பேட்டி - கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

இதான் சினிமா... இதான் வாழ்க்கை!

இதான் சினிமா... இதான் வாழ்க்கை!
பிரீமியம் ஸ்டோரி
News
இதான் சினிமா... இதான் வாழ்க்கை!

சனா, படங்கள்: பா.காளிமுத்து

“ ‘ஏதாவது லாக் ஆகிடுச்சோ’னு சந்தேகப்படுற அளவுக்குப் போன வாரம் முழுக்க ஃபேமிலி, ஃப்ரெண்ட்ஸ் தவிர வேற யாரிடம் இருந்தும் எனக்கு எந்த போனும் வரவே இல்லை. ஆனா இப்ப, தேசிய விருது அறிவிப்பு வந்தபிறகு அவ்வளவு அழைப்புகள். மிஸ்டு கால் மட்டுமே நூறுக்கும் மேல இருக்கும். யாரையும் விட்டுடக்கூடாதேனு ஒவ்வொருத்தரையா திரும்ப அழைத்து நன்றி சொல்லிட்டிருக்கேன். இதான் சினிமா; இதான் வாழ்க்கை” - இயல்பாகப் பேசுகிறார் ஒளிப்பதிவாளர் செழியன். இவர் இயக்கிய ‘டூ லெட்’  திரைப்படம் ‘சிறந்த தமிழ்ப் படமாக தேசிய திரைப்பட விருதுக்குழுவால் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்தப் படம் இன்னும் திரையரங்கில் வெளியாகவில்லை. வாழ்த்துகள், பூச்செண்டு களுக்கு மத்தியில் செழியனை அவரின் வீட்டில் சந்தித்தேன்.

இதான் சினிமா... இதான் வாழ்க்கை!

“கடந்த வெள்ளிக்கிழமை டிவி சேனல் ஒன்றில் நிகழ்ச்சி பார்த்துக்கிட்டிருந்தேன். நண்பர் ஒருவர் அழைத்து, ‘தேசிய விருது அறிவிக்கும் பத்திரிகையாளர் சந்திப்பை நேரலை செய்கிறார்கள். செய்திச்சேனல் பாருங்கள்’ என்றார். பார்த்தேன். ஒவ்வொரு விருதா அறிவிக்கிறார்கள். ஆனா தமிழுக்கு மட்டும் யாருக்குனு சொல்லலை. கீழே அமர்ந்திருந்த ஒரு நிருபர், , ‘தமிழில் எந்தப்படத்துக்கு விருதுன்னு சொல்லவே இல்லை’ என்றார். ‘ஓ...’ என்றபடி மறுபடியும் லிஸ்டைப் புரட்டிப்பார்த்து, என் படப் பெயரைச் சொன்னார்கள். வீட்டில் எல்லாரும் சேர்ந்துதான் அதைப் பார்த்தோம். மகிழ்ச்சி, பெருமகிழ்ச்சி. என் குருநாதர் பி.சி.ஸ்ரீராம் சார், பாலா சார், சசிகுமார் சார்னு பலரும் வாழ்த்தினாங்க.

இதான் சினிமா... இதான் வாழ்க்கை!

  ‘ஒரு ஃபிலிம் மேக்கர் தன் வாழ்க்கையில் நடந்த ஒரே கதையைத்தான் திரும்பத் திரும்ப எடுக்கிறார்’னு சொல்லுவாங்க. அதுக்கு மிகச்சரியான உதாரணம் சார்லி சாப்ளின். ‘உங்கப் படங்களோட தீம் என்ன’னு அவரிடம் கேட்டப்ப, ‘நான் சின்னப் பையனா இருந்தப்ப ஒருநாள் ஜன்னல் வழியா தெருவை வேடிக்கை பார்த்துட்டு இருந்தேன். அப்ப ஒரு கறிக்கடைக்காரர் ஒரு ஆட்டைப் பிடிச்சிட்டு போனார். பார்க்கவே பாவமா இருந்தது. ஒரு கட்டத்தில் அந்த ஆடு அவரிடம் இருந்து  தப்பிச்சு வேகமா ஓடிடுச்சு. அதைப் பிடிக்க அவர் அங்கே இங்கேனு ஓடுறார், தாவுறார், கீழே விழுறார். அதைப் பார்த்தப்ப என்னால சிரிப்பை அடக்கமுடியலை. அப்படி சிரிச்ச நானே அந்த ஆட்டைக் கஷ்டப்பட்டு பிடிச்சு இழுத்துவிட்டு போகும்போது அழுதுட்டேன். நான் எடுத்த மொத்தப் படங்களோட கதையும் இதுதான்’னு சாப்ளின் சொல்லி இருக்கார்.

சென்னையில் நான் வாடகைக்கு வீடு தேடிட்டு இருந்தப்ப, ஒரு இடத்தில் பத்து பதினைந்து பேர் லைன்ல நின்னுகிட்டு இருந்தாங்க. ஏதோ வேலைக்கு இன்டர்வியூ வந்திருக்கிறமாதிரி நின்ன அந்தக் காட்சி எனக்கு ஆச்சர்யமா இருந்துச்சு. சொந்த  ஊர்ல  வாடகை வீட்லயும் இருந்திருக்கோம், சொந்த வீட்லயும் இருந்திருக்கோம். எனக்குத் தெரிந்து வீட்டுக் கதவைப் பூட்டினதா ஞாபகமே இல்லை. ஆனா இங்கே எல்லாக் கதவுகளும், ஜன்னல்களும் பூட்டி இருக்கிறதைப் பார்க்கும்போது, அதுக்கு இவங்க ஜன்னலே வெக்காம வீடு கட்டியிருக்கலாமேனு தோணும். சென்னையில் வீடு தேடி அலைபவர்கள் அடையக்கூடிய அத்தனை உணர்வுகளையும் நினைவுகளையும் ‘டூ லெட்’ உங்களுக்குள் எழுப்பும். சினிமா பிரச்னைகள் முடிந்ததும் விரைவில் ‘டூ லெட்’ வெளியாகும்”

விருதுப் படம் பார்க்க வெயிட்டிங்!