தொடர்கள்
Published:Updated:

சிவகார்த்திகேயன் கேட்டார்... வேணாம்னு சொல்லிட்டேன்!

சிவகார்த்திகேயன் கேட்டார்... வேணாம்னு சொல்லிட்டேன்!
பிரீமியம் ஸ்டோரி
News
சிவகார்த்திகேயன் கேட்டார்... வேணாம்னு சொல்லிட்டேன்!

அய்யனார் ராஜன் - படங்கள்: பா.காளிமுத்து

‘மனுநீதி’, ‘இந்திரலோகத்தில் நா அழகப்ப’னுக்குப் பிறகு மறுபடியும் டைரக்‌ஷன் பக்கம் திரும்பியிருக்கிறார் தம்பி ராமையா.

“சினிமா டைரக்ட் பண்ணணும்; இசையமைக்கணும்கிற ஆசையோட சென்னைக்கு வந்தவனைக் காலம் நடிகனாக்கி அழகு பார்த்திடுச்சு. இயக்குநர் ராமையாவைப் பார்த்தே ஆகணும்னு எனக்குள்ள இருந்த ஆசையில முதல் படம் ‘மனுநீதி’ வெளியானது. இரண்டாவது ‘இந்திரலோகத்தில் நா.அழகப்பன்.’ நான் ஒரு மாதிரி எடுக்க நினைச்சு, தேவையற்ற தலையீடுகளால அது நடக்காமப் போய்....ப்ச், அந்தப் பஞ்சாயத்தைப் பத்திப் பேசினா, பல நாள்கள் பேச வேண்டியிருக்கும். விடுங்க!

 ‘மணியார் குடும்பம்’ நீண்ட இடைவெளிக்குப் பிறகு நான் இயக்கியிருக்கிற படம். அஞ்சாறு மாசமா நடிக்க வந்த வாய்ப்புகளையெல்லாம் விட்டுட்டு இந்தப் படத்திலேயே கிடந்தேன். என்னோட இசையமைப்பாளர் கனவும் இந்தப் படம் மூலமா நிறைவேறியிருக்கு. என் தங்கையோட சேர்ந்து படத்தை நானே தயாரிக்கவும் செய்றேன். ஹீரோ என் பையன் உமாபதி”

சிவகார்த்திகேயன் கேட்டார்... வேணாம்னு சொல்லிட்டேன்!

“இசையமைப்பாளர், தயாரிப்பாளர்னு அடுத்த லெவலுக்குப் போனது எப்படி?”

“என் கனவு ஒருபுறம் இருக்கட்டும். நடிக்க வர்ற பலபேருக்குத் தன்னோட வீட்டுக்கதையை, ஊர்க்கதையை சினிமாவுல கொண்டு வரணும்கிற ஆசை இருக்கும். சிலர் அந்த சொந்தக் கதை, சோகக்கதையை யாரோ ஒருத்தர் போடற பணத்துல சொல்லத் தயாராகிடுவாங்க. எனக்கு அது நல்லதாப் படலை. ‘மணியார் குடும்பம்’ என் குடும்பத்துல நடந்த கதை. நான் நூறு சதவிகிதம் உழைச்சிருந்தாலும், இன்னொருத்தரை ரிஸ்க் எடுக்கச் சொல்ல என்னால முடியலை. நம்ம சொந்தக் கதை இன்னொருத்தர் நொந்தகதைனு ஆகிடக்கூடாதுன்னு கவனமா இருந்ததாலேயே தயாரிப்பாளர் அவதாரம்.

அதேபோல பையன் அறிமுகமானது ‘அதாகப்பட்டது மகா ஜனங்களே’ படத்தில. இயக்குநர் புதுமுகம். அந்தப் படத்துல என் தலையீடு ஒரு சதவிகிதம் கூட இல்லை. அறிமுகப் படத்துலயே ‘நல்லா டான்ஸ் பண்றான்’னு பேர் வாங்கிட்டான். விஜய் தம்பி கூட உமாபதி டான்ஸைப் பாராட்டினார். படமும் நல்லாவே வந்துச்சு. ஆனா இப்ப நடந்த சினிமா ஸ்ட்ரைக்போல, அன்னைக்கு தியேட்டர் ஸ்ட்ரைக். யாரைக் குத்தம் சொல்றது? அறிமுக நடிகருக்கு முதல் படம் வெளியாகிட்டா அடுத்த படம் சட்டுபுட்டுன்னு ரிலீஸ் ஆகிடணும். இல்லாட்டி என்ன வேணும்னாலும் பேசுவாங்க. அதனால உமாபதிக்கு ரெண்டாவது படமான ‘மணியார் குடும்ப’த்தை நானே இயக்கலாம்னு முடிவு பண்ணினேன். ஒருவழியா ஸ்ட்ரைக்கும் முடிவுக்கு வந்துட்டதால, எல்லாம் சரியா அமையும்னு நம்புறேன்!”

“ ‘தென்னகத்து ஹ்ரித்திக் ரோஷன்’னு உமாபதியை சிவகார்த்திகேயன் குறிப்பிட்டாராமே?”

“தம்பி சிவகார்த்திகேயன் அப்படிச் சொன்னதுல இருந்து எனக்குள்ள ஒரு பயம் வந்திருக்கு. அந்தச் சொல் பலிக்கறதுல என் பையனோட பங்கும் நிறைய இருக்கே!  இன்னொரு விஷயத்தையும் சொல்லியாகணும். சிவகார்த்திகேயனே இந்தப் படத்தைத் தயாரிக்கவும் முன்வந்தார். நான்தான் சொன்னேனே, சொந்தக் கதையை சொந்தக் காசுலதான் எடுக்கணும்னு... அதான் மறுத்துட்டேன். அவர் என்மேல உள்ள ஒரு பிரியத்துல சொல்றார். அந்த அன்பில் விரிசல் விழாதபடி பார்த்துக்க வேண்டிய பொறுப்பு எனக்கும் இருக்கில்லையா?”

“ ‘மணியார் குடும்பம்’ என்ன மாதிரியான கதை?”

``இயக்குநர்கள் விக்ரமன், சேரன் டைப் கதை மாதிரியும் இருக்கும். இன்னொருபுறம் சுந்தர் சி, ராஜேஷ் படங்கள் மாதிரிக் கலகலப்புக்குப் பஞ்சமில்லாமயும் இருக்கும். அப்படியொரு நல்ல மிக்ஸிங்ல வந்திருக்கு. அப்பா, மகன் ரெண்டுபேருமே சரியில்லாத ஒரு குடும்பத்துல ஒரு பொண்ணு உள்ளே வந்தபிறகு நடக்கிறதை சுவாரஸ்யமாத் தந்திருக்கோம். சிவகங்கை, புதுக்கோட்டை, தென்காசி, குற்றாலம், அம்பாசமுத்திரம் பகுதிகள்ல ஷூட்டிங் நடந்தது. ராதாரவி, சமுத்திரக்கனி, ‘மொட்டை’ ராஜேந்திரன், ஜெயப்பிரகாஷ், சிங்கமுத்து, சிங்கம்புலி, லக்ஷ்மி ராமகிருஷ்ணனைக் கொதிச்செழ வச்ச அந்த ராமர் தம்பின்னு பெரிய பட்டாளமே படத்துல இருக்கு. மிருதுளா முரளி, யாஷினி ஆனந்த்னு ரெண்டு ஹீரோயின்கள். மொத்தத்துல ஒரு ஃபீல் குட் மூவியா இருக்கும்னு நம்புறோம்”

சிவகார்த்திகேயன் கேட்டார்... வேணாம்னு சொல்லிட்டேன்!

“மகனுக்கே அப்பாவாக நடித்த அனுபவம் எப்படி இருந்தது?”

“ ‘பையன் என்ன செய்றான்’னு விசாரிச்ச சிலர், ‘அண்ணே, உங்களுக்கு இருக்கிற தொடர்பை வெச்சுப் பெரிய டைரக்டர் யார்கிட்டயாவது சேர்த்து விடலாமே’ன்னு சொன்னாங்க. பெரிய இயக்குநர்கள்ல யாரு ‘ஃப்ரீயா உட்கார்ந்து பேசலாம், வாங்க’ன்னு கூப்பிட ரெடியா இருக்காங்க? இன்னும் சிலர், ‘புதுமுகங்களோட நீங்க நடிச்சு ஹிட் தர முடியுறப்ப, உங்க பையனோட ஏன் நீங்க நடிக்கக் கூடாது?’ன்னு கேட்டாங்க. அந்த நிமிஷத்துலதான் உருவாச்சு அந்த அப்பாவி அப்பனோட கேரக்டர். இப்படி யோசனை சொல்றவங்களும் சினிமாவில இருக்காங்கன்னு நினைச்சப்ப சந்தோஷமா இருந்துச்சு.’’

“அந்த மியூசிக் டைரக்டர்....?”

“கண்டிப்பா சொல்லியே ஆகணும். ஊர்ல எங்க குடும்பம் மணியக்காரர் குடும்பம். கோவில்கள்ல பயன்படுத்துற இசைக்கருவிகளை பாதுகாக்கிற பொறுப்பு எங்க குடும்பத்துக்குத்தான். அந்தக் கருவிகளைக் கொண்டு வந்து ஒரு அறையில வெச்சுப் பூட்டியிருப்பாங்க. கள்ளத்தனமா சாவி போட்டுத் திறந்து அதுங்களை எடுத்துக் காது கிழிய அடிச்சு ரசிக்கறது என்னோட வழக்கம். பச்சையாச் சொல்லணும்னா திருட்டுத்தனமா மியூசிக் கத்துக்கிட்டேன்னு சொல்லலாம். அப்படித் தொடங்கினதுதான் இன்னைக்கு என் படத்துக்கு நானே மியூசிக் பண்ற வரை கொண்டு வந்துவிட்டிருக்கு. நான் இதுல தேறிட்டேனாங்கிறது படம் ரிலீசானாதான் தெரியும்”

“ ‘அதாகப்பட்டது மகனே’ன்னு சினிமாவுக்குள் என்ட்ரி ஆகியிருக்கிற பையனுக்கு என்ன அட்வைஸ் தந்தீங்க?”


“ ‘அஞ்சு ரூபாய் கேட்டா ரெண்டு மணிநேரம் கதை சொல்றான்டா எங்க அப்பன்’னு நண்பர்கள் மத்தியில பேசுற பசங்க பத்திக் கேள்விப்பட்டிருக்கேன். என் பையன் அந்த மாதிரி வளரலை. இன்ஜினீயரிங் முடிச்சுட்டு சினிமாவுல நடிக்கணும்னு வந்திருக்கான். ஷூட்டிங் முடிஞ்சா வீட்டுக்கு வந்திடுறான். சினிமாவுக்குன்னே நிறைய விஷயங்களைத் தானாவே கத்துக்கிட்டான். அவனுக்கு நான் என்ன அட்வைஸ் தர்றது? ‘ஷூட்டிங்னா சரியான நேரத்துக்குப் போயிடுப்பா’ன்னு மட்டும் சொல்லியிருக்கேன்”

மலர்ந்து சிரிக்கிறார் தம்பி ராமையா.