
சுஜிதா சென்
சில படங்களே நடித்தாலும் பேர் சொல்லுகிற மாதிரி கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடிப்பவர் நித்யா மேனன். ஒரே ஒருவர் நடிக்கும் `பிராணா’ படத்துக்காக தயாராகிக்கொண்டிருக்கிறார்.

“உங்களுக்கான கதைகளை எப்படித் தேர்ந்தெடுக்குறீங்க?”
“எனக்கு நல்ல கதை அமையுறது இயல்பாகவே நடந்துடுது. அதுக்காக மெனக்கெடறது இல்லை. கதை எனக்குப் பிடிச்சிருந்ததுனா கேமியோ ரோல் பண்றதுக்குக்கூடத் தயங்க மாட்டேன். எனக்குப் படத்துல முக்கியத்துவம் வேணும்னு எதிர்பார்க்க மாட்டேன். முக்கியமான கதைகள்ல நானும் ஒரு அங்கமா இருக்கணும்னு நினைப்பேன். நிச்சயமாகப் பெண்களை இழிவு படுத்துற கதாபாத்திரங்களில் நடிக்க மாட்டேன்.”
“லிவிங் டுகெதர் தொடங்கி, லெஸ்பியன் கதாபாத்திரம் வரை நடிச்சிருக்கீங்க... இந்த மாதிரியான படங்கள்ல நடிக்கும்போது வருகிற விமர்சனங்களை எப்படி எதிர்கொள்றீங்க?”
“விமர்சனங்களையும் பாராட்டுகளையும் நான் தெரிஞ்சுக்க விரும்பறதில்லை. அதனாலதான் சமூக வலைத்தளங்கள்ல நான் தலைகாட்டுறது இல்லை. நாம நிலையா ஒரு இலக்கை நோக்கிப் போய்க்கிட்டு இருக்கும்போது, விமர்சனங்கள் நம்மை ரொம்ப டிஸ்டர்ப் பண்ணும்.”

“ `பிராணா’ என்ன மாதிரி படம்?”
“இந்தப் படத்தில ஒரேயொரு கதாபாத்திரம்தான். இதுல நான் ஒரு நாவல் எழுத்தாளர். த்ரில்லர் ஜானர்ல எடுக்கப்பட்டிருக்கிற இந்தியாவின் முதல் சிங்கிள் ஆக்டர் படம் இது. ‘ஓகே கண்மணி’ படத்துக்குப் பிறகு பி.சி.ஸ்ரீராம் சாருடன் மறுபடியும் வொர்க் பண்ணப்போறேன். இதுக்கான சவுண்ட் டிசைனிங் ரசூல் பூக்குட்டி சார். முதல் முறையா பின்னணி இசை மற்றும் வசனம் ரெண்டுமே லைவ் ரெக்கார்டிங்ல பண்றாங்க. தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய நான்கு மொழிகளில் படம் வெளியாகும்.”
“ஸ்ரீரெட்டி மாதிரியான நடிகைகள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமைகளைப் பற்றி ஓப்பனாப் பேசுறாங்க. இதைப்பற்றிய உங்கள் பார்வை என்ன?”
“எல்லாத் துறைகளிலும் பெண்களுக்கான பாதுகாப்பு கேள்விக்குறியாத்தான் இருக்கு. சினிமா துறையை மட்டும் பூதாகரப்படுத்திக் காட்டக்கூடாது. சினிமா அந்த அளவுக்கு மோசமான துறை கிடையாது. சமூகத்தில பெண்கள் எந்த மாதிரியான பிரச்னைகளைச் சந்திக்கிறாங்களோ, அதே பிரச்னைகளைத்தான் சினிமா துறையிலயும் சந்திக்கிறாங்க.”

“இயக்குநரா ஆகணும்னு விருப்பப்பட்டீங்களே?”
“ இப்போதைக்கு நடிப்புல அதிகம் கவனம் செலுத்தணும்னு நினைக்கிறேன். நடிப்பில ரசிகர்களுக்கு இன்னும் என்னுடைய பெஸ்ட்டைக் கொடுக்கலை. ஒரு நடிகையா முழுமையா சாதிச்சதுக்குப் பிறகுதான் இயக்குநர் ஆகுறதைப் பற்றி யோசிக்கணும். உண்மைக் கதைகளை மையமா வச்சு படம் பண்ணணும்னு ஆசை இருக்கு. நிச்சயமாப் பண்ணுவேன்.”