
உ.சுதர்சன் காந்தி
“ஒரு இயக்குநரா ‘இவன் தந்திரன்’ எனக்கு வெற்றிப்படம். ஆனா, தயாரிப்பாளரா மிகப்பெரிய நஷ்டம். அதுல இருந்து மீண்டு வரவே சிரமப்பட்டேன். ஆனாலும் இப்ப இயக்கும் ‘பூமராங்’ படத்தையும் நானே தயாரிக்கிறேன். ‘நாம் செய்யும் நல்லது கெட்டது, ஏதோ ஒரு வழியில நமக்கே வந்து சேரும்’ என்கிற கர்மா கான்செப்டை வெச்சு இந்த ஸ்க்ரிப்டை எழுதியிருக்கேன். இன்றைய விவசாயம்தான் கதைக்களம். ஒரு ஷெட்யூல் படப்பிடிப்பு முடிஞ்சிருக்கு. ஸ்ட்ரைக் முடிஞ்சிட்டா படமும் வேகமா முடிஞ்சுடும்.” - இயக்குநர் ஆர்.கண்ணனின் வார்த்தைகளில் நம்பிக்கை... நம்பிக்கை.
“நல்ல உடல்திறனோட, சாஃப்ட்வேர் லுக்ல உள்ள இளைஞன்தான் என் நாயகன். இந்த கேரக்டருக்கு அதர்வாவைத் தவிர வேறு யாரையும் யோசிக்க முடியலை. ஒரிஜினல் மாதிரியே தெரியும் ப்ராஸ்தெடிக் மேக்கப்ல அதர்வா வரும் காட்சிகள் இருக்கு. ஆனா என்னவா வருவார் என்பது சஸ்பென்ஸ். , ‘பத்மாவதி’, ‘102 நாட் அவுட்’ மாதிரியான படங்களில் வேலைசெய்த ப்ரீத்தி, மார்க்னு இரண்டு மேக்அப் ஸ்பெஷலிஸ்ட்டுகள் ஒர்க் பண்றாங்க.”

“இதுவரை மேகா ஆகாஷ் தமிழில் நடிச்ச ஒரு படம்கூட ரிலீஸ் ஆகலை. அதுக்குள்ள அவங்களை எப்படி கமிட் பண்ணுனீங்க?”
“அவங்க படம் தமிழ்லதான் இன்னும் ரிலீஸ் ஆகலையே தவிர தெலுங்கில் இரண்டு படங்கள் ரிலீஸ் ஆகிடுச்சு. ‘ஒரு பக்கக் கதை’ படத்தில் பாலாஜி தரணிதரன்தான் இவங்களை அறிமுகப்படுத்தினார். மேகா பற்றி அவர் நிறைய பெருமையா சொன்னார். ஆனால், ‘எனை நோக்கிப் பாயும் தோட்டா’ படத்தில் வர்ற ‘மறுவார்த்தை பேசாதே’ பாட்டைப் பார்த்தப்பதான், ‘இவங்களை நடிக்க வைக்கலாமே’னு தோணுச்சு. மேகாவுக்கு விஸ்காம் மாணவி கேரக்டர். ‘மேயாத மான்’ இந்துஜாவுக்கு மதுரையில இருந்து சென்னை வந்து இங்கேயே தங்கி வேலை செய்யும் கதாபாத்திரம். நாம சொல்வதை உள்வாங்கி அதைவிட அருமையா நடிப்பாங்க.”

“உங்களோட அடுத்தடுத்த படங்களில் ஆர்.ஜே.பாலாஜி இருக்கார். என்ன ஸ்பெஷல்?”
“வழக்கமான காமெடியன் லுக் இல்லாததுதான் ஆர்.ஜே.பாலாஜியின் பலம். அவர் ஒரு நல்ல கேரக்டர் ஆர்ட்டிஸ்ட். ஸ்க்ரிப்ட்டுக்குள்ளேயே தன் தனித்தன்மையான நகைச்சுவையைச் சேர்ப்பதில் பாலாஜி ஸ்பெஷல். சுஹாசினி மேடம் அதர்வாவுக்கு அம்மாவா நடிக்கிறாங்க. மனோபாலா சார்கிட்ட இருந்தப்ப என்னை சுஹாசினி மேடம்தான் மணி சார்கிட்ட அசிஸ்டென்டா சேர்த்துவிட்டாங்க. ‘ஐ’ படத்துல் நடிச்ச உபன் படேல்தான் வில்லன். அதர்வாவும் இவரும் ஃபிட்னெஸ்ல பயங்கர ஸ்ட்ராங். இருவரையும் ஒரு ஃப்ரேம்ல பார்க்கவே சூப்பரா இருக்கும்.”

“தொழில்நுட்பக்குழுவைப் பற்றிச் சொல்லுங்க...”
“ ‘அர்ஜுன் ரெட்டி’ பட இசையமைப்பாளர் ரதன் இசை. ‘அர்ஜுன் ரெட்டி’யில் நிறைய இடங்களில் சைலன்ஸ் இருக்கும். அந்தப் படத்தைத் தன் இசையால் தாங்கியிருப்பார். ரஹ்மான் சாரிடம் இருந்தவர். இதில் இரண்டு பாடல்கள்தான். ‘தேசமே கண் முழுச்சுக்கோ; கூட்டமா கை கோத்துக்கோ’னு விவேக் ஒரு பாட்டு எழுதியிருக்கிறார். ஆயிரம் துணை நடிகர்களை வெச்சு ‘வந்தே மாதரம்’ மாதிரி ஷூட் பண்ணினோம். இந்தப் பாட்டுக்கு நிச்சயம் நல்ல ரீச் கிடைக்கும். சில்வா மாஸ்டர்தான் ஸ்டன்ட். மூன்று ஆக்ஷன் பிளாக்லயும் அதர்வா வேற லெவலில் இருப்பார்.”
“மணிரத்னத்துடன் வேலைசெய்த அனுபவம்..?”
“நான், கார்த்தி, சித்தார்த், சுதா கோங்ரா, மிலிந்த் ராவ்னு எல்லோரும் ஒண்ணாதான் மணி சார்கிட்ட வேலைசெய்தோம். இவங்கள்ல நான் சீனியர். பத்து வருஷம் அவரிடம் இருந்தேன். ஜாலியா சொல்லணும்னா, கார்த்திக்கு கிளாப் அடிக்கவே வராது. எப்படி கிளாப் அடிக்கணும்னு நான்தான் அவருக்குச் சொல்லிக்கொடுப்பேன். சித்தார்த் அடிக்கடி ஜாலியா அடிவாங்குவார். ஒரு காலேஜ் மாதிரி மணி சார் கேம்பஸ்ல நிறைய கத்துக்கிட்டோம். அவை ரொம்பவே அழகான நாள்கள். ‘இவன் தந்திரன்’ படத் தியேட்டர் ரெஸ்பான்ஸ் பார்த்த மணி சார், ‘ஆள் செட் பண்ணிக் கூட்டிட்டு வந்துட்டியா?’னு கிண்டல் பண்ணினார். சாரோட ஒவ்வொரு படத்தையும் பார்த்துட்டு, பேசிடுவேன். ‘செக்கச் சிவந்த வானம்’ படத்துக்காக ஆர்வமா காத்திருக்கேன்.”