பேட்டி - கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

“குரல் என் ஆயுதம்!”

“குரல் என் ஆயுதம்!”
பிரீமியம் ஸ்டோரி
News
“குரல் என் ஆயுதம்!”

வெ.நீலகண்டன் - படங்கள்: அ.குருஸ்தனம்

 “நாட்டுப்புறப் பாட்டும் ஒரு போராட்ட வடிவம்தான். மக்களோட சோகம், மகிழ்ச்சி, கொண்டாட்டம் மட்டுமில்லாம, ஆதிக்கத்துக்கு எதிரான குரலாவும் இருந்துச்சு நாட்டுப்புற இசை. அந்தக் காலத்துல கங்காணி கொடுமைகளைப் பாடுவாங்க. இப்போ கார்ப்பரேட் கொடுமைகளைப் பாடுறோம். என்னைப் பொறுத்தவரை, குரல் ஓர் ஆயுதம். பாடல் ஒரு போராட்ட வடிவம்” - சுருள்சுருளான முடிகள் தலையசைப்புக்கேற்ப நர்த்தனமாட, உணர்வுபூர்வமாகப் பேசுகிறார் `புதுவைச் சித்தன்’ ஜெயமூர்த்தி.

இடதுசாரி மேடைகள், தலித்திய மேடைகள், தமிழ்த் தேசிய மேடைகளில் உக்கிரமாக  ஒலிக்கும் குரல் ஜெயமூர்த்தியினுடையது.  `மக்கள் இசை’ என்ற பெயரில் நாட்டுப்புற இசைக்குழு நடத்துகிறார்.  இப்போது, பரபரப்பான  சினிமா பின்னணிப் பாடகரும்கூட. `கில்லி’ படத்தின் தீம் மியூசிக்கில்  தொடங்கிய பயணம், `வருத்தப்படாத வாலிபர் சங்க’த்தில் உச்சம் பெற்று `மதுரவீரன்’ தாண்டி நீள்கிறது. 

``கே.ஏ.குணசேகரன் அண்ணன்தான் எனக்கு முகவரி கொடுத்தவர். 12 வருஷங்கள் அவர்கூட இருந்திருக்கேன். காதல், சோகம்னு இலக்கில்லாம திரிஞ்சுக்கிட்டிருந்த என் பாட்டை முறைப்படுத்தி, `பாட்டுங்கிறது வெறும் பொழுதுபோக்குக் கலை இல்லை... சமூக மாற்றத்துக்கான விதை’னு அவர்தான் புரியவெச்சார்.

“குரல் என் ஆயுதம்!”

ரொம்பவும் அடித்தட்டுக் குடும்பத்தில பிறந்தவன் நான். அப்பாவுக்குக் கூலிவேலை. ஏழு பிள்ளைகளைப் பெத்துட்டு, வளர்த்தெடுக்க அவர் பட்ட கஷ்டம் கொஞ்சநஞ்சமில்லை. வேலை செஞ்சதுக்கான கூலியைக்கூட கையில கொடுக்க மாட்டாங்க. கையேந்தவெச்சு விரல் படாம போடுவாங்க. சின்ன வயசுலேயே மனசுக்குள்ள நிறைய காயங்களோடுதான் வளர்ந்தேன்.

அம்மா ரொம்ப நல்லாப் பாடுவாங்க. அவங்ககிட்டயிருந்து என்கிட்ட வந்ததுதான் பாட்டு. பானை, சட்டிகளைத் தட்டிக்கிட்டு ஊருக்குள்ள பாடிக்கிட்டுத் திரிஞ்ச என்னை, ஒரு நண்பர் ஆர்க்கெஸ்ட்ரா குழுவுல சேர்த்துவிட்டார். ஏ.எம்.ராஜா, டி.ஆர்.மகாலிங்கம், பி.பி.சீனிவாஸ், சிதம்பரம் ஜெயராமன் வாய்ஸ்லெல்லாம் பாடுவேன். எல்லாத்தையும் தாண்டி நாட்டுப்புறப் பாடல்கள் மேல தீராத தேடல் இருந்துச்சு. அதுதான் என்னை கே.ஏ.ஜி அண்ணன்கிட்ட கொண்டுபோய் சேர்த்துச்சு. அண்ணனோட `தன்னானே  இசைக்குழு’வுல சேர்ந்து பாடினேன். சின்னப்பொண்ணு அக்கா, காந்தி அண்ணாவி, அழகர்சாமி வாத்தியார், அம்மச்சி அக்கான்னு அந்தக் குழுவே அவ்வளவு உயிர்ப்பா இருக்கும்.

கலை இலக்கியப் பெருமன்ற மேடைகள் மட்டுமில்லாம, கோயில் திருவிழாக்களுக்கெல்லாம் பாடப் போவோம். பஸ்ஸைவிட்டு இறங்கி, மூட்டை முடிச்சுகளையும் தவிலையும் தலையில சுமந்துக்கிட்டு நாங்க போற கோலமே வித்தியாசமா இருக்கும். எல்லாம் கருத்த உருவங்கள் வேற... `இவனுங்கள்லாம் வந்து என்னத்தைப் பாடப்போறானுங்க’னு எல்லாரும் கேள்வியோடவும் கேலியோடவும் பார்ப்பாங்க. மேடையேறி பாடத் தொடங்கின உடனே, கே.ஏ.ஜி அண்ணன் அந்தச் சூழலையே அனலாக்கிடுவார்.

22 வயசுல பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் பாரதியார் பல்கலைக்கூடத்துல இசைப்பட்டப் படிப்புல சேந்தேன். அங்கேதான் என் வாழ்க்கை மாறுச்சு. புரூணாவை மட்டும் அங்கே சந்திக்காமப்போயிருந்தா, இன்னிக்கும் ஒரு ஆர்க்கெஸ்ட்ரா பாடகனாத்தான் இருந்திருப்பேன். இப்படியொரு சுயம் கிடைச்சிருக்காது” - நெகிழ்ந்து இளகும் ஜெயமூர்த்தியை ஆறுதலாகக் கரம் பற்றிக்கொள்கிறார் புரூணா தெல்ரோக்.

புரூணா, இப்போது ஜெயமூர்த்தி நடத்தும் மக்களிசைக் குழுவின் பிரதான பாடகி. வயலின் இசையும் கற்றிருக்கிறார். கல்லூரி ராகிங்கில் ஆரம்பித்த உறவு நட்பாகி, காதலில் நிறைந்திருக்கிறது. அன்புக்குச் சாட்சிகளாக கெவின், ஷெரின் என இரண்டு பிள்ளைகள்.

“குரல் என் ஆயுதம்!”

``அப்போ நான் ரெண்டாவது வருஷம் படிச்சேன். இரவெல்லாம் கச்சேரி இருக்கும். பகல்ல கல்லூரி. புரூணா அப்போதான் முதல் வருடம் சேர்ந்திருந்தா. ஜாலியா ராகிங் பண்ணுவோம். ஒருநாள், அவளை மறிச்சு, `ஒரு பாட்டு பாடு’னு சொன்னேன். `தோட்டுக்கடை ஓரத்திலே...’னு நாட்டுப்புறப் பாட்டுப் பாடினா. அப்படியே கிராமத்துக் குரல். பளீர்னு மனசுக்குள்ள ஒரு வெளிச்சம். `இந்தப் பொண்ணைச் சேர்த்து நாமளே ஒரு இசைக்குழு ஆரம்பிக்கலாமே’னு தோணுச்சு. நாகஸ்வரம், தவில்னு எல்லாமே எங்க மாணவர்கள்தான். `தொடுவானம்’னு பேரு வெச்சோம். கே.ஏ.ஜி அண்ணன்தான் ஆரம்பிச்சுவெச்சார்.

அந்த இசைப் பயணம்தான், என் வாழ்க்கையைத் தீர்மானிச்சுச்சு. புரூணாவும் நானும் எங்களுக்குள்ள இருந்த காதலை உணர்ந்தோம். ஆனாலும், வாழ்க்கையில ஒரு படி முன்னே நகராம இதைப் பற்றிப் பேச வேண்டாம்னு முடிவுசெஞ்சோம். ஆல்பங்கள் போட ஆரம்பிச்சோம். புரூணா ஒரு ஆசிரியையா இருந்து என்னை வழிநடத்தினா. ஒருகட்டத்துக்கு மேல வீட்டுல எங்க காதலைச் சொன்னோம். பெரிய எதிர்ப்புகள் இல்லாம திருமணம் முடிஞ்சது”

ஜெயமூர்த்தியை திரைக்குப் பக்கமாகக் கொண்டுவந்தவர்கள் யுகபாரதியும் உமாபதியும்தான். லீனா மணிமேகலை இயக்கிய `பறை’ என்ற குறும்படத்தில் யுகபாரதி எழுதிய பாடலைப் பாடினார் ஜெயமூர்த்தி. யுகபாரதி மூலமாகவே இசையமைப்பாளர் வித்யாசாகரின் அறிமுகமும் கிடைத்தது. `கபடி... கபடி’ தீம்சாங் பாடும் வாய்ப்பு அமைந்தது. இப்போது 75 படங்களுக்குமேல் பாடிவிட்டார். `வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படம் கவனம் குவித்தது. இப்போது பதினைந்துக்கும் மேற்பட்ட படங்களுக்குப் பாடுகிறார்.  `தகப்பன்சாமி’, `வணக்கம்’ என இரண்டு வீடியோ ஆல்பங்கள் விரைவில் வெளியாகவிருக்கின்றன.

``அப்பாவும் அம்மாவும் கடைசிவரைக்கும் சின்னதா ஒரு குடிசைக்குள்ள இருந்தே வாழ்க்கையை முடிச்சுட்டாங்க. அப்பா இருக்கிற வரைக்கும் ஒரு சைக்கிள்கூட என்னால சொந்தமா வாங்க முடியலை. இப்போ புதுச்சேரியில ஒரு வீடு கட்டிட்டேன். இதோ, கார் வாங்கிட்டேன். குனிஞ்சு குனிஞ்சே ஒடிஞ்சுபோன அப்பாவை நிமிர்ந்து உட்காரவெச்சு இந்த காரை ஓட்டணும்னு ஆசை. ஆனா, அவர் இல்லை. வாழ்க்கை இப்படித்தான் நம்மை ஏமாத்திக்கிட்டே இருக்கு” ஜெயமூர்த்தியிடமிருந்து குமுறலாக வரும் வார்த்தைகளின் உணர்ச்சியை, புன்னகை கட்டுப்படுத்துகிறது.  புரூணா, மீண்டும் அவர் கரம் பற்றி ஆசுவாசப்படுத்துகிறார்.