
#VikatanPressMeetவிகடன் டீம், படம்: கே.ராஜசேகரன்
விகடன் நிருபர்களுக்கு மட்டுமேயான பிரத்யேக பிரஸ்மீட் இது.
“ஹியூமர் சென்ஸ் ஒரு வரம்னு சொல்வாங்க. அதனால உங்களுக்குக் கிடைச்ச ப்ளஸ், மைனஸ் என்னென்ன?”
- ப.சூரியராஜ்
“மைனஸ்னு எனக்கு எதுவும் இருந்ததில்ல. எனக்குக் கிடைச்ச ப்ளஸ் எல்லாத்துக்குமே ஹியூமர் சென்ஸ்தான் காரணம். எந்த ஷோவுக்கு வந்தாலும் நான் பெர்ஃபார்ம் பண்ணும்போது எல்லாருக்கும் பிடிக்கிற மாதிரி இருக்கணும்கிறதிலேயும் யாரையும் ரொம்பக் கிண்டல் பண்ணக்கூடாதுங்கிறதுலயும் தெளிவா இருப்பேன். அதனால பிரச்னைகள்னு பெருசா வந்ததில்ல. ஹியூமர்தான் என் இமேஜ். அதை உடைச்சுப் பண்றதுதான் எனக்குப் பெரிய சேலஞ்சிங்கா இருக்கும். சில ரசிகர்களுக்கு மட்டும் நாம பண்ற மிமிக்ரி பிடிக்காமப் போயிரும். அதனால சில திட்டுகளையும் வாங்கியிருக்கேன். மிமிக்ரி பண்றவங்க எல்லாருமே அதைக் கடந்துதானே வரணும்!”
“வில்லேஜ் ரோல்னா சூரி, சிட்டி ரோல்னா சதீஷ்னு உங்க படங்கள்ல இவங்க அடிக்கடி வர்றாங்கன்னு விமர்சனம் இருக்கே?”
- ப.சூரியராஜ்
“மொக்கையா பண்ணா ஏன்டா மொக்கையா பண்றீங்கனு கேட்கலாம். ஆடியன்ஸ் அதை என்ஜாய் பண்ணும்போது அது எங்களுக்கும் ப்ளஸ்ஸாதான் இருக்கு. ஒருவேளை ஆடியன்ஸுக்குப் பிடிக்கலைனாதான் எங்களுக்குப் பிரச்னை. ஹியூமர்ங்கிறதுல ரெண்டு பேரும் டைமிங்கைப் புரிஞ்சிகிட்டாதான் செட் ஆகும். சதீஷ், சூரி அண்ணா ரெண்டு பேர்கிட்டேயும் எனக்கு காமெடி வொர்க் அவுட் ஆகுதுன்னா அதுக்குக் காரணம், ஆஃப் ஸ்க்ரீன்ல எங்களுக்குள்ள இருக்கிற ரிலேஷன்ஷிப்தான். எனக்கு எல்லோர்கூடவும் வேலை பார்க்கணும்னு ஆசை இருக்கு. ‘இன்று நேற்று நாளை’ இயக்குநர் ரவிக்குமார் என்னை வெச்சு டைரக்ட் பண்ணும் படத்துக்காகக் கதை சொல்லும்போதே, ‘கருணாகரன்தான் காமெடியன்’னு சொன்னார். நானும் ஜாலியா அவரோட நடிக்கப்போறேன்”

“இப்போ இருக்குற நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள்ல உங்களுக்குப் பிடிச்சவங்க யார்?”
- சுஜிதா சென்
“ஒருத்தரைச் சொன்னா மத்தவங்க கோவிச்சுக் குவாங்களே, எல்லாரையுமே பிடிக்கும்.”
“இதுவரை உங்களைப்பத்தி யாருக்கும் தெரியாத ரகசியம் ஒண்ணு சொல்லுங்க...”
- சனா
“ஒன் சைட் லவ் ஒண்ணு இருந்துச்சு. ஆனா அவங்க வேறொரு பையனோட கமிட் ஆகிட்டாங்க. வேணும்னா அதை ரகசியம்னு வெச்சுக்கலாம். சமீபத்துல அவங்களைச் சென்னை சிட்டி சென்டர்ல பார்த்தேன். அப்படியே இளையராஜா சாரோட மியூசிக், பேக்ரவுண்டுல கேட்டுச்சு. அப்போ அவங்கக்கூட அந்த கமிட் ஆன பையன் இல்லை, வேறொரு பையன் இருந்ததுதான் ஹைலைட்!”
“அந்த ஒன்சைட் லவ், இப்ப உங்க மனைவிக்குத் தெரியுமா?”
- சனா
“தெரியும்னு நினைக்கிறேன். அப்படியே தெரியாம இருந்தாலும் விகடன் வந்ததும் தெரிஞ்சுடும். சந்தோஷமா?”
“தனுஷ்-சிவகார்த்திகேயன்-அனிருத் இது தமிழ் சினிமாவின் வெற்றிகரமான கூட்டணிள்ல ஒண்ணு. அந்தக் கூட்டணி மறுபடியும் அமையுமா? தனுஷ்கூட இன்னமும் டச்ல இருக்கீங்களா?”
- சுகுணா திவாகர்
“இந்த டீம் மறுபடியும் ஒண்ணு சேரணும்ன்னா அதை இயக்குநர்கள்தான் முடிவு பண்ணணும். எல்லாரும் சேர்ந்து, ஜாலியா ஒரு படம் பண்ணலாம்ன்னா கண்டிப்பா நான் ரெடி. இது, நிறைய பேர் என்கிட்ட கேட்கிற கேள்வி. இதுக்கான சூழ்நிலை அமைஞ்சா தாராளமா பண்ணலாம். நேர்ல சந்திக்கிற வாய்ப்பு கிடைக்கலைனாலும் போன்ல இன்னமும் நாங்க பேசிட்டுதான் இருக்கோம். `3’ மாதிரியான ஒரு படம் இப்போ தனுஷ் சார் நினைச்சாக்கூட எனக்குக் கொடுக்க முடியாது. என் படங்களுக்குப் பின்னாடி சில வியாபாரங்களும் நிறைய எதிர்பார்ப்புகளும் இருக்கு. எல்லாரும் இப்போ தனித்தனி ட்ராக்ல போயிட்டு இருக்காங்க. ஆனா, எங்களுக்குள்ள பிரச்னைகள்னு எதுவும் இல்லை.”

“உங்க பொண்ணை முதன்முதல்ல கையில் ஏந்திய அந்தத் தருணம் எப்படி இருந்தது?”
- கே.ஜி.மணிகண்டன்
“ `மான் கராத்தே’ நைட் ஷூட் முடிச்சிட்டு வீட்டுக்குக் கிளம்பிட்டிருந்தேன். ‘வலி வந்துருச்சு. ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணியிருக்கோம். கிளம்பி வாங்க’னு வீட்டுல இருந்து போன். ஃப்ளைட்டும் காலையில 6 மணிக்குத்தான். உடனடியா எப்படிக் கிளம்பிப்போறதுனு தெரியலை. ‘நான் வந்துடுறேன், அதுவரை பார்த்துக்கங்க’னு சொன்னேன். டெலிவரிக்கு இன்னும் 15 நாள் இருந்தது, அந்தத் தைரியத்துலதான் ஊர்ல இருந்தே கிளம்பி வந்தேன். என்ன ஆச்சோ ஏதாச்சோனு நைட் தூக்கமே வரலை. காலையில ஃப்ளைட் பிடிக்க கார்ல போயிட்டிருந்தேன். `இப்ப நாம ஒரு பாட்டுப் போடுவோம்; எதைப்பற்றிப் பாட்டு வருதோ, அந்தக் குழந்தைதான்’னு எனக்குள்ளே நினைச்சுகிட்டு, கார்ல ஆடியோவை ஆன் பண்ணினேன். ‘ஆனந்த யாழை மீட்டுகிறாள்...’ பாட்டு ஓட ஆரம்பிச்சுது. அதை வெச்சே, ‘பெண் குழந்தைதான்’னு முடிவு பண்ணி சந்தோஷமாயிட்டேன். கொஞ்ச நேரத்துல வீட்ல இருந்து போன் பண்ணி, ‘பெண் குழந்தை பிறந்துருக்கு’னு சொன்னாங்க.
கையில குழந்தையைத் தூக்கும்போதே ரொம்பக் குட்டியா இருந்தாங்க. எனக்கு ஒண்ணுமே புரியலை. நம்ம கையில நம்ம உயிர் இருக்குன்னு நினைக்கும்போது, செம சந்தோஷமா இருந்தது. அன்னைக்குக் கேட்ட அதே ‘ஆனந்த யாழை’ பாட்டைத்தான் நான் இன்னமும் கேட்டுட்டிருக்கேன். நான் என் பொண்ணுகிட்ட சொல்வேன், `அப்போ அவ்ளோ அமைதியா இருந்த, இப்ப என்ன பேச்சுப் பேசுற தெரியுமா’னு கிண்டல் பண்ணுவேன். `அப்போ நான் குட்டி பேபிப்பா, இப்போ வளர்ந்துட்டேன்ல’னு சொல்வாங்க. என் பொண்ணு ஆராதனா வந்ததுக்குப் பிறகுதான் வீடும் நிறைய மாறியிருக்கு.
என் பட ஷூட்டிங், என்ன படம் பண்ணப்போறேன்னு எல்லாத்தையுமே அவங்ககிட்ட ஷேர் பண்ணுவேன். நான் அவங்களை அடிக்க மாட்டேன், திட்ட மாட்டேன். அதையெல்லாம் அவங்க அம்மாதான் பார்த்துக்குவாங்க. அதனால அவங்க என்கிட்டதான் ரொம்பச் செல்லம். ஆர்த்தி ஏதாவது சொல்லிட்டாங்கன்னா, ஓடிவந்து என்னைக் கட்டிப் பிடிச்சிக்குவாங்க. அப்பாவா இருக்கிறது ரொம்ப நல்லாயிருக்கு. பெண் குழந்தைங்கிறதால இன்னும் பொறுப்போடு இருக்கேன். வீட்லயும் சுத்தமா கோபப்படுறது கிடையாது, ரொம்ப அமைதியா இருக்கேன். அந்த, ‘ஆனந்த யாழை...’ விஷயத்தை நா.முத்துகுமார் சார்கிட்ட சொன்னப்ப, அவரும் ரொம்ப சந்தோஷப்பட்டார்”
“இனிமே மக்களை தியேட்டருக்கு இழுத்துட்டு வர்ற விஷயமா எது இருக்கும்னு நினைக்கிறீங்க?”
- வெ.நீலகண்டன்
“என்டர்டெயின்மென்ட்தான். டிவி, வெப் சீரியஸ், யூடியூப்னு எல்லாமே ஸ்ட்ராங்கா இருக்கு. ஒவ்வொரு புராஜெக்ட்லயும் எதாவது ஒண்ணு மக்களை ஆச்சர்யப்படுத்த வைக்கணும். ‘வேலைக்காரன்’ல சமூகம் சார்ந்த விஷயம் இருக்குனு மக்கள் பார்க்க வந்தாங்க. அது எந்தளவுக்கு இருக்கோ அந்தளவு வெற்றியோட சதவீதம் இருக்கும்னு நினைச்சோம். அடுத்து சயின்ஸ் ஃபிக்ஷன் படம் பண்றோம். ‘அதுல என்ன இருக்கும், சிவகார்த்திகேயன் என்ன பண்ணப்போறாப்ல’னு ரசிகர்களுக்குப் பல யோசனைகள் இருக்கும். அப்ப, ‘சரி போய்த்தான் பார்ப்போமே’னு படத்துக்கு வருவாங்க. அந்த மாதிரிதான் நான் படம் பண்ணிட்டு இருக்கேனு நினைக்கிறேன்.”

“கேத்ரீனா கைஃபை ரொம்பப் பிடிக்கும்னு சொல்லியிருக்கீங்க. இப்போ, நயன்தாராகூட நடிச்சிட்டீங்க. உங்க கனவுக்கன்னி லிஸ்ட்ல ஏதாவது மாற்றம் ஏற்பட்டிருக்கா?”
- சுஜிதா சென்
“கனவுக்கன்னினு எனக்கு யாரும் கிடையாது. நயன்தாராவோட ஆக்டிங், ஸ்கிரீன்ல தன்னைக் காட்டும் விதம்... எல்லாமே ரொம்பவே பிடிக்கும். கேத்ரீனா கைஃபுக்குப் பிறகு இந்தியில எனக்கு ரொம்பப் பிடிச்சது அலியா பட். அவங்க ஆக்டிங் ரொம்பவே க்யூட்டா இருக்கு.”
அடுத்த வாரம்...
“பாலிவுட்ல இருந்து வந்து, ‘உங்க படத்தை ரீமேக் பண்றோம்’னு சொன்னா எந்தப் படத்தை எடுக்கலாம்னு நினைக்கிறீங்க? இந்திப் படத்தை ரீமேக் பண்ணி நடிக்கணும்னா எந்தப் படத்தை ரீமேக் பண்ணுவீங்க?”
“ ‘24 ஏ.எம் ஸ்டூடியோ தயாரிப்பு நிறுவனம் ஆர்.டி.ராஜாவோடது இல்லை, சிவகார்த்திகேயனுடையதுதான்’னு வெளியில ஒரு டாக் இருக்கே, அது உண்மையா?”