங்க வயசு 56னு இருக்கு, ஏற்கெனவே கல்யாணம் ஆகி டைவர்ஸ் ஆனவர்னும்  இருக்கு’னு சொன்னாங்க. எனக்குத் தூக்கி வாரிப் போட்டுடுச்சு. ‘யார் பார்த்த வேலைடா இது’னு மனசுல நெனச்சிக்கிட்டு, ‘அம்மா தாயே எனக்கு கல்யாணம்லாம் ஆகல. உன் புண்ணியத்துல ஏதோ இப்பதான் ஃபர்ஸ்ட் டைமா அது நடக்கப்போகுது’னு இவங்களைச் சமாதானப்படுத்தி, என் ஸ்கூல் சர்டிஃபிகேட்டை எல்லாம் போட்டோ எடுத்து அனுப்பிவெச்சேன்” என்று சிரிக்கிறார்.

அந்த அதிர்வேட்டுச் சிரிப்பில் தேன்மொழியின் சிரிப்பும் இணைந்தது.