பேட்டி - கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

சின்ன கல்லு...பெத்த லாபம்!

சின்ன கல்லு...பெத்த லாபம்!
பிரீமியம் ஸ்டோரி
News
சின்ன கல்லு...பெத்த லாபம்!

கார்த்தி

மார்வெல் நிறுவனத்தின் பத்தாண்டு பில்டப்களுக்குப் பிறகு ஒருவழியாக மெகா வில்லன் தேனோஸ் வந்துவிட்டார்.

இதுவரை இந்தியாவில் வெளியாகி முதல் நாளிலேயே அதிக வசூலை குவித்த ஹாலிவுட் படம் என்ற சாதனையைப் படைத்திருக்கிறது ‘அவெஞ்சர் - இன்ஃபினிட்டி வார்’ திரைப்படம்.   ஒரே நாளில் 30 கோடியாம்.

மற்ற வில்லன்களை எல்லாம் அழிக்க ஒன்றிரண்டு சூப்பர் ஹீரோக்கள் போதும், ஆனால் தேனோஸை அழிக்க  அயர்ன் மேன், ஸ்பைடர் மேன், பிளாக் பேந்தர், டாக்டர் ஸ்டிரேஞ்ச், பிளாக் விடோ, கமோரா, நெபுலா, ஃபால்கன், வார் மெசின், வின்ட்டர் சோல்ஜர், ஹல்க்,கேப்டன் அமெரிக்கா என    ஒரு சூப்பர் ஹீரோ படையே வேண்டும்.தேனோஸ் அண்ணாச்சி அவ்வளவு பவர்ஃபுல்!

சின்ன கல்லு...பெத்த லாபம்!

ஆறு `இன்ஃபினிட்டி கற்கள்’ கிடைத்தால், உலகை ஒரு நொடியில் அழித்துவிடக்கூடிய வல்லமை கொண்டவன் தேனோஸ். ஒவ்வொரு கல்லும் ஒவ்வொரு உலகில் இருக்கிறது. அதையெல்லாம் பாதுகாத்து தேனோஸிடமிருந்து உலகைக் காக்கும் பொறுப்பை சூப்பர்ஹீரோ படை ஏற்றுக்கொள்கிறது. உயிரைப் பணயம் வைத்து தேனோஸை விரட்டியடித்து உலகைக் காப்பாற்றுவார்கள் என எதிர்பார்த்தால், அங்குதான் இருக்கிறது ட்விஸ்ட்!

பத்தாண்டுகளாகத் தன் ஒவ்வொரு படத்திலும் தேனோஸ் பற்றி சின்னதும் பெரியதுமாக விஷயங்களைக் கொடுத்து  அவனைப்பற்றிய மெகா பிம்பத்தை உருவாக்கி வைத்திருந்தது மார்வெல். அந்த எதிர்பார்ப்போடு திரையங்கிற்கு வரும் ரசிகனை தேனோஸ் கொஞ்சமும் ஏமாற்றவில்லை. கிராஃபிக்ஸ் செய்யப்பட்ட உடலாக இருந்தாலும், தேனோஸாக வரும் ஜோஸ் ப்ரோலின் குரலும் நடிப்பும் கம்பீரமான உடல்மொழியும் அவ்வளவு பயமுறுத்துகிறது.

 வில்லனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டிருக்கும் சூப்பர்ஹீரோ சினிமாக்களில் இது மிக முக்கியமானது. பேட்மேனின் ஜோக்கர் கிளாஸ் என்றால், தேனோஸ் நிச்சயம் பக்கா மாஸ்!

“போர் என்றால் சூப்பர் ஹீரோக்கள் கூட சாகத்தான் செய்வார்கள்” என முதல் காட்சியில் இருந்தே பீதி கிளப்பிவிடுகிறார்கள். அடுத்த விக்கெட் யாராக இருக்கும் என்னும் பதற்றத்திலேயே டாப்கியரில் பறக்கிறது படம்.

சின்ன கல்லு...பெத்த லாபம்!

ஏராளமான சூப்பர் ஹீரோக்கள், ஒவ்வொருவருக்கும் தனித்தனி ரசிகர் பட்டாளம். எல்லோரையுமே திருப்திப்படுத்தவேண்டும். இன்னொரு பக்கம் ஐந்து உலகங்களில் நடக்கும் கதைகளை சரியான வரிசையில் கோக்க வேண்டும். பார்வையாளர்கள் கதை புரியாமல் தூங்கிவிடக்கூடாது. காட்சிக்கு காட்சி அதிரவிட வேண்டும். எல்லா சூப்பர் ஹீரோக்களுக்கும் சமமான இடம் கொடுக்கவேண்டும். படமும் நீ.....ண்ண்ண்டுவிடக்கூடாது. இதற்கெல்லாம் மேல் முந்தைய படங்கள் பார்க்காதவர்களுக்கும் படம் பிடிக்கவேண்டும்!

இந்த சிக்கலான திரைக்கதை சவாலை சிறப்பாக எதிர்கொண்டிருக்கிறார்கள் கிறிஸ்டோபர் மார்க்கஸும், ஸ்டீபன் மெக்ஃப்லீயும். படத்தை  காமெடி, ஆக்‌ஷன் என அதிரடியாய் இயககியிருக்கிறார்கள் ருஸ்ஸோ  சகோதரர்கள்.

இது பாகுபலி முதல் பாகம் மாதிரிதான். இதைவிட பெரிய அதிரடி இரண்டாம்பாகத்தில் இருக்கிறது என்கிறார்கள். படத்தின் அடுத்த பாகம் 2019 மே மாதத்தில்  வெளியாக இருக்கிறது. 

வர்லாம் வர்லாம் வா...!

* படத்தின் முதல் டிரெய்லரை, முதல் 24 மணி நேரத்தில் யூட்யூபில் பார்த்தவர்களின் எண்ணிக்கை - 23 கோடி.

* ஸ்பைடர்மேனாக வரும் 22 வயது டாம் ஹோலாண்டு படு சுட்டி. ‘ஸ்பைடர்மேன் ஹோம்கம்மிங்’ படத்தின் காட்சிகளை டாம் வெளியே சொன்னதால், இந்தமுறை டாமுக்கு முழு ஸ்கிரிப்ட்டையும் படிக்கக்கூடத் தரவில்லையாம்.

* படத்தின் பட்ஜெட்டை (2700 கோடி ரூபாய்) விட, இரண்டு மடங்கு வசூலை முதல் மூன்று நாட்களில் செய்திருக்கிறார்கள்.

* படத்தின் இரண்டாம் பாகத்துக்கான காட்சிகளையும் பெருமளவு முடித்துவிட்டார்கள். இரண்டு பாகங்களும் முழுக்க முழுக்க ஐமேக்ஸ் கேமராக்களில் ஒளிப்பதிவு செய்திருக்கிறார் டிரென்ட் ஒபலொச்.