மற்ற எபிசோடுகள்
Published:Updated:

விகடன் பிரஸ்மீட்: அஜித்திடம் என்ன பிடிக்காது? விஜய்யிடம் என்ன பிடிக்கும்? - விஷால்

விகடன் பிரஸ்மீட்: அஜித்திடம் என்ன பிடிக்காது? விஜய்யிடம் என்ன பிடிக்கும்? - விஷால்
பிரீமியம் ஸ்டோரி
News
விகடன் பிரஸ்மீட்: அஜித்திடம் என்ன பிடிக்காது? விஜய்யிடம் என்ன பிடிக்கும்? - விஷால்

விகடன் நிருபர்களுக்கு மட்டுமேயான பிரத்யேக பிரஸ்மீட் இது. #VikatanPressMeetவிகடன் டீம், படம்: கே.ராஜசேகரன்

“இந்த வேலைநிறுத்தம், இந்திய சினிமாவையே கோலிவுட் பக்கம் திருப்ப வெச்சிருக்கு. இதன் மூலமா நீங்க சாதிச்சது என்ன?”

- பரிசல் கிருஷ்ணா

“இதை முதல்ல தென்னிந்திய சினிமாத்துறையின் ஸ்டிரைக்காத்தான் அறிவிச்சோம். வெவ்வேறு காரணங்களால் மத்த மாநிலத்துக்காரங்க விலகிட்டாங்க. நாங்க கேட்ட கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட நிறுவனம் சரியான பதில் சொல்லும்வரை படங்களை ரிலீஸ் பண்ணக்கூடாதுனு முடிவு பண்ணிணோம். 22 ஆயிரம் ரூபாய் என்று இருந்த வி.பி.எஃப் கட்டணத்தை இப்போ பத்தாயிரம் ரூபாயாக் குறைச்சிருக்கோம். ஒன்பதாயிரம் ரூபாயா இருந்த வார வி.பி.எஃப் கட்டணத்தை ஐயாயிரமாக் குறைச்சிருக்கோம். இன்னும் ரெண்டு வருடத்துல அதுவும் இல்லாமப் பண்ணிடுவோம். ஒரு தயாரிப்பாளர் கஷ்டப்பட்டுப் படமெடுத்து ரிலீஸ் பண்ணினா, அவங்களுக்கு சரியான லாபம் வர்றதில்லை. காரணம், விளம்பரம், புரொஜக்டர், ஆன்லைன் கட்டணம்னு மத்த நிறுவனங்கள் சம்பாதிக்கிறதுதான். அதைத் தடுப்பதற்கான விழிப்பு உணர்வு எங்களுக்கு வந்துடுச்சு. இந்த மாற்றங்கள் சிறு தயாரிப்பாளர்களுக்கு சாதகமா இருக்கும்னு நினைக்கிறேன். தவிர, நாங்க இன்னும் முழுசா ஜெயிக்கலை. நிறைய வேலைகள் மீதமிருக்கு. அதெல்லாம் நல்லபடியா முடிஞ்சாதான், நிஜ வெற்றி!”

விகடன் பிரஸ்மீட்: அஜித்திடம் என்ன பிடிக்காது? விஜய்யிடம் என்ன பிடிக்கும்? - விஷால்

“ஆந்திரத் திரைத்துறையில் பாலியல் தொல்லைகள் இருப்பதாக  தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி குற்றம் சாட்டியிருக்காங்க. தமிழ் சினிமாவிலும் நடிகைகளுக்குப் பாலியல் தொல்லைகள் இருக்கா? இருக்குன்னா, அதுக்கான தீர்வு என்ன?”

- சனா

“சினிமாவுல சில உப்புமா கம்பெனிகள் இருக்காங்க. அதாவது, ‘நாங்களும் படம் எடுக்க வர்றோம்’னு ஊர்ல இருந்து சிலர் கிளம்பி வருவாங்க. சினிமாத் தயாரிப்பில் உள்ள சிக்கல்கள் பற்றி அவங்களுக்கு எந்தப் புரிதலும் இருக்காது. அவர்களில் சிலர்தான், ‘ஸ்க்ரீன் டெஸ்ட்’ என்ற பெயர்ல பெண்களுக்குப் பாலியல் தொல்லை கொடுக்குறதா தகவல் வருது. ஆனால் புரொஃபஷனலாவும், சினிமா மீதுள்ள அபிமானத்திலும் ஏ அண்ட் பி கேட்டகிரி பிரிவுல எடுக்கப்படுற படங்கள்ல இந்த `Casting couch’ங்கிற விஷயம் கிடையாது. தனக்கு நடந்த பாலியல் தொல்லை குறித்து நடிகை அமலாபால் தைரியமா வெளியே சொன்னாங்க. வரலட்சுமியும் இதைப் பற்றி சொன்னாங்க. ரெண்டு பேருக்கும் hats off! ஆனா, இதையெல்லாம் வெச்சு மொத்த சினிமா துறையும் இப்படித்தான்னு குற்றம்சாட்ட முடியாது.” 

விகடன் பிரஸ்மீட்: அஜித்திடம் என்ன பிடிக்காது? விஜய்யிடம் என்ன பிடிக்கும்? - விஷால்

“நடிகர் சங்கம் நடத்தும் கலை நிகழ்ச்சிகள், நட்சத்திர கிரிக்கெட், பல பிரச்னைகளுக்காக நடத்தப்படும் போராட்டங்கள்...எதிலும் அஜீத் கலந்துக்கிறதில்லை. நடிகர் சங்க நிர்வாகி என்ற முறையில் நீங்க இதை எப்படிப் பார்க்கிறீங்க?”

- ரீ.சிவக்குமார்

“அது அவரோட விருப்பம். யாரையும் நாம கட்டாயப்படுத்த முடியாது. அதனால, இந்தக் கேள்விக்கான பதிலை அவர்தான் சொல்லணும். தவிர,  ஏன் வரலை, ஏன் குரல் கொடுக்கலைனு கேட்பதில் எனக்கும் உடன்பாடு கிடையாது. ஆர்யா, ஜீவா, ஜெயம் ரவி இவங்க எல்லோரும் என் நெருங்கிய நண்பர்கள். அவங்ககிட்ட நான் உரிமையாக் கேட்கலாம்; சொல்லலாம். அஜித்தை எனக்கு ஒரு நடிகராத்தான் தெரியும். அவர்கிட்ட அப்படி உரிமையாக் கேட்க முடியாது!” 

விகடன் பிரஸ்மீட்: அஜித்திடம் என்ன பிடிக்காது? விஜய்யிடம் என்ன பிடிக்கும்? - விஷால்

“உங்க நண்பர் ஆர்யா என்ன பண்ணினாலும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேங்கிறாரே? என்ன காரணம்?”

- நந்தினி சுப்பிரமணி

“ நான் முன்னாடியே சொல்லியிருக்கேன். அவன் கல்யாணம் பண்ணமாட்டான். இவ்ளோ நாள் அவன் ஃபீரியா பண்ணிட்டு இருந்ததை, அந்த சேனல் காசு கொடுத்துப் பண்ண வெச்சிட்டாங்க. ‘யாரைக் கல்யாணம் பண்றேன்னு முடிவு பண்ண எனக்கு இன்னும் கொஞ்சம் டைம் வேணும்’னு சொன்னதன் மூலம் அந்தப் பதினாறு பெண்களோட வாழ்க்கையைக் காப்பாத்தியிருக்கான். அதுக்கு ஆர்யாவைத்தான் பாராட்டணும். ஆனா, கண்டிப்பா அவனுக்கு இந்த வருஷம் கல்யாணம் பண்ணிவெச்சிடணும். அது சமூகக் கடமை!”

விகடன் பிரஸ்மீட்: அஜித்திடம் என்ன பிடிக்காது? விஜய்யிடம் என்ன பிடிக்கும்? - விஷால்

“விஜயகாந்த் திரையுலகத்துக்கு வந்து 40 ஆண்டுகள் கடந்ததைத் தே.மு.தி.கவினர் விழா எடுத்துக் கொண்டாடினாங்க. நடிகர் சங்கத் தலைவராக இருந்து சங்கத்தை சிறப்பா வழிநடத்திய விஜயகாந்துக்கு, நடிகர் சங்கம் ஏன் விழா எடுத்துக் கௌரவிக்கலை?”

-  கே.ஜி.மணிகண்டன்

“விஜயகாந்த் சார் எனக்கு ரொம்பவும் பிடிச்ச மனிதர். அடமானமா வைக்கப்பட்ட நடிகர் சங்கக் கட்டடத்தை வங்கியில் இருந்து மீட்டுக்கொடுத்தவர். 40 வருட உழைப்பு சாதாரண விஷயம் இல்லை. உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டியவர். அவருக்கான பாராட்டு விழாவுக்கு எனக்கு அழைப்பு வந்திருந்தது. ஸ்டிரைக் சம்பந்தமா அலைஞ்சதுல, எங்க அப்பா, அம்மாவையே வாரத்துக்கு ஒருமுறைதான் பார்க்க வேண்டிய நிலை. ஆனாலும் அந்த நிகழ்ச்சிக்கு என்னால போகமுடியலையேங்கிற வருத்தம் இருக்கு.”

விகடன் பிரஸ்மீட்: அஜித்திடம் என்ன பிடிக்காது? விஜய்யிடம் என்ன பிடிக்கும்? - விஷால்

“பாஜகவைச் சேர்ந்த ஹெச்.ராஜா, டிவிட்டரில் சொல்லும் கருத்துக்களுக்கு நிறைய எதிர்ப்புகள் வருது. அதைப்பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க?”

- சக்தி தமிழ்செல்வன்

“திரு.ஹெச்.ராஜா அவர்கள் கனிமொழி பற்றி சமீபத்துல சொன்ன ஸ்டேட்மென்ட், சுத்தப் பைத்தியக்காரத்தனமான ஸ்டேட்மென்ட். ஒரு பெண்ணை அப்படிப் பேசுறது ரொம்பத் தப்பான விஷயம். எது பேசினாலும் நாம என்ன பேசுறோம்னு யோசிச்சுப் பேசணும். அதுவும், ஒரு கட்சியில உயர்ந்த பதவியில் இருக்கிற ஒருத்தருக்கு அந்தப் பொறுப்பு இன்னும் அதிகம். இதை நான் அறிவுரையா சொல்லலை. ஓட்டுப் போட்ட வாக்காளனாச் சொல்றேன்”

“உங்களோடு தொடர்புடைய சிலரின் புகைப்படங்கள் இங்கே இருக்கு. அவங்களிடம் பிடிக்காத விஷயங்களை நீங்க சொல்லணும்...”

- இரா.கலைச்செல்வன்

விஜய்: “இவர்கிட்ட பிடிச்சது என்னன்னு கேட்டா அரைமணி நேரம் பேசுவேன். விஜய் சாரை எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவரோட தன்னம்பிக்கை பிடிக்கும். . அவரோட பொறுமை பிடிக்கும். ஏன்னா, அவருக்கு வந்த விமர்சனங்களெல்லாம் சாதாரணமானது கிடையாது. இவர் இடத்துல மத்தவங்க இருந்திருந்தா, எல்லாத்தையும் விட்டுட்டுப் போயிருப்பாங்க. ஆனா, அதையெல்லாம் மீறி நிற்கிறார்னா, ஹாட்ஸ் ஆஃப் டூ விஜய் சார்! மத்தபடி, பிடிக்காததுனு விஜய் சார்கிட்ட எதுவும் இல்லை.”

விகடன் பிரஸ்மீட்: அஜித்திடம் என்ன பிடிக்காது? விஜய்யிடம் என்ன பிடிக்கும்? - விஷால்

அஜித்: “அன்-அவைலபிளா இருப்பார். ஒரு விஷயம் பண்ணும்போது, அவரைச் சந்திக்க முடியாது. இதுமட்டும்தான் அவர்கிட்ட எனக்குப் பிடிக்காத விஷயம். ரீச் பண்ண முடியாத இடத்துல இருப்பதுதான் அஜித்திடம் எனக்குப் பிடிக்காத விஷயம்!”

நடிகர் ராதாரவி
: “சாய்ஸ் ஆஃப் வேர்ட்ஸ். முக்கியமா, தமிழில்! இன்னும் இவர்கிட்ட பிடிக்காதது நிறைய இருக்கு!”

தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு : “தாணு அண்ணன் தலைவரா இருக்கும்போது இந்த விஷயங்களை எல்லாம் பண்ணியிருந்தா நாங்க தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல்ல நின்னிருக்கவே மாட்டோம். இதை நான் குற்றச்சாட்டாச் சொல்லலை. ஒரு மீட்டிங்கில், சங்கக் கட்டட விஷயமா நான் கேட்ட கேள்விக்கு அவர்கிட்ட இருந்து பதில் வரலை. ட்ரீட் பண்ண விதமும் ரொம்ப மோசமா இருந்தது. ஆனா, இன்னைக்கு அவர் எங்ககூட இருந்து செயல்படுறதைப் பார்க்கும்போது சந்தோஷமா இருக்கு. ஸ்டிரைக் சமயத்துல தாணு சார் எங்களுக்கு சப்போர்ட்டா இருந்ததைப் பார்த்து பலர் பயந்துட்டாங்க. இந்த ஒற்றுமை இன்னும் பல நல்ல விஷயங்களுக்குப் பலமா இருக்கும்!”

(இன்னும் சிலரிடம் தனக்குப் பிடிக்காத விஷயங்களை அடுத்த வாரமும் சொல்கிறார்)

 “காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுப்பதை எதிர்த்து மௌனப் போராட்டம் நடத்தினீங்க. பேச வேண்டிய நேரத்தில் மௌனப் போராட்டம் நடத்துறது சரிதானா?”

 - நா.சிபிச்சக்கரவர்த்தி

“மெளனப் போராட்ட வழியில் போராடுறதுதான் சரினு எங்களுக்குத் தோணுச்சு. ஏன்னா, காவிரிப் பிரச்னை இன்னைக்கு, நேத்து ஆரம்பிக்கலை. பல காலமா இருக்கிற பிரச்னை. மத்திய அரசுக்கு எதிரா எங்க உணர்வுகளை வெளிப்படுத்தலாமே தவிர பேசவேண்டியவங்க பேசினாதான் சரியா இருக்கும்.”

அடுத்த வாரம்...


* “நீங்க கட்சி ஆரம்பிச்சதுக்குப் பிறகு ரஜினி, கமல் ரெண்டுபேரையும் எதிர்த்துப் போட்டியிடுவிங்களா?”

* “சரத்குமாரிடம் உங்களுக்குப் பிடித்த விஷயம் எது, ஏன்?”