
கே.ஜி.மணிகண்டன்
“சாவித்திரி மேடத்தின் சந்தோஷத் தருணங்களை முதல்ல படமாக்கிட்டு, சோக நிகழ்வுகளையெல்லாம் கடைசியில்தான் காட்சிப்படுத்தினாங்க. கடைசி சில நாள்கள் ஷூட்டிங்ல எனெர்ஜியோட நடிச்சுட்டு, சோகத்தோட திரும்புவேன். மனசு பாரமா இருக்கும்!” - நெகிழ்வும் மகிழ்வுமாகப் பேசுகிறார், கீர்த்தி சுரேஷ். . தெலுங்கில் ‘மகாநடி’, தமிழில் ‘நடிகையர் திலகம்’ என்ற பெயரில் ஒரே சமயத்தில் வெளியாகவிருக்கும் சாவித்திரி வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிகையர் திலகமாக நடித்திருப்பது, கீர்த்தி சுரேஷ்.

“சமந்தா ஒரு முக்கியமான கேரக்டர்ல நடிச்சிருக்காங்க. அவங்க மூலமாதான், சாவித்திரியாகிய என் கேரக்டரின் கதை பார்வையாளர்களுக்குச் சொல்லப்படும். நிகழ்காலம், கடந்த காலம்னு மாறி மாறி வரும்போது, நிச்சயம் பார்வையாளர்களுக்கு வித்தியாசமான அனுபவம் கிடைக்கும்.
ஜெமினி கணேசன் கேரக்டர்ல துல்கர் சல்மான் நடிச்சிருக்கார். ராஜேந்திர பிரசாத், விஜய் தேவரகொண்டா, பிரகாஷ் ராஜ், திவ்யா வாணி, பானுப்ரியான்னு பல சீனியர் நடிகர்கள் படத்தில இருக்காங்க.
எங்க அம்மா சாவித்திரியோட தீவிர ரசிகை. நானும் அவங்க நடிச்ச பல படங்களைப் பார்த்திருக்கேன். குறிப்பா, ‘மாயாபஜார்’, ‘தேவதாஸ்’ ரொம்பவே பிடிக்கும். ஆனாலும் முதலில் தயாரிப்பாளருக்கு போன் பண்ணி, ‘நான் இதில நடிக்கலை சார்’னு சொன்னேன். சாவித்திரி மேடத்தின் கேரக்டரை முழுசா என்னால் கொண்டுவர முடியுமாங்கிற தயக்கம் ஒருபுறம், இன்னொருபுறம் சாவித்திரியின் வாழ்க்கைத் துயரங்களை என் மூலமா ஆடியன்ஸுக்குக் கொண்டுபோகணுமான்னு யோசிச்சேன். ஆனா ‘இந்தப் படத்தில் நீ நடிக்கிறதே பெரிய ஆசிர்வாதம்’ன்னு பலபேர் சொன்னதால் நடிக்க ஆரம்பிச்சேன்.
டைரக்டர் அஸ்வின் முடிந்தவரை சாவித்திரி மேடத்தின் வாழ்க்கையில் நடந்த எல்லா விஷயங்களையும் கொண்டுவந்திருக்கார். படத்துல முக்கியமான போர்ஷனே, ஜெமினி கணேசன் சார் - சாவித்திரி மேடம் காதல்தான். மேடம் தெலுங்கு சினிமாவுல இருந்து தமிழுக்கு வரும்போது அவங்களுக்குத் தமிழ் கத்துக்கொடுத்தது ஜெமினி சார்தான். அதுதான், அவங்க காதலுக்கான ஆரம்பப்புள்ளி. ஜெமினிகணேசனுடனான காதல், கல்யாணம், பிரிவு, பிரிவுக்கான காரணம்னு எல்லாம் சொல்லியிருக்கோம். ஒருவகையில் சாவித்திரியை ஒரு பெண் தேவதாஸ்னு சொல்லலாம். அவங்க வாழ்க்கையும் எல்லா உணர்வுகளும் நிகழ்வுகளும் நிரம்பிய ‘மாயாபஜார்’தான்!”

“சாவித்திரி கேரக்டருக்கு, ஒரு நடிகையா எப்படித் தயாரானீங்க?”
“மேடம் பற்றிய ஏ டூ இஸட் விஷயங்களை, இயக்குநர் அஸ்வின் எனக்குச் சொன்னார். அவங்க நடிச்ச படங்கள்ல இருந்து பல காட்சிகளைத் தொகுத்து ஒரு பென்-டிரைவ்ல கொடுத்தார். சோகம், அழுகை, சிரிப்பு, கோபம்னு அவங்களோட எல்லா ரியாக்ஷன் காட்சிகளும் அதுல இருந்தன. சாவித்திரியைப் பற்றி ஒரு புத்தகம் கொடுத்தார். சாவித்திரி மேடத்தின் பொண்ணு விஜய சாமுண்டீஸ்வரிகிட்ட நிறைய பேசினேன். மேடத்துக்கும் எனக்கும் நிறைய விஷயங்கள் மேட்ச் ஆனது அப்போதான் எனக்குத் தெரிஞ்சது. குழந்தைங்களைப் பயமுறுத்த கண் இமையை மடக்கிக் காட்டுவாங்களாம். நானும் அப்படிப் பண்ணியிருக்கேன். கிரிக்கெட், நீச்சல், கார் ரேஸிங்னு சாவித்திரிக்குப் பிடிச்ச எல்லாம் எனக்கும் பிடிக்கும். தவிர, அவங்களைப் பற்றி எங்கம்மா சில விஷயங்களைச் சொன்னாங்க. நடிகர் ராதாரவி, சத்யராஜ் சில விஷயங்களைச் சொன்னாங்க. விமானப் பயணத்தில் நடிகை ஜெயபாரதி சில தகவல்கள் சொன்னாங்க. இப்படித்தான் தயாரானேன்.”
“ஒரு நடிகையோட பயோபிக் படத்துல நடிச்சது மூலமா, ஒரு நடிகையா நீங்க கத்துக்கிட்ட விஷயம் என்னென்ன?”
“சமயத்துல ‘நம்ம வாழ்க்கையும் இவ்ளோதான்ல!’னு தோணியிருக்கு. ‘இதுக்கா இவ்ளோ கஷ்டப்படுறோம்?’னு நினைச்சிருக்கேன். கிட்டதட்ட ஒரு வாழ்க்கைக்கான பாடத்தை இந்தப் படம் மூலமா கத்துக்கிட்டேன். ஒரு நடிகையா, ‘கொஞ்சம் உஷாராவும் இருக்கணும்’னு என்னை எச்சரிச்சது அவங்களோட வாழ்க்கை!”

“படத்துல ரொம்பக் கஷ்டப்பட்ட விஷயம்?”
“படத்தோட கேமராமேன் டேனி சஞ்செஸ்தான், எனக்காக ரொம்பக் கஷ்டப்பட்டார். குண்டான முகத்தைக் கொண்டுவர்றதுக்காக பிராஸ்தெடிக் பண்ணோம். அந்த மேக்கப் போட நாலு மணிநேரம் ஆகும்; மூணு மணிநேரத்துல கலைஞ்சிடும். என்னைக் குண்டா காட்டுறதுக்கு ஒரு லைட்டிங்; நார்மலா காட்டுறதுக்கு ஒரு லைட்டிங்னு ரொம்ப சிரமப்பட்டார் டேனி. டான்ஸுக்கு மட்டும் நிறைய ரிகர்சல் பண்ண வேண்டியிருந்தது. நடிக்கும்போது சாவித்திரி மேடம் கை எங்கே வெச்சிருந்தாங்க, கண் அசைவுகள் எப்படி இருந்தன, உடம்பு எப்படி இருந்ததுனு யோசிச்சுப் பார்த்துப் பண்றதே சிரமமா இருக்கும். ஆனா டப்பிங் முடிஞ்சு படத்தைப் பார்க்கும்போது அழுதுட்டேன்”

‘இந்தப் படத்துக்காக கிட்டத்தட்ட 120 காஸ்ட்யூம்ஸ் பயன்படுத்துனீங்களாமே?”
“ஆமாம். எல்லா காஸ்ட்யூம்களையும் டிசைன் பண்ணவர், கெளரங்க். எல்லாமே இந்தப் படத்துக்காக நெய்தவை. தவிர, தயாரிப்பாளரின் அம்மா பயன்படுத்தின ஐம்பது வருட பழமையான சேலைகளையெல்லாம் யூஸ் பண்ணோம். குழந்தை, டீன் ஏஜ், நாடகங்கள்ல நடிச்ச காலம், சினிமாவுக்கு என்ட்ரி, சினிமாவுல டாப் லெவல்ல இருந்த சமயம், கொஞ்சம் குண்டானது, ரொம்ப குண்டானது, இறந்துபோறதுக்கு முன்னாடி ரொம்ப ஒல்லியா மாறினது... இப்படி சாவித்திரியோட எல்லாக் காலங்களையும் நேர்த்தியாக் கொண்டு வர்றதுக்கு காஸ்ட்யூம்ஸ் ரொம்ப உதவியா இருந்துச்சு.”
‘’சாவித்திரியின் சிரிப்புகூட நடிக்கும்னு சொல்வாங்க. ஆனால் உங்க சிரிப்பைக் கிண்டலடிச்சு மீம்ஸ் வர்றதைப் பத்தி என்ன நினைக்கிறீங்க?”
“நிச்சயமா மீம்ஸ் போடுறவங்களுக்கான பதிலடியா இந்தப் படம் இருக்கும்!”