
வெ.வித்யா காயத்ரி
‘மணி... மணி... மணி... மணி... முனி... முனி... மணி... முனி... மணி... முனி....’ - சம்மர் லீவில் இருக்கும் சுட்டிகளின் லேட்டஸ் ரைம்ஸ் இதுதான்.
‘என்ன முனி? என்ன மணி?’ எனக் கேட்கிறீர்களா? தப்பித் தவறி உங்க ஃப்ரெண்ட்ஸ்கிட்ட கேட்டுடாதீங்க. ‘அச்சச்சோ... வேற்றுக்கிரகத்திலிருந்து வந்திருக்கியா?’னு கலாய்ச்சுடுவாங்க. ‘ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் ‘சரிகமப லிட்டில் சாம்பியன்ஸ்’ நிகழ்ச்சியின் புரொமோ அது. அந்த புரமோவில், காலிங்பெல் அடித்து கதவு திறந்ததும், குட்டிப் புயலாக உள்ளே நுழைகிறார் மாஸ்டர் ராகவன். அந்தப் பாட்டைப் பாடி, ‘எத்தனை முனி... எத்தனை மணி?’ எனக் கேட்டுக் கிறுகிறுக்க வைக்கிறார். இதுதான் இப்போ எல்லாச் சுட்டிகளின் நாக்குகளிலும் சுற்றி சுற்றி அடிக்குது.
இந்த விளம்பரத்தில் வரும் மாஸ்டர் ராகவன் ‘சேதுபதி’ படத்தில், விஜய் சேதுபதி மகன் ‘மாறனாக’ ஈர்த்தவர். ‘றெக்க’ படத்தில், ‘மாலாக்கா ஐ லவ் யூ’ என க்யூட் ரியாக்ஷன் கொடுத்தவர். இப்போது, ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’, ‘மாரி 2’ என இந்தக் குறும்புச் சுட்டி செம பிஸி.

‘`ஹாய் ஃப்ரெண்ட்ஸ்... நான் இப்போ ஏழாம் வகுப்பு போறேன். அம்மா, அப்பா, தம்பி என எங்க வீட்டுல நாலு பேர். எங்களுக்கு பயமே கிடையாது. எங்க சொந்த ஊர் பாண்டிச்சேரி. என் அப்பா முருகன், டிராவல்ஸ் வெச்சிருக்கார். எனக்கு ரொம்பச் சின்ன வயசிலிருந்தே நடிக்கிறது ரொம்பப் பிடிக்கும்.’’ எனப் பேச ஆரம்பித்தார் ராகவன்.
‘`எனக்கு முன்னாடியே என் தம்பி, ‘பேய்கள் ஜாக்கிரதை’ படத்தில் நடிச்சிட்டான். எங்க வீட்டுல கேமரா இருக்கு. நான் சும்மா இருக்கிறப்போ என் கேமராவோடுதான் விளையாடுவேன். கேமரா முன்னாடி நின்னு நிறைய டயலாக் பேசுவேன். கேமராதான் என் பெஸ்ட் ஃப்ரெண்டு. அப்புறம், டிவியில் பார்த்து நிறைய டயலாக் பேசுவேன். ஒருமுறை, ‘காஞ்சனா 2’ படத்தில் வரும், ‘நீ கெட்டவன்னா... நான் கேடு கெட்டவன்’ டயலாக்கைப் பேசினேன். அப்பா அதை வீடியோ எடுத்து நெட்டில் அப்லோடு பண்ணினார்’’ என்கிறார் ராகவன்.
ராகவனின் அப்பா முருகன், ‘`அந்த வீடியோவைப் பார்த்துட்டு ‘சேதுபதி’ பட டைரக்டர் அருண் ஆடிஷனுக்குக் கூப்பிட்டார். ராகவனை உடனே செலக்ட் பண்ணிட்டாங்க. அந்தப் படம் நல்ல ரீச் கொடுத்துச்சு’’ என மகனை அணைத்துக்கொள்கிறார்.

`` ‘சேதுபதி’ படத்தின் முதல் நாள் ஷூட்டிங்கில், டைரக்டர் அருண் மாமா, விஜய் சேதுபதி மாமாகிட்ட என்னை அறிமுகப்படுத்தினதும், தூக்கி மடியில் உட்காரவெச்சு ஜாலியா பேசினார். நான் அவரைச் சேதுபதி ‘அங்கிள்’னு கூப்பிட்டதும், ‘அங்கிள்னு சொல்லாதே. மாமான்னு கூப்பிடு’னு சொன்னார். அதிலிருந்து இப்போவரை அப்படித்தான் கூப்பிடறேன். ‘சேதுபதி’ படத்தில், துப்பாக்கியால் சுடும்போது, அவ்ளோ பயமா இருந்துச்சு. நான்தான் சேதுபதி பையனாச்சே, மனசுல தைரியம் வரவெச்சு சுட்டேன். சேதுபதி மாமா ரிமோட் கன்ட்ரோல் கார் வாங்கித் தந்தார்.
‘றெக்க’ படத்துல நான் நடிச்ச ‘கண்ணம்மா... கண்ணம்மா’ பாட்டு நல்லாயிருந்துச்சுன்னு நிறையப் பேர் சொல்வாங்க. ஆனா, எனக்கு அதுல ஒரு வருத்தம். அந்தப் பாட்டுல நான் கேர்ள் டிரஸ் போட்டுருப்பேன். அதைப் பார்த்துட்டு என் ஃப்ரெண்ட்ஸ் கிண்டல் பண்ணினாங்க’’ என ஒரு நொடி சோகமான ராகவன், சட்டெனப் புன்சிரிப்புக்கு மாறினார்.

‘` ‘ப.பாண்டி’ படத்தில் நடிக்கும்போது, ஷூட்டிங் ஸ்பாட்ல தனுஷ் மாமா என்னோடு விளையாடிட்டே இருப்பார். ‘பாஸ்கர் தி ராஸ்கல்’ படத்தில் அரவிந்த்சாமி அங்கிளுக்கு பையனா நடிச்சிருக்கேன். எனக்குத் துப்பாக்கி பொம்மை ரொம்பப் பிடிக்கும்னு தெரிஞ்சுக்கிட்ட அரவிந்த அங்கிள், சர்ப்ரைஸா துப்பாக்கி பொம்மை கிஃப்ட் பண்ணார். அப்புறம், எனக்கு ரஜினி சாரை ரொம்பப் பிடிக்கும். ஒரு நாளாச்சும் அவரைப் பார்த்துப் பேசணும்னு ஆசையா இருக்கு. படத்துலதான் இவ்வளவு சேட்டை பண்றேன். ஸ்கூல்ல இதுவரை என் மிஸ்கிட்ட திட்டு வாங்கினதே இல்லே. ஸ்கூலுக்கு லீவு போட்டாலும் அதுக்கெல்லாம் சேர்த்துப் படிச்சிருவேன். என் ஃப்ரெண்ட்ஸும் எனக்குத் தேவையான ஹெல்ப் பண்ணுவாங்க.’’ என்றவரிடம் ‘முனி... மணி’ விளம்பரம் குறித்துக் கேட்டதும் குஷியானார்.
‘`என் படங்களைப் பார்த்துதான் அந்த விளம்பரத்தில் நடிக்க கூப்பிட்டாங்க. வீட்டுல இருக்கும்போது எனக்குப் பிடிச்ச மாதிரி ஏதாவது பாடிட்டே இருப்பேன். ஆனா, நிஜமா எனக்குப் பாடத் தெரியாது. அந்த விளம்பரத்துக்காகப் பாடுற மாதிரி நடிச்சேன். இப்போ, என்னைப் பார்க்கிற நிறைய பேர், ‘எத்தனை முனி... எத்தனை மணி?’னு கேட்கறாங்க. உண்மையையைச் சொல்லட்டுமா? அந்தப் பாட்டுல வர்றது எத்தனை முனி எத்தனை மணின்னு எனக்கே தெரியாதுங்க’’ எனச் சிரிக்கிறார் ராகவன்.
அட்டை, படங்கள்: அ.குரூஸ்தனம்