பேட்டி - கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

“ரெண்டாவது படம் நானே தேடிப்போய்ப் பண்ணுவேன்!”

“ரெண்டாவது படம் நானே தேடிப்போய்ப் பண்ணுவேன்!”
பிரீமியம் ஸ்டோரி
News
“ரெண்டாவது படம் நானே தேடிப்போய்ப் பண்ணுவேன்!”

உ.சுதர்சன் காந்தி

``இந்தப் படத்தோட கதையே ஒரு உண்மை சம்பவம்தான். அதில் கொஞ்சம் கற்பனை சேர்த்து அழகான படமாப் பண்ணியிருக்கார் இயக்குநர் மாறன்.” - `இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படம் பற்றி பேச ஆரம்பிக்கும்போதே அருள்நிதியிடம் அவ்வளவு எனர்ஜி!

“இது ஒருவருக்கு மட்டுமே முக்கியத்துவம் இருக்கிற கதை கிடையாது. நடிக்கிற அனைவருக்குமே சரிசமமான முக்கியத்துவம் இருக்கும். எல்லாரும் ஒரு பிரச்னையில் மாட்டியிருப்பாங்க. அதுல இருந்து எப்படி வெளியே வர்றாங்கன்றதுதான் கதை. இயக்குநர் மாறன் இந்தப் படத்தோட கதையை நாலு மணி நேரம் சொன்னார். என்னெல்லாம் பண்ணப் போறோம்னு ஒவ்வொரு விஷயமும் நுணுக்கமா சொன்னார். ஏகப்பட்ட சந்தேகங்கள் கேட்டு அவரை ஒரு வழி பண்ணிட்டேன்”

“ரெண்டாவது படம் நானே தேடிப்போய்ப் பண்ணுவேன்!”

“அறிமுக இயக்குநர் மாறன் உங்களை எப்படி வேலை வாங்கினார்? அவருடன் வொர்க் பண்ணிய அனுபவம்?”

“ஆளைப் பார்த்து எடை போடக் கூடாதுன்னு சொல்வாங்க, அது மாறன் விஷயத்தில உண்மைதான். அமைதியா இருப்பார். ஆனா, திரைக்கதையில் பின்னிடுவார். நிச்சயமா அவர் இண்டஸ்ட்ரில பெரிய ஆளா வருவார். ஜெயிக்கணுங்கிற வெறியை மனசுக்குள்ள வெச்சுகிட்டு எல்லோரையும் அனுசரிச்சுப் பொறுமையா இருந்து ஜெயிச்சுட்டா அதைவிட சந்தோஷம் வேற எதுவுமே இல்லை. நிச்சயமா மாறன் பெரிசா ஜெயிப்பார்.”

“ஹீரோயின் மகிமா நம்பியார் பத்தி சொல்லுங்க...”


``மகிமா படத்துல நர்ஸா வர்றாங்க. பிரமாதமா நடிச்சிருக்காங்க. ’குற்றம் 23’ மாதிரி இதுவும் அவங்களுக்கு முக்கியமான படமா இருக்கும். அவங்களுடன் முக்கியமான கேரக்டர்கள்ல சுஜா வாருணி, வித்யா பிரதீப், சாயாசிங்கும் இருக்காங்க.”

“ஆக்‌ஷன் த்ரில்லர் ஜானர்ல ரெடியாகி இருக்கும் இந்தப் படத்தில் ஆக்‌ஷன் எந்தளவுக்கு வொர்க் அவுட் ஆகியிருக்கு?”


``கணேஷ் மாஸ்டர் ஸ்டன்ட் செமையாப் பண்ணியிருக்கார். ரொம்ப நாள் கழிச்சு `இரவுக்கு ஆயிரம் கண்கள்' படத்தில நிறைய ஆக்‌ஷன் காட்சிகள் பண்ணியிருக்கேன். கார் சேஸ், க்ளைமாக்ஸ் ஃபைட், இன்டர்வெல் ப்ளாக்ல வர்ற ஃபைட் எல்லாமே யதார்த்தமா இருக்கும். என்னைவிட அஜ்மலுக்கு அதிக ஆக்‌ஷன் சீக்வென்ஸ் இருந்தது. ரொம்பவே சிரமப்பட்டுப் பண்ணியிருக்கார்”

“ரெண்டாவது படம் நானே தேடிப்போய்ப் பண்ணுவேன்!”

“ஆனந்தராஜ், நரேன் மாதிரியான சீனியர் ஆர்ட்டிஸ்ட்டுடன் வொர்க் பண்ண அனுபவம் எப்படி இருந்தது?”

``நரேன் சார் எனக்கு நல்ல நண்பர். நிறைய டிப்ஸ் கொடுப்பார். எனக்கு ரொம்பவே சப்போர்ட் பண்ணுவார். ஆனந்தராஜ் சார் செம ஹியூமர் சென்ஸ் உள்ள நபர். ‘சார் நான் உங்களைப் படத்துல பார்த்துப் பார்த்து வேற மாதிரி நினைச்சு வெச்சிருந்தேன்’னு சொல்வேன். அவங்ககிட்ட இருந்து நடிப்பைத் தாண்டி நல்ல குணநலன்களைக் கத்துக்கணும். கத்துக்கிட்டும் இருக்கேன்.’’

“ஒளிப்பதிவாளர் அரவிந்த் சிங் உங்களோட அடுத்தடுத்த படங்கள்ல வர்றாரே?”

`` அரவிந்த் என்னோட ஃபேவரைட் டி.ஓ.பின்னே சொல்லலாம். `டிமாண்டி காலனி’, `ஆறாது சினம்’ இப்போ இந்தப் படத்துலயும் வொர்க் பண்ணிருக்கார்.  இரவை ரொம்ப வித்தியாசமாகக் காட்டி இருக்கிறார். அதே போல,  இசையமைப்பாளர் சாம்.சி.எஸ் பற்றியும் சொல்லணும். த்ரில்லர் படத்துக்கு மியூசிக் ரொம்பவே முக்கியம். இவரோட பின்னணி படத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போயிருக்கு. மாறன், சாம், அரவிந்த் இவங்க மூணு பேரும்தான் இந்தப் படத்தோட பெரிய பலமே.”

`இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படத்துல எதை எதிர்பார்த்து தியேட்டருக்கு வரலாம்? 

``இந்தப் படம் ஒரு கம்ப்ளீட் ஆக்‌ஷன் த்ரில்லரா இருக்கும். படத்துல விறுவிறுப்புக்குக் குறைவே இருக்காது. அடுத்து என்ன நடக்கப்போகுதுனு நம்மால யூகிக்கவே முடியாது. மாறன் என்னுடன் முதல் படம் பண்ணணும்னு ஆசைப்பட்டார். ரெண்டாவது படத்துல நான் மாறனைத் தேடிப்போய் அவர்கூட வொர்க் பண்ணணும்னு ஆசைப்படுறேன். படம் வெளியான பிறகு பாருங்க, நிறைய பேர் அடையாளம் காணப்படுவாங்க!”