
விகடன் நிருபர்களுக்கு மட்டுமேயான பிரத்யேக பிரஸ்மீட் இது. #VikatanPressMeetபடம்: கே.ராஜசேகரன்

“திருட்டு டிவிடி ஒழியணும்னு நிறைய விஷயங்களை முன்னெடுக்குறீங்க. ஆனால், தமிழ் சினிமாவுல நிறைய படங்கள் காப்பியடிக்கப்பட்ட படங்களா வருதே, அதன்மேல உங்களுக்கு அக்கறை இல்லையா, இல்லை கண்டுக்காம விட்டுடறீங்களா?”
- கே.ஜி.மணிகண்டன்
“அதுதான் காலகாலமா இருக்கே! இருக்கிறதே பத்து விதமான கதைகள்தான். சிலபேர் அதை இன்ஸ்பிரேஷன்னு சொல்வாங்க. சிலபேர் ரீமேக்னு சொல்வாங்க. சிலர் அதை நான் காப்பியே அடிக்கலைனு சொல்வாங்க. ஆனா, இன்ஸ்பயர் ஆகி, அதுல இருந்து ஒரு நல்ல விஷயத்தைப் பயன்படுத்துறது நல்லதுதான். பாலிவுட்ல எல்லாம் கொரியன் படங்களை முறைப்படி ரீமேக் ரைட்ஸ் வாங்கிப் பண்றாங்க. தெலுங்குல பண்றாங்க. காப்பி அடிக்கிறதைத் தடுக்க முடியாது. ஆனா, ரைட்ஸ் வாங்கி ரீமேக் பண்ணலாம்!”

* “நடிகைகள் அரசியலுக்கு வந்தா, ஏதோ ஒரு கட்சியில் சேர்ந்து படிப்படியாக வர்றாங்க. நடிகர்கள் அரசியலுக்கு வரும்போதே தலைவராகவே வர என்ன காரணம்?”
- குணவதி
“நடிகைகள் அரசியலுக்கு வர்றதே குறைவுதான். அரசியலுக்கு வந்த, வர நினைக்கிற பல பெண்களுக்கு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெரிய இன்ஸ்பிரேஷன். இப்போதைக்கு அரசியலில் வரும் பெண்களோட எண்ணிக்கையே குறைவுதான். அதனால, முதல்ல நிறைய பெண்கள் அரசியலுக்கு வரணும். பிரச்னைகளைப் பத்தியெல்லாம் பேசிக்கிட்டே இருக்காம, பெண்கள் களத்துல இறங்க ஆரம்பிக்கணும்.”
“ ‘அவன் இவன்’ படத்தில் நடிச்சதுக்குப் பிறகு இன்னும்கூட உங்களுக்கு சில பாதிப்புகள் இருக்குன்னு கேள்விப்பட்டோம். அந்த அனுபவத்தைப் பற்றியும், அந்தப் படத்துக்கு சரியான வரவேற்பு கிடைக்காததை எப்படி எடுத்துக்கிட்டீங்கன்னும் சொல்லுங்க...”
- கார்க்கி பவா
“அந்தப் படம் சரியா போகலைனு சொல்ல முடியாது. ‘அவன் இவனு’க்கு இருந்த எதிர்பார்ப்புகள் அதிகம். அதனால் அப்படித் தோணலாம். என் வாழ்நாள் முழுக்க பாலா சாரை மறக்க முடியாது. அந்தப் படத்துக்காக கண்ணுல லென்ஸ் மாட்டிக்கிட்டு நடிச்சேன். அதனால் ‘மைக்ரேன்’ தலைவலி வந்தது. அந்தத் தலைவலி எனக்கு வந்ததில இருந்து, என் பக்கத்துலேயே உட்கார்ந்திருப்பார் பாலா சார். இப்பவும் சில சமயம் அந்த வலி வரும். அப்போ என்னால எந்த வேலையும் பார்க்க முடியாது. தலைவலி வந்தா எவ்ளோ எரிச்சலா இருக்கும்னு உங்களுக்கே தெரியும். கதவைச் சாத்திட்டு, ரூம்ல தனியா இருந்திடுவேன். யாரையும் பக்கத்துலகூட வர விடமாட்டேன்.”

“சரத்குமாரிடம் உங்களுக்குப் பிடித்த விஷயம் எது, ஏன்?”
- வெ.வித்யா காயத்ரி
“அவர் 90-களிலேயே ஷாருக்கான் மாதிரி வாழ்ந்தவர். நானும், என் அண்ணனும் வியந்து பார்த்த நபர். அவர்கிட்ட ரொம்பப் பிடிச்ச விஷயம், அவரோட ஃபிட்னெஸ்தான். அதைத் தாண்டி, அவர்கிட்ட பிடிச்ச இன்னொரு விஷயம், அவர் வரலட்சுமியோட அப்பாங்கிறது!”

“எந்தெந்த இயக்குநர்களோட பணிபுரிய ஆசைப்படுறீங்க, அதுக்கான காரணங்கள் என்ன?”
- முகில் தங்கம்
“இதுவரை வொர்க் பண்ண எல்லா இயக்குநர்களோடும் படம் பண்ணணும். பாலா அண்ணன், லிங்குசாமி, ‘இரும்புத்திரை’ மித்ரன், மிஷ்கின்... இன்னும் பலர். ஆனா, ‘திமிரு’ இயக்குநரோட படத்துல கண்டிப்பா மறுபடியும் வொர்க் பண்ண மாட்டேன். அவருக்குனு ஒரு கரியர் இருக்கு. அதனால, உடன்பாடு இல்லைங்கிறதை மட்டும் இப்போ சொல்லிக்கிறேன். சுந்தர்.சி-கூட வருடத்துக்கு ஒரு படம் பண்ணா ஹெல்த் நல்லா இருக்கும். அவரோட படம் அவ்ளோ ஜாலியா இருக்கும். மிஷ்கின் ‘துப்பறிவளான்-2’ படத்துக்கான விஷயங்களைச் சொல்லும்போது ரொம்ப எக்ஸைட்டிங்கா இருந்துச்சு. படத்துலயும் அது வெளிப்பட்டது. அதுனால அவர்கூடயும் பண்ணணும். பாலா அண்ணன் படத்துல நடிச்சா, நடிகனா எனக்கு நல்ல பெயர் கிடைக்கும். லிங்குசாமியை ஏன் சொல்றேன்னா, நடிகர் - இயக்குநருக்குமான கெமிஸ்ட்ரி இவர்கிட்ட வொர்க் அவுட் ஆகும். எப்பவுமே ஹீரோ-ஹீரோயின் கெமிஸ்ட்ரியைப் பத்திப் பேசுவாங்க, அதைவிட இது ரொம்ப முக்கியம். சுசீந்திரன் என்னை அப்படியே ஆப்போசிட்டா காட்டின இயக்குநர். அவரையும் ரொம்பப் பிடிக்கும். ஏன்னா, ‘முதல் காட்சியிலேயே ஹீரோவை அறைவாங்க; அவன் மயங்கி விழுந்திடுவான்’னு அவர் கதை சொன்னப்போ, எல்லோரும் ‘இந்தப் படம் ஓடாது’னு சொன்னங்க. எங்க வீட்டிலகூட இந்தப் படம் நிச்சயம் ஃபெயிலியர் ஆகும்னு சொன்னாங்க. ஆனா, அந்தக் காட்சியைப் படமா பார்க்கும்போது... ஹாட்ஸ் ஆஃப் சுசி சார். அதேமாதிரிதான், திரு. திரு என்னோட க்ளோஸ் ஃப்ரென்ட்ங்கிறதால படம் பண்ணலை. நல்ல கதையோட வந்தாதான், நான் படம் பண்ணுவேன். அதி திருவுக்கும் தெரியும். இன்னைக்கு நான் ஏன் தைரியமா மித்ரனோட இன்னொரு படம் பன்ணுவேன்னு சொல்றேன்னா, ‘இரும்புத்திரை’ படத்தைப் பார்த்தபிறகு வந்த நம்பிக்கைதான்!”

“கமல் கட்சி ஆரம்பிச்சுட்டாரு, ரஜினி ஆரம்பிக்கப் போறாரு. இவங்க ரெண்டுபேரும் அரசியலுக்கு வர்றதை ஆதரிக்கிறீங்களா? நீங்க கட்சி ஆரம்பிச்சதுக்குப் பிறகு அவங்க ரெண்டுபேரையும் எதிர்த்துப் போட்டியிடுவிங்களா?”
- சக்தி தமிழ்செல்வன்
“நிச்சயமா ஆதரிக்கிறேன். அதுவும், ரஜினி சார்லாம் ரொம்ப லேட்டா வந்திருக்கார். பல வருடமா நாங்க அவரோட அரசியல் வருகையை எதிர்பார்த்துக் காத்திருந்தோம். ரொம்ப முன்னாடியே அவர் வந்திருக்கணும். கமல் சார் மாதிரி தைரியமான மனிதரை நீங்கள் பார்க்கவே முடியாது. இவங்க ரெண்டுபேரோட அரசியல் வருகையும் நிச்சயம் வரவேற்கக்கூடியது.
உங்க ரெண்டாவது கேள்விக்குப் பதில் சொல்ல இன்னும் டைம் இருக்கு. கமல் சார் கட்சி ஆரம்பிச்சு அவரோட பயணத்தைத் தொடங்கிட்டாரு. ரஜினி சார் இன்னும் அதிகாரபூர்வமாக் கட்சி ஆரம்பிக்கலை, அறிவிப்பு மட்டும் கொடுத்திருக்கார். அவங்களை எதிர்த்துத் தேர்தல்ல நிற்கிறேனா, இல்லையானு தெரியாது. தேர்தல் அறிவிப்பு வந்ததுக்கு அப்புறம் இதைப் பத்தி தெளிவா சொல்றேன்.”
“டைரக்டர் ஆசை என்னாச்சு?”
- ம.கா.செந்தில்குமார்
“அதுக்குத்தான் சினிமாவுக்கே வந்தேன். ஆனா, அதைத் தவிர எல்லாமே பண்ணிக்கிட்டு இருக்கேன், என்ன கொடுமை பார்த்தீங்களா?”

இவர்களிடம் பிடிக்காத விஷயம் :
சிம்பு : “மல்டி டேலன்டட் ஆர்ட்டிஸ்ட்.அவருக்கான நேரம் இப்போ வந்துடுச்சுனு நினைக்கிறேன். எல்லா ஆர்ட்டிஸ்டுக்கும் ஏற்ற இறக்கம் வரும். சிம்புவைப் பார்க்கும்போது, ‘இவரெல்லாம் எங்கேயோ இருக்கவேண்டியவர், இப்படி இருக்காரே’னு தோணும்”
அன்புச்செழியன் : “இவர் ஒரு ஃபைனான்சியர். இன்ட்ரஸ்ட் ரேட்டை மாத்திக்கலாம். எனக்கும் அவருக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனா, சினிமாவுல இருக்கிற சிலரை இவர் அணுகுற விதம் பிரச்னையா இருக்கு. அதை இவர் மாத்திக்கிட்டா, நல்லா இருக்க்கும்!”
(இன்னும் சிலரிடம் பிடிக்காத விஷயங்களை அடுத்த வாரமும் சொல்கிறார்)
அடுத்த வாரம்...
* “தமிழ் சினிமாவுல எம்.ஜி.ஆர் - சிவாஜி, ரஜினி - கமல், விஜய் - அஜித், சிம்பு - தனுஷ் காம்போ முடிஞ்சு இப்போ விஜய் சேதுபதி - சிவகார்த்திகேயன் வரை... வந்திருக்கு. இந்த லிஸ்ட்ல விஷாலுக்கு இடம் இல்லாததை எப்படிப் பார்க்குறீங்க?”
* “டபுள் ஹீரோ சப்ஜெக்ட்ல நடிக்கிறதா இருந்தா, யார்கூட நடிக்க விருப்பம்?”