பேட்டி - கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

வெல்கம் கேர்ள்ஸ்!

வெல்கம் கேர்ள்ஸ்!
பிரீமியம் ஸ்டோரி
News
வெல்கம் கேர்ள்ஸ்!

சுஜிதா சென்

தமிழ் சினிமாவுக்கு ஜில்லுன்னு வந்திருக்கும் புதிய வரவுகள் இவர்கள். வெல்கம் கேர்ள்ஸ்!

வெல்கம் கேர்ள்ஸ்!

‘சார்லி சாப்ளின்-2’ படத்தின் ஹீரோயின், பிரபுதேவாவோடு ஆடத் தயாராகியிருக்கும் அதா ஷர்மா.

“பத்தாவது படிக்கும்போதே  மாடலிங் பண்ண ஆரம்பிச்சுட்டேன். இயக்குநர் விக்ரம் பட்டின் ‘1920’- ஹாரர் படம் மூலமா பாலிவுட்டில் அறிமுகமானேன். ‘2008 ஃபிலிம் ஃபேர் சிறந்த அறிமுக நடிகை’ விருதுக்கு  நாமினேட் ஆனதால், எனக்கான எதிர்பார்ப்பு பாலிவுட்ல அதிகமா இருந்துச்சு. முதல் படத்துக்கு அப்புறமா தொடர்ந்து மூன்று வருடங்கள் கதை கேட்கிறதுலயே செலவழிச்சேன்.  2011-க்கு அப்புறமா கமர்ஷியல் படங்கள்தான் அதிகமா வந்துச்சு. அந்தப் படங்கள் எல்லாம் ஆடியன்ஸ் மத்தியில பெருசா பேசப்படலை. 2014-ல் பரினீதி சோப்ராவோட சேர்ந்து நடிச்ச ‘ஹசி தோ பசி’ மூலமா என்னோட இரண்டாவது இன்னிங்ஸ் ஆரம்பமாச்சு. பத்து வருஷம் நடிச்சேன்னு சொல்றதைவிட, சாதிக்க வேண்டியது இன்னும் அதிகமா இருக்குன்னுதான் சொல்லணும். வித்யா பாலன் மாதிரி ஹீரோயின் சப்ஜெக்ட் படங்கள் அதிகமாப் பண்ணணும்.

வெல்கம் கேர்ள்ஸ்!

நான் நடனத்துல பட்டப்படிப்பு முடிச்சிருக்கேன். 7 வருஷமா கர்நாடக சங்கீதம் கத்துக்கிட்டிருக்கேன். ‘சார்லி சாப்ளின்-2’ படத்தோட தயாரிப்பாளர் டி. சிவா இந்தப் படத்துல ஒரு பாடல் பாடுறதுக்காக என்னைக் கூப்பிட்டார். என்னை நேர்ல பார்த்ததும் இயக்குநர் ஷக்தி சிதம்பரம் சார் ஹீரோயினா நடிக்கச் சொல்லிட்டார். நடிக்கிறது மட்டுமில்லைங்க,  ஒரு பாடலும் பாடியிருக்கேன்.

அடுத்து ‘கமாண்டோ-3’ படத்துல, ‘துப்பாக்கி’ பட வில்லன் வித்யுத் ஜம்வால்கூட சேர்ந்து நடிக்கிறேன்” என்று தம்ஸ்-அப் காட்டுகிறார் அதா ஷர்மா.

வெல்கம் கேர்ள்ஸ்!

‘ராஜா ராணி’ படத்தின் கேமியோ கேரக்டர் மூலமாக தமிழுக்கு அறிமுகமானவர் சாக்‌ஷி அகர்வால். பல்வேறு படங்களில் சிறிய ரோல்களில் நடித்திருந்தாலும், “ ’காலா’ எனக்குக் கிடைத்த வரப்பிரசாதம். எனது சினிமா கனவின் திறவுகோல்” என்று உற்சாகமாய்ப் பேச ஆரம்பிக்கிறார் சாக்‌ஷி.

வெல்கம் கேர்ள்ஸ்!

படம்: ஜி.வெங்கட்ராம்

“ஒருநாள் ரஞ்சித் சார் டீம்ல இருந்து போன் வந்துச்சு. கதை என்னன்னு கேட்காமலேயே ஓகே சொல்லிட்டேன். அப்புறம்தான், ‘படத்துல நீங்க ஒரு முக்கியமான கதாபாத்திரம், ஹீரோயின் கேரக்டர் இல்ல’னு சொன்னாங்க. ஆடிஷன்போது ரஞ்சித் சார் ‘உங்களைப் பார்த்தா ஹீரோயின் மெட்டீரியல் மாதிரி இருக்கு. அதனால நீங்க வேண்டாம்’னு சொன்னார். ‘உங்க படத்தில் சின்ன கேரக்டர்ல நடிக்க வாய்ப்பு கிடைச்சா போதும்’னு சொன்னேன். அதுக்கப்புறம் நடிக்கிறதுக்கான ஒர்க்-ஷாப்ல என்னையும் கலந்துக்கச் சொன்னார். ரஜினி சார், ஹூமா குரேஷியைத் தவிர்த்து ஈஸ்வரி மேடம், அஞ்சலி பாட்டீல், சமுத்திரக்கனி சார் எல்லோரும் அந்த ஒர்க்-ஷாப்ல இருந்தாங்க. மொத்தம் 28-நாள் அந்த ஒர்க்-ஷாப் நடந்துச்சு. நாங்க எல்லோரும் ஒரு குடும்பமாவே மாறிட்டோம். ஒரு வாரம் கழிச்சு மறுபடியும் போன் பண்ணி போட்டோ ஷூட்டுக்கு வரச் சொன்னாங்க. அங்கதான் ரஜினி சாரை முதல் முறையா பார்த்தேன். நான் சின்ன வயசுல இருந்தே ரஜினி சார் ஃபேன். அவரைப் பார்த்தப்போ எதுவுமே என்னால பேச முடியலை. தூரத்துல நின்னு அவரைப் பார்த்துட்டே இருந்தேன். சரியா ஒரு மாதம் கழிச்சு, நான் இந்தப் படத்துல நடிக்கிறதை கன்ஃபார்ம் பண்ணாங்க.

முதல்நாள் ஷூட்டிங் மும்பையில நடந்துச்சு. சாரைப் பார்த்த உடனேயே அவர் கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்கினேன். என்னைப் பார்த்து அவர் பாம்பே பொண்ணுனு நினைச்சுட்டார். நான் சென்னையில் பிறந்து வளர்ந்த கதையை அவர்கிட்ட சொன்னேன். ஆச்சர்யப்பட்டுப் பாராட்டினார்.

என்னோட பிறந்த நாளைக்கூட, ‘காலா’ செட்லதான் கொண்டாடுனோம். ரஜினி சார் கேக் கட் பண்ணி, எனக்கு ஊட்டிவிட்ட அந்தத் தருணத்தை மறக்கவே முடியாது.”

இனிப்பாய்ச் சிரிக்கிறார் சாக்‌ஷி.

வெல்கம் கேர்ள்ஸ்!

சோஷியல் மீடியாக்களில் ஆக்டிவாக இருப்பவர்களுக்கு ‘டப்ஸ்மாஸ் மிருணாளினி’யைத் தெரியாமல் இருக்காது. இப்போது  ‘நகல்’ மற்றும் ‘சூப்பர் டீலக்ஸ்’ ஆகிய படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்துக்கொண்டிருக்கிறார்.

வெல்கம் கேர்ள்ஸ்!

“2016-ல இன்ஜினீயரிங் முடிச்சுட்டு ரெண்டு மாசம் வீட்ல சும்மா இருந்தேன். அப்போதான் டப்ஸ்மாஷ் பண்ண ஆரம்பிச்சேன். சமூக வலைதளங்களில் வரவேற்பு ஒருபக்கம் கூடிக்கிட்டே இருக்க,  சினிமா வாய்ப்புகளும் வர ஆரம்பிச்சது. அதேசமயம் கேம்பஸ் இன்டர்வியூலயும் செலக்ட் ஆயிருந்தேன். எனக்கு அப்போ இருந்த குழப்பத்துல, என்ன பண்றதுனு தெரியாம வேலையில சேர்ந்துட்டேன். அதுக்கப்புறம், ஒரு வருடம் கழிச்சு ‘நகல்’ படத்துக்கான வாய்ப்பு வந்துச்சு. வேலை பார்க்குற கம்பெனியிலயும் எத்தனை நாள் வேணும்னாலும் லீவ் எடுத்துக்கலாம்னு சொல்லிட்டாங்க. இப்போ ‘நகல்’ படத்துக்கான ஷூட்டிங் முடிந்து, திரும்ப வேலைக்குப் போயிட்டிருக்கேன். ஒரேயொரு கதாபாத்திரம் மட்டுமே படம் முழுக்க ட்ராவல் ஆகுற மாதிரியான த்ரில்லர் கதைதான் ‘நகல்.’ படத்தில் ஹீரோ கிடையாது.

‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் தியாகராஜன் குமாரராஜா சாரிடம் ஒர்க் பண்ணினது நல்ல அனுபவம். ஷூட்டிங் ஸ்பாட்ல அவர் மத்தவங்களை வேலை வாங்குறது, படத்தின் கன்டென்ட், ஷூட் பண்ற விதம் என எல்லாமே தனித்துவமானதா இருக்கும். இன்னும் நிறைய படம் நடிக்கணும், வளரணும், உயரணும்! ”

நம்பிக்கையோடு சிரிக்கிறார் மிருணாளினி.