
விகடன் நிருபர்களுக்கு மட்டுமேயான பிரத்யேக பிரஸ்மீட் இது. #VikatanPressMeetபடம்: கே.ராஜசேகரன்
“நடிப்பு, நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம், சினிமா பிரச்னைகள்னு நேரம் இல்லாம ஓடிக்கிட்டு இருக்கீங்க.இவ்வளவு பிஸியிலேயும் ஃபிட்னெஸை எப்படி மெயின்டெயின் பண்றீங்க?”
- தார்மிக் லீ
“கடந்த ரெண்டு மாசமா என்னால ஜிம்முக்குப் போக முடியலை. மார்ச் மாதம் ஸ்டிரைக் அறிவிச்சதுல இருந்து இப்போ வரைக்கும் எங்க டீம்ல எல்லோரும் சரியா தூங்குனோமான்னுகூட தெரியலை. நிறைய நேரம் மீட்டிங்கிலேயே போயிடுச்சு. எனக்கு ஷூட்டிங் இருந்தா ஸ்பாட்டுக்கு சைக்கிள்லதான் போவேன். என் வீடு அண்ணா நகர்ல இருக்கு. மீனம்பாக்கத்துல ஷூட்டிங்னாலும் சைக்கிள்லயே போயிடுவேன். இது ஆர்யாவிடமிருந்து நான் கத்துக்கிட்டது. பிஸியா இருந்தாலும் கிடைக்கிற சின்னச் சின்ன கேப்லேயும் வொர்க் அவுட் பண்ணுவேன். ஏன்னா, ஒரு நடிகருக்கு அது ரொம்ப முக்கியம். ஒரு நாளில் 16 மணி நேரம் வொர்க் பண்ணினாலும், கிடைக்கிற அரைமணி நேர கேப்ல வொர்க் அவுட் பண்ணுனா, நல்ல ஃபீல் கொடுக்கும். இப்போ ஸ்டிரைக் முடிஞ்சிருச்சு. இனிமேல் மறுபடியும் வொர்க் அவுட் ஸ்டார்ட் பண்ணணும். எனக்காக லிங்குசாமி காத்திருக்கார். ‘சண்டகோழி 2’ படத்துக்காக பழைய ஃபிட்டுக்கு மாறணும்.’’

“தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர் - சிவாஜி, ரஜினி - கமல், விஜய் - அஜித், சிம்பு - தனுஷ் காம்போ முடிஞ்சு இப்போ விஜய் சேதுபதி - சிவகார்த்திகேயன் வரை வந்திருக்கு. இந்த லிஸ்ட்ல விஷாலுக்கு இடம் இல்லாததை எப்படிப் பார்க்கிறீங்க?”
- கார்க்கி பவா
“எனக்கு அதெல்லாம் தெரியாதுங்க. இதென்ன பெப்ஸி - கோக் மாதிரியா? நான் என் வேலையைப் பார்க்கிறேன். ‘அவர் அந்தப் படம் பண்றாரு; அதனால நான் இந்தப் படம் பண்ணுவேன். இவரோட படம் இவ்வளவு கோடி கலெக்ட் ஆச்சு. அதனால, அப்படி ஒரு படம் பண்ணணும்’னு எல்லாம் நான் நினைக்கிறதில்லை. அப்படியெல்லாம் நான் பண்ணவும் மாட்டேன். அந்த ரேஸ்ல நான் இல்லை. ஏன்னா, என்னை யாருடனும் கம்பேர் பண்ணிக்கிறதில்லை”
“கடந்த 5 வருடத்துக்கும் மேலா சினிமாவுக்கான மாநில அரசு விருதுகள் கொடுக்கப்படலை. இதைப்பற்றிப் பேச அரசாங்கத்தை அணுகமுடிஞ்சதா, என்ன பதில் கிடைச்சது?”
- குணவதி
“ஏழு வருடங்களுக்கான மாநில அரசு விருதுகளும், 149 படங்களுக்கு மானியமும் அறிவிச்சிருக்காங்க. ஆனா, அதுக்கான விழா தள்ளிப்போய்ட்டே இருக்கு. வேற வேற விஷயங்களுக்காகச் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சந்திக்கும்போதும் இந்த விஷயத்துக்கான கோரிக்கையை வெச்சுக்கிட்டேதான் இருக்கோம். சீக்கிரமாவே, விருது விழா நடக்கும்னு நம்பிக்கையிருக்கு.”

“ ‘செல்லமே’ தொடங்கி ‘துப்பறிவாளன்’ வரை உங்களோட பெரும்பாலான படங்கள் கமர்ஷியல் ஏரியாதான். ஒரு நடிகரா இந்த இடம் உங்களுக்குப் போதும்னு நினைக்கிறீங்களா அல்லது இதுதான் சேஃப் ஜோன்னு நினைக்கிறீங்களா?”
- மா.பாண்டியராஜன்
“சேஃப் ஜோன்னு சொல்றதைவிட எனக்கு என்ன செட் ஆகும், ஆடியன்ஸ் என்கிட்ட என்ன எதிர்பார்க்கிறாங்க என்பவைதான் எனக்கு முக்கியம்னு சொல்வேன். ஆக்ஷன் இல்லாம என் படம் கண்டிப்பா ஓடாது. இங்கே ஒரு படத்தோட ஹிட், ப்ளாப் ரெண்டும் லாபத்தை வெச்சுதான் முடிவாகுது. அப்படி இருக்கும்போது, ‘அவன் இவன்’ படம் மூலமா எனக்குக் கிடைச்ச பேரை நான் தக்க வெச்சுக்கணும்னு தொடர்ந்து பேருக்காகப் படம் பண்ணிட்டு இருக்க முடியாது. அதேமாதிரி ‘சண்டக்கோழி’, ‘திமிரு’, ‘தாமிரபரணி’னு மாஸ் ஹிட் படங்கள் பின்னாலேயும் ஓடிக்கிட்டே இருக்க முடியாது. ஒரு நடிகன் அடிக்கடி தன்னை மாத்திக்கிட்டே இருக்கணும். அடுத்து ரிலீஸ் ஆகப்போற ‘இரும்புத்திரை’ வேற மாதிரியான களம். அடுத்து இந்தியாவோட முக்கியமான பிரச்னையா இருக்கிற குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை பத்தி ஒரு படம் பண்றேன். நீங்க சொன்ன அந்த சேஃப் ஜோன் எல்லா நடிகர்களோட மைண்ட்லயும் இருக்கும். ஏன்னா, அது ஹீரோவுக்கு மட்டும் காசு வந்தாப் போதும்னு நினைக்கிற விஷயம் இல்லை. அந்தப் படம் சம்பந்தப்பட்ட எல்லாருக்கும் சம்பாதிச்சுக் கொடுக்கணும்னு நினைக்கிற விஷயம். அது தப்பும் இல்லை.’’

“டபுள் ஹீரோ சப்ஜெக்ட்ல நடிக்கிறதா இருந்தா, யார்கூட நடிக்க விருப்பம்?”
- மா.பாண்டியராஜன்
“விஜய் சேதுபதிகூட!”
“ஆர்.கே நகர் இடைத்தேர்தல் மூலமா அரசியலுக்கு வரும் முடிவை எடுக்க என்ன காரணம்?”
- தார்மிக் லீ
“அவங்க ஆர்.கே.நகரை ஒழுங்கா வெச்சிருந்தா, நான் ஏன் அரசியலுக்கு வரப்போறேன்? மதுசூதனன் ஐயாவை ஆர்.கே.நகர் தொகுதி வேட்பாளரா அறிவிச்சப்போதான், எனக்கு அந்தத் தொகுதியில் போட்டியிடணும்னு தோணிச்சு. போன தேர்தலில் ரெண்டுபேரும் சண்டைபோட்டுட்டு, இந்தத் தேர்தலில் இணைஞ்சு தேர்தலைச் சந்திக்கும்போதுதான் ஏதோ ஒண்ணு தோணுச்சு. நான் நாமினேஷன் பண்ணலாம்னு முடிவெடுத்ததை என் அப்பா, அம்மாகிட்டகூட சொல்லலை. என் ஃப்ரெண்ட்ஸ்கிட்ட ஒரு நாள் முன்னாடிதான் சொன்னேன். அவங்களே என்னை வித்தியாசமாத்தான் பார்த்தாங்க. ஒரு மாற்றத்தைக் கொண்டு வரணும்னு தோணுச்சு. அதான், ஆர்.கே நகர் இடைத்தேர்தல்ல போட்டியிட முடிவு பண்ணிணேன்.’’

“அர்ஜுனிடம் அசிஸ்டென்டா வொர்க் பண்ணியதில் மறக்கமுடியாத நினைவுகளைச் சொல்லுங்க...”
- வெ.வித்யா காயத்ரி
“என் வாழ்க்கையில மிகப்பெரிய திருப்புமுனையா இருந்தது அதுதான். அசிஸ்டென்டா இருக்கும்போது, கிளாப் போர்டு பிடிச்சுக்கிட்டு இருந்த என்னை ‘நடிடா’னு சொன்னதே அர்ஜூன் சார்தான். அவர் எங்களோட ஃபேமிலி ஃப்ரெண்ட் . ஒருநாள் என் அப்பாகிட்ட ‘இவனுக்கு இந்த வேலை வேண்டாம். போட்டோ ஷூட் எடுத்து, ஹூரோ வாய்ப்பு தேடுறதுக்கு முயற்சி பண்ணச் சொல்லுங்க’னு சொன்னார் அர்ஜூன் சார். அந்த வார்த்தை கள்தான் என் எதிர்கா லத்தையே மாத்துச்சு. அர்ஜூன் சாரோட ‘வேதம்’தான் என் முதல் படம். அதில் வேலை பார்க்கும்போது எனக்கு நூறு ரூபாய்தான் சம்பளம்.”
இவர்களிடம் பிடிக்காதது:
சரத்குமார் : “எஸ்.பி.ஐ சினிமாஸ்கூட போட்ட ஒப்பந்தம்தான் பிடிக்காதது. பொறுப்பில இருக்கும்போது நடிகர் சங்கக் கட்டத்தை அவரே கட்டியிருந்தா, இளைஞர்கள் எல்லாம் அவரோட சேர்ந்து வொர்க் பண்ணியிருப்போம்”
சேரன்: “அவசரப்பட்டுப் பேசுவார். பல தடவை என்னைத் திட்டியிருக்கார்னு நினைக்கிறேன்; ஞாபகம் இல்ல. எதுவுமே நடக்கலை, எதுவுமே நடக்கலைனு சொல்லிக்கிட்டே இருப்பாங்க. ஒரு விஷயம் நடந்துக்கிட்டு இருக்கும்போது, அதுக்கான பிராசஸ் போய்க்கிட்டி ருக்கும்போதே, அது சரியில்லை இது சரியில்லைனு சொல்ற கேரக்டர். இவர்கிட்ட எனக்குப் பிடிக்காதது, பொறுமையின்மை”
ஞானவேல்ராஜா : “ஒரு இடத்துல இருக்கமாட்டார். ஒரு விஷயத்தைக் கையில எடுத்து, அதை முடிச்சிட்டு அடுத்த விஷயத்துக்குப் போனா பரவாயில்லை. ஜம்ப் ஆகிட்டே இருப்பார். ஆனா, ஒரு தம்பியா அவர்கிட்ட நிறைய அட்வைஸ் கேட்பேன்”
அடுத்த வாரம் ....
* “அன்புச்செழியன் விவகாரத்தில் தயாரிப்பாளர் சங்கம் எடுத்த நடவடிக்கைகள் என்ன?”
* “அரசியலில் உங்களுக்கு ரோல் மாடல் யார்னு கேட்டா, எல்லோரும் முன்னாள் தலைவர்களைத்தான் சொல்றாங்க. ஏன், இப்போ இருக்கிற அரசியல்வாதிகள் யாரையும் ரோல் மாடலா எடுத்துக்க முடியாதா?”