
எம்.குணா - படங்கள்: க.பாலாஜி - ஓவியம்: கார்த்திகேயன் மேடி
‘காலா’வின் கலை இயக்குநர் ராமலிங்கம். பா.இரஞ்சித்தோடு `அட்டக்கத்தி’யில் தொடங்கிய இவரின் கூட்டணி ‘மெட்ராஸ்’, ‘கபாலி’ வழி இப்போது `காலா’ வரைக்கும் வந்திருக்கிறது.

கபாலிக்கென மலேசியாவையும் தாய்லாந்தையும் சென்னையிலேயே உருவாக்கிக்காட்டிய வித்தகர், இந்த முறை `காலா’வுக்காகத் தாராவியைப் படைத்திருக்கிறார். ``வாங்க பாஸ், காலா செட்டைப் பார்த்துட்டே பேசுவோம்’’ என்று அன்போடு அழைக்க, ஆவலோடு பூந்தமல்லிக்குக் கிளம்பினோம். 20 ஏக்கரில் விரிந்துகிடந்த பிரமாண்டம் நம்மை மலைக்கச்செய்தது. அச்சு அசலாகத் தாராவியின் தெருக்களையும் வீடுகளையும் உருவாக்கி வைத்திருக்கிறார் ராமலிங்கம்.
``நான் திண்டிவனம் அருகிலுள்ள பேராவூரில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவன். அப்பா தங்கவேலு தெருக்கூத்து கலைஞர். நல்ல கலைஞனாக இருந்தபோதும் அதற்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை. அவர் மனம்வெதும்பி விரக்தியில் பாடும்போது நான் தூங்காமல் அருகில் அமர்ந்து கேட்டு ரசிப்பேன். இப்போது நானே அரிதாரம்பூசி, காலில் சலங்கை கட்டி நடித்து வருகிறேன். தெருக்கூத்துக் கலையை வளர்க்கும் பணியில் இறங்கியிருக்கிறேன். இதற்கென்று தனியாக அமைப்பை ஏற்படுத்தி நடத்திவருகிறேன். கிராம வாழ்க்கை, தெருக்கூத்துக் கலை, அரிதாரவேஷம் என்று புறப்பட்ட நான் இப்போது சினிமாவில் கலை இயக்குனராகி இருக்கிறேன். ரஞ்சித் சாரும் என்னைப்போலவே இயற்கையான சூழலில் வளர்ந்து சினிமாவுக்கு வந்தவர். என்னோடு ஒரே வகுப்பில் படித்தவர். அப்போதே நிறைய விவாதங்களில் ஈடுபடுவார். அப்படி உருவானதுதான் எங்கள் நட்பு”

“ ‘காலா’ படத்துக்காக சென்னையில் தாராவி செட் போடும் திட்டம் எப்படி உருவானது?”
“ரஜினி சாரை வைத்து தாராவியில் ஷூட்டிங் நடத்துவது சிரமம். அதையும்மீறி மும்பையில் உள்ள தாராவியில் ரஜினி சார் நடிக்கும் முக்கியமான காட்சிகளைப் படமாக்கினார் ரஞ்சித். “ ‘சென்னையில் தாராவி செட் போடும் வேலையை ராமலிங்கம்தான் செய்யவேண்டும்’ என்று ரஜினி சார் பிடிவாதமாகச் சொன்னார். என்னைவிட அவர்தான் உன்மீது அதீத நம்பிக்கை வைத்திருக்கிறார்.” என்று ரஞ்சித் சொன்னபோது நெகிழ்ந்துபோய் விட்டேன்.
இதுவரை நான் மும்பை தாராவிக்குப் போனதே இல்லை. ‘காலா’ படத்துக்காக முதன்முறையாகத் தாராவி சென்றேன். அங்கே உள்ள வீடுகள், சாலைகள், பள்ளிக்கூடங்கள் எல்லாவற்றையும் ஒன்றுவிடாமல் படமெடுத்துக் கொண்டேன். ஓவியமாக வரைவது, உயரம் வரையறுத்துக்கொள்வது, சிலைகளை வடிவமைப்பது... என்று திட்டமிட்டுச் செயல்பட்டோம். ப்ரீபுரொடக்ஷன் வேலை மட்டும் ஒன்றரை மாதமானது. மும்பையில் பயன்படுத்தப்படும் ட்ரான்ஸ்ஃபார்மர், ஒயர் லைட் ஸ்விட்ச், கேபிள் என்று ஒவ்வொன்றையும் நுணுக்கமாகக் கவனித்து அதைப்போலவே இங்கேயும் அமைத்தோம்.
படசெட்டுக்காக பிளைவுட் பொருள்களையே பயன்படுத்தவில்லை. காஸ்ட்லியாகச் சிமெண்ட் ஷீட்களை ஆர்டர் கொடுத்துச் செய்யச் சொன்னோம். ஆந்திரா சென்று கருங்கல் பாறைகளைத் தேர்ந்தெடுத்து, இறக்குமதி செய்து தரைகளில் பதித்தோம். கடந்த 8 மாதமாக 1200 பேர் வேலை பார்த்து உருவாக்கிய செட் இது. 20 ஏக்கர் நிலப்பரப்பில் அமைத்த தாராவி செட்டை சுற்றிப் பாத்த ரஜினிசார் ரொம்பவும் சந்தோஷமாகிவிட்டார். அப்படியே என்னைக் கட்டிப்பிடித்துக் கொண்டார். அதன்பின் தயாரிப்பாளர் தனுஷ்சார், லதாமேடம், ஐஸ்வர்யா மேடம், செளந்தர்யா மேடம் ஆகியோர் சுற்றிப்பார்த்து வியந்துபோய் பாராட்டினார்கள்”

“ ‘காலா’ ட்ரெய்லரில் ரஜினி சண்டை போடும் காட்சி எங்கே எடுக்கப்பட்டது?”
தாராவியில் குடிசைத் தொழில்கள் அதிகம். பானைகள் செய்யும் தொழில் ரொம்பப் பிரபலம். இந்த பானைகள் செய்யுமிடத்தை தாராவியில் `கும்பரோடா’ என்று அழைப்பார்கள். கும்பரோடாவை இங்கேயே உருவாக்கப் புதுச்சேரியில் இருந்து பானைகளைத் தயார்செய்து கொண்டுவந்தோம். இங்கேதான் ரஜினிசார் சண்டைபோடும் க்ளைமாக்ஸ் காட்சி படமாக்கப்பட்டது. 100 கேஸ் சிலிண்டர்கள் வெடித்து சிதறுகிற மாதிரியான ஆபத்தான சண்டைக்காட்சி, டூப் போட்டுக் கொள்ளலாம் என்று முடிவெடுத்திருந்தோம். ஆனால் ரஜினி சார் ‘நானே பண்றேன்’ என அடம்பிடித்து நடித்தார்”
ஆமாரே... ‘செட்டிங்’தான்!