
கார்த்தி
மனித உறவுகளின் சிக்கல்களை, தவறின் விளிம்பில் வாழ்ந்து, பின்பு திருந்தும் சூழ்நிலைக் கைதிகளை மீண்டுமொருமுறை பார்வையாளர்களுக்குக் காட்சிப்படுத்தியிருக்கிறார் ஈரான் இயக்குநர் மஜித் மஜிதி.
டீனேஜில் தவறான வழியில் பணம் ஈட்டும் ஆமீர், வாழ்வின் அனைத்துத் துயரங்களையும் அனுபவித்துவிட்டு அடுத்த துன்பத்துக்குத் தயாராகும் அக்கா தாரா. இவர்களின் வாழ்வுச்சூழல், கிடைக்கும் புது உறவுகள் என படம் நெடுக, கதாபாத்திரங்களின் வலிகளை முன்வைத்து நகர்கிறது ‘ பியாண்ட் தி கிளவுட்ஸ்’.
‘சில்ரன் ஆஃப் ஹெவன்’, ‘தி கலர் ஆஃப் பாரடைஸ்’ என தன் திரை வாழ்க்கை முழுவதிலும் மனித மனங்களின் ஆற்றாமைகளையும், வலிகளையும், புறக்கணிப்பையும் சொல்லி வந்த மஜித் மஜிதி , முதல் முறையாக இந்திய சினிமாவில் தடம் பதித்திருக்கிறார்.

பாலிவுட்டில் பணக்கார மும்பைதான் எப்போதும் கதைக்களமாக இருக்கும். ‘பியாண்ட் தி கிளவுட்ஸ்’ படத்தில் வரும் ஆரம்பக் காட்சியில் நாயகன் ஆமீரும், அவனது நண்பனும் போதைப் பொருளைக் கடத்திக்கொண்டு மும்பை பெருநகரின் பாலங்களில் வண்டி ஓட்டிச் செல்வர். அந்த ஒரு காட்சியில் மட்டுமே பணக்கார மும்பை சற்று எட்டிப்பார்க்கும். இத்தகைய பாலங்களுக்கு கீழ் இருக்கும் மனிதர்களின் வாழ்வியலைப் பதிவு செய்வதில் கவனம் செலுத்தியிருக்கிறது படம்.
சேரி வாழ்க்கை, சலவைத் தொழிலாளிகள் கூடாரம், பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படும் சிறுமிகள், போதை மருந்துகள் என, படம் நெடுகிலும் வேறொரு மும்பையை அதன் உண்மையான நிறத்தில் பதிவு செய்திருக்கிறது அனில் மேஹ்தாவின் கேமரா.
தன்னைப் பலவந்தமாக அடைய முயற்சிக்கும் ஆக்ஷியைத் தற்காப்புக்காக அடிக்கிறார் தாரா. கொலை முயற்சி வழக்கில் தாரா சிறையில் அடைக்கப்படுகிறார். ஆக்ஷி சுயநினைவுக்குத் திரும்பி, பேசினால் மட்டுமே, தாராவால் வெளியே வர முடியும். ஆக்ஷியைப் பார்த்துக்கொள்வதோடு, அவனது தமிழ்க் குடும்பத்தையும் கவனித்துக்கொள்ள வேண்டிய பெரும்பொறுப்பு ஆமிருக்கு வருகிறது.
ஆக்ஷியின் மூத்த மகளை ஒரு சந்தோஷத் தருணத்தில் புகைப்படம் எடுக்கிறான் ஆமீர். அச்சிறுமியை விற்க முடிவு செய்து, அதற்கு முன்பணமும் வாங்குகிறான். பின்னர் மனம் மாறி அந்தச் சிறுமியை தன் குடும்பத்தில் ஒருத்தியாய்ப் பாவிக்கத் தொடங்குகிறான். இந்தக் காட்சிகள் முழுவதும் ஒரு வள்ளத்தில், ரஹ்மானின் இசையுடன் பயணிக்கின்றன.
ஈரானிய இயக்குநர்; இந்தி நடிகர்கள்; தமிழ் பேசும் ஆக்ஷியின் அம்மா கதாபாத்திரத்தில் 72 வயது கன்னட நடிகை ஷாரதா; ஆமீரின் அக்காவாக மாளவிகா மோஹனன் என்ற மலையாள நடிகை என மொழிகள் கடந்து ஒரு படைப்பு அது பேசும் விஷயத்தைப் பார்வையாளனுக்குக் கடத்துகிறது. அந்த விதத்தில் ஒரு படைப்பாளியாக மஜித் மஜிதி ஜெயித்துவிட்டார். அந்த இரு தமிழ்க் குழந்தைகளும், தமிழ் முகம் இல்லை என்பது மட்டும் குறை.
தன் அக்காவைப் பற்றிய உண்மை தெரியும் போது அழுவது, ஆக்ஷியின் செயற்கை சுவாசக்கருவியை எடுத்து வைத்துக்கொண்டு கத்தியால் மிரட்டுவது, நிழல் நடனம் என தன் முதல் படத்திலேயே அப்ளாஸ் அள்ளுகிறார், புதுமுக நடிகரும் ஷாகித் கபூரின் தம்பியுமான இஷான் கட்டர்.
நிலாவை முதன் முதலாகப் பார்க்க விரும்பும் சிறையில் இருக்கும் சிறுவன். அவனது ஆசையை நிறைவேற்ற லஞ்சமாகத் தன் மோதிரத்தைப் பெண் காவலாளியிடம் தரும் தாரா, சிறிய யோசனைக்குப் பின், வாங்கிய மோதிரத்தை அங்கேயே வைத்துவிட்டுச் செல்லும் காவலர் என்று பல காட்சிகள் மனிதர்களுள் இன்னும் மிச்சமிருக்கும் நேசத்தைச் சுமக்கின்றன.
படத்தில் குறைகளே இல்லையா என்றால், இருக்கின்றனதான். ஆனால், அவற்றையெல்லாம் கடந்து ‘பியாண்ட் தி கிளவுட்ஸ்’ ஓர் அழகியல் உணர்வு அனுபவம்.