
அய்யனார் ராஜன் - படங்கள்: ப.சரவணகுமார்
ஜூலிக்குப் பெரிதாக அறிமுகம் தேவையில்லை. அபிமானம், ஆதரவு, கரிசனம், கண்டனம், வெறுப்பு, எதிர்ப்பு எனப் பல்வேறு எதிர்வினைகளைக் குறுகிய காலத்தில் சம்பாதித்தவர். இப்போது அனிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் அனிதாவாக நடிக்கிறார்.
“அனிதா டாக்டர் கனவுல இருந்த பொண்ணு. நான் மருத்துவத்தோட தொடர்புடைய செவிலியர் வேலையில இருந்திருக்கேன். நீட் தேர்வுக்கு எதிரா உச்சநீதிமன்றம் வரை போய் அனிதா சட்டப் போராட்டம் நடத்தினாங்க. நானும் ஜல்லிக்கட்டுக்கான போராட்டம் மூலமாத்தான் மக்களுக்கு அறிமுகமானேன். இப்படி எங்க ரெண்டுபேருக்கும் பல ஒற்றுமைகள் இருக்கு.

இந்தப் படத்துல நடிக்கிறதுக்கான வாய்ப்பு வந்தப்ப, ‘நான் அனிதாவா நடிக்கிறது, அனிதா குடும்பத்தாருக்குப் பிடிக்குமா?’ன்னு கேட்டேன். அவங்ககிட்டயே பேச வெச்சாங்க. அவங்களுக்கு நான் நடிக்கறதுல எந்தப் பிரச்னையுமில்லை. ஆனா சிலர் இதிலும் பிரச்னை பண்ணினாங்க. இப்ப வரைக்கும் மிரட்டல்கள் வந்துட்டேதான் இருக்கு. ஜல்லிக்கட்டு நேரத்துலயே மிரட்டல்களைச் சந்திச்சேன். பிறகு ‘பிக்பாஸ்’ ஷோ பார்த்துட்டு மிரட்டினாங்க. அதனால எனக்கு இப்ப மிரட்டல் பழகிப் போச்சு. இதைச் சொன்னா, ‘திமிர் பிடிச்சுப் பேசறா’ன்னு சொல்வாங்க. இந்தப் படம் ரிலீஸான பிறகு இப்ப இருக்கற என்னோட டோட்டல் இமேஜும் மாறும்னு நம்பறேன்” என்று படபடவெனப் பொரிந்து தள்ளினார் ஜூலி.

“உங்கள்மீது இவ்வளவு எதிர்மறை விமர்சனங்கள் வருவதற்கான காரணங்களை யோசிச்சீங்களா?”
“எல்லா ஆசைகளும் இருக்கிற ஒரு மிடில் கிளாஸ் பொண்ணு, தன்னோட முகம் டிவியில வரப்போகுதுன்னு தெரியவந்தா எப்படி ஃபீல் பண்ணுவாளோ, அதே ஃபீல் எனக்கும் இருந்துச்சு.
ஆனால் இருபத்து நாலு மணி நேரம் நடக்கிற நிகழ்வுகளை ஒரு மணி நேரத்துக்குச் சுருக்கித் தர்றப்ப, டெக்னாலஜியை வச்சு என்ன வேணும்னாலும் பண்ணலாம். தமிழ்நாட்டு மக்கள் மத்தியில என் மேல வெறுப்பு விதைக்கப்பட்டதுக்கு இதுதான் காரணம். உள்ளே எவ்வளவோ நல்ல விஷயங்கள் நடந்துச்சு. அதெல்லாம் ஒண்ணும் வெளியில வரலை.


‘பிக்பாஸ்’ முடிச்சு வெளியில வந்த புதுசுல ஏகப்பட்ட சங்கடங்களைச் சந்திச்சேன். ‘இப்படி டிவியில வர்றதுக்குதான் பீச்ல வந்து கத்தினியா?’ன்னு ஒருத்தர் கேட்டார். அழுகையா வந்திடுச்சு. ஓவியாவுக்கும் எனக்கும் பங்காளிச் சண்டை போல நான் போற இடங்கள்ல சிலர் வேணும்ன்னே வந்து ஓவியா பேரைச் சொல்லிக் கத்தி இடைஞ்சல் பண்ணினாங்க. சோஷியல் மீடியாவில் கேக்கவே வேண்டாம். எத்தனை நாள்தான் இதையெல்லாம் நினைச்சு ஃபீல் பண்ணிட்டு இருக்கறது? மனசைத் தேத்திக்கிட்டு எல்லாத்தையும் சகிச்சுக்கப் பழகிட்டேன். காலம் எல்லாத்தையும் மாத்திடும் இல்லையா? ஆங்கரா வாய்ப்பு வந்தது. சினிமா வாய்ப்புகள் வரத் தொடங்கியிருக்கு. ‘நீட்’ தேர்வுக்காக உயிரை விட்ட அனிதா கதையில நடிக்கவே என்னைத் தேர்ந்தெடுத்திருக்காங்களே, ரொம்ப மகிழ்ச்சி!”
“ ‘பிக்பாஸ் சீஸன் 2’ தொடங்கப்போகிறது. அதில் கலந்துகொள்ளப் போகிறவர்களுக்கு ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?”
“ஏங்க, பெரிய பெரிய ஆளுங்க கலந்துக்கப் போறதாப் பேசறாங்க. அவங்களுக்கு நான் என்ன சொல்றது? ஏற்கெனவே ஷோவில் கலந்துக்கிட்டவள்ங்கிற முறையில சொல்லணும்னா, கமல் சார் சொல்வாரே, அதேதான்! ‘ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது.’ எச்சரிக்கையா இருங்க. இல்லாட்டி பேரு நார் நாராக் கிழிஞ்சு நாறிடும். அனுபவத்துல சொல்றேன்.”